கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 ஜனவரி, 2015

தாஜ்மஹால் அழிந்து விடுமா ?



 உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை யாராலும் மறந்து விட முடியாது. காதலர்களின் புனித நினைவுச் சின்னமாக கருதப்படுவது தாஜ்மஹாலாகும். ஆனால் ஒரு காதல்  கல்லறை என்பதும் எல்லோருக்கும் நினைவிருக்கும். ஆனால் அண்மைக்காலமாக தாஜ்மஹாலைப்  பற்றி பல்வேறு தகவல்கள் நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகிய வண்ணமேயுள்ளன.  தாஜ்மஹாலின் பிரதான நுழைவாயிலான ரோயல் கேட்டில்  ஏற்பட்டுள்ள வெடிப்புக்கள் காரணமாக அச்ச நிலை தோன்றியுள்ளது. இதனை  செப்பனிட  குறைந்தது 4 -5 மாதங்கள் ஆகலாமெனவும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை செப்பனிடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
1983 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞானம், கலாசார மையம் (க்Nஉகுஇழு) தாஜ்மஹாலை  உலக கலாசார சின்னமாக அறிவித்துள்ளது. மொகலாய மன்னனான  ஷாஜஹானால் அவனது ஏழாவது மனைவியின் நினைவாக அமைக்கப்பெற்றதே தாஜ்மஹாலாகும். 1631 ஆம் ஆண்டு தொடக்கம் 1654 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சுமார் 22,000 தொழிலாளர்களைப் பயன்படுத்தி இது கட்டிமுடிக்கப்பட்டது.
தாஜ்மஹால் பற்றிய அதிர்ச்சிகரமான விடயங்கள் வெளிவருவது இது முதற்தடவையல்ல. 1990 ஆம்  ஆண்டு காலப் பகுதியிலிருந்து தாஜ்மஹால்  மீதான இந்திய அரசின் கவனம் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதனை அழிவடையாது தடுப்பதற்காக மில்லியன் ரூபாக்களை செலவழித்தே வருகிறது. இருப்பினும் சுற்றுச் சூழல் மாசு காரணமாகவும் பார்வையாளர்களின் தொகை நாள்தோறும் அதிகரிப்பதும் இதனை நடைமுறையில் சாத்தியப்படாமல் செய்கிறது.

 யமுனை நதியும் தாஜ்மஹாலும்

 360 வருட கால பழைமையான நினைவுச் சின்னமான தாஜ்மஹால் ஆக்ராவில் யமுனை நதியின் அருகில் அமைந்துள்ளது. தாஜ்மஹால்  நீண்டு நிலைப்பதற்கு யமுனை நதியும் முக்கிய காரணமாகும்.  ஆனால், தற்போது அந்  நதி நாளுக்கு நாள் சாக்கடையாக மாறி வருவதாகவும் ,தொழிற் சாலைகள் பெருகி வருவதாலும் காடுகள் அழிக்கப்படுவதாலும் இதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாறுபாடுகள் காரணமாக தாஜ்மஹாலுக்கு ஆபத்துள்ளதாக சூழலியளாலர்கள் தெரிவிக்கின்றனர். 
யமுனை நதியின் ஓரத்தில் தாஜ்மஹால் இருக்கின்றது. ஆனால், தற்போதைய சூழலில் அந் நதி வற்றிக் கொண்டு வருகின்றது. இதனால் தாஜ்மஹாலின்  அடித்தளங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஆதலால் இச் சூழ் நிலை  தொடர்ந்து நீடிக்குமாயின் தாஜ்மஹால் நீடித்து நிலைக்க வாய்ப்பில்லையென்று தாஜ்மஹால் பற்றிய நிபுணத்துவம் பெற்ற வரலாற்று ஆசிரியர் ராநாத் குறிப்பிடுகிறார்.

அத்துடன் தாஜ்மஹாலின் அடிக் கட்டுமானம் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் சமாதியில் ஏற்கனவே விரிசல்கள் ஏற்பட்டு வருவதாகவும் கடந்த 2010 ஆம் ஆண்டே  கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு 4 தூபிகளும் ஆட்டம் கண்டு வருவதாகவும் விழிப்புணர்வு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உலகப் புகழ் மங்காது காதலர்களின் இலட்சிய  சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் அழியாமல் காப்பாற்றப்பட  உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 தாஜ்மஹால் இடியும் அபாயம்

 இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகளில் தாஜ்மஹால் இடிந்து விழும் நிலை காணப்படுவதாக தாஜ்மஹாலைக் காப்பாற்றுங்கள் இயக்கத்தின் தலைவர் ராம்சங்கர் கத்தேரியா இந்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார். தாஜ்மஹாலின் பளபளப்பு நாளுக்கு நாள் மங்கி வருவதாகவும் இதனால் நுழைவாயில் தூபிகள் இடிந்து விழும் நிலை காணப்படுவதாகவும் யமுனை நதி வற்றிச் செல்வதாலும் தாஜ்மஹால்  நிலைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
 ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்த இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை நிபுணர்கள் தாஜ்மஹாலில் எந்த விரிசலும் ஏற்படவில்லையென்றும் அங்கு  சுவரில் பதிக்கப்பட்டுள்ள மரங்கள் பாதிப்படையவில்லையென்றும் யமுனை நதிவற்றி வருவதால் சிலர் அச்சமடைந்து வருவதாக அறிவித்துள்ளது.

அமில மழை

 தாஜ்மஹால் அமில மழையால் மெல்ல மெல்ல சேதமடைந்து வருவதாகவும் அருகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற் சாலைகளே இதற்கு காரணமெனவும் கூறப்பட்டது. இதன் எதிரொலியாக ஐக்கிய உச்ச நீதிமன்றம் 1996 ஆம் ஆண்டு  முதல் தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள 10, 400 சதுர கிலோ மீற்றர் பரப்பில் அமைந்துள்ள  தொழிற்சாலைகள் அனைத்தும் சுத்திகரிப்புக்கு நிலக்கரியைத் தவிர்த்து இயற்கை எரிவாயுவையே பயன்படுத்த வேண்டும்  என உத்தரவிட்டிருந்தது.  பளிங்குக் கற்களால் ஆன தாஜ்மஹாலின் மேற்பரப்பு அமில மழையின் காரணமாக சிதைவுகளை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இந்திய உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது.

சர்ச்சையும் அதிசயமும்

 தாஜ்மஹால் பற்றி வரும் திடுக்கிடும் தகவல்களை இந்திய அரசாங்கம் மறுத்து வருகின்றது. தாஜ்மஹாலில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் , அடிப் பாகத்தில் ஏற்பட்டுள்ள அரிப்புகள் என்பவற்றை மறுக்கும் அரசாங்கம் தாஜ்மஹால்  சிறப்பான நிலையில் பேணப்படுவதாகக் குறிப்பிடுகிறது. அப்படியாயின் கடந்த 30 வருடமாக தாஜ்மஹாலின் அடித்தளத்தைப் பார்வையிட மக்கள்  அனுமதிக்கப்படாததற்கான காரணமும் மர்மமாகவே காணப்படுகிறது. எது எப்படியாயினும் உலக ஏழு அதிசயங்கள் வருடந்தோறும் மாறுபட்டு வந்தாலும் தாஜ்மாஹால் அதிசயங்களில் நிலைத்தே நிற்கிறது. இதனாலேயே  1983 ஆம் ஆண்டு உலகில் மிகவும் தொன்மையான நினைவுச் சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தியது. அத்தோடு  தாஜ்மஹாலை பார்வையிட உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் சுமார் 4 மில்லியன் மக்கள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 தாஜ்மஹால் ரோயல் கேட்

 மேற்கூறப்பட்ட பல்வேறான சர்ச்சைகளின் பின்பே தாஜ்மஹாலின் பிரதான நுழைவாயிலான ரோயல் கேட் பழவீனமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைச் சீரமைக்கும் பணி கடந்த  2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அப்போது நுழைவாயிலின் தெற்குப் பகுதியில்  நீர்க் கசிவு ஏற்பட்டதால் சுவரில் இருந்த கற்கள் பெயர்ந்து விழுந்தன.  
 இந்நிலையில் நுழைவாயிலின் வடக்குப் பகுதியில் உள்ள கற்களின் சிவப்பு நிறப் ப+ச்சு கீழே விழ ஆரம்பித்துள்ளதால் இதனை ஆய்வு செய்த தொல்லியல் நிபுணர்களால் அப் பகுதியில் நீர்க் கசிவு இருப்பதாக  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவை நிறைவடைய குறைந்தது  4-5 மாதங்கள் ஆகுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

 தூய்மைபடுத்தும் நடவடிக்கை

 தாஜ்மஹாலை  சுற்றியுள்ள எண்ணெய்த் தொழிற் சாலைகளினாலும் வாகனப் புகை காரணமாகவும் தாஜ்மஹால் மஞ்சல் நிறமாகி வருகின்றது. இதனால் தாஜ்மஹாலை சுற்றி அரை மைல் தூரத்திற்கு வாகனங்கள் செல்லத்  தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்  குதிரை வண்டி, மின்சார ரயில்களை பயன்படுத்தும் நடைமுறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ஆக்ரா நகரப் பகுதிகளைச் சுற்றி துளசிச் செடிகளை நாட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரையும் 30 இலட்சம் செடிகள் நாட்டப்பட்டுள்ளன. துளசிச் செடிகளும் காற்று மாசுறுவதை தடுக்கும் சக்தி காணப்படுவதால் இந் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.  

 தாஜ்மஹாலும் மர்மமும்

 தாஜ்மஹால் உ லக அதிசயமாக இருந்து விட்டாலும் அதன் பின்புலம் கொஞ்சம் சலிப்பானதாகும்.   தாஜ்மஹால் மொகலாய இராச்சியத்தின் ஐந்தாவது மன்னனான ஷாஜகானால் கட்டப்பட்டதாகும். 1931 ஆம் ஆண்டு  ஷாஜகானின் எட்டு மனைவிகளில் ஏழாவது மனைவியான மும்தாஜ் தன்னுடைய 14 ஆவது குழந்தையை பெறும் போது இறந்து  போனாள். அதன் பாதிப்பாகவே அன்று 22,000 பணியாளர்களை கொண்டு ஆரம்பித்த பணிகள் 23 வருடங்கள் கழித்து நிறைவு பெற்றன. அத்தோடு இக் கட்டிட கலை இனி யொரு போதும் எங்கும் அமைந்து விடக் கூடாது என்பதற்காக வடிவமைத்தவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டு , வெகுமதியான சன்மானங்கள் வழங்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
 எவ்வாறாயினும் உலக காதலர்களின் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலின் பொலிவு என்றும் மங்கிவிடாமலும் அதிசயங்கள் அழிந்து விடாமலம் வரலாறுகள் எதிர்கால சந்ததியினருக்கு எட்டாக் கனியாகிவிடாமலும் போவதற்கு சமூக ஆர்லர்களும், பார்வையாளர்களும் சம்பந்தப்பட்ட அரசுகளும் துணை போகாமல் இருப்பதே சாலச் சிறந்ததாகும்.

08/01/2014
க. பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக