கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

4 ஜனவரி, 2015

எயார் ஏசியா விபத்து காரணம் என்ன ?




இந்தோனேசியாவின் எயார் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி ஒரு வாரம் கழிந்துவிட்ட நிலையில், மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 155 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் இருந்த நிலையில் இந்தோனேசியாவின் பங்காலன் பன்னிலிருந்து 160 கிலோ மீற்றர் தொலைவில் நங்கா தீவுக்கருகில் விமானம் கடலில் வீழ்ந்து நொறுக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின் மீட்பு பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும், காலநிலையில் சீரற்ற தன்மை காணப்படுவதால் இதுவரை 7 உடல்கள் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளன.

ஆசிய பசுபிக் கடலில் இவ்வருட இறுதியில் ஏற்பட்ட கோரமான விபத்தாக எயார் ஏசிய விமான விபத்து காணப்படுகிறது. MH 370 மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி மாயமான சம்பவத்துக்குப் பிறகு விமான பயணங்களில் அதிருப்தி நிலை காணப்பட்டது. எனினும் நிலைமை காலப்போக்கில் வழமை நிலைக்கு வந்திருந்தாலும் மீண்டும் இவ்விபத்து சம்பவம் தாக்கத்தினை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. தற்போது விபத்துக்குள்ளான எயார் ஏசியா விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 7 உடல்களும் இந்தோனேசியாவின் சுரபயா நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணுவதற்காக இறந்தவர்களின் உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ. மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் 2 மீற்றர் உயரமளவிற்கு இராட்சத அலைகள் காணப்படுவதால் மீட்பு பணியாளர்களால் கடலுக்குள் இறங்கி தேடும் பணியில் மந்த நிலை தோன்றுகின்றது. அலைகள் அதிகமாக இருப்பதாலும், பலத்த காற்று வீசுவதாலும் விமான பாகங்களும் உடல்களும் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



சுமார் 60 மீற்றர் சுற்றளவுக்கு விமான பாகங்களும் உடல்களும் சிதறிக் கிடக்கின்றன. எனவே, அவற்றை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக மீட்பு பணிக்குழு தெரிவித்துள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் வியாழக்கிழமை சுரபயா நகரில் இடம்பெற்றிருந்ததுடன் இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு புதுவருட நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டன. தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடமபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோரின் உடல்கள் அனைத்தும் மீட்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜாவா கடல் பகுதியில் 32,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கடுமையான மேக மூட்டங்களால் விமானியால் 38,000 அடிக்கு விமானத்தை உயர்த்த தரைக்கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரப்பட்டது எனினும், தாமதித்து அனுமதி வழங்கப்பட்ட போது விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விமானம் மாயமானது.

இதைத் தொடர்ந்து தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் மூன்று நாட்களின் பின்பே விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை இந்தோனேசிய அரசால் உறுதிசெய்யப்பட்டிருந்தன. விமானம் பெலிதுங் தீவு பகுதியில் தென்கிழக்கு தன்ஜுங் பாண்டன் பகுதியில் 100 கடல் மைல் தொலைவில் இருந்தவரை அதன் நிலை தெரிந்துள்ளது. அதன் பிறகே தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

இவ்விமான விபத்து இடம்பெற்று ஓரிரு நாட்களில் எயார் ஏசியாவின் மற்றொரு விமானம் விபத்துக்குள்ளானது எனினும் உயிரிழப்புகள் எவையும் ஏற்பட்டிருக்கவில்லை. விமானம் ஓடு பாதையில் தரையிறங்கியபோது ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் ஓடு பாதை விட்டு வெளியேறி புல்வெளியில் நிலை கொண்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏனைய போக்குவரத்து சேவைகளையும் விடவும் விமானச் சேவை மிகவும் அபாயகரமானது. சிலவேளை விபத்துக்குள்ளான விமானங்களின் நிலையே தெரியாத அளவுக்கு அதன் பாதிப்புகள் காணப்படும்.

எயார் ஏசியா விமானத்தை இந்தோனேசியாவைச் சேர்ந்த விமானியும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த துணை விமானியும் இயக்கியிருந்தனர். அவர்கள் அபாயப்பகுதியாகக் கருதப்படும் ஜாவா கடல் பகுதியில் விமானத்தை செலுத்தியதாலேயே விமானம் விபத்துக்குள்ளானதாக அவுஸ்திரேலிய விமான போக்குவரத்து துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டாலேயே விமான விபத்தின் உண்மை நிலையினை அறியக்கூடியதாக இருக்கும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு சென்ற MH 370 விமானம் 10 மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும் எவ்விதமான தகவல்களும் அறியப்படாத நிலையில் காணப்படுகிறது. அண்மையில் வெளியான செய்திகளின் படி அவ்விமானம் அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்பு தற்போது எயார் ஏசியா விமானமும் விபத்துக்குள்ளாகியிருப்பதன் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் மற்றும் உளவு அமைப்புகளின் செயற்பாடுகள் காணப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தீவிரவாத அமைப்புகளின் மிகப்பெரிய சதி திட்டங்களுக்கு இவை ஒத்திகையாககூட அமையப்பெற்றிருக்கலாம் என்றும் சர்வதேச வட்டாரங்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளன. மலேசிய விமானங்களே தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருகின்றன. தற்போது விபத்துக்குள்ளான எயார் ஏசியா விமானமும் மலேசியாவையே தலைமையகமாகக் கொண்டு செயற்படுகிறது.

எயார் ஏசியா விமான நிறுவனம் மலேசியாவிற்கு சொந்தமானது என்பதுடன் 22 நாடுகளிலுள்ள 100 நகரங்களுக்கு தங்களுடைய சேவையை விஸ்தரித்துள்ளது. மலேசிய அரசுக்கு சொந்தமாக இருந்த இவ்விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் மலேசிய தொழிலதிபர் இந்நிறுவனத்தை வாங்கினார். ஆசிய பிராந்தியத்தில் குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்குவதால் அதிகளவான பயணிகளை இந்நிறுவனத்தால் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், தற்போது அடிக்கடி விபத்துக்களை சந்திப்பதாகவும் மலேசிய விமான நிறுவனங்கள் காணப்படுகின்றன.

தொழில்நுட்ப கோளாறு, கட்டுப்பாட்டறையுடனான தொடர்புகளை துண்டித்தல் மற்றும் மோசமான காலநிலை என்பவற்றால் விமான விபத்துகள் இடம்பெற்று கொண்டே இருக்கின்றன. ஆனால், தொழில்நுட்பம் எவ்வளவே வளர்ச்சியை எட்டிவிட்ட போதிலும் விபத்துக்களை குறைப்பதில் இன்னும் உச்சத்தை அடையவே இல்லை.


க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக