ஈராக்கில் அமெரிக்க அரசு மேற்கொண்டுவரும் வான் வழித்தாக்குதலுக்கு பதிலீடாகவே இக்கொலையை நிகழ்த்தியிருப்பதாக இஸிஸ் போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது. ஆனால், வீடியோவில் ஒலிக்கும் குரல் பிரிட்டன் ஆங்கிலமொழியில் அமைந்திருப்பது இன்னுமொரு சர்ச்சை.
இதனால் உலக நாடுகளை அச்சத்திற்கு இட்டுச் செல்லும் அமெரிக்காவே அச்சத்திற்குள்ளாகியிருக்கிறது. ஈராக் அரசபடைகள் மற்றும் குர்திஷ் படைகளிடமிருந்து இஸிஸ் தீவிரவாதிகள் அமைப்பினர் முக்கிய நகரங்களை கைப்பற்றியிருந்தனர். அவ்வாறு கைப்பற்றிய பகுதிகளை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருந்ததுடன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கிறிஸ்தவர்களையும் வெளியேற்றியிருந்தனர். ஏலவே, அமெரிக்கப்படைகள் ஈராக் கிளர்ச்சியின் போது பணியாற்றியிருந்த நிலையில் ஒபாமாவின் இரண்டாவது பதவியேற்பின் பின் சகல படைகளும் வாபஸ் பெறப்பட்டிருந்தன.
அவ்வாறானதொரு சூழ்நிலையிலே இஸிஸ் பேராளிகள் திடீரென தாக்குதல்களை மேற்கொண்டு முக்கிய நகரங்களை கைபற்றியிருந்தனர். இவற்றை தடுத்து நிறுத்தவே அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தது. கடந்த தினங்களில் மொசூல் நகரின் முக்கிய அணையினை அரச படைகள் கைபற்றியிருந்தன. இந்நிலையிலேயே அமெரிக்காவின் வான் தாக்குதல்களை எதிர்த்து அமெரிக்க ஊடகவியலாளரான ஜேம்ஸ் பாலி கழுத்தறுக்கப்பட்டு கொடுரமாக கொல்லப்பட்டுள்ளார்.
அவ்வாறு இஸிஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ உண்மையெனின் அமெரிக்காவுக்கு அது பேரதிர்ச்சியை ஏற்படுத்துமென வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில் ஜேம்ஸ் பாலி கொல்லப்படுவதான காட்சியை வெளிப்படுத்தும் வீடியோ உண்மையானது தான் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இவ் வீடியோ சர்வதேச அளவில் அவ்வமைப்பின் மீது கண்டனத்தை தூண்டியிருக்கிறது. வல்லரசு நாடுகளுக்கு சவால்விடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்சம்பவத்தால், இவ்வமைப்புக்கு எதிரான போரில் ஐ.நா.பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புநாடுகள் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஈரான் உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் அணிசேர வேண்டுமென பிரான்ஸ் கோரியிருக்கிறது.
2012 நவம்பரில் சிரியாவில் வைத்து கடத்தப்பட்ட பாலி அன்றிலிருந்து காணாமல் போயிருந்தார். அமெரிக்கா சார்பில் குளோபல் போஸ்ட் மற்றும் ஏனைய ஊடகங்களுக்கும் பிரான்ஸின் அஊக ஊடகத்திற்கும் ஊடகவியலாளராக பணிப்புரிவதற்கு மத்தியக் கிழக்கிற்குச் சென்றிருந்தார். இதேவேளை பாலி கழுத்தறுக்கப்படும் வீடியோவில் கறுப்புநிற ஆடையுடன் பின்னாள் கத்தி வைத்துக்கொண்டு நின்றவர் பேசிய ஆங்கிலமொழி அவர் ஒரு பிரிட்டிஷ் ஜிகாதிகளின் தலைவராக இருக்கலாம் எனவும், தென்கிழக்கு இங்கிலாந்தில் இருப்பவர்கள் பேசும் விதம் அவரது பேச்சில் இருப்பதாகவும் பிரித்தானியா சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இஸிஸ் அமைப்பில் இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இவ்விடயம் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை அடையாளம் காணுவதற்காக புலனாய்வு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதுடன் பிரிட்டன் பிரதமர் கமரூனும் விடுமுறையிலிருந்து அலுவலகம் திரும்பியுள்ளார்.
ஜேம்ஸ் பாலி கழுத்தறுக்கப்படும் வீடியோவை இஸிஸ் அமைப்பினர் வெளியிட்ட போது, A Massage for America எனக் குறிப்பிட்டடுள்ளதுடன் அதில் பாலி கொல்லப்படுவதற்கு முன்னர் பேசிய குரல் பதிவும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவர் வற்புறுத்தலின் பேரிலேயே அவ்வாறு பேசியிருப்பாரென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ~எனது உண்மையான கொலையாளிகளான அமெரிக்க அரசை எதிர்த்து எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் என் நேசத்திற்குரியவர்கள் குரல் கொடுக்க வேண்டும். அமெரிக்காவின் குற்றச் செயல்களுக்கும் சுயதிருப்திக்கும் கிடைத்த தண்டனையாகவே எனக்கு இப்போது ஏற்படும் முடிவு அமைகிறது| என பாலி குறிப்பிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு உருவான இஸிஸ் அமைப்பு அவ்வருடமே ஈராக்- சிரியாவில் முக்கிய நகரங்களை கைப்பற்றியதுடன், ஈராக் அரச படையினரை அடிமைப்படுத்தி கொலை செய்யும் வீடியோவினையும் வெளியிட்டிருந்தது. தற்போது சிரியாவில் 20 சர்வதேச பத்திரிகையாளர்களை காணவில்லை என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகனின் மரணத்துக்கு பேஸ்புக்கில் அஞ்சலி செலுத்திய அவரின் தயார் டையேன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கும் மத்திய கிழக்கில் தமது கடமையைச் செய்யும் பத்திரிகையாளர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் எனவே, மற்ற பணயக் கைதிகளை விடுவிக்குமாறும் இஸிஸ் அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வகையான வன்முறை அனைத்தும் உலகையும் அதிர்வடையச் செய்திருக்கிறது. சிரியாவினதும், ஈராக்கினும் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸிஸ் அமைப்பு ஒரு புற்றுநோய் போன்றது. அவர்களது சிந்தனை திவாலான வங்கியை ஒத்தது எனவும் இதனால் ஈராக்கில் மேற்கொண்டுள்ள படை நடவடிக்கையை ஒருபோதும் குறைத்துக் கொள்ளப்போவதில்லையென அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
அத்தோடு கொலையுடன் தொடர்புடைய முகமூடி அணிந்த இஸிஸ் அமைப்பின் ஆயுததாரி தனது கருத்துப் பகிர்வில், இஸ்லாமிய கலிபாவில் பாதுகாப்பாக வாழும் உரிமையுடன் முஸ்லிம்கள் வசிப்பதை தடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வரும் ஒபாமா, அதன் விளைவாக உங்களது மக்களையே இரத்த வெள்ளத்தில் தள்ளுகிறீர்கள் என தெரிவித்துள்ளார். இப்படுகொலையைடுத்து குறித்த வீடியோ காட்சியின் இறுதியில் மற்றொரு அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீவன் ஸொல்ட்லோப் காண்பிக்கப்படுவார். ஒபாமாவின் அடுத்த நகர்வைப் பொருத்தே இந்த ஊடகவியலாளரின் விதி அமையவிருப்பதாக அவ்வீடியோவின் இறுதியில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை பெரும் சவால்களுக்கு உள்ளாக்கியுள்ளது. மட்டுமல்லாது மத்தியக் கிழக்கு போர்க்களங்கள் மீதான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியையும் பிரதிபலிக்கிறது. உலக வரலாற்றில் பல்வேறு சவால்களை முறியடித்த அமெரிக்காவுக்கு இஸிஸ் அமைப்பு நெருக்கடியாய் அமைந்துள்ளது. இச்சம்பவம் அனைத்து ஊடகவியலாளர்களினதும் தீவிர கவனத்தைப் பெற்றுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு மிக ஆபத்தான நாடாக சிரியா மாறியுள்ளது என ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையாயின் இன்னும் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.
இவை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மக்களின் அரசு மீதான நம்பிக்கையின்மைக்கும் காரணமாகிவிடும். தனது மகன் சிரிய மக்கள் படும் துன்பங்களை வெளி உலகுக்கு கொண்டுவரும் பணியில் தனது உயிரையே இழந்திருக்கிறார் என தெரிவித்திருப்பது உலக வல்லரசுகளுக்கு ஒரு அழைப்பு. மீண்டுமொரு வீடியோ காட்சி இஸிஸ் அமைப்பினரால் வெளியிடப்படும் முன் துரித நடவடிக்கைகளை வல்லரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது காலத்தின் தேவையாகும்.
28/08/2014
க.பிரசன்னா


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக