கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

4 ஜனவரி, 2015

நடுக்கடலில் எரிந்த கப்பல்

உலகம் வருட இறுதியில் பல உயிரிழப்புகளைச் சந்தித்து விட்டது. ஐரோப்பாவில் கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான கப்பலான நார்மன் அட்லாண்டிக், நடுக்கடலில் தீ விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு கிரீஸின் பட்ராஸ் துறைமுகத்திலிருந்து கிழக்கு இத்தாலியிலுள்ள அன்கோனா துறைமுகத்திற்கு செல்லும் வழியிலேயே கப்பல் தீ விபத்துக்குள்ளானது. கப்பலில் வாகனங்கள், நிறுத்துமிடத்திலேயே தீ பற்றியதாகவும் அதனை அணைக்க கப்பல் ஊழியர்கள் முயற்சி செய்த போதும், பலமான காற்று வீசியதால் தீ ஏனைய பகுதிகளுக்கு விரைவாக  பரவியுள்ளதாக அறியமுடிகிறது.

தீ விபத்துக்குள்ளான கப்பலில் 411 பயணிகளும் 58 ஊழியர்களும் பயணம் செய்த நிலையில் 222 வாகனங்களும் கப்பலில் இருந்துள்ளன. இவ்விபத்து தொடர்பில் அறிந்த பயணிகள் தொலைபேசி மூலம் கிரீஸ் டி.வி.க்கு தகவல் வழங்கியதும், இத்தாலிய மற்றும் கிரீஸ் ஹெலிகொப்டர்கள் மீட்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளது. கப்பலில் தீ பரவியதும் பயணிகளை அவசர படகுகள் மூலம் வெளியேற்ற கப்பல் மாலுமி உத்தரவு பிறப்பித்திருந்தார்.



இதன் போது பயணிகளுக்கு பாதுகாப்பு கவச உடைகளும் வழங்கப்பட்டிருந்தன. கிரீஸ், இத்தாலி, அல்பேனியா போன்ற நாடுகளையும் மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படும் தீவுகளையும் இணைப்பதில் பயணிகள் கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விபத்துகள் பலவகையாக இடம்பெற்று வந்தாலும் அவை இடம்பெற்ற பிறகே அவற்றில் ஏற்பட்ட குறைகளை கண்டுபிடிக்கின்றனர். ஆனால், அதற்குள் பல இழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. பசுபிக் சமுத்திரத்தில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 200இற்கும் மேற்பட்ட தென்கொரிய மாணவர்கள் உயிரிழந்தமையை இதற்கு காரணமாக கூறலாம்.

அவ்வாறானதொரு சம்பவம் போலவே, கிரீஸ் கப்பல் விபத்திலும் ஏற்பட்டிருக்கிறது. சிலரின் அலட்சியப் போக்கு பல உயிர்களை காவு கொண்டிருக்கிறது. தற்போது இத்தீ விபத்திலிருந்து 427 பேர் மீட்கப்பட்டுள்ள அதேவேளை 10 பேர் இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மீட்கப்பட்டவர்களில் 56 கப்பல் சிப்பந்திகளும் அடங்குவர். கிரீஸ் தீ விபத்தில் இருந்து தப்புவதற்காக கடலில் குதித்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

ஏனையோர் தீ விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களாவர். கார்பு தீவிலிருந்து 44 கடல் மைல் தூரத்தில் கப்பல் சென்று கொண்டிருக்கையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தாலிய மற்றும் கிரேக்க கடலோர எல்லைப் பாதுகாப்பு படைகளால் மீட்பு பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், மோசமான காலநிலை, காலநிலையால் ஏற்பட்ட கடல் அலைகள் மற்றும் பலமான காற்றினால் மீட்புபணிகள் ஓரிரு நாட்களின் பின்பே நிறைவுக்கு வந்தன.

இதேவேளை 3 மணித்தியாலங்களுக்குள் 150 பயணிகள் உயிர்காக்கும் படகுகளின் மூலம் கப்பலிலிருந்து வெளியேறினர். பின்னர் கப்பலில் மின்தடை ஏற்பட்டதால் எலக்ட்ரோனிக் கரங்கள் செயற்படவில்லையென்பதுடன் ஏனைய படகுகளையும் பயன்படுத்த முடியாமல் போனது. அத்தோடு கப்பலிலுள்ள அவசர கதவுகளை திறப்பதிலும் சிக்கல் நிலை தோன்றியது. இதேவேளை, இத்தாலிய மற்றும் கிரேக்க கடலோர எல்லைப் பாதுகாப்பு படைகளின் கப்பல்கள், ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்திருந்தனர்.

கப்பலின் பயணிகள் பட்டியலில் 422 பயணிகள் மற்றும் 58 சிப்பந்திகள் என கூறப்பட்டுள்ள போதிலும் மீட்கப்பட்ட 80 பேர் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லையெனவும் அவர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழைய முற்பட்டவர்களாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் விபத்துக்கு பாதுகாப்பு முறைகளில் ஏற்பட்ட குறைபாடே காரணம் எனவும் கப்பல் புறப்பட்ட துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட வழமையான விசாரணைகளின் போது கப்பலில் தீ மற்றும் கதவுகள் முழுமையான பாதுகாப்பினை கொண்டிருக்கவில்லையெனவும் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணைகள் இடம்பெற்றிருந்தும் குறைபாடுகள் இருந்தது தெரிந்தும் கப்பல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அனுமதிக்கப்பட்டமை தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட குற்றங்களாகும்.

இவ்வாறு முறைகேடான விடயங்களினால் 10 உயிர்கள் காவு கொல்லப்பட்டதுடன், தேவையற்ற பொருள் செலவு, சக்தி விரயம் என்பனவும் ஏற்பட்டிருந்தன. எனவே, இச்சட்டவிரோத பயணம் தொடர்பில் விரைவில் இத்தாலி மற்றும் கிரேக்க அரசுகள் விசாரணையை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம்.

க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக