மத்திய கிழக்கு நாடுகளில் அடிக்கடி நிகழும் மோதல்கள் வழமையானாலும் அண்மைக்காலமாக ஈராக்கில் இடம்பெற்றுவரும் ஆயத தாக்குதல்களும், படுகொலைகளும் உலகையே அதிரவைத்துள்ளன. வெளிப்படையாக இடம்பெறும் படுகொலைகளை உலகநாடுகள் வெறும் கண்டனபேச்சுகளுடன் மட்டுமே குற்றம் சாட்டுகின்றன. உலகில் இதற்கு முன் இடம்பெற்ற படுகொலைகள், ஆயுத தாக்குதல்கள் போன்றவற்றிற்கு எதிர்ப்புகளையும் பிரேரணைகளையும், படைகளையும் அனுப்பிப் பார்த்த வல்லரசு நாடுகளும் இன்று வெளிப்படையாக இடம்பெறும் படுகொலைகள் மற்றும் உரிமை மீறல்களினை சகித்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது.இரு மதக்குழுக்களிடையே இடம்பெறும் வன்முறைகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதற்குள் ஈர்த்திருப்பது விடயத்தை மேலும் விபரீதமாக்குகிறது. ஈராக்கில் அதிகமாக ஷியா முஸ்லிம்கள் காணப்படுகின்ற நிலையில் சுன்னி முஸ்லிம்கள் தங்களுக்கான உரிமையையும் கோருகின்ற நிலைக்கு கையிலெடுத்துள்ள ஒரு உத்தியே இந்த ஆயுத போராட்டமாகும். 2003 ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தபோது அமெரிக்காவை எதிர்த்திருந்த அல்கொய்தாவின் படைப்பிரிவில் தற்போது போராடும் சுன்னி முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் இருந்துள்ளனர் என்பதுடன் இவர்கள் முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாமின் ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில ஆதரவு குழுக்களிடையே ஆரம்பமான இம்மோதல் இன்று மதரீதியான வன்முறைகளுக்கு வித்திட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு அல்கொய்தாவின் ஈராக் அமைப்பிற்கு அபுபக்கர் தலைவரான பின்னரே அக்குழு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பாக மாறியது.தற்போது ஈராக்கில் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஈராக் இராணுவத்தினரை எதிர்த்து சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். ஏற்கனவே, ஈராக்கின் முக்கிய நகரங்களான மொசூல், கிர்குக், சாரியா, ரமாடி, திக்ரிக் உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றியுள்ளதுடன், தலைநகர் பக்தாத்தையும் நெருங்கிய வண்ணமுள்ளனர். தீவிரவாதிகளின் தற்போதைய தாக்குதலால் ஈராக் இரண்டாக பிளவுபடும் அபாயம்
ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
சிரியாவில் ஈராக்கிய இஸ்லாமிய தேசம் என்பதே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆவதுடன் சிரியாவின் சிலபகுதிகளையும் ஈராக்கின் சில பகுதிகளையும் இணைந்து ஒரு இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதே இவ்வமைப்பின் நோக்கமாக காணப்படுகிறது. இவ்வாறு தீவிரமாகப் போராடும் தீவிரவாதிகளுக்கு ஈடுகொடுக்க ஈராக் படைகள் பின்வாங்குவது ஐ.நா.வின் கவலையை மேலும் துரிதப்படுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவதற்காக ஈராக் இராணுவம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் சிறுவர்களையும் தன்படையோடு இணைத்துள்ளது. சிறுவர்களை ஆயுதபோராட்டங்களில் ஈடுபடுத்துவது சர்வதேச குற்றமென்பதுடன் அவை சிறுவர் உரிமை மீறலுமாகும். ஆனால், அவை தன்னார்வம் கருதி செயற்படுவதால் என்னவோ ஐ.நா. அவை தொடர்பில் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக தன்னார்வம் கொண்டு போராட வரும் மக்களுக்கு ஈராக் அரசாங்கம் ஆயுதங்களை வழங்கும் என அந்நாட்டு பிரதமர் நூரி அல் மாலிக் தெரிவித்துள்ள நிலையிலேயே சிறுவர்கள் உட்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் ஈராக் இராணுவத்துடன் தற்போது இணைந்துள்ளனர்.
தற்போது பக்தாத்தை நெருங்கிவரும் தீவிரவாதிகளின் அத்துமீறலை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஈரான் இராணுவ உதவிகளை வழங்கமுன்வந்துள்ள நிலையில் அமெரிக்கா தனது 275 இராணுவ துருப்புக்களை ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க தூதரக பாதுகாப்புக்காக அனுப்பியுள்ளது. அத்தோடு ஏற்கனவே, அமெரிக்கா 50போர் விமானங்களை கொண்ட போர்க் கப்பலான யு.எஸ்.எஸ்.ஜோர்ஜ் எச்.டப்ள்யூ புஷ் என்ற கப்பலையும் அரேபிய கடல் பிரதேசத்தில் நிலை நிறுத்தியுள்ளது.
தற்போது மோசமடைந்துவரும் ஈராக்கின் நிலையை கருத்தில் கொண்டே அமெரிக்கா தமது இராணுவ துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்ப உத்தேசித்துள்ளது. ஆனாலும், இதற்கு முன் 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதிவரை அமெரிக்க துருப்புக்களைக் கொண்டே ஈராக் பாதுகாப்பு படைகள் செயற்பட்டுவந்தன. அக்காலப்பகுதியில் இருந்த அமெரிக்க துருப்புகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்கா அங்கு கால்பதிப்பது பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவிக்கலாம்.
ஈராக்கில் அமெரிக்காவுக்கு எதிராக ஆயுத தயாரிப்பு இடம்பெறுவதாக கூறி 2003 ஆம் ஆண்டு நுழைந்த அமெரிக்க இராணுவம் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன் அந்நாட்டு ஜனாதிபதி சதாம் ஹ_சைனை பதவியிலிருந்துயிறக்கி, தூக்கிலிடவும் செய்தது. சுமார் 9 வருடகாலமாக இடம்பெற்ற தாக்குதல்களில் 4500 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 30,000 படையினர் காயமடைந்திருந்தனர். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான விக்கிலீக்ஸ் 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 9 ஆண்டுகள் ஈராக்கிலிருந்த அமெரிக்கப் படைகள் கைதிகளை சித்திரவதை செய்துள்ளதுடன், சிறைக் கொடுமைகளையும் மேற்கொண்டிருந்ததாக தெரிவித்தது.
அத்தோடு அக்காலப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் இதில் 65 ஆயிரம் பொதுமக்கள், 15 ஆயிரம் ஈராக்படையினர், 24,000 கிளர்ச்சியாளர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தம்படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்ததுடன் ஈராக்கில் பணியாற்றிய 10 இலட்சம் அமெரிக்க படையினருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். எனினும், யுத்த காலத்தில் 505 தளங்களை கொண்டிருந்த அமெரிக்கா, வாபஸ் பெறுவதாக அறிவித்தபின்னும் கூட இன்னும் இரு தளங்களில் 4000 படையினர் ஈராக்கில் நிலை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அமெரிக்கப்படைகள் ஈராக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமா என்ற ஆவல் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.
இதனிடையே 20 இலட்சம் மக்கள் வசிக்கும் மொசூல் நகரின் பெரும்பகுதியை தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தீவிரவாதிகள், தலைநகர் பக்தாத்தையும் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் புனித கர்பலா நகரையுமே இலக்கு வைத்துப் போராடி வருகின்ற நிலையில் பக்தாத்தில் காணப்படும் அமெரிக்க தூதரகங்களின் பாதுகாப்பிற்கு தமது படைகளை ஏற்கனவே, அனுப்பியுள்ள
அமெரிக்கா மொசூல் நகரை தீவிரவாதிகள் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதற்குள் விமான தாக்குதல்களை மேற்கொண்டு அப்பகுதியினை மீட்க உத்தேசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு 40 இந்தியர்களை
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் இவர்களை மீட்க மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டுள்ள 40 பேரில் கேரளாவைச் சேர்ந்த ஈராக்கில் தாதியர்களாக பணிபுரியும் பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தீவிரவாத அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாலைவனப் பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்படுவதான படங்களும், வீடியோக்களும் இவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இக்கடத்தல் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஒருவாரக் காலப்பகுதியில் 1700க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்துள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு தெரிவித்துள்ளது.
ஷியா முஸ்லிம்களை பெருவாரியாகக் கொண்ட ஈராக் நாட்டில் குறிப்பிட்ட சிறுபான்மையினராக சுன்னி முஸ்லிம் காணப்படுகின்ற நிலையில் உள்நாட்டில் அரசாங்க பாதுகாப்பு படைகளை பின்வாங்க வைத்து அரச கட்டுப்பாட்டு இடங்களை கைப்பற்றியுள்ளமை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பலத்தினையும் அரச படைகளின் பலவீனத்தையும் வெளிக்காட்டுகிறது. முன்னாள் இராணுவ ஆட்சியாளரும் ஈராக் அதிபருமாக இருந்த சதாம் ஹ{சைனின் ஆதரவுப் படைகளான இவர்கள் தங்களுடைய படைகளை மேலும், விஸ்தரிப்பு செய்வதற்காக டுவிட்டர் மூலம் தமது கோரிக்கைகளை சகலருக்கும் அனுப்பியுள்ளனர். புனித போரில் கலந்து கொள்வதற்காக புதிய நபர்களை இணைத்து கொள்ளவும், பிரசாரம் செய்யவும் இத்தளம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக ஈராக் அரசிற்கு எதிராக போராடி வரும் இவ்வமைப்பு, தமது பிரசார உத்தியை சமூக வலைத்தளங்களை நோக்கி கொண்டு வந்துள்ளது. அதன் ஒருபகுதியாகவே ஸ்மார்ட் போன்களில் தமது பிரசாரத்திற்காக கூட அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் தமது தீவிரவாதக்குழு மேற்கொள்ளும் தற்கொலைத் தாக்குதல்கள், படுகொலைகள் தொடர்பான ஆதாரங்களை இவ்வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதுடன் கடந்த நாட்களில் ஒரே நாளில் 40 ஆயிரம் டிவிட்களை தமது பாவனையாளர்களுக்கு அனுப்பியுள்ளதுடன், அந்த டிவிட்களுக்கு சிலர் மறுபதிலும் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதக்குழு தம்படையை விஸ்தரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை அறிந்த அரசாங்கம் டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை ஈராக்கில் பயன்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளதுடன் ஏற்கனவே, டுவிட்டர் நிர்வாகம் தீவிரவாதிகளின் டுவிட்டர் கணக்குகளை முடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான போர் மற்றும் படுகொலைகள் உக்கிர நிலையை அடைந்திருந்ததுடன் அதன் தொடர்ச்சியே இன்று பக்தாத் வரை நெருங்கியிருக்கிறது. தாக்குதல் ஆரம்பிப்பதற்கு முன்பாக ஈராக்கில் 3,50000 இராணுவப் படையினர் காணப்பட்டதுடன் தற்போது அத்தொகை வீழ்ச்சியுற்றதாலேயே மக்களை இராணுவத்திற்கு அரசே ஆயுதமளித்து வரவேற்கிறது.
இராணுவத்தினரும் வெற்றிகளை பெற்றுள்ளபோதும் அவை பெருவெற்றிகளாக அமையவில்லை. இந்நிலையில் தீவிரவாதிகளின் முன்னேற்றம் பக்தாத்தின் நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. இருதரப்பினருக்கும் இடையிலான தாக்குதல்களில் பக்தாத் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், பல இலட்சம் கணக்கானோர் இடப்பெயரும் நிலை காணப்படுவதுடன் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படுவதால் அவை ஈராக்கின் எண்ணெய் உற்பத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதோடு சர்வதேச ரீதியாகவும் அதன்தாக்கம் வெளிப்படக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் தற்போதைய நிலை உக்கிரமடையத் தொடங்கி ஒருவார காலம் நிறைவடைகின்ற வேளையில் எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளையும் இன்னும் ஈராக் அரசு முழுமையாக அமுல்படுத்தவில்லை.
இத்தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் குறிப்பிடுகையில், குற்றம் இழைப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் நீதியின் முன் தண்டிக்கப்படவேண்டும். இக்கொடூர சம்பவங்கள் பிரிவினை வாதத்தினை மேலும் தூண்டி விடுபவையாக அமையும். எனவே, இவ்விவகாரம் குறித்து ஈராக்கின் அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், சமூகதலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வை ஏற்படுத்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஈராக்கிய அரசப் படைகளால் பலமான எதிர்த்தாக்குதலை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், பேச்சுவார்த்தைகளும் கூடியளவு கைகொடுக்குமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா 2004 ஆம் ஆண்டு ஈராக்கில் சதாம் ஹ_சைனின் ஆட்சிக்கு எதிராக போர்தொடுத்து பாதுகாப்பினை உறுதி செய்திருந்தது. தற்போது மீண்டும் அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் அமெரிக்காவும் ஈரானும் கைகோர்த்து ஈராக்குக்கு உதவ முன்வந்துள்ளன. ஆகவே, இப்பதில் தாக்குதல்களிலும் அமெரிக்காவின் கூட்டு பாதுகாப்பு வீயூகம் தீவிரவாதிகளிடம் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
க.பிரசன்னா
26/06/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக