
ஜெருசலேமில் யூதர்களின் வழிபாட்டுத் தலமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனர்களால் முதன் முதலாக நடத்தப்படும் இத்தாக்குதலால் இஸ்ரேல் அதிர்ச்சியடைந்துள்ளது. இத்தாக்குதலுக்கு தக்கபதிலடி வழங்கப்படுமென இஸ்ரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். கடந்த ஆறு வருட காலப்பகுதியில் ஜெருசலேமில் இடம்பெற்ற தாக்குதல்களில் அதிக உயிர்ப்பலிகளை கொண்ட தாக்குதலாக இது அமைந்துள்ளது.
இத்தாக்குதலின் மூலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான சமாதான ஒப்பந்தம் காலாவதியாகும் நிலையேற்பட்டுள்ளது. கடந்த மாதம் இஸ்ரேல் துருப்புகளால் பாலஸ்தீனர்களின் மதவழிபாட்டு தலமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலீடாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. யூத தலமொன்றிற்குள் காலை வேளையில் நுழைந்த இரு பாலஸ்தீனர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். எனினும், தாக்குதல் நடத்திய இருவரையும் சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலியப் பொலிஸார் அறிவித்துள்ளதுடன், பாலஸ்தீனர்களின் இத்தாக்குதலை ஹமாஸ் இயக்கம் வரவேற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலின் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் வலுபெற்றுள்ளதுடன் நிலைமை மோசமடையக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் மீதான தாக்குதலையடுத்து விரைவில் ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கான தடைகள் நீக்கப்படுமென இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், பொது மக்கள் ஆயுதம் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்படுமா அல்லது இராணுவத்தினருக்கு ஆயுத விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் விரிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை. இஸ்ரேலில் கடந்த 6 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய உயிர்ப்பலி கொண்ட தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் இஸ்ரேலின் ஜெருசலேமில் காரை மோதி கொலையேற்படுத்திய நபர் மற்றும் இஸ்ரேலிய குழந்தை, இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்த நபர் ஆகியோரின் வீடுகள் இஸ்ரேலிய அரச படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு தொகுதிகளும் இதன் போது அழிக்கப்பட்டுள்ளன. ஜெருசலேத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏனைய தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களின் வீடுகளையும் தரைமட்டமாக்குமாறு இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில் பாலஸ்தீனர்களின் வீடுகளை தரைமட்டமாக்கும் கொள்கை கடந்த காலங்களில் ஆக்கிரமிப்பு மேற்கு கரையிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. முதன் முறையாக கிழக்கு ஜெருசலேத்தில் இம்முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன தாக்குதல் அதிகரித்து வரும்வேளையில் இக்கொள்கையை பயன்படுத்தி பதிலடி கொடுப்பதற்காகவே இஸ்ரேல் இக்கொள்கையை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. கிழக்கு ஜெருசலேத்திலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை மையப்படுத்தியே அங்கு அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. சிலவேளை இவை உயிர்ப்பலியை விளைவிப்பதாகவும் அமைகிறது.
முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் தீவிர வலதுசாரி யூதர்கள் தொடர்ச்சியாக நுழைவதால் பாலஸ்தீனர்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால், இந்த வளாகத்தை புனித தலமாக யூதர்களும் கருதி வருகின்றனர். இதனாலேயே அங்கு பதற்ற சூழ்நிலை உருவாகி வருகிறது. அதேபோலவே பள்ளிக்கு தொழுகைக்குச் செல்லும் முஸ்லிம்களுக்கு இஸ்ரேலியப் படையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதும் பாலஸ்தீனர்களின் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கொள்ளப்படுகிறது. பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நிலப்போராட்டம் 1945ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பமான ஒன்றாகும். ஆனால், அவை இன்று மதப்பிரச்சினையாக வழிபாட்டு தலத்தினை மையப்படுத்தியதாக வளர்ச்சியடைந்துவிட்டது. இதனை முஸ்லிம் நாடுகளும் தடுப்பதற்கு எவ்வித முன்னேற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் மேற்குலக நாடுகளின் அணுசரனை இஸ்ரேலுக்கு இருப்பதால் இவ்விடயத்தில் அது முதலாளியாக மாற வழியேற்படுத்திக் கொள்கிறது.
இதன் ஒரு பகுதியாகவே வீடுகளை தரைமட்டமாக்கும் கொள்கையை இஸ்ரேல் கையிலெடுத்திருக்கிறது. இக்கொள்கை சர்வதேச சட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால், மேற்குலகே சர்வதேச சட்டங்களை உருவாக்குவதால் அதற்கு அடிப்பணிய வேண்டிய தேவையேற்படவில்லை. இந்நிலையில் வீடுகளை இடிப்பதற்கெதிரான இஸ்ரேலிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்டனை நடவடிக்கையாக இஸ்ரேல் கடந்த 2001-2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையில் 664 பாலஸ்தீனியர்களின் குடியிருப்புகளை இடித்தழித்துள்ளது.
இச்சம்பவத்தின் மூலம் 4182பேர் வீடில்லாதவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் சந்தேக நபரின் வீட்டிற்கு அருகிலிருந்தவர்களாவர். வெறும் சந்தேகத்தின் பேரிலேயே வீடுகள் இடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு சந்தேகத்தின் பேரில் வீடுகள் அழிக்கப்படும் நிலையால் எதிர்வரும் காலப்பகுதியில் ஜெருசலேத்தில் வாழும் முஸ்லிம்களின் குடியிருப்புகள் முற்றாக அழியும் நிலை ஏற்பட்டுவிடும். அப்போது அவை இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கும் என்பதுடன் சமாதான ஒப்பந்தமும் கேள்விக்குரியதாகிவிடும்.
22/06/2014
க.பிரசன்னா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக