கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

29 ஜனவரி, 2015

ஜப்பானை மிரட்டும் சனத்தொகை வீழ்ச்சி



உலக பொருளாதார வல்லரசு நாடுகளில் ஜப்பானுக்கு அதிக முக்கியத்துவமுண்டு. பாரிய இழப்புகளை அடிக்கடி சந்தித்து வந்தாலும் குறிப்பிட்ட சில நாட்களிலேயே தனது இலக்குகளை சீர்படுத்திக் கொள்ளும் ஆற்றல் ஜப்பானில் வசிக்கும் மக்களுக்கு உண்டு. ஆனால் குழந்தைப் பேறு திட்டத்தில் மட்டும் ஜப்பான் பாரிய பின்னடைவை எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் குழந்தை பிறப்பு வீதம் குறைந்து செல்வதால் அவை எதிர்கால ஜப்பானின் சனத்தொகையில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்துவதுடன், பொருளாதார சக்தி வலுவிழந்த நிலைக்கு செல்வதற்கும் வாய்ப்பேற்படுமென எதிர்வு கூறப்படுகிறது.

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை என்றுமில்லாதவாறு கடந்த ஆண்டில் 10 இலட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டே அதிகரித்த வீழ்ச்சியை எட்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2013 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில்  2014 ஆம் ஆண்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தினால் குறைந்துள்ளது. பிறப்பு வீதம் தொடர்ந்தும் நான்காவது வருடமாக குறைவடைந்து வருகின்ற நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக 2050 ஆம் ஆண்டளவில் ஜப்பானின் சனத்தொகை 97 மில்லியனாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சனத்தொகை வேகமாக அழிந்துவரும் நாடுகளில் ஜப்பானே முன்னிலை வகிக்கிறது. ஜப்பான் 1915 ஆம் ஆண்டு 7.7% அதிகரிப்பையும் 1930 ஆம் ஆண்டு 7.0% அதிகரிப்பையும் 1950 ஆம் ஆண்டு 15.6மூ அதிகரிப்பையும் 1975 ஆம் ஆண்டு 7.9% அதிகரிப்பையும் கொண்டிருந்த போதும் 2005 ஆம் ஆண்டு சனத்தொகை அதிகரிப்பு 0.7% மாக குறைவடைந்திருந்ததுடன் 2010 ஆம் ஆண்டு இது 0.2% வீழ்ச்சியை கண்டு 2012 ஆம் ஆண்டு - 0.4% அதிகரித்த வீழ்ச்சியை ஜப்பானின் சனத்தொகை கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக வளர்ச்சியில் சனத்தொகை முக்கிய பங்கு வகிக்கின்றது. சீனா, இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பரப்பினை விடவும் சனத்தொகை அதிகமாகும். ஆனால் அங்கு இளைஞர்களின் தொகை அதிகமாக காணப்படுவதால், தொழிற்றுறையில் முன்னேற்றம் ஏற்பட்டு பொருளாதாரம் சீரான வேகத்தில் வளர்ந்து வருகிறது. எனினும் சனத்தொகையின் வளர்ச்சி வேகம் அதிகமாக காணப்படுவதால் மக்களின் தேவை பரந்துபட்டதாக காணப்படுவதுடன் அவற்றை பூர்த்தி செய்யக்கூடிய நிலையினை இந்நாடுகள் எட்ட முடியாமலிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். எனவே நாடுகளின் அபிவிருத்தியில் சனத்தொகையில் சீரான வேகத்தைப் பேணுவது அவசியமாகும். ஆனால் ஜப்பானில் இதன் வீழ்ச்சி அதிகரித்து காணப்படுகின்றமை அதன் எதிர்கால பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

2050 ஆம் ஆண்டளவில் ஜப்பானின் சனத்தொகை 97 மில்லியனாக குறைவடையும் எனக் கூறப்படுவது தற்போதைய சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 30 மில்லியன் குறைவாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வீழ்ச்சி ஜப்பானுக்கு பல்வேறு வழிகளில் பாதகமாக அமையுமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த காலங்களில் இந்நிலை சீனாவிற்கு ஏற்பட்டிருந்தது. அதாவது சீனாவில் அதிகரித்த சனத்தொகை காரணமாக ஒருபிள்ளைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்ததுடன், இளைஞர்களின் தொகை குறைவடைந்து, முதியோர் தொகை அதாவது தங்கிவாழ்வோரின் தொகையானது அதிகரிப்பை காட்டத் தொடங்கியதால் உடனடியாக அச்சட்டம் தளர்த்தப்பட்டு சனத்தொகையில் சீரான வேகம் பெற அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் ஜப்பானில் அவ்வாறான சட்டங்கள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை. இருப்பினும் அங்கு சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டே வருகிறது. தற்போது ஜப்பானில் 15 வயது முதல் 64 வயதிற்கு இடைப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறையும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜப்பானில் 1 மில்லியனுக்கும் சற்று அதிகமான குழந்தைகளே பிறந்ததாகவும் இது 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் குறைவான குழந்தைகள் பிறப்பு வீதம் பதியப்பட்ட ஆண்டாக காணப்படுவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பானின் சுகாதாரத்துறை அமைச்சின் கணிப்பின்படி கடந்த ஆண்டில் அங்கு 13 இலட்சத்துக்கும் சற்று குறைவான அளவுக்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவை பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இவை ஜப்பானில் அதிகரித்துவரும் வயதான ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதை சிக்கலாக்கி பொருளாதார வளர்ச்சியையும் மட்டுப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானில் அதிகரித்துவரும் குழந்தைகள் பிறப்பு வீதம் குறைவடைந்ததற்கு அங்கு  திருமணங்கள் வீழ்ச்சியடைந்ததும் பெருநிறுவன கலாசாரங்களால் தாய்மை அடைவதை பெண்கள் வெறுத்து வருவதும் காரணமாகக் கூறப்படுகிறது. இதைவிட ஜப்பான் வெளிநாட்டவரின் குடியேற்றத்தையும் கடுமையான சட்டதிட்டங்களுடன் மட்டுப்படுத்தியுள்ளமையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அத்தோடு இங்கு பிறப்பு வீதம் வீழ்ச்சியோடு ஆயுட்கால அதிகரிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால் வயோதிபரின் தொகை அதிகமாக காணப்படுகின்றது. அங்கு சராசரி மனித ஆயுட்காலம் 86.39 ஆண்டுகளாகும். இது 2060 இல் பெண்களைப் பொறுத்தவரையில் 90.93 ஆண்டுகளாக அதிகரித்து விடும். ஆண்களின் தற்போதைய சராசரி ஆயுட்காலம் 79.64 ஆண்டுகளிலிருந்து 84.19 ஆண்டுகளாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

தற்போது ஜப்பானிய சனத்தொகையில் முதியவர்களின் தொகை 25 வீதமாக காணப்படுகிறது. 2060 ஆம் ஆண்டளவில் மொத்த சனத்தொகையில் 40 வீதமாக 60 வயதைக் கடந்தவர்களே காணப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையின் காரணமாக தற்போதைய ஜப்பானிய இளைய சமுதாயம், தங்களின் வாழ்க்கைக்கும் வேலை வாய்ப்புக்கும் குடும்பத்தை ஒரு பாரமாகக் கருதுவதால் குழந்தை பிறப்பில் ஈடுபடுவதில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குழந்தை பிறப்பும் வளர்ப்பும் பெரும் செலவுக்குரிய விடயமாக மாறியுள்ளமை, தொழில் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை, மிகவும் தாமதமான சராசரி திருமண வயது, திருமணமாகாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை மற்றும் வீட்டுச் சூழல்களும் சமூக வழக்கங்களும் மாறிவருகின்றமை உள்ளிட்ட விடயங்களே ஜப்பானின் சனத்தொகை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக நோக்கப்படுகின்றன. அத்தோடு இயற்கை அனர்த்தங்களும் ஜப்பானின் சனத்தொகையில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஜப்பானில் கடந்தாண்டு ஏற்பட்ட சுனாமியால் 19 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். சுனாமியால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் பலர் தமது தொழில் வாய்ப்பை இழந்தனர். இதனால் மக்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஜப்பானிய அரசாங்கம், அரசு வேலைபார்த்து வரும் தாய்மார்களுக்கு மேலதிக சலுகைகளை அளித்து அங்கு நிலவும் குழந்தைகள் பிறப்பு வீதத்தை 1.4 இலிருந்து 2.1 வீதமாக அதிகரிப்பதற்கான திட்டத்தை முன்வைத்திருக்கின்றன. எதிர்கால ஜப்பான் இளையோரின் கரங்களுக்குச் சென்றாலே அதன் அபிவிருத்தியை மேலும் எதிர்பார்க்க முடியும். இல்லையேல் அதன் அழிவுகளையே சந்திக்க நேரிடும்.

க.பிரசன்னா 
21/01/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக