
இலங்கையில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போதும், அதற்குப் பின்பும் பெறுவாரியான தமிழர்கள் சட்டவிரோத படகு பயணம் மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தனர். இவற்றில் வேறு நாட்டவர்களும் அடக்கம். பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அகதிகளாக வருவோரின் தொகை அதிகரிப்புக்குப் பின்னர், அவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அருகிலுள்ள மனுஸ் தீவு, பப்புவா நியூகினியா, நவுறு தீவு போன்ற பகுதிகளில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர். எனினும், அவுஸ்திரேலியாவுக்கான தஞ்சக்கோரிக்கை முற்று பெறவில்லை.
இவ்வாறான நிலையில் அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதித் தமிழர்களால் கடந்த ஒரு வாரகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம், முகாம் காவலர்களின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஒருவார காலமாக தமது குடியிருப்புகளிலிருந்து வெளியேறி பொது இடத்தில் கூடி இவ்வார்ப்பாட்டங்களை தமிழர்கள் முன்னெடுத்து வந்திருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் இச்சம்பவத்திற்கு பிறகு இதே முகாம்களிலுள்ள தனி சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தின் போது பலர் காயமடைந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே தீவில் உள்ள மற்ற முகாம்களின் நிலை தொடர்பான விடயங்கள் எவையும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. இப்போராட்டம் தஞ்சக் கோரிகள் அதிகாரப் ப+ர்வ அகதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தும் மனுஸ் தீவின் தலைநகருக்கு மாற்ற எடுத்த முயற்சியின் விளைவால் உருவானவையாகும்.
அவுஸ்திரேலியாவில் இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பினும், அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்படாது என அவுஸ்திரேலிய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. சட்டவிரோதமாக கடல் பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும், அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுடன் தீவுகளுக்கே அனுப்பி வைக்கப்படுவர் என கடுமையான சட்டங்களை அகதிகள் மீது அவுஸ்திரேலிய அரசு கடைபிடித்து வருகின்றது.
இவ்வாறு மனுஸ் தீவில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் 500இற்கும் மேற்பட்ட இலங்கை மற்றும் ஈராக் நாட்டு அகதிகள் கலந்து கொண்டிருந்தனர். தங்களுக்கான அகதிகள் அந்தஸ்தை அவுஸ்திரேலிய அரசு துரிதப்படுத்த வேண்டுமெனவும், இல்லையெனில், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவையை பரிசீலிக்க அனுமதிக்குமாறும் இவர்கள் வேண்டுகோளை முன்வைத்திருந்தனர். இச்சம்பவங்கள் அவுஸ்திரேலியாவுக்கு புதியதல்ல. கடந்த வருடத்திலும் இவ்வாறு அகதிகள் ஒடுக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியிருந்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.இலங்கையிலிருந்து அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த பலரில் சுமார் 42 பேர் மட்டும் கடந்த 6 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இளைஞர்கள், குடும்பத் தலைவர்கள், திருமணமான பெண்களும் உள்ளடங்குவர். இவர்கள் இலங்கையில் நிலவிய யுத்தத்தில் விடுதலைப் புலிகளோடு ஏதோவொரு வகையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவுஸ்திரேலிய அரசு குறிப்பிட்டிருந்தாலும் இதுவரையிலும் அவை தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்களை கூட அந்நாடுகள் இவ்வாறான நெருக்குதல்களுக்கு உட்படுத்தவில்லை. இலங்கையின் முன்னைய அரசாங்கம் அவுஸ்திரேலியாவோடு கொண்டிருந்த நெருங்கிய உறவே இதற்கு காரணமாகவும் இருந்திருக்கலாம்.
அத்தோடு 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அகதிகளுக்காக கொண்டுவந்த சட்டங்கள் கூட அவர்களுக்கு குறைந்தபட்ச அகதிகளுக்கான உரிமைகளை கூட வழங்கியிருக்கவில்லை. 2012.08.13ஆம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய விசா நடைமுறையானது, அடிப்படை மனித உரிமைகளை கூட மறுப்பதற்கான நடைமுறையாக காணப்பட்டது. இவ்விசா நடைமுறையால் புகலிடம் கோருபவர்கள்@ தொழில் செய்ய முடியாது என்பதுடன், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது, மற்றும் பணம் அனுப்ப முடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனையே இவ்விசா வழங்கப்பட்டது. பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு சென்றவர்களின் நிலை மோசமானதே. கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தோரை கடத்துவதற்கான இலங்கை- அவுஸ்திரேலிய நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்பும் தஞ்சம் கோருவோரின் தொகை சடுதியாகவும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவுஸ்திரேலியாவில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு பிரிட்ஜிங் விசா எனப்படும் தற்காலிக விசா வழங்கப்படுகிறது. இது தடுப்பு காவலிலிருந்து வெளி செல்வதற்கான அனுமதியை மட்டும் வழங்குகிறது. கல்வி கற்க முடியாது, அவ்வாறு கற்க வேண்டுமாயின் சொந்த பணத்திலேயே கற்க வேண்டும். தொழில் செய்ய முடியாது, தொழில் செய்து கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் விசா இரத்து செய்யப்படுவதுடன், தடுப்பு காவலில் வைக்கப்படுவர். இவ்வாறு அவுஸ்திரேலியாவின் அகதிகளுக்கான சட்டங்கள், ஏனைய எந்தவொரு சர்வதேச நாட்டில் இல்லாதவாறான கொடுமையான நடைமுறைகளை கொண்டுள்ளது. தற்போது பல வருடங்களாக முகாம்களில் வசிக்கும் அகதிகள் மனநிலை பாதிப்படைபவர்களாக இருக்கின்றனர். ஆனால், அவுஸ்திரேலிய அரசு அகதிகளை மனிதர்களாய் மதிப்பது இல்லை.
க.பிரசன்னா
25/01/2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக