கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

29 ஜனவரி, 2015

நெருடாவின் மரணம் ?

சிலி நாட்டின் பிரபல கவிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான கவிஞர் பாப்லோ நெருடாவின் மரணம் குறித்து சிலி நாட்டு அரசு புதிய விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல்களை விடுத்திருக்கிறது. இவ்விசாரணை அவரின் மரணம் குறித்த விடயங்களை அறிய உதவுமென கூறப்படுகிறது. உலகளவில் பிரபலங்களின் மரணம் மர்மம் நிறைந்ததாக காணப்படுவதற்கு அவர்களின் பின்புலம், சொத்து, போட்டித்தன்மை, நோக்கம் என்பன காரணமாகவிருக்கின்றன.

அந்தளவில் உலகளவில் பிரபலமானவர்களில் இளவரசி டயானா, கிளியோபாட்ரா, முன்னாள் பாலஸ்தீன  ஜனாதிபதி யாசிர் அரபாத், இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சசிதருரின் மனைவி சுனந்தா புஷ்கர்  ஆகியோரின் மரணங்கள் தொடர்பில் பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும் தீர்வுகள் பெறப்பட்டிருக்கவில்லை.  இவைகள் அனைத்தும் இயற்கை மரணமில்லை என்பது உலகுக்கு தெரிந்தும் அவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரங்களும் காணப்படவில்லை. அவ்வாறானதொரு நிலையே கவிஞர் நெருடாவின் மரணத்திலும் காணப்படுகிறது. நெருடா 1973 ஆம் ஆண்டு இறந்தபோது அவர் பரோஸ்டேட் புற்றுநோயால் இறந்தார் என்று அவரது மரண அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. நெருடா இறந்து 2015 ஆம் ஆண்டோடு 42 வருடங்கள் முடிவடையும் நிலையிலேயே சிலி அரசு மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரைக் கொண்ட ரிக்கார்டோ இலீசா நெப்டாலி ரீயஸ் பொசால்தோ 1904 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிலி நாட்டில் பிறந்திருந்தார். இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். இவர் கவிஞர் என்பதையும் தாண்டி சமூக உணர்வு கொண்ட போராளியாகவும் மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர். 1920 ஆம் ஆண்டு கவிதை எழுதுவதற்காக செக்கோஸ்லாவாகிய எழுத்தாளரான ஜோன் நெருடாவின் பெயரால்  உந்தப்பட்டு தன் பெயரையும் பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

சிலி நாட்டிலுள்ள  பாரல் என்ற ஊரில் பிறந்த நெருடா, பிறந்த சில நாட்களிலேயே இவரின் தாயை இழந்திருந்தார். தந்தை மறுமணம் செய்திருந்தாலும் அவரின் சிற்றண்ணையாக வந்த தந்தையின் மனைவி நெருடா மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார். தனது எட்டு வயதில் வெளியிட்ட முதலாவது கவிதை இவரைப் பற்றியதாகவே அமைந்திருந்தது. இவர் தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ~இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்(Twenty Love Pomes: And A Song Of Despir-1924)  என்ற கவிதைத் தொகுப்பு சிலி மக்களிடையே இவரை பிரபலமானவராக அறியமுகப்படுத்தியது. அப்போது இவரின் வயது வெறும் இருபது.

நெருடா கவிஞராக மட்டுமல்லாது மியன்மார், இலங்கை, சிங்கப்பூர், ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளில் சிலி நாட்டுத் தூதுவராகவும் பணியாற்றியிருக்கிறார். 1934 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் தூதராக பணியாற்றியப் போது இவருக்கு ஸ்பெயினின் கவிஞர் லார்காவின் நட்பு கிடைத்தது. 1936 ஆம் ஆண்டு ஸ்பெயினில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரினால் சில அரசியல் காரணங்களுக்காக லார்கா கொல்லப்பட்டார்.

தனது நண்பனான லார்கா கொல்லப்பட்டதை சகித்து கொள்ளாத நெருடா, பத்திரிகைகளில் கண்டனக் கவிதைகளை எழுதிவந்தார். இதனால் இவருடைய தூதுவர் பதவி பறிக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு பிரஞ்சு தத்துவவாதியான பால்சர்த்தர் நோபல் பரிசினை ஏற்க  மறுத்து நெருடாவிற்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் 1971  ஆம் ஆண்டு பாரிசில் தூதுவராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நெருடாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1973 ஆம் ஆண்டு நெருடா புற்றுநோயால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், அவரின் அந்தரங்கச் செயலாளரால் நெருடாவுக்கு தரப்பட்ட ஊசியாலே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிலியில் இராணுவ ஆட்சி ஏற்பட்டு 12 நாட்களுக்குப் பின்பே, இவரின் மரணமும் நிகழ்ந்திருந்தது. இவர் கவிஞர், தூதுவராக மட்டுமல்லாது, சிலியின் கம்னியூஸ்ட் கட்சியின் ஆயுட்கால உறுப்பினராகவும் செயற்பட்டிருந்தார். இவையும் அவர் மரணம் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தவே 2013 ஆம் ஆண்டு இவருடைய உடல் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எவையும் பெறப்படவில்லை.

எனினும், சிலி நாட்டின் அரசப் பேச்சாளர், கவிஞர் நெருடா விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சில குறிப்புகள் வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார். இதையடுத்தே சிலி அரசு நெருடாவின் மரணம் தொடர்பாக புதிய விசாரணையொன்றை அறிவித்திருந்தது. இன்னும் சில மாதங்களில் மரணத்திற்கான மர்மம் நீங்கும் என  எதிர்பார்க்கலாம்.

க.பிரசன்னா
25/01/2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக