
அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பருவக்கால நிலைகள் மாநாடு இடம்பெறவிருந்த ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இப்பேரணியில் பருவகால நிலை மாற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டிருந்தது. இதேவேளை அமெரிக்காவில் மென்காட்டான் நகரில் இடம்பெற்ற பேரணியில் ஐ.நா.பொதுச் செயலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இப்பேரணியில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பருவகாலநிலை மாற்றத்தை தடுக்கக்கோரி வலியுறுத்தியதுடன் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியில் இசை கருவிகளும் இசைக்கப்பட்டிருந்தன. தற்போது வெளியேறும் காபனின் அளவு அதிகமாக காணப்படுவதாலேயே காலநிலை மாற்றம் ஏற்படுவதாகவும் அவற்றை தடுக்க உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டி வலியுறுத்தியுமே இப்பேரணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
உலகளவில் அதிகளவு காபனை வெளியிடும் நாடாக சீனா காணப்படுகிறது. ஆதலால் இக்காலநிலை மாநாட்டில் அதன் பங்கு அதிகமாகவிருந்ததுடன் அவற்றின் உறுதிமொழி உலக நாடுகளின் வரவேற்பையும் பெற்றிருந்தன. 2020ஆம் ஆண்டினுள் காபன் வெளியேற்றத்தினை குறைப்பதற்காக ஆக்கப+ர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் சீனா கூறியுள்ளது. காலநிலை மாற்றத்துக்கு எதிரான முயற்சிகளை விட காலநிலை மாற்றம் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களுக்கும் அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்ட பாரிய மாநாடு என்பதால் இவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதற்கான பொறிமுறை, நிதி உதவிகள், தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் பரிமாற்றம், திறன் உருவாக்கம் ஆகியவையும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிடையே பகிரப்பட வேண்டும் எனவும் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், உலகளாவிய ரீதியிலான காலநிலை செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய வகையில் புதிதாக அமைக்கப்பட்ட காலநிலை நிதியத்திற்கு தேவையான நிதி காணப்படவில்லையென ஐ.நா.வின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிதியத்திற்கு பிரான்ஸ், ஜெர்மனி தலா 1 பில்லியன் டொலர்களை வழங்க இணங்கியதை கொண்டு தற்போது 2.3 பில்லியன் டொலர் வழங்குவதற்கு உறுதிமொழி கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இத்தொகை எதிர்பார்க்கும் இலக்கை விடவும் மிகக் குறைவானது எனவும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் அனர்த்தங்களால் மோசமாக பாதிக்கப்படும் வறிய நாடுகளுக்கு உதவுவதற்காகவே பசுமை காலநிலை நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டது தொடக்கம் ஆண்டுதோறும் 10 பில்லியன் டொலர்களை சேமிக்க திட்டமிடப்பட்டது. 2020 ஆண்டளவில் 100 பில்லியன் என்ற இலக்கை எட்டுவதற்கு இணக்கம் கொள்ளப்பட்டிருந்ததாகவும் தெரிவித்ததுடன் உலக காலநிலை தொடர்பான உடன்பாட்டை எட்டுவதற்கும் உத்வேகத்துடன் செயற்பட வேண்டியும் கோரியிருந்தார்.
காலநிலை மாற்றம் தொடர்பில் சேகரிக்கும் நிதித்திட்டத்திற்கு ஒரு சில வளர்ந்த நாடுகளே நன்கொடைகளை வழங்க முன்வந்துள்ள நிலையில், உலகிலுள்ள நாடுகளில் குறைந்தது 120இற்கும் மேற்பட்ட தலைவர்கள் தமது பங்களிப்பை வழங்க முன்வரவேண்டுமென தெரிவித்துள்ளார். இதேவேளை இந்நிதியத்திற்கு சுவிட்சர்லாந்து, தென்கொரியா தலா 100 மில்லியன் டொலர்களையும் டென்மார்க் 70 மில்லியன் டொலர்களையும் நோர்வே 33 மில்லியன் டொலர்களையும் மெக்சிக்கே 10 மில்லியன் டொலர்களையும் சீனா 6 மில்லியன் டொலர்களையும் வழங்க முன்வந்துள்ளன. காலநிலை மாநாட்டில் வறிய நாடுகளுக்கு உதவுவது மட்டும் நோக்கமல்ல, சில வளர்ச்சியடைந்த நாடுகளிலும் காலநிலைக்கு எதிரான உந்துதல்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இவற்றை சீர்ப்படுத்த துல்லியமானதும், அவசரமானதுமான தேவையே தற்போது சர்வதேச நாடுகளுக்கு சவாலாக இருக்கின்றன. அதிகரித்த காபன் வெளியேற்றமே காலநிலை மாற்றத்தில் அதிகளவுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன.
இதற்கு முன்னரும் காலநிலை தொடர்பில் பல்வேறு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு இருப்பினும், அவை நடைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 120 நாடுகளின் தலைவர்களின் உறுதிமொழியோடு நிறைவு பெற்றுள்ள இவ்வருட காலநிலை மாநாடு எதிர்வரும் வருடம் பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 2015ஆம் ஆண்டினுள் பிரான்ஸ் காலநிலை மாற்றத்தின் சின்னமாக மாறும் எனத் தெரிவித்துள்ளமை உலக நாடுகளுக்கு சவாலாக அமையுமா?
28/09/2014
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக