
பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் பிரதமர் நவாஷ் ஷெரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் இஸ்லாமா பாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் இயல்பு நிலைகளில் ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானில் 2013 ஜூனில் இடம்பெற்ற தேர்தலில் முறைக்கேடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தெக்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானின் சுதந்திர தினத்தினமான ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதிக்கு முன்பதான காலப்பகுதியில் இம்ரான்கானினால் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிடப் போவதாகவும் கூறப்பட்ட நிலையில் லாகூர் நீதிமன்றம் இதற்கு தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. எனினும், தடையுத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பொலிஸாருக்கும் ஆதரவாளர்களுக்குமிடையில் கலவரமாக வெடித்துள்ளது.
இருமுறை 48 மணித்தியால காலக்கெடுவின் மூலம் நவாஸ் ஷெரிப்பை பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியபோதும், அது பிரதமரால் நிராகரிக்கப்பட்டதுடன் பதவி விலகப் போவதில்லையென திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அண்மையில் இஸ்லாமாபாத்தில் எதிர்பார்ப்பாட்டக்காரர்களுக்கும் பிரதமர் தலைமையிலான குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இவற்றில் பிரதமரின் பதவி விலகல், பாராளுமன்றத் தேர்தல் உட்பட 14 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், 5 கட்டங்களை தாண்டிய பேச்சு வார்த்தையால் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் முறிவடைந்து போனது.
அதன் பின் பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், வாசஸ்தலம், அரச தொலைக்காட்சி நிலையம் என்பன இம்ரான்கான் தலைமையிலான 25,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்ட குழுவால் முற்றுகையிடப்பட்டது. இதன் போது அலுவலக வேலைகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், தொலைக்காட்சியும் தனது ஒளிபரப்பு சேவையினை 15 நிமிடங்கள் இடை நிறுத்தியது. பின்பு இராணுவத்தின் துணையுடன் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டிருந்தாலும் இதன்போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகைவீச்சு, துப்பாக்கிச் சூட்டின் போது 8 பேர் பலியானதுடன் 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்ததுடன் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். பாகிஸ்தானில் இதற்கு முன் வாக்கெடுப்பு மூலம் ஆட்சியமைக்கப்பட்டும் இறுதியில் அவை இராணுவ ஆட்சியாக மாற்றப்பட்டமை வரலாறு. எனினும், முஷாரப்பின் இராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ஆட்சியிலும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு குறைவேயில்லை. அவ்வாறானதொரு சூழ்நிலையே இன்று நவாஸின் தலைமையிலான பாகிஸ்தான் அரசுக்கும் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்நிலைமையிலும் இராணுவத்தின் ~மௌன புரட்சி|யானது வெளிவிவகாரம், பாதுகாப்பு போன்ற விடயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும், இராணுவமானது அரசியலில் தனது தலையீட்டை குறைத்துக் கொள்வதற்காகவே இப்பிரச்சினையில் பின்னடைவை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், பல தடவைகள் பிரதமர் நவாஸ் ஷெரிப் இராணுவத்துடன் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதுடன், வன்முறையின்றி பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு பிரதமரை இராணுவம் கோரியுள்ளது. நாட்டின் நிலைமை தொடர்பில் இராணுவம் கவலையை கொண்டுள்ளதெனவும், இவ்விடயத்தில் இராணுவ அழுத்தத்தை பிரயோகித்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் எனவும், ஜனநாயகத்தை தாம் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், அரச தொலைக்காட்சி நிறுவனம் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதற்கு இம்ரான் கான் கண்டனம் தெரிவித்திருந்தார். ~இதைப் போன்ற ஆவேசச் செயல்களால் எமது அமைதியான போராட்டம் அர்த்தமற்றதாகிவிடும்| என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான்கானின் உணர்ச்சி மிகு வசனங்களாலேயே போராட்டக்காரர்கள் அத்து மீறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், இதுவரை இடம்பெற்ற வன்முறைகளில் உயிர்பலி மற்றும் காயங்களுடன் பலர் அவதிப்பட்டிருந்தும், தம்மால் உருவாக்கப்படும் புதிய பாகிஸ்தானில் மறுமணம் செய்துகொள்ளப் போவதாக ஏற்கனவே இம்ரான்கான் அறிவித்திருந்தார். இவ்வார்ப்பாட்டத்தின் ஆரம்பத்தில் தனது மகன்மாரை வாரிசு அரசியலுக்குள் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விடயங்கள் பாகிஸ்தான் அரசியலில் இம்ரான்கானின் சுயநலப் போக்கையும், அதற்கு பொது மக்கள் பலிகடாவாக மாற்றப்படுவதையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அரசு மீது மேற்கொள்ளப் போகும் ஆர்ப்பாட்டங்களை தன் மரணம் வந்தாலும் நிறுத்தப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளதுடன், இதுவொரு அமைதி வழிப்போராட்டம் எனக்கூறிக் கொள்ளும் இம்ரான்கான், தனது ஆதரவாளர்களால் அரச தொலைக்காட்சி சூறையாடப்பட்டமை, பொலிஸாரை மூவர் கொண்ட குழு தாக்குவதான காட்சிகள் போன்றன வன்முறையை கையாளுவதற்கான யுக்தியாக அமைவதை தடுப்பதற்கு எவ்வாறான தீர்வினை முன்வைக்கப் போகிறார்.
எனினும், இம்ரான் கான் மற்றும் மதத்தலைவர் தாஷிருல் காத்ரி ஆகியோர் மீது பாகிஸ்தானில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதாக பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சு, இந்தப் போராட்டம் ஜனநாயக ரீதியிலானது என்ற தவறான எண்ணத்தை பாராளுமன்றம் நீக்க வேண்டும். இப்போராட்டம் அரசுக்கெதிரான கலவரம் என்றும் விமர்சித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயுதங்களுடன் போராடி வருவதுடன், 1500 தீவிரவாதிகள் இவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அவர்களின் நடவடிக்கையை அரசுக்கெதிரான கலவரமாக பாராளுமன்றம் அறிவிக்க வேண்டும் எனவும் அவர்களை அடக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு தீர்வு காணும் பொருட்டு அந்நாட்டு பாராளுமன்றம் கூடியிருந்ததுடன், அங்கு நவாஷ் ஷெரிப்புக்கு ஆதரவாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு பிறகட்சிகளும், அவரின் முஸ்லிம் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, பேச்சு வார்த்தைக்கு முன்வரவேண்டுமாயின் லாகூர் மோதல் தொடர்பில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது சகோதரர், அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட 21பேர் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். இதற்கு பிரதமர் மறுப்பு தெரிவிக்கவே பேச்சுவார்த்தை வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் நவாஸின் இல்லத்தை முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களை தடுத்தமையினால் நிலைமை மோசமடைந்ததுடன் அவசரமாக இராணுவத்துடன் கலந்துரையாடப்பட்டது. இதன்மூலம் ஷெரிப் 3 மாதகாலம் பதவி விலகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அதை பிரதமர் நிராகரித்திருந்தார். தற்போது இப்பத்தி நிறைவெய்தும் போது பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான மக்கள் கட்சியின் வேண்டுதலின் பேரில் இம்ரான்கான் மற்றும் தாஹிருல் காத்ரியும் பேச்சுவார்த்தைக்கு இணங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவை பற்றியதான தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. ஒருவேளை, பேச்சு வார்த்தை ப+ரணமாக நிறைவெய்தும் பட்சத்தில் பாகிஸ்தானில் சுமுக நிலையை எதிர்பார்க்கலாம். ~இராணுவ பலத்தை பிரயோகிக்கும் அவசியம் எமக்கில்லை. ஆனால், எஞ்சிய 4 ஆண்டு காலத்தை கழிக்க வேண்டுமாயின் இராணுவத்திற்கும் குறிப்பிட்ட அதிகாரங்களை ஒதுக்க வேண்டும்| என பாகிஸ்தான் இராணுவம் கருதுவதாக ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியாயின் இம்முறையும் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுமா?
07/09/2014
க.பிரசன்னா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக