கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

8 ஆகஸ்ட், 2025

ஹட்டன் பிரகடனத்தை அநுர மறந்துவிட்டாரா?

ஹட்டன் பிரகடனம் தொடர்பில் பலரும் மறந்து போயிருக்கலாம், பலருக்கு என்னவென்றே தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த ஹட்டன் பிரகடனத்துக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் மலையக மக்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதுவே மலையக மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியாகவும் இருந்து வருகிறது. அரசாங்கத்துக்கு மீண்டும் அதனை ஞாபகப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாகி ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் அல்லது கட்சி ரீதியாக கொள்கை தீர்மானங்களை உருவாக்குவதிலும் செயற்படுத்துவதிலும் காணப்படும் தாமதத்தால் மலையக மக்களின் உரிமைகள் சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இது அரசியல் ஆதரவற்ற ஒரு நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டுள்ளதை உணரும் சூழலை உருவாகியுள்ளது.

மலையக மக்களுக்கான காணியுரிமை, வீட்டுரிமை, ஊதியம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் செயற்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அவற்றில் முக்கியமாக, “தாயகத்திற்கு வலிமை கௌரவமான பிரஜை“ எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனம் 15.10.2023 வெளியிடப்பட்டது. பிரகடனம் வெளியிடப்பட்டு இரண்டு வருடங்கள் நெருங்குகின்ற போதும் அவற்றில் குறிப்பிடப்பட்ட எந்த விடயமும் இந்த அரசாங்கத்தால் செயற்படுத்தப்படவில்லை. குறைந்தது அவ்வாறானதொரு பிரகடனம் வெளியிடப்பட்டது தொடர்பில் அவர்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பரந்து வாழும் மலையகத் தமிழ் மக்களின் கலாசார, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளதால் அவற்றுக்கான நியாயமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொள்கின்ற தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஹட்டன் பிரகடனத்தில் உள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மலையகத் தமிழ் மக்களை வறுமையிலிருந்தும் பின்னடைவு நிலையிலிருந்தும் மீட்டெடுக்கின்ற அதேவேளையில் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அவர்களுக்கு உறுதிசெய்வதாகவும் மலையகத் தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களை கௌரவமான இலங்கைப் பிரஜைகளாக உயர்த்தி வைப்பதாக உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் குறிப்பிட்ட முன்மொழிவுகளில் ஒன்றுகூட இன்னும் செயற்பாட்டுக்கு வராமை மலையக மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் எதிர்பார்ப்பை கேள்விக்குறியாகியுள்ளது. மலையக மக்களின் அடையாளம், காணி மற்றும் வீடமைப்பு, பொதுச் சேவைக்கான அணுகல், கல்வி, சுகாதாரம், வருமானம் மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இன்னும் எந்தவித மாற்றத்துக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

அடையாளம்

மலையக மக்களை மலையகத் தமிழர் என்று அடையாளப்படுத்த வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை மதிப்பளித்து அங்கீகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கான சட்டரீதியான நடவடிக்கை எதையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சனத்தொகை கணக்கெடுப்பு பணிகளின் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு நடவடிக்கையின் முதற்கட்டமாக மலையகத் தமிழர் என்ற பிரிவு மதிப்பீட்டு பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டாலும் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இனக்குழுமமாக அங்கீகரிக்கப்படுவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காணி மற்றும் வீடமைப்பு

2012/2013 தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையின்படி அவர்களில் 67.8 வீதமானவர்கள் இன்னமும் ‘லயன் அறைகளில்’ வாழ்கிறார்கள். மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மலையகத் தமிழ் மக்கள் சுபிட்சமான சமுதாயமென்றவகையில் அவர்களின் அபிவிருத்திக்கு உதவுகின்ற வீடமைப்புத் திட்டமொன்று மூலமாக அவர்களுக்கு உயிர்வாழ்வதற்கான பொருத்தமான வீடுகளை வழங்குகின்ற வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் மற்றும் காணியுறுதி என்பன தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக இந்திய வீட்டுத்திட்டத்துக்கான காணியை விடுவிப்பதற்கு கூட நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கும் காணி உரித்துக்கள் வழங்கப்படவில்லை.

அனைத்து பெருந்தோட்ட குடும்பங்களுக்கும் காணி வழங்குவதற்கு போதுமான காணிகள் இல்லையெனவும் அவ்வாறு வழங்கினால் பெருந்தோட்ட தொழிலை இழக்க வேண்டிவருமெனவும் இதே அரசாங்க அமைச்சர்களே கருத்து வெளியிட்டிருந்ததையும் குறிப்பிட வேண்டும்.

மேலும் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட “க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் ஒரு பகுதியாக “அழகான இல்லம் - வளமான குடும்பம்” எனும் தொனிப்பொருளில் மலையக மக்கள் வாழும் லயன் வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் கடந்த 6 ஆம் திகதி பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. லயன் அறைகளை புனரமைப்பது மாத்திரம் மலையக மக்களின் காணியுரிமையை உறுதிப்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

பொதுச் சேவைகளுக்கான அணுகல்

மலையகத் தமிழ் மக்கள் கிராம அலுவலகர்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களுக்கான அணுகல் இல்லாமையே பொதுச் சேவைகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் முறைமை சார்ந்த பாரபட்சத்திற்கான காரணமென தேசிய மக்கள் சக்தி கருதுவதோடு இது அவ்வாறு அமையக்கூடாதென நாங்கள் திடமாக நம்புகிறோம். நியாயமான எல்லை நிர்ணயம் மற்றும் தேசிய தரநியமங்களை அடிப்படையாகக் கொண்டதாக பெருந்தோட்டப் பிரதேசங்களில் கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் விரிவாக்கம், நியாயமான எல்லை நிர்ணயம் மற்றும் தேசிய தரநியமங்களின் அடிப்படையில் பெருந்தோட்டப் பகுதிகளில் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலகங்களின் சேவைகளை விரிவாக்க வேண்டியதும் பிரதேச சபைகளை நிறுவ வேண்டியதும் அவசியமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் புதிதாக நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு போதுமான வளங்களை பெற்றுக் கொடுப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக தலவாக்கலை பிரதேச செயலக ஊழியர்களால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மூலம் இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. அத்துடன் ஒரு சில ஊழியர்களை மாத்திரம் கவனத்தில் கொண்டு நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டனுக்கு மாற்றுவதற்கு முயற்சித்ததும் இதே அரசாங்கம் தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் மேலும் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவை உருவாக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான நடவடிக்கையை இந்த அரசாங்கம் முன்னெடுக்குமா?

இதேவேளை மலையக தமிழ் சமூகத்திற்கு அரச சேவைகளுக்கான மிகச்சிறந்த அணுகலை வழங்குவதற்காக 2018 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்த சட்டத்தில் எவ்வாறான திருத்தங்கள் முன்வைக்கப்படுமென தெரியவில்லை. குறித்த அதிகார சபையை நீக்கி அமைச்சின் ஒரு அலகாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. மலையக மக்களின் அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை சுயாதீனமாக இயங்க விடாமல் செய்த முன்னைய அரசாங்கங்களின் அதே செயற்பாட்டையே இந்த அரசாங்கமும் மேற்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

வருமானம் மற்றும் ஊதியம்

தேசிய மக்கள் சக்தியானது கம்பனிகளின் அரைச்சம்பள மோசடியைத் தடுப்பதோடு இலாபம் மறைக்கப்படுகின்றதா அல்லது குழுமத் தொழில்முயற்சிகளுக்கோ இணைக் கம்பனிகளுக்கோ மாற்றப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கும். அதைப்போலவே நட்டமடைவதாகக் கூறுகின்ற கம்பெனிகள் அரசாங்க கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும். உண்மையாகவே நட்டமடையுமாயின் நடப்புக் கம்பெனிகளுக்கு குத்தகைக்கு விடுபடுதலை மீள்பரிசீலனை செய்து ஊழியர்களுக்கு சாதகமான தொழிச் சூழலையும் போதியளவிலான சம்பளத்தையும் வழங்கத் தயாராகவுள்ள கம்பனிகளிடம் தோட்டங்கள் கையளிக்கப்படும். தற்போதுள்ள அரசாங்கத் தோட்டங்களில் சேவை புரிவோருக்கும் போதியளவிலான சம்பளம் உறுதிப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென வழங்கிய வாக்குறுதிகள் ஏழு மாதங்களை கடந்துள்ள போதும், இதுவரை முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக தெரியவில்லை. ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு தீர்வை பெற்றுத் தருவதாக அறிவித்த போதும், இதுவரையில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான எவ்வித கலந்துரையாடல்களையும் பொறுப்பான அதிகாரிகள் அல்லது அமைச்சர்களுடன் முன்னெடுக்கவில்லை.

சுகாதாரம்

பெருந்தோட்ட சுகாதார சேவைகள் தேசிய சுகாதார அமைப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது பல பிரச்சினைகளை உருவாக்கி உள்ளதுடன், நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுடன் சார்பு ரீதியாக மலையத் தமிழ் மக்களுக்கு சுகாதார நன்மைகள் அற்றுப்போகச் செய்விக்கப்பட்டுள்ளன. தற்போது ஒருசில தோட்டங்களில் மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளதோடு ஒருசில தோட்டங்களில் மருந்தகங்கள் இருந்தபோதிலும் அவற்றின் நிலைமை கவலைக்கிடமானது. மலையகத் தமிழ் மக்களின் சுகாதாரக் கட்டமைப்பினை தேசிய சுகாதாரக் கட்டமைப்புடன் முழுமையாக இணைத்து இணையான சுகாதார வசதிகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான  குழு நிலை விவாதத்தில், “தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஆகிய தரப்புக்களுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் 44  தோட்ட வைத்தியசாலைகளை அரசுடமையாக்குவது  தொடர்பான  நிருபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்” என சுகாதாரத்துறை அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஆனால் அமைச்சரவைப் பத்திரம் இதுவரை சமர்க்கப்படவில்லை.

சகல பெருந்தோட்ட சுகாதார நிறுவனங்களையும் கட்டம் கட்டமாக அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்வதற்கு ஏற்கனவே 2018.05.15 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உட்பட பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள 450 சுகாதார நிலையங்கள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டு, அறிக்கையானது சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் கையளிக்கப்பட்டுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவற்றுக்கு மேலாக கல்வி, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அரசியல் ஆதரவற்ற ஒரு நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டுள்ளதை உணரும் சூழலை உருவாகியுள்ளது.

இவற்றையெல்லாம் விடுத்து, வாக்குறுதிகளை மீறி தனி வீட்டு திட்டத்துக்குப் பதிலான மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்தல், பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகாரசபைக்கான நிதியை விடுவிக்காமல் அதனை அமைச்சின் அலகாக மாற்றுவதற்கான திட்டம், தனி வீடுகளை நிர்மாணிப்பதை விடுத்து லயன் அறைகளை புனரமைப்புச் செய்தல், இந்திய வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துவதில் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச் செய்தல் போன்ற நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின்றது.

மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்குமான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் இன்னும் முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் அரசாங்கத்துக்குள் அழுத்தம் கொடுப்பதற்கான குழுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற அங்கத்துவம் பெற்றவர்கள் ஒரு குழுவாக செயற்பட்டு மலையக மக்களின் பிரச்சினைகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அதனை எந்தளவுக்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாத்தியமாக்குவார்கள் என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக