உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்களின் பரபரப்புகளுக்கு மத்தியில் மே தினக்கூட்டங்களை நடத்துவதற்கும் பல கட்சிகள் தீர்மானித்துள்ளன. இம்முறை தேசிய மக்கள் சக்தி தனிக்கட்சியாக மத்தியில் ஆட்சியில் இருப்பதால், மலையகத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத எதிர்க்கட்சிகளின் மேதினக்கூட்டங்களே இடம்பெறவுள்ளமை முக்கிய அம்சமாக இருக்கின்றது.
2020 - 2024 ஆம் ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரச தரப்பாக மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்க்கட்சியாக மே தினத்தை நடத்தியது.
2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி அங்கம் வகித்து, அரச தரப்பாக மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக மே தினத்தை நடத்தியது.
2005 - 2014 வரையான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரச தரப்பாக மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சியாக மே தினத்தை நடத்தின.
ஆனால் இம்முறை மலையக மக்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய இணைந்த தமழ் முற்போக்கு கூட்டணியின் மே தின நிகழ்வு தலவாக்கலையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு கொட்டகலையிலும் இடம்பெறவுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி கொழும்பு காலிமுகத்திடலில் தங்களுடைய மே தின நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
பாராளுமன்றத்தில் பொது எதிர்க்கட்சியாக செயற்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பவற்றுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும் பொது எதிர்க்கட்சியாக மேதினக்கூட்டங்களை நடத்துவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் உள்ளூராட்சித் தேர்தலில் தற்போதைய தேசிய மக்கள் சக்தியை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகள் இரகசிய பேச்சுவார்த்தைகளின் ஊடாக தங்களுடைய பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. ஒவ்வொரு வருடமும் மே தினக்கூட்டங்களை தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பயன்படுத்தாமல் தங்களுடைய அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திய சம்பவங்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்கு மத்தியில் மே தினக்கூட்டங்களும் இடம்பெறுவதால் அங்கு அரசியல் பிரசாரங்களே முன்னெடுக்கப்படும் என்பது வெளிப்படையானது.
கடந்த காலங்களைப் போலவே மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளும் இம்முறை மே தினக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட பிரதான கட்சிகளும் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
ஆனால் குறித்த கட்சிகள் இதுவரை இடம்பெற்ற தேர்தல் பிரசாரம் மற்றும் மேதின கூட்டங்களில் வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதே வரலாறாக இருக்கின்றது. கொள்கையற்றவர்களால் மேற்கொள்ளப்படும் மேதினக் கூட்டங்களில் தங்களுடைய பலத்தை காண்பிக்க மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்திக் கொள்ளும் கலாசாரம் அதிகரித்துள்ளது. மக்கள் எண்ணிக்கையை அதிகரித்தால் மக்கள் அனைவரும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான உருவாக மேதினம் இன்று அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வாக மாறியிருப்பது கவலைக்குரியதாகும்.
ஒவ்வொரு வருடமும் மே தின நிகழ்வில் தோட்டத் தொழிலாளர்கள் பிரதான கருப்பொருளாக இருந்தாலும் அவர்களின் நாளாந்த வேதனம், காணியுரிமை, வீட்டுரிமை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளே இன்றும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பெருந்தோட்டங்களை முகாமைத்துவம் செய்யும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தாலும் ஆட்சியமைத்த பின்னர் கம்பனிகளின் கைகூலிகள் போல் செயற்படுவது வரலாறாக இருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும், இறுதியில் 1350 ரூபாவுக்கான உடன்பாடே எட்டப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படுமென வரவு - செலவு முன்மொழிவில் கூறப்பட்டது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே முதலாளிமார் சம்மேளனம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கைகள் காரணமாக குறித்த பலனை தோட்டத் தொழிலாளர்கள் அடைய முடியாத நிலை உருவானது.
தற்போதைய அரசாங்கம் தொழிலாளர்களின் நாட் சம்பளமாக 1700 ரூபா என்ற கோரிக்கையையே முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்துள்ளது. இதற்கு முன்பாக ஜே.வி.பியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் 2000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருந்தது.
ஆனால் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியே அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கம்பனிகள் அதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளம் சாத்தியப்படாது. இவ்வாறு கம்பனிகளுக்கு துணை போவதன் மூலம் தொழிலாளர் உரிமைகளை பெற்றுக் கொள்வது என்பது எந்தவகை அரசியல் தந்திரம் என்பது தெரியவில்லை. இம்முறை மேதினக்கூட்டங்களில் இவ்விடயம் அதிகம் பேசுபொருளாக இருக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒவ்வொரு மே தினத்திலும் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் வாக்குறுதிகள் வழங்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது.
அவ்வாறு தொழிலாளர்களுடைய உரிமைகள் தொடர்பில் வழங்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றதா? என்பதும் கேள்வியாகவே இருக்கிறது. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பதிவில் தோட்டத் தொழிலாளர் ஒருவர் தோட்ட நிர்வாகத்தால் தாக்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
மாத்தறை, அக்குரச, நமுனுகல பிளாண்டேஷன், உலந்தாவ தோட்டத்தில் வாழும் ராசையா பிரபாகரன் என்ற தொழிலாளியை, தோட்டத்தின் உதவி நிர்வாகி உள்ளிட்ட கள உத்தியோகத்தர்கள் தாக்கிய நிலையில், அவர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில், அக்குரஸ்ஸ பொலிஸில் முறைப்பாடு செய்தும், சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. பின்னர் மனோ கணேசனின் தலையீட்டின் பின் பொலிஸார் சந்தேக நபர்களை தேடிய போது, அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அச்சுறுத்தல் காரணமாக தொழிலாளியான பிரபாகரன், வைத்தியசாலையில் இருந்து வெளியேறி, தற்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். இதன் பின், தோட்ட நிர்வாகம் சந்தேக நபர்களை கையளிக்க அழைத்து வருவதாகவும் அவர்களை தான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாகவும் அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் கைதாவதை தடுப்பதற்காக பிணை பெற்றுக் கொள்ளும் வகையில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள்-பொலிஸ் கூட்டு சதி செய்வது தெளிவாக தெரிகிறது என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இது தென் மாகாண தோட்டங்களில் கடந்த மூன்று மாதத்தில் நடைபெற்றுள்ள ஐந்தாவது தாக்குதல் சம்பவமாகும். அனைத்திலும், பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி தமிழர்கள் ஆகும். இவ்வாறான சம்பவங்கள் தென் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றாலும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கடந்த காலங்களிலும் தற்போதும் மலையக மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் களத்துக்குச் சென்று தோட்ட நிர்வாகங்களின் அநாகரீக செயற்பாடுகளை கண்டித்திருந்தனர்.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் மலையக் மக்களை பிரதிநிதித்துவ்படுத்துபவர்கள் யார்?, அவர்கள் எங்கிருக்கிறார்கள்?, அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? என பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவர்கள் கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே செயற்படுவதால் இவ்வாறான தொழிலாளர்களின் உரிமை பிரச்சினைகளில் தலையிடுவதில்லை.
இதேபோல சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார் தன்னுடைய பதிவொன்றில், தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில் செய்வதற்காக குத்தகைக்கு வழங்கப்பட்ட காணி வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். எம்பிலிபிட்டிய தொழில் நியாய சபையில் (தொழில் நீதிமன்றம்) இடம்பெற்ற வழக்கில் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு காணிகள் வழங்கப்பட்டு வேலைக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தொழிலில் இருந்து சுய விருப்பின் பேரில் வேலையை விட்டு நீங்கி விட்டார்கள் என்ற அடிப்படையில் பணி நீக்கம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இதுவே தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் வெளியார் உற்பத்தி முறையாகும்.
புதிய அரசாங்கம் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில், கம்பனிகளால் தொழிலாளர்களுக்கு எதிரான பல்வேறு செயல்கள் புரியப்படுகின்றன. அவற்றில் சுயாதீனமான அமயநிலை ஊழியர் மன்றத்தை தாபிக்கின்ற நடவடிக்கையான வெளிவாரி பயிர்ச்செய்கை முறைமையை விரிவுபடுத்துதல், தான்தோன்றித்தனமான சேவை இலக்குகள் மற்றும் நியமங்களை விதித்தல் மற்றும் சேவை இலக்கினை அடையாதவர்களுக்கு அரைச்சம்பளம் வழங்குதல் என்பவை அடங்குகின்றன. புதிய தொழிலாளர்களை பதிவுசெய்ய மறுப்பது மற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த முடியாது எனக்கூறி அவர்களை பிழைப்பூதிய மட்ட சம்பளத்தில் வைத்திருப்பதும் பாரிய சிக்கலாகும். தேசிய மக்கள் சக்தியானது கம்பனிகளின் அரைச்சம்பள மோசடியைத் தடுப்பதோடு இலாபம் மறைக்கப்படுகின்றதா அல்லது குழுமத் தொழில்முயற்சிகளுக்கோ இணைக் கம்பனிகளுக்கோ மாற்றப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கும். அதைப்போலவே நட்டமடைவதாகக் கூறுகின்ற கம்பனிகள் அரசாங்க கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும். உண்மையாகவே நட்டமடையுமாயின் நடப்புக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடுப்படுதலை மீள் பரிசீலனை செய்து ஊழியர்களுக்கு சாதகமான தொழிச் சூழலையும் போதியளவிலான சம்பளத்தையும் வழங்கத் தயாராகவுள்ள கம்பனிகளிடம் தோட்டங்கள் கையளிக்கப்படும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை செயற்படுத்துவதில்தான் எந்த அக்கறையும் கொள்ளவில்லை.
இவ்வாறு இலங்கையில் பல பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய சம்பள பிரச்சினையை விடவும் உரிமை சார்ந்த பல பிரச்சினைகளை தினந்தோறும் எதிர்கொள்கிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும். ஆனால் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதை விடவும் அதை வைத்து அரசியல் செய்தமையால் அவை தொடர்ந்தும் தக்கவைக்கப்பட்டுள்ளது.
மே தின நிகழ்வும் இதேபோல்தான். தொழிலாளர்களுடைய பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கும் வரையே மே தினத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இம்முறை மே தின நிகழ்வும் அதன் அடிப்படையிலேயே இடம்பெறவுள்ளது. எனவே இந்த மே தினத்தில் புதிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை. வழமைப்போலவே இம்முறையும் மே தினத்துக்கு சென்று கையசைத்துவிட்டு, கோசமிட்டு வருவதை தவிர வேறென்ன செய்து விட முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக