மலையகப் பெருந்தோட்ட மக்கள் இலங்கையில் தனித்துவமான இனக்குழுமமாக இருப்பதால் அவர்களுக்கான பிரச்சினைகள் மற்றும் தேவைகளை தேசிய இனங்களோடு ஒப்பிட்டு தீர்க்க முடியாது. அவர்களுடைய வாழ்விடம், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைமுறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை இதுவரை காலமும் இருந்த அரசாங்கங்கள் செய்யத் தவறியுள்ளனர். புதிய அரசாங்கத்தில் அந்தப்பிரச்சினைகள் களையப்பட்டு அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்குமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.கடந்த சனிக்கிழமை (19.04.2025) தலவாக்கலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்தியதுடன், அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தார். அவர் வெளிப்படுத்திய திட்டங்கள் எவ்வாறு சாத்தியப்படும் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் மலையக மக்களுக்கு புதிய விடயமல்ல. இது காலங்காலமாக அவர்களிடம் ஊடுறுவியுள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகளாகவே இருக்கின்றன. இதற்கு முன் இருந்த அரசாங்கங்கள் அவற்றை எவ்வாறு கையாண்டன, எவ்வாறான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தன என்பதன் அடிப்படையிலேயே இந்த பிரச்சினைகளை அணுக வேண்டியுள்ளது. அதனடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய வாக்குறுதிகளை பின்வருமாறு சுருக்கமாக கூறமுடியும்.
• பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
• பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டத்தின் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பிலும் பெருந்தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடப்படுகிறது. அவ்வாறு தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் அல்லது ஒன்றரை ஏக்கர் காணியை மாதிரி திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும். உடன்படிக்கையின் அடிப்படையில் அந்த தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அங்கு பறிக்கும் கொழுந்தை அந்த நிறுவனத்துக்கே வழங்க வேண்டும்.
• லயன் அறைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சமூகத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். அவர்கள் தோட்டத்துக்குள் கட்டி வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தற்போது சுதந்திரமான பிரஜைகளாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும்.
• தோட்ட வீதிகள் அனைத்தும் குன்றும் குழியுமாக இருக்கிறது. அந்த வீதிகளை அமைப்பதற்கு தற்போது பணம் உள்ளமையால், அதற்கு செலவாகும் தொகை தொடர்பில் அறிவித்தால் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும்.
• மலையக மக்கள் எமது நாட்டு பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். தேயிலை தோட்டங்களில் தொழில் செய்து எமது நாட்டுக்கு பெரும் சொத்துக்களை சேர்க்கின்றனர். அப்பூமியில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு உரமாக்கப்படுகின்றார்கள். அவர்கள் எம்மை விட சிறியவர்கள் என்று கூற முடியாது.
• பெருந்தோட்ட மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது வரலாறுதான், அவர்கள் இங்கு வந்து 200 வருடங்களை கடந்துள்ளனர். பரம்பரை பரம்பரையாக இங்கு வாழும் போது அவர்களுக்கு உரிமையில்லை என்று எவரால் கூறமுடியும். அவ்வாறு கூறுவதற்கு எவருக்கும் உரிமையில்லை.
• வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளனர். 5 வயதுக்கும் குறைந்தவர்களில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள அதிகமான பிள்ளைகள் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளனர். போசாக்கின்மை மற்றும் வறுமை காரணமாக அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
• இந்திய நிதியுதவியில் மலையகத்துக்கு வீட்டுத்திட்டங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் குறிப்பிட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. காணிகளை விடுவிப்பதில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். விரைவில் காணிகள் விடுவிக்கப்பட்டு அந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்படும்.
• மலையகத்தில் இனி அடாவடி அரசியலுக்கு இடமில்லை. நுவரெலியாவில் அமைச்சர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று அச்சுறுத்தல் விடுத்தனர். கைது செய்தவர்களை விடுவித்தனர். அவையெல்லாம் வரலாறு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஆட்சி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
போன்ற பிரதான அம்சங்களை தனது தலவாக்கலை தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்திருந்தார். குறித்த பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமாயின் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் சிலவற்றை தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
கடந்த காலங்களிலும் இதே பிரச்சினைகள் காணப்பட்ட போதும், அவற்றுக்கு நிபுணத்துவமிக்க தீர்வுகளை முன்வைக்கத் தவறியமையின் விளைவாகவே அவற்றை தீர்க்க முடியாமல் போனது. அதே செயற்பாடு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமாயின் பிரச்சினைகள் தொடர்கதையாகவே மாறும்.
முன்பு குறிப்பிட்டது போலவே மலையக மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தனித்துவமானது என்பதால், அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு நிபுணத்துவமிக்க குழுவொன்றினை கொண்டிருப்பது அவசியமாகும். கடந்த ஜனாதிபதிகளின் ஆட்சி காலத்தில் இதற்கான ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்பட்டாலும் அவை தங்களுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவகாசம் வழங்கப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்விடயத்தில் கவனம் செலுத்தி நிபுணத்துவமிக்க நபர்களை உள்ளடக்கி புதிய செயலணியை உருவாக்க வேண்டும். அந்த செயலணியின் மூலம் குறித்த பிரச்சினைகளுக்கு விஞ்ஞான ரீதியான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது நிரந்தர தீர்வாக அமையும்.
அதை விடுத்து அரசியல் தேவைகளுக்காக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமாயின் அடுத்த ஐந்து வருடங்களில் மலையக மக்கள் மீண்டும் அதே பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவற்றுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட உதாரணங்களை கூறமுடியும்.
• 1750 ரூபா சம்பள அதிகரிப்பின் போது, அரசாங்கம் தலையீடு செய்யாமல் தொழிற்சங்கங்கள் மாத்திரமே கலந்து கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, இறுதியில் முதலாளிமார் சம்மேளனத்தின் நிபந்தனைகளுக்கு உடன்பட முடியாமல் 1350 ரூபா சம்பள அதிகரிப்புக்கான உடன்பாடு எட்டப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ எந்த தலையீடையும் மேற்கொள்ளவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எந்த தரப்புடனும் கலந்துரையாடலை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் குறித்த சம்பள அதிகரிப்பு எவ்வாறு என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
• பெருந்தோட்ட மக்களை லயன் அறைகளிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கூறும் அரசாங்கமே கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு அமைவாக 75 லயன் குடியிருப்பு தொகுதிகளில் உள்ள 1075 லயன் வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, பெருந்தோட்டத் துறையுடன் தொடர்புடைய நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் காணப்படும் தோட்டக் குடியிருப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு லயன் குடியிருப்புகளை புனரமைத்து வழங்குவதன் மூலம் அவர்களை எவ்வாறு லயன் அறைகளில் இருந்து விடுவிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.
• தனி வீடுகளை அமைப்பதற்கான போதுமான காணிகள் மலையகப் பெருந்தோட்டங்களில் இருப்பதாக விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும், காணி இல்லையென்ற காரணத்தை கூறி தொடர்ச்சியாக இந்திய வீட்டுத்திட்டம் முடக்கப்பட்டுள்ளமையும் மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்தமையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாகவே இருக்கின்றன.
• பெருந்தோட்ட மக்கள் பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்வதால் அவர்களுக்கு சகல உரிமைகளும் அந்நாட்டில் இருப்பதாக அரசாங்கத்தால் கூறப்பட்டாலும் அவர்களுக்கான காணி உரிமையை வழங்காமல் இருப்பது ஏன்? மலையகப் பெருந்தோட்டங்களில் 2015 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்படுத்தப்பட்ட தனி வீட்டுத்திட்டங்களில் 6178 தனி வீடுகளுக்கு இதுவரை காணி உரித்து பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக நுவரெலியா மாவட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டாலும் அஸ்வெசும நிகழச்சித்திட்டத்தில் அதிகம் புறக்கணிக்கப்பட்டவர்கள் நுவரெலியா மாவட்ட மக்களாகவே இருக்கின்றனர். இரண்டாம் கட்டத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ள 4 இலட்சம் பயனாளிகளில் இவர்களுக்கு உரிய ஒதுக்கீடுகள் வழங்கப்படுமா?
• 5 வயதுக்கும் குறைவான சிறுவர்களில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நுவரெலியா மாவட்டத்தில் அதிகம் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்ட பிள்ளைகளின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட சுகாதார அமைச்சால் தடை செய்யப்பட்ட டிகிரி சக்தி பிஸ்கட் விற்பனை தொடர்பில் விசாரணை நடத்தப்படுமா?
• பெரும்பான்மையான தொழிலாளர்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் இடையே போசாக்கு குறைப்பாடும் விசேடமாக எனிமிக் எனும் நோயும் காணப்படுவதால் இதற்கு தீர்வு வழங்கும் முகமாக முதற்கட்டமாக நார்ச்சத்து, இரும்புச்சத்து, போலிக்கமிலம் மற்றும் விட்டமின் பீ12 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய விசேட கோதுமை மா வழங்கும் திட்டம் கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது சந்தையில் உள்ள சாதாரண கோதுமை மாவை விட விலை மலிவாக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் செரண்டிப் கோதுமை மா உற்பத்தி நிறுவனம் ஆகியன இணைந்து சத்தூட்டப்பட்ட கோதுமை மாவை அறிமுகம் செய்தன. இத்திட்டத்தின் மூலம் போசாக்கு மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் யார்? என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படுமா?
• மலையகத்தில் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தாலும், பெருந்தோட்ட மக்களை லயன் அறைகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் தோட்ட நிர்வாகங்கள் மீதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமா? என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதியின் ஒவ்வொரு வாக்குறுதிக்குப் பின்னாலும் அவிழ்க்கப்படாத அரசியல் முடிச்சுகள் ஏற்கனவே காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் அவிழ்த்து மலையக மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள பொறிமுறை தொடர்பாக வெளிப்படையாக விளக்கமளிக்க வேண்டும்.
மலையக மக்கள் அனைத்து உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற தேசிய மக்கள் சக்தியின் இலக்கு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் வாக்குறுதிகளும் முன்மொழிவுகளும் மாத்திரமே அதனை உறுதி செய்யாது. அவற்றை நிறைவேற்றுவதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகள் அவசியமாகும். இல்லாவிட்டால் மீண்டும் அடுத்த அரசாங்கத்தில் இதே பிரச்சினைக்காக அவர்கள் போராட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக