உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 25 வீதமாக அதிகரிக்கப்பட்டு சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையால் பல கட்சிகள் தங்களுடைய வேட்பு பனுக்கள் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இவ்வாறான ஆள்மாறட்ட செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளமையை அறிந்து கொள்ள முடிகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தமையால் அறிந்துகொள்ள முடிந்தாலும் பல சம்பவங்கள் திரைமறைவில் இருப்பதுவும் உண்மையாகும்.
இவ்வாறான சம்பவம் உண்மையாக பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவமளிக்கும் செயற்பாட்டாக இல்லை. சட்டத்தில் 25 வீத பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் கட்டாயத்தின் அடிப்படையில் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் பெண் பிரதிநிதிகளின் பெயர்களை விரும்பியோ, விரும்பாமலோ இணைத்துக்கொள்வதாகவே தெரிகிறது.
வரலாற்றில் உள்ளூராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதித்துவம்
கிராம மட்ட அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு தேசிய அல்லது மாகாண மட்டங்களோடு ஒப்பிடுகையில், இலகுவில் பெண்கள் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். கிராம மட்டங்களின் சமூக மற்றும் நலன்புரி சங்கங்களிலும் அந்த செயற்பாடுகளில் கூடுதலான பங்களிப்பினைச் செய்வதும் பெண்களே. ஆனால் பிரதேச சபைகள் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரை 2 வீதம் எனும் பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை.
இவ் விகிதாசாரம் 1991 – 1.7 வீதமாகவும் 1997 – 1.9 வீதமாகவும் 2006 – 1.87 வீதமாகவும் மற்றும் 2011 – 1.93 வீதமாகவும் காணப்பட்டது. 2006 மற்றும் 2011 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை ஒப்பிடும்போது தெளிவாவது பெண்களின் பிரதிநிதித்துவம் 0.05 வீதம் அல்லது 74 ஆக இருந்த பெண் பிரதிநிதித்துவம் 86 என்ற குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வரை பெண்களின் பிரதிநிதித்துவம் 1.9 வீதமாகவே காணப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தில் 2006 ஆம் ஆண்டு 15 பெண்களும் 2011 ஆம் ஆண்டு 14 பெண்களும் தேர்தெடுக்கப்பட்டனர். 2006இல் கம்பஹா, களுத்துறை, கண்டி, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5 தொடக்கம் 6 க்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 2011இல் கம்பஹா – 11, யாழ்பாணம் - 8, கண்டி – 7, பதுளை -5 என்ற வகையில் விசேடமாக பெண்களின் தொகை சிறிதளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் களுத்துறை, பொலனறுவை, மட்டகளப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பெண்கள் நால்வர் வீதம் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு தெரிவு செய்யப்பட்டனர். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 2011இல் 3-1 வரையான பெண்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் பெண் ஒருவர் கூட பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை
1979 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த முழுமையான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமைக்குப் பதிலாக வட்டார முறைமை மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை உள்ளடங்கிய புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் திருத்தச் சட்டத்தின் மூலம் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயல் வலுவாக்கம் பெற்றது. இப்புதிய தேர்தல்கள் முறைமைக்கமைய குறித்த உறுப்பினர்களின் எண்ணிக்கையின் 60 வீதம் வட்டார பிரதிநிதித்துவமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதோடு எஞ்சிய 40 வீதமானவை மேலதிகப் பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும்.
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது, மொத்தமாக 341 உள்ளூர் அதிகார சபைகளின் 4917 வட்டாரங்களுக்காக மொத்தம் 57,252 வேட்பாளர்களிடமிருந்து பெயர்குறித்த நியமனங்கள் கையேற்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபை சார்பாகவும் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதோடு அதற்கமைய உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 8711 ஆகும். கலப்பு விகிதாசார முறையில் இந்நாட்டில் நடாத்தப்பட்ட முதலாவது தேர்தலாக இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் வரலாற்றில் விசேட திருப்புமுனையாக அமைந்தது.
அதே போன்று உள்ளூராட்சி மன்றங்களில் முன்னர் காணப்பட்ட தொகையுடன் ஒப்பிடும்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்கப்பட்டது. அதேபோன்று வாக்கெடுப்பு முறையின் வழிமுறையின் பிரகாரம் மேன்மிகை உறுப்பினர்கள் (over hang) 385 மேலதிக உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதேபோன்று கட்டாயமான பெண் பிரதிநிதித்துவம் 25 வீதமாக உள்ளடக்கப்பட்ட போதிலும் நடைமுறை ரீதியாக 22.89 வீதம் மாத்திரமே அடைந்துகொள்ள முடிந்தது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண் பிரதிநிதித்துவம்
எனினும் 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின் போது, 16 உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்ளப்படவில்லை. (அட்டவணை 01) 2018 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளின்படி, 5 வீத உள்ளூராட்சி மன்றங்களைத் தவிர ஏனைய உள்ளூராட்சி மன்றங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீடு தொடர்பில் சில விதிவிலக்குகள் உண்டு என நாம் அறிவோம். சட்டத்திற்கு அமைய, அரசியற் கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை “தொங்கு நிலைக்கு” காரணமாகித், தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின், அதில் பெண் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கவில்லையெனின், ஒதுக்கீட்டை நிறைவேற்றும் பொறுப்பும் அரசியற் கட்சிக்கு இல்லை. அதேபோன்று, அரசியற் கட்சி ஒன்று அல்லது சுயாதீனக் குழுவொன்று உள்ளூராட்சி சபையில் 20 வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பின், மூன்று உறுப்பினர்களை விட குறைவானவர்களுக்குத் தகுதி பெற்றிருப்பின், பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் இருந்து அவர்களும் விலக்குப் பெறுவர்.
2017ஆம் ஆண்டு ஆறாம் இலக்க உள்ளூர்அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 25இல் குறிப்பிட்டவாறு, ஏதேனும் ஒரு அரசியற் கட்சி அல்லது சுயாதீன குழுவில் இருந்து அனைத்து சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 25 வீத ஒதுக்கீட்டை விட குறைவாக இருப்பின், உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைபாடு “முதலாவது வேட்புமனுப் பத்திரம் அல்லது மேலதிக வேட்பு மனுப் பத்திரத்தில் உள்ள பெண் வேட்பாளர்களின் மத்தியில் திருப்பி வழங்கப்படல் வேண்டும்.” என குறிப்பிடுகின்றது. இவ்வாறான நிலைமைகளின் போது ஒதுக்கீட்டினைக் குறைப்பது, நியாயமற்ற, சட்டவிரோதமான மற்றும் ஜனநாயகமற்ற செயல் மாத்திரமல்ல, பெண் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் செயற்பாடென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெண் பிரதிநிதிகள் எதிர்கொண்ட சவால்கள்
2017ஆம் ஆண்டு 16ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களில் குறைந்தது 25 வீதமான பெண் பிரதிநிதித்துவத்தை கோரும் புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு 1991 பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் சூழல் உருவாக்கப்பட்டது. முந்தைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்தப்பட்ட தேர்தல்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 82 பெண் உறுப்பினர்களை (2018 க்கு முன்னர்) மட்டுமே அனுப்பும் நிலை இருந்தது. இந்நிலைமை பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் அவர்களின் அரசியல் உரிமையை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைந்தது. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 19,500 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இது மொத்த வேட்பாளர்களில் 32 சதவீதமாகும்.
2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது இந்த புதிய முறையினூடாகவே இடம்பெற்றது. இதன்போது கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக எவ்வித அடிப்படைகளுமின்றி நிர்பந்தத்தின் அடிப்படையில் பெண் வேட்பாளர்களை இணைத்துக்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படாமையின் மூலம் கட்சிகளின் வெற்று முகம் வெளிச்சத்துக்கு வந்தது.
இவ்விடயம் தொடர்பாக முன்னாள் ஹல்துமுல்லை பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் செல்வி.ஆர்.கே.பிரியதர்சினி பெருங்கொண்டார் கருத்து வெளியிடுகையில், “1997 ஆம் ஆண்டு ஊவா பரணகம பிரதேச சபைக்கான பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட்டது முதல் என்னுடைய அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. தேர்தலில் போட்டியிட்டபோதும் எங்களுடைய விருப்பு வாக்குகள் கட்சிக்குள்ளேயே மாற்றப்பட்டதால், வெற்றி வாய்ப்பு பறிபோனது. அரசியல் செல்வாக்கு கொண்டவர்களினால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. சக வேட்பாளர்களே நாங்கள் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. இதனால் பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை நான் அறிந்துகொண்டேன். நல்லாட்சி அரசாங்கத்தில் தொகுதி ஒருங்கிணைப்பாளரால் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஆண்களை விடவும் பெண் பிரதிநிகளுக்கான நிதியொதுக்கீடுகள் மிகவும் குறைவாகவே இருந்தது. தொகுதியின் பிரதநிதியாக இருந்தும் எனக்கான நிதியொதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை” எனவும் தெரிவித்தார்.
“நிதிக்குழுவுக்கு என்னை உறுப்பினராக தெரிவு செய்த போதும், என்னுடைய கட்சிக்குள் இருந்த ஆண் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை இருந்தது. மாற்று கட்சிகளில் பெண்களை தரக்குறைவாக பேசுவது, பேசுவதற்கான நேரத்தை முறையாக வழங்காமல் இருப்பது போன்ற இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெண்கள் தங்களுடைய பிரிதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். ஆனால் அவர்களுக்கான ஆதரவை வழங்க குடும்பமோ அல்லது சமூகமோ உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறான பெண்களுக்கான ஆற்றுப்படுத்தலை வழங்குவதற்கு நான் எப்போதும் தயாராகவே இருக்கின்றேன்” எனவும் குறிப்பிட்டார்.
பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் வாக்காளர்கள் மற்றும் பெண்களின் கடமைகள்
இலங்கையின் சனத்தொகையில் 52 வீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள். அதுமட்டுமன்றி இலங்கையின் வாக்காளர்களில் 56 வீதத்தினர் பெண்கள். பல்கலைக்கழக மாணவர்களில் 60 வீதமானோர் பெண்கள். ஏன் உள்ளூராட்சி சேவையில் உள்ள அரசாங்க ஊழியர்களில் 59.7 வீதத்தினர் பெண்கள் என்பதும் இங்கு கவனிக்க வேண்டும்.
எனினும் சமூகத்தில் பெண்களின் அரசியல் பங்குபற்றுகையை ஊக்குவிப்பது மிகவும் குறைந்தளவிலேயே செயற்படுத்தப்படுகின்றது. குடும்ப கட்டமைப்புக்குள்ளேயே அவர்களை தங்கவைப்பதற்கு அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மறுபுறும் பெண்கள் அரசியலில் பங்கு பற்றுவதற்கு அதிக விலையினை செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்கள் இதனால் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
நிதி ஆதாரம், பணியிடத்து பொறுப்புகள் மற்றும் பண்பாட்டு ரீதியான தடைகள் என்பனவற்றுடன் அரசியல் ரீதியாக பெண்ணே இன்னொரு பெண்ணின் ஆதரவை திரட்டுவதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளே அவர்களின் அரசியல் பங்களிப்பை தடுக்கும் முக்கிய காரணியாக இருப்பதாக இலங்கை பாலின அடிப்படையிலான வன்முறை எதிர்ப்பு அமைப்பு கூறுகின்றது. துன்புறுத்தல், பாலியல் லஞ்சம், மிரட்டுதல், உடல் ரீதியாக தாக்கப்படுதல், எச்சரிக்கைகள், நிதி ரீதியான அழுத்தங்கள், எச்சரிக்கைகள், பண்பற்ற முறையிலான ஊடக தகவல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சேறு பூசப்படுதல் போன்ற சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. இலங்கை அரசியல் அமைப்பு, ஆண்-பெண் பாகுபாடற்ற சமத்துவத்தை உறுதி செய்கிறது. என்றாலும், நடைமுறையில் அத்தகைய சமத்துவம் உறுதிப்படவில்லை என்பதே உண்மை.
பெண் பிரதிநிதிகளின் அரசியல் அறிவை மேம்படுத்துதல், ஆளுமை மேம்பாட்டுத் திட்டங்கள், பொது உறவுகள் மற்றும் கவர்ச்சிகரமான தலைமைத்துவம், பெண்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணருதல், மாவட்ட மற்றும் தேசிய அளவில் பெண் கவுன்சிலர்களின் மன்றங்களை அமைத்தல், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல், அவர்களின் குடும்ப அலகுகளை வலுப்படுத்துதல், அரசியல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நிர்வகித்தல், குடும்ப உறுப்பினர்களுக்கான பயிற்சி வழங்குதல் போன்ற திட்டங்களை அதிகரிப்பதன் ஊடாக பெண்களின் வலுவான அரசியல் பங்குபற்றுகையை உறுதிப்படுத்த முடியும்.
மேலும் ஊடகங்களும் பெண்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட வேண்டும். அத்துடன் அவர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் சுதந்திரமான செயற்படுவதற்கான வாய்ப்பை சக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வழங்க வேண்டும். தற்போதைய சூழலில் அதிக பெண்கள் துணிவுமிக்க அரசியலில் ஈடுபடுவதற்கு தயாராகவிருந்தாலும் அவர்களை ஒருங்கிணைப்பதிலேயே சிக்கல் காணப்படுகின்றது. இத்தகையவர்களை ஊக்குவிப்பதற்கான பொது அமைப்புகளும் அவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 வீத ஒதுக்கீட்டை முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்கு கட்சிகளும் குழுக்களும் நியாயமாக செயற்பட வேண்டும்.
Reference:
- இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம்: சவால்களும் எதிர்பார்ப்புகளும் - பேராசிரியர் கமலா லியனகே, பேராதனைப் பல்கலைக்கழகம்
- Let’s make the increased women’s representation in politics a blessing for the country - PAFFREL
- https://tamil.journo.lk
- https://www.namathumalayagam.com/
- https://www.colombotelegraph.com/index.php/governments-womens-quota-a-total-success/
- https://elections.gov.lk/web/wp-content/uploads/2024/12/LAE_2018_R_Volume_II_E.pdf
- https://library.fes.de/pdf-files/bueros/sri_lanka/10039.pdf


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக