2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி பல உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் பெற்றுள்ளமை விசேட அம்சமாக பார்க்கப்படுகிறது. மேயர்கள் மற்றும் நகர பிதாக்களை தெரிவு செய்யும் போதும், பாதீடுகளை சமர்ப்பித்து நிறைவேற்றும் போதும் தேசிய மக்கள் சக்தி சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம்.
மொத்தமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி 131 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 82 ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 39 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 19 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 18 ஆசனங்களையும் சுயேச்சைக்குழு ஒன்று 11 ஆசனங்களையும் சர்வஜன பலய 8 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. (அட்டவணையில் 2018 - 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் விபரங்களை காணலாம் - தேர்தல்கள் ஆணைக்குழு)
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆதிக்கம் செலுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி 08 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும் தனி பெரும்பான்மையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கவில்லையெனவும் சுயேச்சைக் குழுக்களுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலை விடவும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி கணிசமான ஆசனங்களை இம்முறை கைப்பற்றியுள்ளமை விசேடமாகும். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கூட்டணியாகவும் தனித்தும் போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணிக்கு தலவாக்கலை - லிந்துலை நகர சபையில் 3 ஆசனங்கள் கிடைக்கப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு மத்தியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் பாரிய வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்த தேசிய மக்கள் சக்திக்கு நுவரெலியா மாவட்டத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கூட்டணி ஆட்சிக்கு தயாரில்லாத தேசிய மக்கள் சக்தியால் தனித்து பெரும்பான்மை பெற முடியாத நிலை பல உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்டுள்ளது.
எனினும் வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை பிரதேச சபைகள் மற்றும் நுவரெலியா மாநகர சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. வலப்பனை பிரதேச சபையில் 30 ஆசனங்களையும் ஹங்குராங்கெத்த பிரதேச சபையில் 22 ஆசனங்களையும் கொத்மலை பிரதேச சபையில் 22 ஆசனங்களையும் நுவரெலியா மாநகர சபையில் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
அதிகாரத்தை இழந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இதேவேளை கடந்த முறை மஸ்கெலியா பிரதேச சபையை கைப்பற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரசால் வேட்புமனு தாக்கலில் ஏற்பட்ட குளறுபடிகளால் மஸ்கெலியா பிரதேச சபையில் போட்டியிட முடியவில்லை. வலப்பனை பிரதேச சபையிலும் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவற்றை தவிர்த்து ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தனித்து களமிறங்கியிருந்தது. இதனடிப்படையில் கொட்டகலை, நோர்வூட் ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களை பெற்றிருந்தாலும் அவை தனித்து பெரும்பான்மை பெறுவதற்கு போதுமானதாக இல்லை.
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து 11 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியிருந்தது. இதில் கொட்டகலை, மஸ்கெலியா, அக்கரப்பத்தனை, நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளிலும் தலவாக்கலை - லிந்துலை, ஹட்டன் - டிக்கோயா நகரசபைகளிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருந்தது. ஆனால் இம்முறை குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இழந்துள்ளது.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொத்மலை - 08, நோர்வூட் - 06, அக்கரப்பத்தனை - 04, கொட்டகலை - 05, நுவரெலியா - 06 ஆகிய பிரதேச சபைகளில் மாத்திரமே குறிப்பிடத்தக்களவு ஆசனங்களை பெற்றுள்ளது. ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் குறைந்தளவான ஆசனங்களையே பெற்றுள்ளது. கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றிய சில உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைக்கேடுகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், அதிகார துஷ்பிரயோகம் என்பன இம்முறை தேர்தலில் தாக்கம் செலுத்தியுள்ளது.
கூட்டணி தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறதா?
இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இணைந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் போது ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தக்க வைக்ககூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பாக தலவாக்கலை - லிந்துலை நகரசபை, கொட்டகலை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை, ஹட்டன் - டிக்கோயா நகர சபை, அம்பகமுவ பிரதேச சபை, அக்கரப்பத்தனை பிரதேச சபை, நுவரெலியா பிரதேச சபை, கொத்மலை பிரதேச சபை ஆகியவற்றில் கூட்டணி மூலம் ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனினும் கட்சித் தலைமைகளின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்ற அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் இதற்கான தீர்வு எட்டப்படலாம்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் தனது பலத்தை அதிகரித்துள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையில் அதிக ஆசனங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியானது, வலப்பனை - 15, கொத்மலை - 17, மஸ்கெலியா - 06, நோர்வூட் - 05, அம்பகமுவ - 06, அக்கரப்பத்தனை - 04, கொட்டகலை - 04, நுவரெலியா - 05, ஹங்குராங்கெத்த - 09, ஹட்டன் - டிக்கோயா நகரசபை - 05, தலவாக்கலை - லிந்துலை நகரசபை - 02, நுவரெலியா நகரசபை - 04 என ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அதிக தமிழர்கள் செறிந்து வாழும் மற்றும் அதிக தமிழ் வாக்காளர்களை கொண்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தக்க வைப்பதற்கு கூட்டணி கட்சிகளின் பங்கு அவசியமானது என்பது தெளிவாகின்றது.
குறைந்தளவான வாக்களிப்பு வீதம்
நுவரெலியா மாவட்டத்தில் 610,120 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்த போதும், 386,228 வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். 223,892 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்கள் கொடுத்த ஆர்வம் இந்தத் தேர்தலில் வெளிப்படவில்லை. அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பரவலாக நிறைவேற்றப்படாமை, நகர்புறங்களில் தொழில் புரிபவர்களுக்கு விடுமுறை கிடைக்காமை மற்றும் பயணச் செலவுகள், மீண்டும் வேலைக்கு திரும்புவதற்கு போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் இன்மை போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக பலர் வாக்களிப்பை தவிர்த்துள்ளனர்.
குறித்த வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தால் நுவரெலியா மாவட்டத்தில் பல வெற்றி வாய்ப்புகள் மாறியிருக்கலாம் என்பது எனது கணிப்பு. எனவே வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை இலகுவாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர்கள் விருப்பதுடன் வாக்களிப்பதற்கு ஏற்ற அபிவிருத்திகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்
கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு காரணங்களை கூறி ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் தற்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மக்களின் தீர்ப்பை ஏற்று மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் உள்ளூராட்சி பரிபாலனங்களை மேற்கொள்ள வேண்டுமென்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இலங்கை மக்கள், தேசிய மக்கள் சக்தியை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறச்செய்தனர். அதே எதிர்பார்ப்பே உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் காணப்பட்டது. நுவரெலியா மாவட்டத்திலுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்ற ஊழல்கள் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலையை ஏற்படுத்தியிருந்தன. இந்த தேர்தலிலும் அவை பிரதிபலித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி மூலம் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் காணப்பட்டாலும் கடந்த காலங்களைப் போல் ஊழல்வாதிகளுக்கு அதிகாரம் வழங்காமல் நேர்மையான, மக்களுக்கான அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய நபர்களின் கைகளில் உள்ளூராட்சி மன்றங்களில் தலைமைப் பொறுப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மாறாக தேசிய மக்கள் சக்தியை வீழ்த்துவதற்கு மாத்திரம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் எதிர்காலத்தில் இன்னும் அதிகமான மக்கள் செல்வாக்கை இழக்க வேண்டிய நிலை அனைத்து கட்சிகளுக்கும் ஏற்படலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக