• பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 6178 வீடுகளுக்கான காணி உரித்துக்கள் இன்னும் வழங்கப்படவில்லை.
மலையக மக்களின் காணியுரிமை தொடர்பில் தொடர் போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் அரசியல் ரீதியாக கொண்டுள்ள பிரச்சினைகள் காணியுரிமை வழங்குவதில் இழுத்தடிப்புகளை செய்கின்றன. இதில் முக்கியமாக தனி வீடுகளை அமைப்பதற்கு போதிய காணிகளை ஒதுக்கீடு செய்வதில் இருக்கும் பிரச்சினைகள் மட்டுமல்லாது, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தனி வீடுகளுக்கு இதுவரை காணி உரித்துப் பத்திரங்கள் வழங்கப்படாமையும் இந்த பிரச்சினையை இன்னும் நிலைத்திருக்கச் செய்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக, மலையகப் பெருந்தோட்டங்களில் 2015 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்படுத்தப்பட்ட தனி வீட்டுத்திட்டங்களில் 6178 தனி வீடுகளுக்கு இதுவரை காணி உரித்து பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன்கள் மற்றும் மானியங்கள் மூலம் நிதியளிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான கடன்கள் இன்னும் மீள அறவிடப்படாமையும் சில நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்கள் காரணமாகவும் அவர்களுக்கான காணி உரித்து பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மலையக மக்களுக்கு தனி வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு 10 வருடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதும், இதுவரை அவற்றுக்கு காணி உரித்துக்கள் வழங்கப்படாமை மலைய மக்களின் காணியுரிமையை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது.
கடந்த 2024.12.11 ஆம் திகதி பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய அதிகார சபையின் மூலம் நுவரெலியா மாவட்டத்தின் 545 பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இடம்பெற்றது. அதன் பின்னர் இதுவரை கைவிடப்பட்ட வீட்டுத்திட்டங்களை புனரமைப்பது தொடர்பிலோ அல்லது கையளிக்கப்பட்ட வீடுகளுக்கு காணி உரித்து பத்திரங்கள் வழங்குவது தொடர்பிலோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதேவேளை “முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையானது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 பேர்ச் காணிகளை வழங்குவதற்கும் தோட்டங்களின் கட்டுப்பாட்டில் இருந்து லைன் அறைகளை மாற்றி கிராமங்களாக மாற்றுவதற்கும் தீர்மானம் எடுத்தது. தேர்தல்கள் ஆணைக்குழு அதனை நிறுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் முதல் 1161 காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு தயாராக இருந்ததாக” முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது அமைச்சரவையும் உறுதியளித்த 10 பேர்ச் காணி வழங்கும் செயற்பாடுகளையோ அல்லது ஏற்கனவே பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு உறுதிகள் வழங்குவதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.
பெருந்தோட்டப் பகுதிகளில் செயற்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள்
அரசாங்கத்தால் எடுக்கப்படுகின்ற கொள்கை ரீதியான தீர்மானங்களின் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்ட தோட்ட வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் புதிய வாழ்வாதார வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆகவும் 2015 ஆம் ஆண்டின் போது 100 நாட்கள் நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைவாக ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டமாகவும் அமுல்படுத்தப்பட்டது. இவ் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டிலிருந்து பசுமையான தங்க வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களாக அமுல்படுத்தப்பட்டதுடன் அவை ஒப்பந்த அடிப்படை, நலனாளிகள் தலையீட்டின் அடிப்படை ஆகிய இரண்டு வகைகளாக அமுல்படுத்தப்பட்டன. வீட்டின் உரிமை மாத்திரமின்றி 7 பேர்ச் காணியின் உரிமையையும் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
புதிய வாழ்வாதார வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம்
இந்த வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் 4 கட்டங்களின் கீழ் அமுல்படுத்தப்பட்டன. ஒரு வீட்டிற்காக ரூபா 240,000 உதவிப் பணமும் 275,000 ரூபா கடன் பணமுமாக ஒரு வீட்டிற்கு 515,000 ரூபா வழங்கப்பட்டிருந்தது.
பசுமையான தங்க வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம்
இவ்வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்காக அமைச்சின் மூலம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் ஒரு வீட்டின் பெறுமதியில் 494,000 ரூபா 4 வீத வட்டி விகிதத்தின் கீழான கடன் அடிப்படையிலானதுடன் மிகுதி 506,000 ரூபாவானது, அமைச்சினால் பொறுப்பேற்கப்படுகின்றது. மேற்கூறிய கடன் பணத்தை மீள அறவீடு செய்வதற்கு மாதாந்த தவணைப்பணம் 3,800 ரூபாவாக 180 தவணைகளில் அறவீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அமப/17/0306/739/002 ஆம் இலக்க 2017 பெப்ரவரி 06 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் கீழ் மேற்கூறிய வீடுகளுக்காக ஒரு வீடு 1,000,000 ரூபா பெறுமதியில் 480,000 ரூபா மானியமாகவும் 520,000 ரூபா கடனாக வழங்குமாறும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
நலன் பெறுநர் தலையீட்டிலான வீடுகள்
2018 ஆம் ஆண்டில் நலன் பெறுநர்கள் தலையீட்டிலான வீடுகளுக்கான வழிகாட்டல்கள் கையேட்டின் பிரகாரம் ஒரு வீட்டிற்காக 7 பேச்சஸ் காணி வழங்கப்பட்டிருந்ததுடன் ஒரு வீட்டின் பரப்பளவு 556 சதுர அடியாகும். அது ஒரு இருக்கை அறை, ஒரு வராந்தா, 2 படுக்கை அறைகள், ஒரு சமையலறை, ஒரு மலசலகூடம் என்பவற்றை கொண்டிருந்தது. ஒரு வீட்டுக்காக 1,000,000 ரூபா மதிப்பிடப்பட்டதுடன் 480,000 ரூபா மானியமாகவும் 520,000 ரூபா கடனாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. கடன் தவணைப்பணத்தை 15 ஆண்டுகளில் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவியிலான வீட்டுத்திட்டம்
மலையக பெருந்தோட்ட மக்களின் தொடர்வீட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களின் நீண்டகால கனவான தனி வீட்டுத்திட்டத்தை உருவாக்கி குடியமர்த்தும் நோக்குடன் இந்திய அரசாங்கத்தினால் மலையக மக்களுக்கு 14,000 தனி வீட்டுத்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றில் முதற் கட்டமாக 4000 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தினால் இரண்டாம் கட்டமாக 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.
காணி உரித்துக்கள் மூலம் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?
மலையகப் பெருந்தோட்டங்களில் இதுவரை வழங்கப்பட்ட வீடுகளுக்கான நில உரித்துக்கள் வழங்கப்படாமை மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட உரித்துக்களின் சட்டபூர்வ தன்மை என்பவற்றில் இன்னும் மக்களுக்கு போதிய தெளிவின்மை காணப்படுகின்றது. இந்நிலையில் 2015 – 2025 ஆம் ஆண்டு வரை பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 6178 வீடுகளுக்கான காணி உரித்துக்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.
மலையக மக்களின் தனிவீட்டுக்கனவு தொடர்பில் பன்னெடுங்காலமாக பேசப்பட்டு வந்தாலும் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவற்றுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி போக்கு காணப்பட்டது. 7 பேர்ச் காணியில் தனி வீடுகளை அமைக்கும் நடைமுறை இக்காலப்பகுதியில் பின்பற்றப்பட்டது. தற்போது 10 பேர்ச் என்ற அடிப்படையில் வீட்டுத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 2015 – 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சினால் 5347 தனி வீடுகளும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 4000 தனி வீடுகளும் நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2015 – 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட 6178 வீடுகளுக்கு இதுவரை காணி உறுதிகள் வழங்கப்படவில்லை. 2414 வீடுகளுக்கு மாத்திரமே காணி உரித்து பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் இலங்கை அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட 4620 வீடுகளில் 352 வீடுகளுக்கும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 3972 வீடுகளில் 2596 வீடுகளுக்கும் இதுவரை காணி உரித்துப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்படாமலுள்ள வீடுகள்
மலையக மக்களை லயன் வீடுகளில் இருந்து தனி வீடுகளுக்கு குடியமர்த்துவதற்காக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வீடுகளை அமைப்பதற்கான அனுமதிகள் பெற்றுக்கொள்ளப்பட்டாலும் அவை முழுமையாக செயற்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முதல் கட்டமாக வழங்கப்பட்ட 4000 வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு 10 வருடங்கள் நெருங்கும் நிலையிலும் அவற்றில் காலி பிராந்தியத்துக்கு ஒதுக்கப்பட்ட 28 வீடுகள் இன்னும் நிர்மாணித்து முடிக்கப்படவில்லை.
இவற்றில் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட 4620 தனி வீடுகளில் 727 வீடுகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் காலி, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி, ஹட்டன், நுவரெலியா பிராந்தியங்களில் இலங்கை அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட தனி வீட்டுத்திட்டங்களும் காலி பிராந்தியத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் செயற்படுத்தப்பட்ட 28 வீடுகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது.
முழுமையான காணி உரித்துக்கள் எப்போது வழங்கப்படும்?
சில காணிகளை சுவீகரிப்பதில் இன்னும் சட்ட சிக்கல்கள் காணப்படுவதை அமைச்சின் பதில்கள் மூலம் அறிய முடிகின்றது. பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி உறுதிகள் காணி வழங்கல் (விசேட சட்ட ஏற்பாடு) சட்டத்துக்கு அமைவாக முன்னெடுக்கப்படவில்லை. வீட்டுத்திட்டங்களுக்கான காணி சுவீகரிப்புகள், சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்களின் அனுமதி போன்றவை தொடர்பான எவ்வித தகவல்களும் இல்லை எனவும் அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அமரர் வேலாயுதத்தினால் 100 நாள் செயற்றிட்டத்தின் மூலம் பசுமை பூமி என்ற பெயரில் அமைச்சின் அனுமதியுடன் காணி உறுதி அல்லாமல் ஏற்பாட்டு கடிதம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க, பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் தோட்ட வீடமைப்பு அமைச்சர் திகாம்பரம் ஆகியோரால் கூட்டு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் பின்னர் காணி அமைச்சராக பொறுப்பேற்ற கயந்த கருணாதிலக்கவினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட காணி உறுதிப் பத்திரமே மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்பட்ட உச்சப்பட்ச காணி உறுதிப்பத்திரமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தார்.
டன்சினன், டயகம இந்திய வீடமைப்புத் திட்டம், காலி மாவட்டம் தலங்கம பகுதியில் இக்காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இவை காணி அமைச்சு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அனுமதியுடன் வழங்கப்பட்டது. அவ்வாறு அதிகபட்சமாக சுமார் 400 காணி உறுதிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்கள் இதற்கு முன்னர் நிலவுரித்துடன் கூடிய காணி உறுதிப்பத்திரங்களை கொண்டிருக்காமையால் அவர்களுக்கு உத்தியோகபூர்வ காணி உரித்து பத்திரங்கள் தொடர்பில் எவ்வித அனுபவமும் இருந்திருக்கவில்லை. இதனால் கடந்த கால ஆட்சியாளர்கள் பலர் இதனை சாதகமாகப் பயன்படுத்தி காணி உரித்துப் பத்திரம் எனும் பெயரில் வெற்றுப் பத்திரங்களை வழங்கியிருப்பது உறுதியாகின்றது.
மறுபுறம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, காணி அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு இணைந்து வழங்கிய காணி உறுதிகள் சட்டரீதியானவையாகவும் விற்பனை மற்றும் வங்கியில் கடன் பெறக்கூடிய வகையிலான உரித்துக்களாக காணப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்பட்ட காணி உரித்துக்கள் முழுமையாக சகலருக்கும் வழங்கப்படவில்லையாயினும் வழங்கப்பட்ட காணி உரித்துக்களை மாவட்ட காணி காரியாலயத்தில் பதிவு செய்து கொள்வது பயனாளர்களின் கடமையாகும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது.
இவ்வாறான நீண்ட விவாதங்களுக்கு மத்தியில், முழுமையாக வழங்கப்பட்ட வீடுகள் மற்றும் முழு கடன் தொகையும் செலுத்தப்பட்ட வீடுகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக