2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்று புதிய அமைச்சரவையும் பதவியேற்றுள்ள நிலையில், மலையக மக்களின் எதிர்பார்ப்புகளை பூரத்தி செய்யக்கூடிய வகையில் அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவா? அல்லது மலையக பெருந்தோட்டங்களுக்கு இதுவரையும் சேவைகளை வழங்குவதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அமைச்சுக்கள் தற்போது எவ்வாறு மாற்றமடைந்துள்ளது? போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.
கடந்த காலங்களில் பெருந்தோட்ட மக்களின் நன்மை கருதி அவர்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை வலுப்படுத்துவதற்கான ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு பெயர்களில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த அமைச்சுக்கள் மூலம் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் எம்மால் எமது சமூக உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு அளவிட்டுக்கொள்ள முடியும்.
கடந்த 30 வருடங்களில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருந்தோட்டங்களின் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்காக மாத்திரம் 10 அமைச்சுக்களும் இரண்டு பிரதி அமைச்சுக்களும் ஒரு இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிக தடவைகள் முன்னாள் அமைச்சர் அமரர் அறுமுகம் தொண்டமான் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். இதற்கு மேலதிகமாக அமரர் சந்திரசேகரன், அமரர் முத்து சிவலிங்கம், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளனர். இ.தொ.காவை பிரதிநிதித்துவப்படுத்திய பலர் பிரதி அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். அவற்றின் மூலம் பெருந்தோட்ட மக்கள் பெற்றுக்கொண்ட பயன்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.
தேர்தலில் வெற்றியீட்டி அமைக்கப்படும் ஒவ்வொரு அரசாங்கத்திலும் தமக்கு ஆதரவளிக்கும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவது வழமையாக இருக்கின்றது. இந்த வழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்திலிருந்து ஆரம்பமானது.
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சு (1994), தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு (1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர்), தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சமுக அபிவிருத்தி அமைச்சு (2005), இளைஞர் அலுவல்கள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (2006 – 2009), சமுக அபிவிருத்தி மற்றும் சமத்துவமின்மையை இல்லாதொழித்தல் அமைச்சு, கால்நடை வள மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (2010 – 2014), சமூக பொருளாதார, நலன்புரி மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சு (2015 ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரை), மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு 2015 செப்டெம்பர் முதல் 2019 டிசம்பர் 9 ஆம் திகதி வரை), சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு (2019 – 2020), தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு (2021 – 2022), நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு (2022 - 2024 செப்டெம்பர்), பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு (2024 செப்டெம்பர் - 2024 நவம்பர்) என தொடர்ச்சியாக பெயர் மாற்றம் பெற்று வந்த நிலையில் தற்போது பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சாக செயற்பட்டு வருகின்றது.
தற்போது புதிய அமைச்சரவையில் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சு பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவருக்கும் அதனுடன் தொடர்புடைய பிரதி அமைச்சுப் பதவி இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சின் பெயர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வந்தாலும் அவற்றின் கீழுள்ள நிறுவனங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் மேற்கூறிய அமைச்சுக்களை நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டமையால் நுவரெலியா மாவட்டத்தை தவிர்த்து பெருந்தோட்ட மக்கள் வசிக்கும் ஏனைய மாவட்டங்களுக்கான சேவைகள் குறைந்தளவிலேயே கிடைக்கப்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
அமைச்சுக்களால் மக்கள் பெற்ற நன்மைகள் என்ன?
பல்வேறு கட்டங்களில் மலையகப் பெருந்தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தாலும் அவர்களின் வெளிப்படைத் தன்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அமைச்சின் மூலம் மக்கள் பெற்றுக்கொண்ட விடயங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
2010 – 2015 வரையான காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட கால்நடைகள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு கடன்கள் தொடர்பான விபரம், 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் உருவாக்கப்பட்ட பிரஜாசக்தி நிலையங்கள் தொடர்பான விபரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட மாடி லயன் வீட்டுத்திட்டம் தொடர்பான விபரம் போன்றவை முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சுக்களுக்கு உரியதான விடயங்களாகும். இவை தொடர்பான எவ்வித வெளிப்படைத்தன்மைகளும் அக்காலப்பகுதியில் காணப்படவில்லை.
பாராளுமன்ற சட்டம் 19/2005 இன் கீழ் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் கீழ் இயங்கிய ஹட்டன் தொழில் பயிற்சி நிலையம், இறம்பொடை கலாசார நிலையம், நோர்வூட் விளையாட்டுத் தொகுதி மற்றும் 44 பிரஜாசக்தி நிலையங்கள் அனைத்தும் 2016.07.02 ஆம் திகதிய அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சின் 2018 ஆம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே அமைச்சின் மூலமே பிரஜாசக்தி நிலையங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லையென தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமையால் தகவல் கோரிக்கைகள் அதன் உடமையில் காணப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டாலும் குறித்த அமைச்சு அவ்வாறான தகவல்களை கொண்டிருக்காமை அமைச்சுக்களின் மூலம் அமைச்சர்கள் செய்த முறைகேடுகள் மறைக்கப்படுவதற்கு உதவியுள்ளது.
அமைச்சால் 2023 - 2024 ஆம் ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை?
இறுதியாக 2025 ஆம் ஆண்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பெருந்தோட்ட மக்களுக்காக தனிவீட்டுத் திட்டம் பரந்தளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியிலான தனி வீட்டுத் திட்டமும் உள்ளடங்கும். பல வருடங்கள் கழித்து 4000 தனி வீட்டுத்திட்டம் 2024 ஆம் ஆண்டே முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தால் எடுக்கப்படுகின்ற கொள்கை ரீதியான தீர்மானங்களின் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்ட தோட்ட வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் புதிய வாழ்வாதார வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆகவும் 2015 ஆம் ஆண்டின் போது 100 நாட்கள் நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைவாக ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டமாகவும் அமுல்படுத்தப்பட்டது. இவ் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டிலிருந்து பசுமையான தங்க வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களாக அமுல்படுத்தப்பட்டதுடன் அவை ஒப்பந்த அடிப்படை, நலனாளிகள் தலையீட்டின் அடிப்படை ஆகிய இரண்டு வகைகளாக அமுல்படுத்தப்பட்டன. வீட்டின் உரிமை மாத்திரமின்றி 7 பேர்ச் காணியின் உரிமையையும் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
2015 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட 5668 வீடுகளில் 4635 வீடுகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 1033 வீடுகள் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக பூர்த்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. 2015 - 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 5668 வீடுகளை மாத்திரம் நிர்மாணிப்பதற்காக 772.09 கோடி ரூபா நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தினால் இரண்டாம் கட்டமாக 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையினை திறந்து வைக்கும் நிகழ்வில் இத்திட்டம் தொடர்பில் அறிவித்தார். 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி 2018.02.16 ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தனிகராலயத்தில் 2018.08.12 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இத்திட்டத்துக்காக இந்திய நன்கொடையாக 9500 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தின் பங்களிப்பாக 1500 மில்லியன் ரூபாவும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. 2022 - 2024 ஆம் ஆண்டுக்குள் 10,000 தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டும் இன்னும் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை.
மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஜீவனசக்தி காப்புறுதி திட்டத்துக்குள் இதுவரை எந்தவொரு தொழிலாளரும் உள்ளடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போதைய புதிய அமைச்சரவை
தற்போதைய புதிய அமைச்சரவை பதவியேற்று இரண்டு வாரங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், புதிய அமைச்சரவையில் பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுப்பதற்கு பெருந்தோட்ட மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சராக சமந்த வித்யாரத்னவும் பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீடுகள் இன்னும் முழுமையாக செய்யப்படாமையால் புதிய திட்டங்கள் எவையும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இதேவேளை கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வது மக்களுக்கான சேவை செய்வதற்கு பிரதான தகுதியாக தலைவர்களால் கருதப்பட்டது. ஆனால் அவற்றின் மூலம் செய்யப்பட்ட அபிவிருத்திகளை அளவிடும் போது ஒவ்வொரு ஐந்து வருடங்களும் மக்களை ஏமாற்றியே சென்றுள்ளது. அமைச்சுப் பதவிகள் இருந்தால் மாத்திரமே அபிவிருத்திகள் மேற்கொள்ள முடியுமென்ற மலையகத் தலைவர்களின் நிலைப்பாடு காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறாதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
கடந்த காலங்களில் இவர்கள் அமைச்சைப் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கியிருந்தால் இறுதி பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் தங்களது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு போராட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. பரம்பரை அரசியல், ஊழல், குடும்ப ஆட்சி என்பன மக்களிடம் எடுபடாமையே அவர்கள் பின்னடைவை சந்தித்தமைக்கு பிரதான காரணங்களாக தற்போதும் இருந்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக