கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 ஏப்ரல், 2025

இலங்கை - இந்திய மக்களின் உறவான கச்சதீவு புனித அந்தோனியார்

இலங்கை மற்றும் இந்திய மக்களை இணைக்கும் முக்கிய இடமாக கச்சதீவு மாறியுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் வருடாந்தம் இடம்பெறும் திருவிழாவில் இரு நாட்டு மக்களும் கலந்து கொண்டு தங்களின் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றனர்.

2025 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. வருடாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வை காண கடற்படையின் அனுசரணையில் கொழும்பிலிருந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

கொழும்பிலிருந்து 14 ஆம் திகதி ஆரம்பமாகிய பயணம் 15 ஆம் திகதி நள்ளிரவு 1.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து கச்சதீவு நோக்கி இலங்கை கடற்படை கப்பல் ஹங்சய அழைத்துச் சென்றது.

கடல்சூழ்ந்த வெளியில் அதிகாலை சூரிய உதயத்தில் கச்சதீவு தொலைதூரத்தில் எங்களை வரவேற்றது. இலங்கை அழகின் முக்கிய பங்காக கச்சதீவு, புனித அந்தோனியாருடன் எமக்கு காட்சியளித்தது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையின் பங்களிப்புடன் சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை - இந்திய மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழா கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்லாது இரு நாட்டு மக்களின் புனித சின்னமாக மாறியிருப்பதை அந்நிகழ்வு எமக்கு உணர்த்தியிருக்கிறது.

“இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இருந்து வருகைத் தந்திருந்த அந்தோனிதாஸ் இன்பராஜ், கடந்த 14 ஆண்டுகளாக இந்நிகழ்வுக்கு வருகைத்தருவதாகவும் அந்தோனியாரின் ஆசியுடன் இலங்கை மக்களின் அன்பும் தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும்” தெரிவித்தார்.

புனித அந்தோனியாரின் திருவிழா இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர் லூர்து ஆனந்தன், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பீ.ஜே.ஜெபரத்னம், இந்தியாவின் ராமேஸ்வரத்தில் உள்ள பாரிஸ் ஆயர் அசோக் மற்றும் நெடுந்தீவு திருச்சபை ஆயர் அருட்தந்தை பி.பத்திநாதன் ஆகியோரின் வழிகாட்டலில், யாழ் ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனின் ஆகியோரின் ஏற்பாட்டிலும், இலங்கை கடற்படையின் முழுமையான உழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வள பங்களிப்புடன், வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இறுதி பூஜையில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கடற்படைத் தளபதி  மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்திய மற்றும் இலங்கை மீனவ சமூகத்தினர் உட்பட பக்தர்கள் மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் பூஜைகளை மேற்கொள்கின்ற. கச்சதீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கடற்படையின் உதவியுடன் கவர்ச்சிகரமான முறையில் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், வருடாந்த விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதில் கடற்படை ஒவ்வொரு வருடமும் தனது சிறப்பு பங்களிப்பை வழங்குகின்றது.

அதன்படி, கடற்படைத் தளபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில்,வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படை, இந்த விழாவை மிகுந்த ஆடம்பரமாக கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துடன் ஒருங்கிணைந்து, பக்தர்களுக்கு குடிநீர், உணவு, சுகாதார வசதிகள், தற்காலிக குடிசைகள், தற்காலிக சாலைகள் மற்றும் தற்காலிக இறங்கு துறைகள், மின்சார வசதிகள், பக்தர்களின் பாதுகாப்பிற்காக உயிர்காக்கும் குழுக்களை நியமித்தது மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க மருத்துவ ஊழியர்களைக் கொண்ட ஒரு மருத்துவ மையத்தை நிறுவுவதற்கும் கடற்படை ஏற்பாடு செய்திருந்த்து.

மேலும், இந்த வருடாந்த திருவிழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள், இராஜதந்திர அதிகாரிகள், பாதிரியார்கள், அரசு அதிகாரிகள், பக்தர்கள் மற்றும் பிற மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் பூஜைகளுக்கு தேவையான பல்வேறு பொருட்களை காங்கேசன்துறை மற்றும் குறிகட்டுவானில் இருந்து கச்சத்தீவுக்கு பாதுகாப்பான போக்குவரத்து கடற்படையின் பங்கேற்புடன் மற்றும் மேற்பார்வையுடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பெருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு இதுபோன்ற வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல், கடலில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி, இலங்கை கடற்படை ஒரு சிறப்பு பாதுகாப்பு திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு கெமரா அமைப்புகளை நிறுவுவதற்கும், பெருவிழாவில் கலந்து கொள்ளும் ஏராளமான மக்களின் தொலைத்தொடர்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு தகவல் தொடர்பு கோபுரத்தை நிறுவுவதற்கும் தேவையான வசதிகளை கடற்படை ஏற்பாடுச் செய்திருந்தது.

"கொடைக்கானலில் சட்டத்தரணியாக பணிபுரியும் மற்றுமொருவர், 12 வருடங்களாக கச்சதீவு புனித அந்தோனியாரின் திருவிழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் இங்கு வரும் போதும், ஒவ்வொரு அற்புதங்கள் இடம்பெறுவதாகவும் இந்நிகழ்வு இருநாடுகளின் தொப்புள் கொடி உறவாக அமைவதாகவும் வருடத்தின் இந்நாள் மிக மகிழ்ச்சியாக அமைவதாகவும் குறிப்பிட்டார். " 

மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழாவுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள், ஓய்வுபெற்ற கடற்படை சிரேஸ்ட அதிகாரிகள், இலங்கை மற்றும் இந்திய பாதிரியார்கள், அரசு அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அதிகாரிகள், முப்படைகள் மற்றும் காவல்துறையின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில் முக்கிய அம்சமாக இருப்பது, அங்கு இடம்பெறும் பண்டமாற்று வியாபாரமாகும். கச்சதீவு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சந்தைகளில் இந்திய மக்கள் தங்களுடைய பொருட்களை இந்திய பணத்தை கொடுத்து அதிகமாக கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.

ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வு மக்களின் கூட்டு வழிபாட்டையும் இன ஒற்றுமையையும் மேலும் அதிகரிக்கிறது என்பதை நாம் எப்போதும் மறுக்க முடியாது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக