• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள், இந்திய அரசாங்கத்தின் உதவியை மாத்திரமே மலையக மக்களுக்காக எதிர்பார்த்திருக்கிறார்களே தவிர, இலங்கை அரசாங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உணர்த்த தவறியுள்ளனர்.
• 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்திலும் மலையக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 60 வீதத்துக்கும் அதிகமான நிதி, இந்திய அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் மூலம் கிடைக்கப்பெற்றதாகும். இவற்றில் சுமார் 40 வீதத்துக்கும் குறைவான நிதியையே இலங்கை அரசாங்கம் மலையக மக்களுக்காக ஒதுக்கியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் இந்தியாவுக்குச் சென்றுள்ள நிலையில், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் எனக் கூறுபவர்கள் இந்திய பிரதமரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் நியாயமாக எமக்கு பெற்றுத்தர வேண்டிய கோரிக்கைகளையே அவர்கள் இந்திய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்கள். மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளியினராக இருந்தாலும் அவர்கள் இலங்கை பிரஜைகள் என்ற சொல்லாடல் நெடுங்காலமாக வலியுறுத்தப்பட்டாலும் மலையகப் பிரதிநிதிகள் அதனை மறந்து செயற்பட்டு வருகின்றனர்.
மலையகத் தமிழர்கள் இலங்கை பிரஜைகளாக இருக்கலாம், ஆனால் அவர்களுக்கான தேவைகளை இந்திய அரசாங்கமே நிறைவேற்ற வேண்டுமென்ற வாதம் மோடியுடனான சந்திப்பில் மலையகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்திலும் மலையக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 60 வீதத்துக்கும் அதிகமான நிதி, இந்திய அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் மூலம் கிடைக்கப்பெற்றதாகும். இவற்றில் சுமார் 40 வீதத்துக்கும் குறைவான நிதியையே இலங்கை அரசாங்கம் மலையக மக்களுக்காக ஒதுக்கியுள்ளது. ஆனாலும் குறித்த நிதி எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற தகவலும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இந்திய வீடமைப்புக்காக 3500 மில்லியன் ரூபாவும் பெருந்தோட்ட வலுவூட்டுகைக்கு 650 மில்லியன் ரூபாவும் பாடசாலைக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்துக்காக 600 மில்லியன் ரூபாவும் இந்திய அரசாங்கத்தின் உதவியில் கிடைக்கப்பெற்றதாகும். இது மலையக மக்களுக்கான மொத்த ஒதுக்கீட்டில் 63 வீதமாகும். இதனையே இலங்கை அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினை (வித்தியாவர்தன) வழங்கி ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் ஆகிய துறைகளில் புலமையை அதிகரித்துக் கொள்வதற்கான உதவியை இந்திய அரசாங்கம் வழங்கியிருந்தது.
அதேபோல் 2022 ஆம் ஆண்டில் பெருந்தோட்ட பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 3 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடம் அமைப்பதற்கு 125 மில்லியன் நிதியுதவியும் 2017 ஆம் ஆண்டு ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை தரமுயர்த்துவதற்கு 199 மில்லியன் ரூபா நிதியுதவியும் 2018 ஆம் ஆண்டு புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்கு 95 மில்லியன் ரூபாவும் இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இவற்றை விடவும் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியொதுக்கீட்டை இந்திய அரசாங்கம் மலையக மக்களுக்காக வழங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள் மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவியை மாத்திரமே மலையக மக்களுக்காக எதிர்பார்த்திருக்கிறார்களே தவிர, இலங்கை அரசாங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உணர்த்த தவறியுள்ளனர். இந்திய அரசாங்கத்திடம் மலையகத் தமிழர்களின் அபிவிருத்திக்கு உதவிகளை கோருவது வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும் இலங்கை பிரஜைகளான மலையகத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை ஏன் இவர்கள் இதுவரையும் வலியுறுத்தவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்திருந்தனர். இதன்போது வீட்டுவசதி, கல்வி, ஸ்டெம் ஆசிரியர் பயிற்சி, எட்கா மற்றும் சுகாதாரம் உட்பட மலையக சமூகம் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு முன்னுரிமை அளித்து சுய உதவித் திட்டங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியதாகவும் காணி உரிமைகள் மற்றும் மலையக சமூகத்தின் அபிவிருத்திக்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வீ.இராதாகிருஸ்ணன் ஆகியோர் சந்தித்திருந்தனர். இதன்போது மூன்று முக்கிய கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்ததாக மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
அவற்றில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை உருவாக்க ஒரு விசேட ஆசிரியர் பயிற்சி கலாசாலை அமைக்க உதவ வேண்டும், தாதியர் தொழிலுக்காக மலையக பெண்களை பயிற்றுவிக்க விசேட தாதியர் பயிற்சி கல்லூரி ஒன்றை நிறுவி உதவிட வேண்டும், மலையக பல்கலைக்கழகத்தின் முதல் கட்டமாக இந்தியாவின் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றின் வளாகம் ஒன்றை நுவரெலியாவில் அமைந்திட வேண்டும், இந்திய தூதரகத்திலுள்ள இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தின் வரைவை மாற்றி, புலமைப்பரிசில்களை அதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் முன்வைத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இந்த கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் எவ்வித பேச்சுக்களையும் இவர்கள் நடத்தியிருக்கவில்லை. இந்தியா, மலையக தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயற்படுவதற்கு உரித்துடைய நாடாக இருந்தாலும் அவை நிலையானதாக இல்லை. பிராந்திய அரசியல் நலன்களுக்கு ஏற்ற வகையில் இந்தியா தங்களது கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடும்.
தற்போது இலங்கை மக்கள் என்ற ரீதியில் மலையகத் தமிழர்களின் நலன்கள், தேவைகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பது தெளிவான கருத்தியல். இதனை வலியுறுத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது முக்கிய விடயமாக பார்க்க வேண்டியுள்ளது.
மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழகம் அமைய வேண்டுமென்பது, சுமார் இரு நூற்றாண்டுகளுக்கும் மேலான கோரிக்கையாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் பங்காளிகளாக இருந்த போது இவ்விடயங்கள் தொடர்பில் பிரசாரங்களை மேற்கொண்ட போதும் அதனை செயற்படுத்துவதற்கு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மைத்திரி - ரணில் ஆட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்காளியாக இருந்த போது, அமைச்சராக செயற்பட்ட மனோ கணேசன் மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழகம் தொடர்பில் ஒரு குழுவை அமைத்து அறிக்கை பெற்றுக்கொண்ட போதும், அந்த அறிக்கையின் நோக்கம் மற்றும் அந்த அறிக்கைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை யாருக்கும் தெரியாது. இந்நிலைமையில் இந்திய பல்கலைக்கழகத்தின் வளாகத்தை இலங்கையில் அமைக்குமாறு கூறுவது புத்திசாலித்தனமான கருத்து இல்லை.
இந்திய பல்கலைக்கழகத்தின் வளாகம் இலங்கையில் அமைக்கப்படுவதால், இலங்கையின் பாடத்திட்டங்களோ அல்லது இலவசமான கற்கைகளோ வழங்கப்படுவதில்லை என்பது நிதர்சனமானது. ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இலங்கை கிளையில் பாடநெறிகளை தொடர்ந்த பலர் பட்டங்களை பெற்றுக்கொள்ள முடியாமல், தங்களுடைய பணத்தை இழந்த கதையை அவர்கள் மறந்து விட்டார்கள் போலும்.
இந்நிலையில், மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழகம் அமைக்கப்படுமென்ற இருக்கட்சிகளின் நிலைப்பாடு இன்று மாறியிருப்பது அவர்கள் அரசாங்கத்துடன் எந்த மக்கள் நலன்கள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு தயாரில்லை என்பதையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான பொது எதிரணியை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
மைத்திரி - ரணில் ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கத்தினால் இரண்டாம் கட்டமாக 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான உதவிகளை வழங்குவதாக அறிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையினை திறந்து வைக்கும் நிகழ்வில் இத்திட்டம் தொடர்பில் அறிவித்தார். 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி 2018.02.16 ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தனிகராலயத்தில் 2018.08.12 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இத்திட்டத்துக்காக அப்போது இந்திய நன்கொடையாக 9500 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தின் பங்களிப்பாக 1500 மில்லியன் ரூபாவும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துள்ள போதும் 10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் ஒரு வீடும் நிர்மாணிக்கப்படவில்லை. ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டாலும் விடுதிகளில் முன்னைய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் தேவைக்காக நிர்மாணிக்கப்பட்ட கணினிக்கூடம் பயன்படுத்தப்படாமல் இருந்ததையும் அறிந்தோம். இவ்வாறான சம்பவங்கள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடைகள் முறையாக மக்களை சென்றடைகின்றதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலுமுள்ள அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதற்கு புதிய மும்மொழி பாடசாலைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும் என்ற அடிப்படையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மும்மொழி தேசிய பாடசாலை உருவாக்கத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2018.08.21 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள கல்வி வசதிகளை மேலும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு சகல வசதிகளுடனும் கூடிய மும்மொழி கலவன் தேசிய பாடசாலையொன்றை 800 மில்லியன் ரூபா முதலீட்டில் நானுஓயா பிரதேசத்தில் தாபிப்பதற்கும் அதனை தரம் 6 இலிருந்து தரம் 13 வரை மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பாடசாலையொன்றாக நடாத்திச் செல்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் திட்டம் செயற்படுத்தப்படவில்லை.
அதேபோல 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகவிருந்த பழனி திகாம்பரம், மலையகத்தில் நான்கு தேசிய பாடசாலைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் ஆனால் இ.தொ.கா. அதனை தடுத்து விட்டதாகவும் தேர்தல் பிரசார மேடைகளில் தெரிவித்திருந்தார்.
மேற்கூறப்பட்ட விடயங்களை கவனத்தில் கொள்ளும் போது, இந்திய அரசாங்கத்தால் மலையக மக்களுக்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடிந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் நிதியொதுக்கீடுகள் மூலம் மலையக மக்களுக்கு கிடைத்த அபிவிருத்தி என்ன? என்ற கேள்வியும் எழுகின்றது. இத்தனை காலமும் மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று கூறியவர்கள் இதற்கான விளக்கத்தை வழங்க வேண்டும்.
இந்திய அரசாங்கத்திடம் மாத்திரமே தங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்கும் அரசியல் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்திடம் அவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்க மறுப்பது ஏன்? ஏற்கனவே மலையகத் தமிழர்களை இந்தியர்கள் என்ற வரையறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கம், அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற விடயத்தை மறந்து செயற்படும் போக்கு காணப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மலையக பிரதிநிதிகளும் இந்தியாவின் மானியத்தை மேலும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அவ்வாறெனின் மத்திய அரசாங்கத்தில் இவர்கள் பங்காளிக் கட்சிகளாக செயற்பட்ட சந்தர்ப்பங்களில் மலையக மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியை அதிகம் பெற்றுக்கொடுப்பதற்கு ஏன் முயற்சிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும், கூட்டணி கட்சிகளுடன் நீண்ட ஒப்பந்தத்தை செயற்படுத்தி வாக்கு சேகரிக்கும் இவர்களுக்கு ஏன் மலையகத் தமிழர்களின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
குறைந்தது காணியுரிமையை கூட மலையக மக்களுக்காக பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் மலையக மக்களின் காணியுரிமை பற்றி பேசியிருப்பது வேடிக்கையானது. இந்திய வீட்டுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் காணியொதுக்கீட்டை மேற்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் மலையக மக்களுக்கு காணி துண்டையோ அதற்கான உரிமையையோ பெற்றுக் கொடுக்க முடியாது. அதனை மலையக பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் அங்கம் வகித்த அரசாங்கத்திடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக இந்திய அரசாங்கம் அதற்கான நிதியொதுக்கீடுகளை மலையக மக்களுக்காக மேற்கொண்டாலும், இலங்கை பிரஜைகளாகிய எங்களை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் எங்களுக்கு செய்யப்போவது என்ன?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக