2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை கடந்த 17 ஆம் திகதி நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் முன்வைக்கப்பட்ட இந்த வரவு - செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கான முன்மொழிவுகள் தொடர்பில் அதிகம் பேச வேண்டியுள்ளது.மலையக மக்களின் அடையாளம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம், சுகாதாரம், உட்கட்டமைப்பு, கல்வி, சுயதொழில் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நம்பகத்தன்மையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்காக உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பில் இங்கு ஆராயலாம்.
மலையக மக்களுக்கான இன அங்கீகாரம்
2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் “மலையக மக்கள்” என விழிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும். கடந்த காலங்களில் தோட்ட மக்கள் அல்லது பெருந்தோட்ட மக்கள் என குறிப்பிடப்பட்ட நிலையில் முதன்முறையாக மலையக மக்கள் என விழிக்கப்பட்டுள்ளனர். மலையக மக்களை 'இந்திய வம்சாவளியினர்” என்று அல்லாமல் 'மலையக தமிழர்' என அடையாளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது மலையக மக்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கான கோரிக்கையின் முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதற்கு பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு
பிரதானமாக தேயிலை, இறப்பர், தெங்கு பெருந்தோட்டத்துறையில் ஏறக்குறைய 1.5 மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்க்கைத்தரமானது மேலும் மேம்படுத்தப்பட வேண்டுமென அரசாங்கம் கருதுகிறது. பெருந்தோட்டத் துறையினை நோக்காகக் கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக அவர்களது நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
பெருந்தோட்ட சுகாதார சேவைகள்
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பொது தனியார் கூட்டாண்மை மூலம் தோட்ட மட்டத்திலான சுகாதார சேவையை வலுப்படுத்தும் செயன்முறையை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தோட்ட வைத்தியசாலைகளுக்குத் தேவையான மனித வளங்கள், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அரசாங்கத்தால் வழங்கப்படும்.
மலையக தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள்
இலங்கை தேசத்தின் ஒரு அங்கமான மலையக மக்கள் நீண்ட காலமாக அதிக சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், இந்த சமூகத்தின் வாழ்வாதாரங்கள் இன்னும் ஒரு சிறந்த வாழ்க்கைக்கான தரத்தை விடக் குறைவாகவே உள்ளது. அதன்படி, பின்வரும் முன்னெடுப்புக்களை ஆதரிக்க 7,583 மில்லியன் ரூபா ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலையகத் தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 2,450 ரூபா மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலையக தமிழ் சமூகத்தின் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு 866 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றை விடவும் பொதுவான நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாகவும் மலையக மக்கள் பயன்பெறும் நிலை காணப்படுகின்றது. தொழிலாளர்களின் ஊதியம், வீடமைப்பு, உட்கட்டமைப்பு, பாடசாலை அபிவிருத்தி போன்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்கான முன்மொழிவுகள் இடம்பெற்றாலும் மலையக மக்களின் காணி உரிமை மற்றும் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் செயற்றிட்டம் போன்றவை தொடர்பில் எவ்விதமான முன்மொழிவையும் வழங்கவில்லை.
மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் முன்மொழியப்படவில்லை
மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பான முன்மொழிவுகள் எவையும் இந்த வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. சமீப காலங்களில் மலையக மக்களுக்கான வீடுகளை அமைப்பதற்கு போதிய காணிகள் இல்லையென்ற வாதம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. இதனால் மலையக மக்களுக்கு அமைக்கப்படும் வீடுகளுக்கு ஒதுக்கப்படும் நிலத்தின் அளவு மற்றும் காணி உறுதி தொடர்பான முன்மொழிவுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
மாறாக தற்போது காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டு உற்பத்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாத நிலங்கள் அடையாளம் காணப்பட்டு நிலத்தின் பொருத்தப்பாட்டினை கருத்தில்கொண்டு விவசாய உற்பத்தி மற்றும் விவசாய அடிப்படையான அல்லது விவசாயம் அல்லா சிறிய நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக தனியார்துறையின் முதலீட்டிற்காக விடுவிக்கப்படும். இது தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூபா 250 மில்லியனை ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கவில்லை
பெருந்தோட்ட சுகாதார வலையமைப்பை ஒன்றிணைக்கும் பொருட்டும் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சகல பெருந்தோட்ட சுகாதார நிறுவனங்களையும் கட்டம் கட்டமாக அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டும் முன்னாள் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித்த சேனாரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு 2018.05.15 அன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உட்பட பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள 450 சுகாதார நிலையங்கள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டு, அறிக்கையானது சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் குறித்த அறிக்கையை சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கும், அதன் பின்னர் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உள்ளிட்ட 450 சுகாதார நிலையங்களை பகுதி பகுதியாக சுகாதார அமைச்சின் கீழ் கையகப்படுத்தவும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 19.02.2020 அன்று பாராளுமன்றத்தில் சுகாதாரம் மற்றும் மனித நல நோம்புகை, சமூக வலுவூட்டுகை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தோட்ட மருத்துவ அலகுகளை சுவீகரித்தல் பற்றிய அறிக்கையானது, அப்போதைய குழுவின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜினால் சமர்ப்பிக்கப்பட்டது.
2019 செப்டம்பர் 16 ஆம் திகதி சுகாதாரம் மற்றும் மனித நல நோம்புகை, சமூக வலுவுட்டுகை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முப்பத்து ஆறாவது கூட்டத்தில், 59 நிறுவனங்களை கைப்பற்றும் செயற்பாட்டினை (57 அடிப்படை சிகிச்சை அலகுகள் மற்றும் 2 பிரதேச வைத்தியசாலைகள்) 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதுடன் மொத்தம் 450 சுகாதார நிறுவனங்கள் 5 வருடங்களுக்குள் சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களுக்கு என்ன நடக்கும்?
பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்புக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீடுகள் முழுமைப்படுத்தப்படுமா? என்பதில் போதிய தெளிவில்லை. 2015 - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சு, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் நிதியொதுக்கீடுகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட 5668 தனி வீட்டுத் திட்டங்களில் 1033 வீடுகள் பூர்த்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. அவற்றை நிர்மாணிப்பதற்கான நிதியொதுக்கீடுகள் தொடர்பில் போதிய விளக்கம் முன்வைக்கப்படவில்லை.
பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள்
மலையக தமிழ் சமூகத்தின் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு 866 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ள போதும், இந்நாட்டில் உள்ள பெருந்தோட்ட சமூகங்களின் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் நடவடிக்கையாக நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் 508 மில்லியன் ரூபாவை தாராளமாக நிதியுதவியாக வழங்கியதுடன், இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளுக்காக இலங்கை அரசாங்கமும் 115 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கையெழுத்திட்டனர். இதனால் இவை இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றதா அல்லது இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதில் தெளிவில்லாத நிலை காணப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியம்
தற்போது 1350 ரூபாவை நாட் சம்பளமாக பெற்றுக் கொள்ளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதே தேசிய மக்கள் சக்தியின் இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்ட போதும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1700 ரூபா சம்பள விடயத்தில் நிலையான தீர்வு வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
முழுமையான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுமா?
கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட பல வரவு - செலவுத்திட்டங்களில் மலையக மக்களுக்கான பல்வேறு முன்மொழிவுகளும் நியொதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டாலும் அவை நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை. நாட்டின் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி மலையக மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக மலையக மக்களுக்கான திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படுமென்ற நம்பிக்கை பலருக்கும் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை தக்கவைக்க அரசாங்கம் செயற்பட வேண்டும். வரவு - செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளுக்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டாலும் அவற்றை முழுமையாக செயற்படுத்துவதில் தொடர்ச்சியாக பல அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளன. இவற்றை தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் எம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.
2015 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டங்களில் பெருந்தோட்ட மக்களின் வீடமைப்புத் திட்டத்துக்காக 14,348 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 6567.71 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7780.29 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. 2015 இல் 200 மில்லியன் ரூபாவும் 2016 இல் 1200 மில்லியன் ரூபாவும் 2017 இல் 3288 ரூபாவும் 2018 இல் 2677 மில்லியன் ரூபாவும் 2019 இல் 2900 மில்லியன் ரூபாவும் 2020 இல் 771 மில்லியன் ரூபாவும் 2021 இல் 1522 மில்லியன் ரூபாவும் 2022 இல் 1790 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் 2015 இல் 349.7 மில்லியன் ரூபாவும் 2016 இல் 726.42 மில்லியன் ரூபாவும் 2017 இல் 1794.2 ரூபாவும் 2019 இல் 2280.5 மில்லியன் ரூபாவும் 2020 இல் 768.79 மில்லியன் ரூபாவும் 2021 இல் 648.1 மில்லியன் ரூபாவும் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெருந்தோட்ட பகுதிகளுக்கான சுகாதார மற்றும் போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு வரவு - செலவுத்திட்டங்களின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்கள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் சில நிகழ்சித்திட்டங்கள் மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டங்களில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 5,097 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 2,203.8 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2893.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. 2015 இல் 600 மில்லியன் ரூபாவும் 2016 இல் 318 மில்லியன் ரூபாவும் 2017 இல் 732 ரூபாவும் 2018 இல் 709 மில்லியன் ரூபாவும் 2019 இல் 600 மில்லியன் ரூபாவும் 2020 இல் 604 மில்லியன் ரூபாவும் 2021 இல் 814 மில்லியன் ரூபாவும் 2022 இல் 720 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் 2015 இல் 418.38 மில்லியன் ரூபாவும் 2016 இல் 313.9 மில்லியன் ரூபாவும் 2017 இல் 310.17 ரூபாவும் 2019 இல் 361 மில்லியன் ரூபாவும் 2020 இல் 467.35 மில்லியன் ரூபாவும் 2021 இல் 333 மில்லியன் ரூபாவும் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
மலையகப் பல்கலைக்கழகம், தனி வீட்டுத்திட்டங்கள், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம், குடிநீர், போக்குவரத்து வீதிகள் என பல்வேறு திட்டங்களுக்கு கடந்த காலங்களில் வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் பல திட்டங்கள் பேச்சளவில் மாத்திரமே இருந்தன. இந்நிலை 2025 ஆம் ஆண்டில் மாற்றம் பெறுமென எதிர்பார்க்கிறோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக