• 7 பேர்ச் காணியும் முறையாக பங்கிடப்படவில்லை.
• முழு வீடும் 2.25 பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
• பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்குவதில் பாரபட்சம்
மலையகப் பெருந்தோட்டங்களில் தொழிலாளர் குடும்பங்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கசப்பான சம்பவங்கள் மலையக மக்களுக்கான காணியுரிமை தொடர்பில் மீண்டும் நீண்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுங்காலமாக காணி உரிமை தொடர்பில் வலியுறுத்தப்பட்டாலும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வப்போது அரசாங்கத்தரப்பால் மலையக மக்களுக்கான காணியுரிமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மலையக மக்களுக்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த காணியில் சொந்த வீடு வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் காணி உரிமையினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அந்த காணிகள் உரியவாறு அளவிடப்படவில்லை, காணியுரிமை வழங்குவதை அரச நிறுவனங்கள் விரும்பவில்லை மற்றும் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவில்லை என்ற விடயம் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய வீடமைப்பு மற்றும் காணிப்பகிர்வு நிகழ்ச்சித்திட்டம் பற்றிய சமூகப் பொருளாதார ஆய்வு” எனும் தலைப்பில் காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பின் (மொன்லார்) அனுசரணையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஷ் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
ஆய்வுகளில் வெளிப்பிட்ட பிரதான அம்சங்கள் சில:
• உரிமைத்துவம்: பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் ஆகியவற்றிலிருந்து அரசியல் எதிர்ப்பின் காரணமாக, அசல் உரித்தை புதிய குடியிருப்பாளர்கள் கொண்டிருக்கவில்லை. எனவே தற்காலிகமான உறுதியே வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் செல்லுபடியான உரிமைத்துவத்துக்காக காத்துள்ளனர் என்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது.
• தனிப்பட்ட வீட்டு நில அளவை வரைபடம் இன்மை: தனிப்பட்ட வீட்டு அலகுகளுக்கு நில அளவை வரைபடம் இல்லை. எனவே உண்மையான பேர்ச்களின் அளவை கண்டறிவது கடினமாக இருந்தது. முழுமையான வீடமைப்புத் திட்டத்துக்குமான நில அளவை வரைபடம் மட்டுமே காணப்படுகின்றது. நில அளவைத் திணைக்களமானது அத்தகையதொரு நில அளவை வரைபடத்தையே மேற்கொண்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் உரிமைத்துவத்தை கோருவதில் பிரச்சினைகளை உருவாக்க முடியும்.
• நிர்மாணத்திற்காக காணியை தெரிவு செய்த பின்னர் சில குடியிருப்பாளர்கள் 7 பேர்ச் அளவுக்கும் மேற்பட்ட அளவை கொண்டிருந்ததாகவும் சிலர் அதைவிட குறைவான அளவை கொண்டிருந்ததாகவும் ஆய்வு கண்டறிந்தது. எனினும் உண்மையான எண்ணிக்கையைக் கொண்ட பேர்ச்களை நிரூபிப்பதற்கு சான்று இருக்கவில்லை.
• நிர்மாணத்திற்கான காணிகளை விடுவித்தல்: புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு காணிகளை பெருவதில் சவால்கள் இருந்தன. காணிகளை விடுவிப்பதற்கு தனது இணக்கமின்மையைப் பெருந்தோட்ட அமைச்சும் மற்றும் பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகளும் காட்டின. அவை பிரதானமாக இலாபம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றிலேயே பரிசீலனையில் எடுக்கின்றன.
காணிகளை வழங்குவதில் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளதும் முகாமைத்துவத்தினதும் பங்களிப்பு
பெருந்தோட்டங்களில் தேயிலை தொழில்துறையும் குடியிருப்புகளும் ஒரே அமைவிடத்தில் அமைந்திருப்பதால் புதிய வீடமைப்புக்காண காணிகளை ஒதுக்குவதில் சவால் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் சகல சேவைகளையும் பெற்றுக்கொள்ளும் வகையில் காணிகளை ஒதுக்குவதற்கு தோட்ட நிர்வாகம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்கின்றது. உற்பத்தி திறன் கொண்ட காணிகளை ஒதுக்குவதால் இலாபத்திற்கும் உற்பத்தி திறனுக்கும் பாதிப்பு ஏற்படுமென கருதுகின்றன. பிரதான வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள பெரும்பாலான காணிகள் உற்பத்தி திறன் கொண்டவை என்பதால் கம்பனிகளும் முகாமைத்துவமும் காணியை வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
புதிய வீடமைப்புத் திட்டம் தொடர்பில் பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் முகாமையாளர்களிடையே இருவேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. சில பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் முகாமையாளர்களிடையே இந்த சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தில் சகல சாத்தியமான வழிகளிலும் மேம்படுத்த வேண்டுமென்ற நேர்மறையான அணுகுமுறையொன்று காணப்படுகின்றது. மாறாக இந்தத்துறையில் ஏற்பட்டுவரும் இத்தகைய புதிய முன்னேற்றம் தொடர்பில் எதிர்மறையான மனவுணர்வைக்கொண்ட குழுவொன்றும் இருக்கின்றது. இது மிகவும் ஆபத்தான போக்காகும். அவர்கள் பெரந்தோட்ட மக்கள் சுதந்திரமாக செயற்படுவதை விரும்பவில்லை. தொழிலாளர்களை வெறும் உழைக்கும் சமூகமாகவே பார்ப்பதாக அறிய முடிவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் அதிகளவு சுதந்திரமாக செயற்பட்டால் முகாமையாளர்கள் அவர்கள் மீது செலுத்தும் கட்டுப்பாட்டினை இழந்துவிடக்கூடும் என்று முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சுதந்திரமானது அவர்களிடமிருந்து உழைப்பை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை தோற்றுவிக்கும். மாறாக மக்கள் சுதந்திரமாக விளங்கினால் சேமநலன் சேவைகளுக்கான செலவுகளை பெருந்தோட்ட கம்பனிகளால் குறைக்க முடியுமென்பதுடன் அதிகரித்துவரும் தேயிலை உற்பத்திச் செலவினையும் ஒழுங்கமைக்க உதவும் என்ற கருத்தையும் கொண்டுள்ளனர். எனினும் பெருந்தோட்ட மக்களை சுதந்திரமாக செயற்பட அனுமதித்தால் தொழிலாளர்களுக்கும் முகாமையாளர்களுக்கும் இடையில் காணப்புடும் அதிகார உறவில் தாக்கத்தை செலுத்தும் என்ற அச்சமும் அவர்களிடம் காணப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி மற்றும் வீட்டின் அளவு
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பெருந்தோட்ட மக்களக்கு 7 பேர்ச் காணியில் வீடுகளை வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி பெற்றிருந்தது. எனினும் இந்த உரிமையை அல்லது உரித்துடைமையை உறுதிப்படுத்துவதற்கு சட்டபூர்வமாக சட்டம் இயற்றப்படவில்லை. (2015 - 2026) பெருந்தோட்டச் சமுதாயத்தில் சமூக அபிவிருத்திக்கான முன்னேற்றத்திற்கான தேசிய செயல்த்திட்டத்தில் ஒவ்வொரு வீடும் 550 சதுர அடிகள் பரப்பளவை கொண்டிருக்குமென குறிப்பிடப்பட்ட போதும் ஆய்வின் போது 7 பேர்ச் காணி தொடர்பான எவ்விதமான ஆவணங்களும் கிடைக்கப்பெறவில்லையென ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
பயனாளிகளும் தத்தமது வீடுகளுக்கு நில அளவை படங்களை கொண்டிருக்கவில்லை. ஒட்டுமொத்த வீடமைப்புக்கும் பொதுவானதொரு நிலமளப்பு செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. உண்மையான பேர்ச்களை நிர்ணயிப்பதற்கான வீடமைப்பு அலகுகள் தெளிவாக பிரிக்கப்படாததனால் தமக்குச் சொந்தமான உண்மையான காணியின் அளவு தொடர்பில் பயனாளிகள் மத்தியில் குழப்பங்கள் காணப்பட்டது. முழு வீடும் 2.25 பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் மூன்று வீடமைப்பு அமைச்சுக்கள் காணப்பட்டன. இதன்போது வட மாகாணத்தில் 20 பேர்ச் காணியில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. அதேவேளை 20 பேர்ச் காணியில் கிராமிய மக்களுக்கு அப்போதைய அமைச்சர் சஜித் பிரேமதாச வீடுகளை வழங்கியிருந்தார். ஆனால் பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணியை வழங்குவதற்கு மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபாரபட்சமான செயற்பாடென்பது தெளிவாக விளங்குவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் இதே பாராபட்ச நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முறையான காணி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாமையால் 10 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்ச்சியாக இழுபறி நிலையில் உள்ளது.
காணி உரிமையை தடுப்பது யார்?
பெருந்தோட்ட மக்கள் காணி உரிமையுடன் தனி வீடுகளை பெற்றுக்கொள்வதில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்கு உடன்பாடில்லை என்பது பலரின் கருத்தாக இருக்கின்றது. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் பெருந்தோட்ட கம்பனியினால் நியமிக்கப்படுகின்றன. அத்துடன் அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் பெருந்தோட்ட கம்பனிகள் மூலமே வழங்கப்படுகின்றன. இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு ஆதரவான தனியார் நிறுவனத்தை அரசாங்கம் அமைச்சுடன் இணைத்துக்கொண்டு செயற்படுவதற்கான காரணமென்ன?
இதன் காரணமாகவே மலையக மக்களுக்கு சேவைகளை முன்னெடுப்பதற்கு தனியானதொரு அரச நிறுவனம் தேவையென்ற அடிப்படையில் நல்லாட்சி அரசாங்கத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகாரசபை உருவாக்கப்பட்டது. தற்போதும் அவை அமைச்சின் கீழ் செயற்படுகின்ற போதும் குறித்த அதிகாரசபையினை மலையக மக்களுக்கான முழு பங்காளியாக மாற்றுவதற்கு அரசியல்வாதிகள் செயற்படவில்லை. இதனால் பெருந்தோட்ட மக்களுக்கான சேவைகளை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தும் நிறுவனம் அடையாளம் காணப்படவில்லை.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்குச் சொந்தமான ஏழு தோட்ட வலயங்களில் 111,645 குடும்பங்கள் லைன் மற்றும் தற்காலிக வீடுகளில் வசிக்கின்றன. இவற்றில் நுவரெலியா வலயத்தில் 28,242 குடும்பங்களும் ஹட்டன் வலயத்தில் 29,428 குடும்பங்களும் வசிக்கின்றன. மொத்தமாக தோட்டங்களில் 258,602 குடும்பங்கள் வசிக்கின்றன. 2019 டிசம்பர் வரையில் 6,706 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் தோட்ட சேவையில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு 104,939 வீடுகள் தேவைப்படுகின்றன. எனினும் தோட்டங்களில் குடியிருக்கும் அனைத்து குடும்பங்களுக்காகவும் 251,896 வீடுகள் தேவைப்படுவதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் தெரிவித்துள்ளது. இவற்றில் நுவரெலியா வலயத்தில் 56,856 வீடுகளும் ஹட்டன் வலயத்தில் 55,063 வீடுகளும் தேவைப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்படாமையால் அண்மைக்காலங்களில் தோட்ட நிர்வாகங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையும் காணப்பட்டது. மாத்தளை இரத்தோட்டை சம்பவம் மற்றும் இரத்தினபுரி காவத்தை சம்பவம் என்பன மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. ஆங்கிலேயரிடமிருந்து விடுபட்டு இலங்கை சுயாட்சியை முன்னெடுத்தது முதல் அரசாங்கத்தில் முக்கிய பங்காளிகளாக மலையக அரசியல் பிரதிநிதிகள் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கவில்லை என்பது தெளிவான வரலாறு. மக்கள் குறைபாடுகள் வாழும்போதே அரசியல்வாதிகள் அரசியல் செய்யமுடியும். மக்களின் தேவைகள் நிறைவேறும் போது அரசியல்வாதிகளுக்கு தேவையில்லாத நிலை உருவாகும் என்பது அரசியல்வாதிகளின் கோட்பாடு. அதுவே மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலில் 200 வருடங்களாக நிலைத்துள்ளது. கட்சி அரசியலுக்காக மக்கள் பிளவுண்டு இருப்பது அவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருக்கின்றதென்பது வெளிப்படையானது. அந்நிலையை மாற்றும்வரை தங்களுக்கான உரிமைகள் இழுபறியாகவே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக