மலையக பெருந்தோட்ட மக்களின் அடையாளத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது என்ற விவாதங்கள் 200 வருட நிறைவில் எழுந்துள்ள அதேவேளை இந்த காலப்பகுதியில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிகொண்டு வந்து தீர்வுக்கு இட்டுச்செல்லும் மனநிலை உருவாகவில்லை. மலையக மக்களின் காணி, வீடு என்பன அண்மைக்காலங்களில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள அதேவேளை சுகாதாரத்துறையும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி புளும்பீல்ட் தோட்டத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தின் பின்னர் விபத்தினால் பாதிக்கப்பட்டு கடும் காயங்களுக்கு உள்ளான சுமார் 23 தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பெருந்தோட்ட சுகாதாரத்துறை பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளன. கடந்த 3 ஆம் திகதி மஸ்கெலியாவிலிருந்து புளும்பீல்ட் தோட்டத்தை நோக்கி பயணித்த 24 தோட்டத் தொழிலாளர்கள், லொறி பள்ளத்தில் வீழ்ந்தத்தில் கடும் காயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.
எனினும் அவர்கள் ஒரு நாள் மாத்திரம் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கான எவ்வித வைத்திய தெளிவுபடுத்தல்களும் மேற்கொள்ளப்படாமல் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமையால் மீண்டும் வீடுகளில் கடும் வருத்தங்களை எதிர்கொண்டனர். உடனடியாக மருத்துவ உதவியினை பெற்றுக்கொள்வதற்கு தோட்ட வைத்தியசாலையிலும் போதிய வைத்தியசாலை இன்மையால் அவர்களில் பலர் மீண்டும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் தங்களுடைய சொந்த செலவில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து செலவுகளுக்கும் அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆளாகியுள்ளனர்.
மஸ்கெலிய பிரதேச வைத்தியசாலை பாரிய உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருந்தாலும் போதிய ஆளணி மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டிராமையால் மஸ்கெலிய பகுதி மக்கள் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளது. ஹட்டன் பிராந்தியத்தில் பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை, கினிகத்தேனை, வட்டவளை ஆகிய பகுதிகளில் பிரதேச வைத்தியசாலைகள் அமைந்திருந்தாலும் போதிய மருத்துவ வசதிகள் இன்மையால் மேலதிக சிகிச்சைகளுக்கு நுவரெலியா, நாவலப்பிட்டி, கண்டி வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர் ஒருவருக்கு அவசர கதிரியக்க பரிசோதனை செய்வதற்கு நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. மேலும் கிளங்கன் வைத்தியசாலையில் கடும் காயங்களுக்கு உள்ளாகும் நபர்களும் பரிசோதனைகளுக்கும் வைத்தியசாலை பொலிஸாரால் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர். கிளினிக்குகளிலும் மருந்தகங்களிலும் மிக நீண்ட வரிசையில் இருந்து அல்லது தரையில் அமர்ந்தே நோயாளர்களும் வயோதிபர்களும் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
தோட்ட மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளமையால் சாதாரண காயங்களுக்கு சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு தனியார் மருந்தகங்கள் அல்லது தூரப்பகுதிகளிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனால் நோயால் பாதிக்கப்பட்ட பலர் அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்கு செல்வதற்கு தயங்கி வீடுகளிலேயே தங்கியுள்ளனர். மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தாமையால் இரத்த மாதிரிகளை தனியார் மருந்தகங்களுக்கு வழங்கி சுமார் 42 மணித்தியாலங்களின் பின்னரே அறிக்கையினை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான சம்பவங்கள் பெருந்தோட்ட மருந்தகங்களை மேம்படுத்த வேண்டிய தேவையையும் அரச வைத்தியசாலையின் வளங்களை விருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
கிளங்கன் ஆதார வைத்தியசாலை
157 வருடகால வரலாற்றைக்கொண்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் புதிய வளங்களை கொண்டு செயற்பட்டு வருவதாக அறியப்பட்டாலும் வெளி நோயாளர்கள் இருந்து சிகிச்சை பெறுவதற்கேற்ற வசதிகளோ அல்லது விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளையோ பெற்றுக்கொள்வது கடினமான செயலாகவே இருக்கின்றது. பலகோடி ரூபாவில் வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டாலும் நோயாளர்கள் தங்களுடைய தேவையினை பூர்த்திசெய்யக்கூடிய நிலையினை மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.
இந்திய அரசாங்கத்தின் 120 கோடி ரூபா நிதியுதவியில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் அப்போதைய சுகாதார அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் 2011 ஜூன் மாதம் 4 ஆம் திகதி நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் அன்றைய இந்தியத் தூதுவரும் கலந்து கொண்டார்.
நவீன முறையில் மூன்று மாடிக் கட்டடத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடமானது இந்திய அரசின் 120 கோடி ரூபா நிதியுதவியில் 150 கட்டில்களை கொண்டதாக உள்ளது. சத்திரசிகிச்சைப் பிரிவு, இரண்டு லிப்ட்கள், சமையலறை, சலவையறை, ஒன்றுகூடலறை, வைத்தியர்களுக்கான ஓய்வறை, சிறுவர் பூங்கா, வைத்தியர் விடுதிகள் என சகல வளங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கட்டட நிர்மானப் பணிகளுக்கான சகல வளங்களும் பொருட்களும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்திய பணியாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் 2013 ஆண்டு பூர்த்தியடைந்தது. 2017 ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு தகவல்களின் அடிப்படையில், கிளங்கன் வைத்தியசாலையின் தற்போதைய வளங்கள் மற்றும் ஆளணி தொடர்பில் அறிந்துகொள்வதற்காக தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் 192 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 140 தாதியர் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் 89 பேர் மாத்திரமே கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 64 வைத்திய அதிகாரி பதவிகளுக்கு 52 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைக்கு மொத்தமாக 43 பதவி நிலைகள் காணப்படுவதுடன் 36 பதவிகளுக்கான 192 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை
பழைய மஸகெலியா நகரத்தில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட வைத்தியசாலை நீர்த்தேக்கத்தின் உருவாக்கம் காரணமாக இல்லாமல்போன நிலையில் மஸ்கெலியா புதிய நகர உருவாக்கத்தின் பின்னர் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் விஜேசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க மஸ்கெலியா பிரதேச மக்களுக்காக 165 படுக்கை வசதிகளையும் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கென தனியான படுக்கை வசதிகளை கொண்ட 6 அறைகளையும் கொண்ட ஆதார வைத்தியசாலை உருவாக்கப்பட்டிருந்தது.
1972 ஆம் ஆண்டு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்கு மஸ்கெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஆரியதிலக மற்றும் அப்போதைய சுகாதார அமைச்சர் ஆரியதாச ஆகியோரினால் கையளிக்கப்பட்டது. அப்போது அவ்வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகூடம், பல் லைத்தியர் கூடம், மருந்தகம், வெளிநோயாளர் பிரிவு, 24 மணித்தியால சேவைக்கென வைத்திய பிரிவு, மாவட்ட வைத்திய அதிகாரி காரியாலயம், வைத்தியசாலை காரியாலயம், தேநீர்சாலை, அம்பியூலன்ஸ் வண்டி, வாகன தரிப்பிடம், சவச்சாலை, ஆய்வுகூடம், வைத்தியர் விடுதிகள், தாதியர் விடுதிகள் போன்ற பல்வேறு வசதிகளும் காணப்பட்டன.
ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக மாற்றம் கண்டுள்ளது. 10 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை முறையான பராமரிப்பு மற்றும் ஆளணி வளங்கள் இன்றி இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலைக்கு 51 அனுமதிக்கப்பட்ட பதவியணி காணப்படும் நிலையில் பல பதவிகளுக்கு தொடர்ச்சியாக வெற்றிடம் நிலவி வருகின்றது. இதனால் அவசர விபத்து சிகிச்சைகளின் போதும் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அல்லது மருந்தகங்கள்
2007 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இதுவரையும் எவ்விதமான பெருந்தோட்ட வைத்தியசாலைகளும் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உட்பட பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள 450 சுகாதார நிலையங்கள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டு, அறிக்கையானது சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் குறித்த அறிக்கையை சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கும், அதன் பின்னர் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உள்ளிட்ட 450 சுகாதார நிலையங்களை பகுதி பகுதியாக சுகாதார அமைச்சின் கீழ் கையகப்படுத்தவும் துறைசார் மேற்பார்வைக்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 19.02.2020 அன்று பாராளுமன்றத்தில் சுகாதாரம் மற்றும் மனித நல நோம்புகை, சமூக வலுவூட்டுகை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தோட்ட மருத்துவ அலகுகளை சுவீகரித்தல் பற்றிய அறிக்கையானது, குழுவின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜினால் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் கிட்டத்தட்ட 450 தோட்டபுற சிகிச்சை நிலையங்கள் உள்ளதுடன் கூறப்பட்ட சிகிச்சை நிலையங்களை தரமுயர்த்துவதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் சுகாதார நிலைமையை முன்னேற்றுவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஏனைய கிராமபுற மற்றும் நகர்புற மக்களுக்கு அரசாங்கத்தினால் சேவைகள் வழங்கப்படுவதைப் போன்ற விதத்தில் சுகாதார சேவைகளை பெருந்தோட்டத்துறை மக்கள் வசதி வாய்ப்பாக பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அரசாங்கத்தின் சுகாதார வலையமைப்புடன் பெருந்தோட்ட சுகாதார வலையமைப்பை ஒன்றிணைக்கும் பொருட்டும் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சகல பெருந்தோட்ட சுகாதார நிறுவனங்களையும் கட்டம் கட்டமாக அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டும் முன்னாள் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு 2018.05.15 அன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தொடர்ச்சியாக 450 பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்கி கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இதுவரையும் எவ்வித திட்டங்களும் முழுமையடையவில்லை என்பதே உண்மையாகும். 1879 இல் ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தோட்டங்களுக்கான மருத்துவ முறை போதியளவானதல்ல எனக் கூறியதுடன் அதை சீர்திருத்துவதற்கான சில விதந்துரைகளையும் செய்தது. 1893 இல் மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட குடிவரவு தொழிலாளர் மத்தியில் இடம்பெற்ற மரண விகிதம் நாட்டு மக்கள் மத்தியில் இடம்பெற்ற மரண விகிதம் நாட்டு மக்கள் மத்தியில் நிகழ்ந்த மரணங்களின் விகிதத்தை விஞ்சியிருந்தது. இதனால், வைத்தியசாலை இறப்பு விகித அளவீட்டு ஆணைக்குழு, தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, முடிந்தவரை அவர்களின் வேலைத்தளங்களுக்கு அண்மையில் அவ்வசதிகளை நிறுவ வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இவ்வாறே 1893 ஆம் ஆண்டில் தோன்றிய 15 மருந்தகங்கள், 1906 ஆம் ஆண்டில் 143 ஆக விரிவாக்கம் பெற்றது. இதன் வாயிலாக தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அண்மையில் மருந்தகங்கள் நிறுவப்படவேண்டும் என்ற பரிந்துரை செயற்படுத்தப்பட்டது. (தகவல்:பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை பற்றிய கொள்கை மீள்நோக்கு)
அவ்வாறு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்கள் பலவும் அரசாங்கத்தால் பொறுப்பேற்பதற்கான திட்டத்தில் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 44 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் 1994 - 2007 வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இறுதியாக 2007 ஆம் ஆண்டு 35 வைத்தியசாலைகள் பெறுப்பேற்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1908 ஆம் ஆண்டு 36 இலக்க மருத்துவ பதிவு (திருத்தச்) சட்டத்தின் கீழ் பிரித்தானிய காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறை சுகாதாரம் மற்றும் மருத்துவம் கவனிக்கப்பட்டது. ஆனால் இன்று பெருந்தோட்டங்கள் பல தனியார்துறையின் கீழ் இயங்குவதால் தோட்ட நிர்வாகமே சுகாதாரத்துறையை கவனிக்கும் நிலை உருவானது. தற்போதைய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரே~; பிரதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 51 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதுடன், 23 மருத்துவமனைகள் அரசுடைமையாக்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் எவ்விதமான அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லை. இன்று பெருந்தோட்டங்களில் 179 மகப்பேற்று விடுதிகளும் 450 பெருந்தோட்ட வைத்தியசாலைகளும் காணப்படுகின்றன. அவற்றை அரசாங்கம் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் அறிக்கை ரீதியாக தயார்படுத்தப்பட்டுவிட்டாலும் இன்னும் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கப்படவில்லை.
தற்போது மலையக மக்களின் 200 வருடங்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டாலும் அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு முன்னெடுக்கப்படவில்லை. அவர்களுடைய அவலங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவதற்கு பலரும் முயற்சித்தாலும் சிறந்த தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு முடியாமல் போயிருப்பது வேதனையாகும். 100 வருடங்களுக்கு முன்பு மலையக மக்கள் அனுபவித்த வேதனைகள் இன்று சற்று குறைந்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். ஆனால் நாட்டில் சகல மக்களுக்கும் கிடைக்கும் உரிமைகளில் மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டிருப்பது ஏமாற்றத்துக்குரியது. எனவே 200 வருட பிரசாரத்தில் மலையக பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக