கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 நவம்பர், 2023

கொவிட் தடுப்பூசி கொள்வனவில் அரசாங்கத்தின் பங்கு என்ன?



நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டு 2 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் இன்னும் முற்றிலுமாக அபாயம் நீங்காத நிலை காணப்படுகின்றது. இலங்கையில் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு கொவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் நாட்டில் கொவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடைய அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியினை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டது. இதன்போது கொவிட் தடுப்பூசிகள் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன. கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவுக்கான செலவுகள் தொடர்பிலும் அரசாங்கத்தால் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை. அதிக விலைக்கு தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குதி செய்யப்பட்டும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை பூர்த்தி செய்யப்படாமையால் பல தடுப்பூசிகள் பயனற்ற நிலையில் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா, சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் பைசர் பயோன்டெக், மொடெர்னா ஆகிய தடுப்பூசிகள் இலங்கையில் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு பாரியளவிலான நிதியினை செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு தடுப்பூசிகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் கேள்வியின் காரணமாக உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற விலையின் அடிப்படையிலேயே தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அத்துடன் தடுப்பூசி இறக்குமதிகளுக்காக செலவிடப்பட்ட நிதி மற்றும் வெளிநாட்டு நன்கொடைகள் என்பவை தொடர்பில் எவ்விதமான வெளிப்படைத்தன்மையினையும் அரசாங்கம் பேணியிருக்கவில்லை. இதேவேளை கொவிட் தடுப்பூசி தொடர்பில் மக்களிடம் ஏற்பட்ட அதிர்ப்தி நிலைமையினால் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இறக்குமதி செய்யப்பட்ட பல கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இறக்குமதிக்காக செலவு செய்யப்பட்ட பணம் விரயமாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

‘நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் இலக்கை, எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் எனவும் தடுப்பூசி, கொவிட் வைரசுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்காது. அதனால் சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டிய அவசியம்’ ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார். ஆனால் இலங்கையில் கொவிட் தடுப்பூசித்திட்டம் வெறிறிகரமாக நிறைவு செய்யப்படவில்லை. மாறாக அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவெக்ஸ் திட்டம்

இலங்கைக்கு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 515,000 டோஸ் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இவற்றில் இந்தியாவிலிருந்து கொவிஷீல்ட் தடுப்பூசி 500,000 மற்றும் ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் வி 15,000 டோஸ் தடுப்பூசிகளும் இறக்குமதி செய்யப்பட்டன.

இந்தியாவின் கொவிஷீல்ட் தடுப்பூசியின் 10 டோஸ் குப்பியொன்று 10,287.38 ரூபாவுக்கும் (51.5 அ.டொலர்) தடுப்பூசியின் 1 டோஸ் 1,028.74 ரூபாவுக்கும் (5.15 அ.டொலர்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி 5 டோஸ் தடுப்பூசியானது 9,947.51 ரூபாவுக்கும் (49.80 அ.டொலர்) தடுப்பூசியின் 1 டோஸ் 1,989.50 ரூபாவுக்கும் (9.96 அ.டொலர்) கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை கொவிஷீல்ட் தடுப்பூசியினை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து செலவுகள் உட்பட 515,346,540.50 ரூபா (515.34 மில்லியன்) செலவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கைக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியானது கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் இலவசமாக இந்தியாவினால் வழங்கப்பட்டதாகவே விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது. கோவெக்ஸ் திட்டமானது, தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்காள உலகளாவிய கூட்டணி, தொற்றுநோய்களுக்கான உற்பத்தி கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி மற்றும் உலக சுகாதார ஸ்தானத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும்.


கொவிட் 19 தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியினை விரைவுபடுத்துவதும் உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் நியாயமான மற்றும் சமமான அணுகலை உறுதி செய்வதும் இதன் நோக்கம். இதன் அடிப்படையிலேயே கொவிஷீல்ட் தடுப்பூசியினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடமிருந்து இலங்கை ஜனாதிபதி அன்பளிப்பாக பெற்றுக்கொண்டிருந்தார். ஆனால் குறித்த தடுப்பூசிகளுக்கு 515,346,540.50 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிஷீல்ட் தடுப்பூசிக்காக மாத்திரம் 514,370,000 ரூபா (514.37 மில்லியன்) செலவு செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்காக 976,540.50 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை ரஷ்யாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுதியினை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து செலவுகள் உட்பட 32,030,764.31 ரூபா (32.03 மில்லியன்) செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் கொள்வனவுக்கு மாத்திரம் 29,842,500 ரூபாவும் இறக்குமதிக்கான போக்குவரத்து செலவாக 2,188,264.31 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவே மேற்படி தகவல்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. 

இதேவேளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியும் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு டோஸ் தடுப்பூசி 15 அ.டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும் பங்களாதேஷ் ஒரு டோஸ் சினோபார்ம் தடுப்பூசியினை 10 அ.அடாலருக்கு கொள்வனவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சையை தொடர்ந்து இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்ட சினோவக் தடுப்பூசியின் விலையை இரகசியமாக பேணுவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொவெக்ஸ் திட்டத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்கா 1,500,100 டோஸ் மொடர்னா தடுப்பூசிகளை இரண்டாம் கட்டமாக அன்பளிப்பு செய்திருந்தது. அத்துடன் 3.2 மில்லியன் டோஸ் கொவிட் தடுப்பூசிகளை இத்திட்டத்தின் மூலம் வழங்கியிருந்தது - (16.06.2021 - உலக சுகாதார ஸ்தாபனம்). ஜப்பான் அரசாங்கம் 1.45 மில்லியனுக்கும் அதிகமான அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்கி இருந்தது. மொத்தமாக ஜப்பான் அரசாங்கம் இலங்கையின் கொவிட் திட்டத்துக்காக 16.2 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியினை வழங்கியிருந்தது - (31.06.2021 - உலக சுகாதார ஸ்தாபனம்).

கொவிட் திட்டங்களுக்கான வெளிநாட்டு நிதியுதவிகள்

இலங்கை அரசாங்கமானது கொவிட் அவசரகால பதிலளிப்புத் திட்டங்களுக்காக 2020 ஜனவரி முதல் 2022 மே வரையான காலப்பகுதியில் பல்வேறு நாடுகளுடன் 11 ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. இதன் மொத்த பெறுமதி 10,781 கோடி ரூபாவாகும் (107,810 மில்லியன்) என மத்திய வங்கியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 2021.07.09 ஆம் திகதி பதிலளிக்கக்கூடிய கொவிட் 19 தடுப்பூசிகள் (விரைவான மீட்பு) திட்டத்துக்காக 84,000,000 அ.டொலர் (16,791.6 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இதேவேளை 2021.07.09 ஆம் திகதி பதிலளிக்கக்கூடிய கொவிட் 19 தடுப்பூசிகள் (திட்ட முதலீடு) திட்டத்துக்காக 66,000,000 அ.டொலர் (13,193.4 மில்லியன் ரூபா) பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. 





இறக்குமதி செய்யப்பட்டுள்ள மொத்த தடுப்பூசிகள்

நாட்டில் 12 வயதுக்கும் மேற்பட்ட 17,655,390 பேர் கொவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கு 42,829,630 டோஸ் தடுப்பூசிகள் (19.09.2022 ஆம் திகதி வரை) இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக 327,156,003 அமெரிக்க டொலர்கள் (2021 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பின் சராசரி 198.41 ரூபாவாகும். அதனடிப்படையில் சுமார் 64,911.02 மில்லியன் ரூபா) செலவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவின் சேரம் இன்ஸ்டியூட் நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 5.25 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் 500,000 அஸ்ட்ராசெனெகா-கொவிஷீல்ட் தடுப்பூசிகள் 2,625,000 அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சினோபோர்ம் சர்வதேச ஹொங்கோங் நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 15 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் 4,000,000 சினோபோர்ம் தடுப்பூசிகள் 60,000,000 அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சினோபோர்ம் சர்வதேச ஹொங்கோங் நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 7 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் 19,000,000 சினோபோர்ம் தடுப்பூசிகள் 133,000,000 அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் பைசர் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 6.75 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் 18,999,630 பைசர் தடுப்பூசிகள் 128,247,502.50 அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஹியுமன் தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 9.95 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் 330,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் 3,283,500 அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவிலிருந்து 1,500,100 டோஸ் மொடர்னா தடுப்பூசி (கோவெக்ஸ்) இறக்குமதி செய்யப்பட்ட போதும் அவை தொடர்பான தகவல்களை இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சு வழங்கவில்லை.


இதேவேளை ‘உயர்தர கொவிட் -19 தடுப்பூசிகளை குறைந்த விலையில் கொள்வனவுச் செய்யக்கூடிய நிலையில் சீனத் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிக்கு ஏன் அதிக விலை கொடுக்கப்படுகிறது என அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியிருந்தது. பொது நிதி பயன்படுத்தப்படுவதால், இதுபோன்ற முடிவின் காரணத்திற்காக அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் சினோபோர்ம் தடுப்பூசியானது ஒரு டோஸ{க்கு 10 முதல் 14 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இலங்கை தடுப்பூசியை 15 டொலருக்கு கொள்வனவு செய்கிறது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 22 மில்லியன் தடுப்பூசிகளில் 17 மில்லியன் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து வந்தவையாகும்.

மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகள் பயண நோக்கத்திற்காக பைசர் தடுப்பூசியை அங்கீகரித்தாகவும்’ அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலாவதியான தடுப்பூசிகள் 

நாட்டில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டாலும் 2020 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொவிட் தொற்றின் வேகம் இலங்கையில் சடுதியாக அதிகரித்திருந்தது. இதனால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. நாட்டில் 12 வயதுக்கும் மேற்பட்ட 17,655,390 பேர் கொவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். 2022 அக்டோபர் 30 ஆம் திகதி வரை 40,319,161 டோஸ் கொவிட் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. 2022 ஆம் ஆண்டு நவம்பர் வரை 42,829,630 டோஸ் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. எனவே இவற்றில் மீதமுள்ள 2,510,469 டோஸ் தடுப்பூசிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சிடம் தெளிவான விளக்கம் இல்லை.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் 40 மில்லியன் அ.டொலர்கள் பெறுமதியான பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையை எதிர்கொண்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சினால் அதன் காலாவதி திகதியை நீடிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்படி உற்பத்தி திகதியிலிருந்து 6, 9 மற்றும் 12 மாதங்கள் வரை அதன் காலாவதி திகதி பைசர் நிறுவனத்தால் நீடிப்புச் செய்யப்பட்டன. காலாவதியாகும் நிலையிலிருந்த 6 மில்லியன் அ.டொலர் பெறுமதியான பைசர் தடுப்பூசிகளை மியன்மாருக்கு நன்கொடையாக வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுத்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.

இதேவேளை தற்போது பெல்ஜியம் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 7.5 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 50,625,000 அ.டொலர்களாகும். இதன்மூலம் 10,044.50 மில்லியன் ரூபா மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 1.7 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் 23.08.2023 ஆம் திகதியுடன் கலாவதியாகவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 14,263,000 அ.டொலர்களாகும். இதன்மூலம்; 119.66 மில்லியன் ரூபா மக்கள் பணம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் ‘தொற்றுநோயியல் பிரிவு மற்றும் கோவிட் தடுப்பூசி திட்டத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து உடனடி விசாரணையை தொடங்குமாறு சுகாதார அமைச்சிடம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இலங்கையில் மருத்துவர்கள் தவறான கொவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களை உருவாக்ககியதால் 25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கொவிட் தடுப்பூசி வழிகாட்டல் அனைத்து சுகாதார சேவை அதிகாரிகளுக்கும் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தொற்றுநோயியல் பிரிவின் நிபுணர்களால் வழங்கப்பட்டது. அதன் பிரகாரம் ஒவ்வொரு குப்பியில் பத்து டோஸ்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்றுநோயியல் பிரிவு ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதாவது இறுதி டோஸ{க்குப் பிறகு ஒரு சிறிய அளவிலான தடுப்பூசி இருந்தால், அது மற்றொரு நபருக்கு பயன்படுத்தப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.’ இதனால் அதிகளவில் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இட்டுகம (செய் கடமை) நிதி வசதிகள்

கொவிட் 19 சுகாதார மற்றும் பாதுகாப்பு நிதியமானது, இலங்கையில் நிலவிய கொவிட் தொற்று காலப்பகுதியில் ஏற்பட்ட செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் ஜனாதிபதி செயலகத்தினால் குறித்த நிதியம் உருவாக்கப்பட்டது. குறித்த நிதியத்துக்கு உள்ளுர்ர் மற்றும் சர்வதேச ரீதியாக நிதி நன்கொடைகள் வழங்கப்பட்டன. எனினும் கொவிட் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு இந்நிதி முழுமையாக செலவு செய்யப்படவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இட்டுகம நிதியத்துக்கு 2216.28 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தன. 

இவற்றில் பி.சீ.ஆர். பரிசோதனைக்காக 42.60 மில்லியன் ரூபாவும் ஆலோசனை நிகழ்சிகளுக்கு 67.54 மில்லியன் ரூபாவும் தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக 38.03 மில்லியன் ரூபாவும் தேசிய தடுப்பூசி திட்டத்துக்காக 41.54 மில்லியன் ரூபாவும் ஐ.சி.யூ கட்டில் கொள்ளவனவுக்காக 7.75 மில்லியன் ரூபாவும் அந்நியச் செலாவணிக்கான கட்டணமாக 3832 ரூபாவும் கணக்காய்வு கட்டணமாக 88,800 ரூபாவும் சுகாதார அமைச்சின் பட்டியலுக்கான சரியான தீர்ப்பனவுக்காக 1800 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இட்டுகம நிதியத்திலிருந்து கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியான தேசிய தடுப்பூசி செயல் திட்டத்துக்கு 41.54 மில்லியன் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது. (எனினும் மொத்த கொவிட் தடுப்பூசி கொள்வனவு நடவடிக்கைகளுக்கு மாத்திரம் சுமார் 64,911.02 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.) இட்டுகம கொவிட் 19 – சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கப் பெற்ற நிதித் தொகையில் 180 கோடி ரூபா காணாமல் போயுள்ள விடயம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிதியத்திலிருந்து 180 கோடி ரூபா சுகாதார அமைச்சின் பட்டியலுக்கான சரியான தீர்ப்பனவிற்காக (settlement of accrued bills to Health Ministry ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்த போதும் குறித்த தொகை நிதி இதுவரை கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் உரிமை கோரிக்கைக்கான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி கொள்வனவு தொடர்பான நிலைப்பாடு

இலங்கையில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கொவிட் தடுப்பூசிகள் பங்களித்துள்ளமையை ஏற்றுக்கொண்டாலும் அதிக விலைக்கு கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டமை, தொழில்நுட்ப அதிகாரிகளின் தவறான வழிகாட்டல்கள், கலாவதியான அதிக தடுப்பூசிகள், கொவிட் தடுப்பூசி தொடர்பான முரண்பட்ட புள்ளிவிபரங்கள், இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசித்திட்டம் போன்ற பல்வேறு சர்ச்சைகளும் இருந்து கொண்டே இருக்கின்றது. கொவிட் தொற்று தற்போது கட்டுப்படுத்தப்பட்டாலும் மக்களின் தேவை கருதி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படாமல் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் நலன் கருதி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையை அறிந்துகொள்ள முடிகின்றது. பைசர் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு கொவிட் தடுப்பூசி உற்பத்தி மூலம் 22 பில்லியன் அ.டொலர்களை இலாபமாக பெற்றிருந்ததுடன் 2020 ஆம் ஆண்டு 50 பில்லியன் அ.டொலர்கள் வருமானத்தை எதிர்பார்த்திருந்தது.

மேலும் இலங்கையில் சீன நிறுவனத்தின் உதவியுடன் இலங்கையில் சினோவெக் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டது. இலங்கையினுள் தடுப்பூசி உற்பத்தி தொடர்பான உரிய சட்ட நிலைமைகள் குறித்தான விசேட கலந்துரையாடலொன்று அப்போதைய நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு அலி சப்ரி தலைமையில் அப்போதைய மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவின் பங்குபற்றலுடன் 2021.06.01 ஆம் திகதி நீதி அமைச்சில் இடம்பெற்றது. எனினும் எதிர்ப்புகளினால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இத்திட்டம் தொடர்ந்திருந்தால் இலங்கை இன்னும் அதிக இழப்புகளை எதி;ர்நோக்கும் வாய்ப்பே காணப்பட்டது. சினோவெக் தடுப்பூசியானது தரம் குறைந்தவையாக அடையாளம் காணப்பட்டதுடன் இலங்கை நிபுணர்களாலும் இறக்குமதிக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

கொவிட் தொற்று காலப்பகுதியில் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தமையால் நிதி தொடர்பான பொறுப்புக்கூறலை பாராளுமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டிய நிலை ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஏற்படவில்லை. அத்துடன் நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டு அராணவத்தின் தலையீட்டுடன் தடுப்பூசி  திட்டம் செயற்படுத்தப்பட்டமையால் பொறுப்புக்கூறல் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதுடன் தகவல்களை பொதுவெளிக்கு வெளியிடுவதில் தடைசெய்யப்பட்டது. எனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் கொவிட் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியது என்றாலும் பொருளாதார ரீதியில் இலங்கை நலிவடைய வழிசெய்தது என்பதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

#covid19 #covidvaccine #srlanka #ministryofhealth


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக