கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 நவம்பர், 2023

தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பதவி மீள் நியமனம் செய்யப்படுமா?



வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே மிக அதிகமான தமிழ் பேசும் மாணவர்களைக் கொண்ட மாகாணமாக மத்திய மாகாணம் காணப்படுகின்றது. 500 க்கும் மேற்பட்ட தமிழ் பாடசாலைகள் அதாவது மொத்த பாடசாலைகளில் மூன்றில் ஒரு பங்கு பாடசாலை தமிழ் பாடசாலைகளாக காணப்படுகின்றன. இதிலும் நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களில் பெருந்தோட்ட பாடசாலைகள் 300க்கும் மேல் காணப்படுகின்றது.

1987 ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாணசபை அரசாங்கமுறைக்குப் பின்னர் பெருந்தோட்ட மற்றும் தமிழ் பாடசாலைகளில் 90 வீதமானவை மாகாணசபை நிர்வாகத்துக்கு உட்பட்டதாக காணப்படுகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் எந்தவொரு தேசிய பாடசாலையும் இல்லை என்பதுடன் அனைத்து பாடசாலைகளும் மாகாண நிர்வாகத்தின் கீழே காணப்படுகின்றது. மத்திய மாகாணத்தில் மொத்தம் 1521 பாடசாலைகள் காணப்படுவதாக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில் 956 சிங்கள பாடசாலைகளும் 443 தமிழ் பாடசாலைகளும் 122 முஸ்லிம் பாடசாலைகளும் காணப்படுகின்றன. நுவரெலியா மாவட்டத்திலுள்ள 548 பாடசாலைகளில் 307 தமிழ் பாடசாலைகளாகும்.

இவ்வாறு மாகாண நிர்வாகத்தின் கீழ் காணப்பட்ட தமிழ் பாடசாலைகளில் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டதுடன் இதன் உருவாக்கத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டானின் தூர நோக்குடன் கூடிய தீர்க்கதரிசனமான செயற்பாடுகளே காரணமாக அமைந்தது. இவை மத்திய மாகாணத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்படாது ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் ஏற்றவகையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தன. எனினும் தற்போது சப்ரகமுவ மாகாணத்தை தவிர ஏனைய இரு மாகாணங்களிலும் அமுலில் இல்லை. இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மத்திய மாகாண கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு தகவல் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் குறித்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திடம் வினவுமாறு தெரிவிக்கப்பட்டது.

இப்பதவி தொடர்பாக மத்திய மாகாண கல்வி திணைக்களத்திடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரம் இதுவரை ஐவர் (அட்டவணை) மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர்களாக பதவி வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களின் அடிப்படையில் 1996 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 நவம்பர் வரை நடைமுறையில் இருந்த அப்பதவியானது தற்போது இல்லாது செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண கல்வி திணைக்களத்திடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர்கள் அளித்துள்ள பதில்கள் வருமாறு:

மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதா என்ற வினாவுக்கு ஆம் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. 

எப்போது இப்பதவி வெற்றிடம் நிரப்பப்படும் என்ற வினாவுக்கு, இப்பதவிக்கு மத்திய மாகாண முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி இல்லை என்று பதிலளிக்கபட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இப்பதவி வெற்றிடம் நிரப்பப்படுமா என்ற கேள்விக்கு கூற முடியாது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கூறிய தகவல்களின் அடிப்படையில், கடந்த எட்டு மாத காலமாக வெற்றிடமாக உள்ள இப்பதவிக்கு புதிய ஒருவரை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தெரியவில்லை.

இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் குறிப்பிடுகையில், மாகாணசபை நிர்வாக முறை 1988 இல் இமுல்படுத்தப்பட்ட பிறகு மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் தமிழ்மொழிமூல பாடசாலைகளை இலகுவாக முகாமைத்துவம் செய்யக்கூடிய வகையில் மேலதிக கல்விப் பணிப்பாளர்களை நியமிக்க வேண்டுமென அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அமைச்சரவை மற்றும் திறைச்சேரி அங்கீகாரத்துடன் தமிழர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் காலப்போக்கில் அவை இல்லாமற் செய்யப்பட்டுள்ளதோடு அண்மையில் மத்திய மாகாணத்திலும் இந்த பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இது தொடர்பில் அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை. இப்பதவியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் வெகு சீக்கிரத்தில் இப்பதவி வெற்றிடம் நிரப்பப்படும் என்றும் இவ்விடயம் பாராளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளதோடு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். (28.02.2023 - வீரகேசரி)

ஆனால் இவ்விடயம் தொடர்பாக இதுவரை ஆக்கபூர்வமான வியடங்களும் நடைபெற்றதாக தெரியவில்லை. அத்தோடு மலையகத்தின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டும் காணாதது போல் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 


தற்போது மாகாணசபைகள் ஆளுநர் அதிகாரத்தின் கீழ் உள்ளதாலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையாலும் தனி சிங்களமயப்படுத்தப்பட்ட நிர்வாகமாக காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ் பாடசாலை அதிபர்கள் நியமனம், புதிய ஆசிரியர்கள் நியமனம், வளப்பங்கீடு என்பவற்றை மேற்கொள்ளும் போது பலம்வாய்ந்த தமிழ் அதிகாரி இன்றியே மேற்கொள்ளப்படுகின்றது. 

எனவே எமது சமூகத்தின் நலன் கருதி இப்பதவி மீள உருவாக்கப்படுவதுடன் இப்பதவிக்கான சட்ட அந்தஸ்தும் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியும் பெற்றுத்தர வேண்டும். அதுமட்டுமன்றி 1996 ஆம் ஆண்டு மேல், ஊவா, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மாகாணங்களில் இப்பதவி உருவாக்கப்பட்டிருந்தாலும் மத்திய மாகாணத்தில் மட்டுமே இப்பதவி தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தது. இதுவும் இப்போது இல்லாது செய்யப்பட்டுள்ளமைக்கு அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் என்று கூறமுடியாது. எனினும் மக்கள் பிரதிநிதிகள் இப்பதவியின் முக்கியத்துவத்தை சரியாக புரிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே இது மீள சாத்தியமாகும்.


பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன்

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னர் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக செயற்பட்டவருமான வீ.இராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்ட போது, ‘அமரர் சௌமியமூரத்தி தொண்டமான் மாகாண தமிழ் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் நியமனத்துக்கான அனுமதிகளை அமைச்சரவையின் ஊடாக பெற்றிருந்தார். மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் மேலதிக கல்வி பணிப்பாளர்களை நியமிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு கல்வி அமைச்சர்களாலும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. எனினும் குறித்த பதவிகளை இல்லாமலாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அப்போது அமைச்சராக பதவி வகித்தவர்கள் அதனை ஆமோதித்து செயற்பட்டதாகவே அறியமுடிகின்றது. இது தமிழ் கல்வி பிரிவுக்கான பேரிழப்பாகும். இது மத்திய மாகாணத்துக்கு மட்டுல்லாது ஊவா, சப்ரகமுவ மாகாணங்களுக்கும் இது பெரிய பாதிப்பாகும். மீண்டும் குறித்த நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதே எங்களுடைய நிலைப்பாடாகுமெனவும்’ தெரிவித்தார்.

‘மேலும் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படும்போதே எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். நான் கல்வி அமைச்சராக செயற்படும்போது சகல அதிகாரங்களையும் குறித்த அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளேன். மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மேலதிக கல்விப்பணிப்பாளர்கள் இருவருமே தமிழர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த பதவிகளே இல்லாமாக்கப்பட்டுள்ளமை வருத்தத்துக்குரியதாகும். இது மாகாணசபைகள் இயங்காமையினால் ஏற்படும் பாதிப்புகளையே எடுத்துக்காட்டுகின்றது. 13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு மாகாண சபைகள் இயங்கும் போதே இவ்வாறான விடயங்களை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது மாகாணசபையின் நிர்வாகம் ஆளுநராலேயே கையாளப்படுகின்றது. ஆளுநர் தமக்கேற்றவகையில் நிர்வாகத்தை கையாண்டு வருகின்றார். ஜனநாயக நாட்டில் ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது கடினம். இதனால் ஜனநாயக ரீதியில் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைகள் இயங்க வேண்டுமெனவும்’ குறிப்பிட்டார்.

*************************************************

‘மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் பதவியானது, மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு முக்கிய பதவியாகும். தற்போது அந்த பதவி வெற்றிடமாகவுள்ளது. அந்த பதவியினை தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் அதற்கு ஒருவரை நியமிக்க வேண்டியதும் அவசியமாகவுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். அத்துமட்டுமல்லாது மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தமிழ் பாடசாலைகள் அதிகமுள்ள வலய கல்விப் பணிமனைகளில் மேலதிக கல்வி பணிப்பாளர்களை நியமிக்க வேண்டியுள்ளது. ஒருசில கல்வி பணிமனைகளில் வெறுமனே உதவி கல்வி பணிப்பாளர்கள் மாத்திரம் இருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தார்மீக பொறுப்பு எமக்குள்ளது.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நீண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை ஜனாதிபதியிடம் கையளித்து பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். வட,கிழக்கு மாகாணங்களில் வலய, மாகாண கல்விப் பணிமனைகள் மற்றும் அமைச்சுக்கள் என்பவற்றில் இந்த பிரச்சினைகள் இல்லை. ஆனால் மலையக பகுதிகளில் இது பாரிய பிரச்சினையாகும்.

இவ்வாறான நிலைமைகளுக்கு பாரபட்சம் முக்கிய காரணமாகும். எமது சமூகத்துக்கான அதிகாரங்களை வழங்குவது மற்றவர்களுக்கு கஷ்டமான விடயமாக இருக்கிறது. இது கல்வித்துறையில் மட்டுமல்லாது சகல துறைகளிலும் இருக்கிறது. இது எமது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் தடையாக இருக்கிறது. இதற்கு நாம் தகுதியற்றவர்கள் என்ற நிலைப்பாடு பெரும்பான்மை சமூக அதிகாரிகளிடம் இருக்கிறது. அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.’

அ.அரவிந்தகுமார்

கல்வி இராஜாங்க அமைச்சர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக