இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை இரு நாடுகளுக்கும் நீண்ட வரலாற்றை கொண்ட விடயமாக இருக்கின்றது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு பரிணாமத்துக்குள் நகர்ந்துள்ளது. இந்திய மீனவர்கள் கடலடியில் இழு வலை மடியை பயன்படுத்தி (கடலடியில் வாரி செல்லும் பை போன்ற மிகப்பெரிய வலை) மீன் பிடிக்கின்றனர். இதனால் கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்களை நேரடியாக பாதிக்கிறது. இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பகுதியில் இழுவலை மடியை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இலங்கை மீனவர்களின் வலைகள் சேதம் அடைகின்றன. இது வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் நடவடிக்கையானது, இரு நாட்டு மீனவர்களிடையே அவ்வப்போது முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றது. இதனால் தினசரி இந்திய மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதை. பின்னர் தேசிய மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழமையாகும்.
இத்தகைய நீண்ட வரலாற்றில் ஒரு பகுதியாக இலங்கை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு மீனவர்கள் மற்றும் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட இலங்கை மீணவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையில் இந்திய மீனவர்கள் மற்றும் இந்திய மீன்பிடி படகுகள் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுவதாக பரவலான கருத்தாக்கம் இருந்தாலும் இலங்கை மீனவர்களும் மீன்பிடி படகுகளும் இந்திய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
• 2017 - 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 206 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 32 மீனவர்கள் இந்திய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
• 2020 - 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய கடற்படையினரால் 112 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 29 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. குறித்த காலத்தில் கைது செய்யப்பட்ட சகல மீனவரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் மூன்று படகுகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
• 2018 - 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 236 இலங்கை மீனவர்கள் மாலைதீவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
• குறித்த காலப்பகுதியில் 24 இலங்கை மீனவர்கள் மியன்மாரில் கைது செய்யப்படடு விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 89 இலங்கை மீனவர்கள் சிசெல்ஸில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரியூனியன் தீவுகளில் 2022 ஆம் ஆண்டு 13 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மீனவர்கள் குறித்த விவரங்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் இல்லை. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விவரங்கள் மட்டுமே திணைக்களத்தில் உள்ளன. மேலும், ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்த விவரங்கள் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. எனவே, கடற்றொழில் தொடர்பில்லாத பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பிலான தகவல்கள் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் உள்ளதால், அவ்வாறான தகவல்களை அந்த நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 264 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் 36 இந்திய மீனவப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2022 ஆம் ஆண்டு 264 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகில் ஒரு படகு மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2018 - 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 583 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சேதமாக்கப்பட்ட மற்றும் ஏலம் விடப்பட்ட படகுகள்
2013 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் 382 இந்திய மீனவப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 305 படகுகள் விடுவிக்கப்பட்டதுடன் பழுதடைந்த 138 படகுகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2021 ஆம் ஆண்டு வரை குறித்த படகுகளை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதே காலப்பகுதியில் இந்திய கடற்படையினரால் 60 இலங்கை மீனவப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒன்பது படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 51 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு இந்திய மீனவர்களினால் இலங்கை மீனவர்கள் மற்றும் படகுகள் மீது தாக்கப்பட்ட ஏழு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தாக்குதல் சம்பவங்களினால் சேதமடைந்த இலங்கை மீனவர்களின் படகுகளினால் 1,975,000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 150 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 6,104,700 ரூபா கட்டணமாக அறிவிடப்பட்டதாகவும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
முற்றுபெறாத பிரச்சினை
இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் அக்டோபர் வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 216 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 14 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடல் வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான முறைமையைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையே இவர்கள் கைது செய்யப்படுவதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அக்டோபர் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களையும், அவர்களது இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்திலுள்ள நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்களையும் அவர்களது மூன்று விசைப்படகுகளையும் அக்டோபர் 13 ஆம் திகதி இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக கைதான மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அக்டோபர் 14ஆம் திகதி முதல் அக்டோபர் 29 திகதி வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 64 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 10 இந்திய இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த பறிமுதல் நடவடிக்கைகள் மற்றும் அத்துமீறல், தாக்குதல் சம்பவங்கள் என்பன இருநாட்டு மீனவர்கள் மற்றும் கடற்படையினரிடையே தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்களாகவே இருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கு இதுவரை பல அரசாங்கங்கள் முயற்சித்தும் இதுவரை அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் மட்ட பேச்சுவார்த்தை 2016 ஆம் ஆண்டு புதுடில்லியில் இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் சு~;மா சுவராஜ், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதாமோகன், இலங்கையின் அப்போதைய வெளியுறவுகள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கிடையில் தீர்க்கமான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மீன்பிடித்துறை தொடர்பில் கூட்டு செயற்பாட்டுக்குழு ஒன்று ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்கவும் கடற்றொழில் அமைச்சர்கள் ஒவ்வொரு 6 மாதத்துக்கும் இடையே ஒரு கூட்டம் நடத்த அமைப்பு செய்யவும் இதன் போது இணக்கம் காணப்பட்டது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கரையோர பாதுகாப்புபடையினர் மற்றும் இரு நாடுகளின் கடற்படைகள் உறுப்பினர்கள் இந்த தூதுக்குழுவில் உள்ளடங்குவர். அதற்கமைய முதலாவது கூட்டம் 2017 ஜனவரியில் கொழும்பில் இடம்பெற்றது. எனினும் அவற்றை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் பேச்சுவார்த்தையில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இரு அரசாங்கங்களும் முழுமையாக முயற்சி செய்யவில்லை. இதனால் இவை இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் தீக்கப்படாத பிரச்சினையாக இன்றுவரை இருக்கின்றது.
மேலும் இவ்வருடம் மார்ச் மாதம் 13 ஆம் திகதி கச்சத்தீவில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் தமிழ்நாடு மீனவசங்க பிரதிநிதிகளுக்கிடையிலான பேந்நவார்த்தையொன்று இடம்பெற்றது. இதன்போது இருநாடுகளுக்கிடையிலான மீனவர்கள் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் கிடப்பில் போடப்பட்டதற்கு மினவர்களின் அத்துமீறலே காரணமென வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையை முற்றிலும் நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை வந்தால் மட்டுமே இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறும். அதுவரை இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் சுமூகமான தீர்வு ஏற்படாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான மீனவப் பிரச்சினைகள் மீனவர்களின் கைது, விடுவிப்பு, படகு பறிமுதல், விடுவிப்பு என கடந்து சென்றாலும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு இரு அரசாங்கங்களும் முயற்சிக்கவில்லை. இப்பிரச்சினையை உயிர்ப்புடன் வைத்திருப்பது அரசியல் ரீதியான இலாபங்களை இருநாடுகளுக்கும் உருவாக்கியுள்ளது. ஆனால் மீனவர்களும் அவர்களின் வாழ்வாதாரங்களுமே தொடர்ச்சியாக பாதிப்படைகின்றன. இப்பிரச்சினையில் உயிர்நீத்த மீனவர்களின் குடும்பங்கள் இன்றும் நிர்க்கதியாகியுள்ள நிலையில், இருநாட்டு அரசாங்கங்கள் அவற்றை இலகுவாக கடந்து செல்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக