மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழகத்தை அமைக்கும் தொடர் வலியுறுத்தல்களின் அடிப்படையில் அண்மையில் கொட்டகலைக்கு விஜயம் செய்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை கொமர்ஷல் பகுதி உள்ள ஆசிரியர் பயிற்சி கலாசாலை வளாகத்தை பல்கலைக்கழகம் அமைக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்துவதற்கான யோசனையை ஏற்றுக்கொண்டார். எனினும் அவை கொள்கையளவிலான தீர்மானங்களாக இருப்பதோடு, மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நடவடிக்கை தற்போதைக்கு முன்னெடுப்பதற்கு எவ்வித முயற்சிகளும் இல்லை என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலை வளாகத்தில் பயிற்சி பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் பிரிவெனா கல்வியை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அண்மையில் சர்ச்சைகள் எழுந்தன. எனினும் தற்போது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லையாயினும் அதனை வேறு வழியில் கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறாது என்பதை உறுதியாக கூறமுடியாது. மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நடவடிக்கை தற்போதைக்கு அரசாங்கத்தால் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிரியப் பயிற்சியாளர்களும் மிகக்குறைந்தளவிலேயே காணப்படுவதால் சர்ச்சைகள் மேலும் அதிகரித்துச் செல்கின்றன.
புதிய ஆசிரிய நியமனங்கள் இல்லாத காரணத்தினால் கொட்டகலை கொமர்ஷல் பகுதி உள்ள ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பிரிவெனா கல்வி பிரிவை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பிரிவெனா கல்வி பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிவெனா துறைக்கான ஆட்சேர்ப்புகள், கல்வி பிரிவை ஆரம்பிப்பதற்கான திட்டம் எதுவும் செயற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பானது, கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலை வளாகத்தில் பிரிவெனா கல்வி பிரிவை ஆரம்பிக்கும் நடவடிக்கையின் பெயரில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
பிரிவெனா என்பது, இலங்கையில் புத்த மதகுருமாருக்கான கல்வியை வழங்கும் நிறுவனங்களைக் குறிக்கும். முன்னைய காலத்தில் சாதாரண மக்கள் இடைநிலைக் கல்வியையும் உயர் கல்வியையும் பெற்றுக்கொள்வதற்கும் பிரிவெனாக்கள் உதவின. தற்போது இலங்கையின் கல்வி அமைச்சு பிரிவெனாக்களை நடத்தி வருகிறது. இளம் பிக்குகள் குருநிலைக்கு உயர்த்தப்படும் முன் பிரிவெனாக்களில் பயிற்சி பெறுகின்றனர்.தற்காலத்தில் இலங்கையில் மூன்று மட்டங்களில் பிரிவெனாக்கள் உள்ளன. தொடக்க நிலைக் கல்வி ஐந்து ஆண்டுகளை உள்ளடக்குகின்றது. இந்த நிலையில் பாளி, சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், திரிபிடகக் கல்வி, கணிதம் ஆகிய ஆறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அடுத்த நிலையில் முன்னர் கற்ற ஆறு பாடங்களுடன் மெய்யியல், மதங்களின் வரலாறு, மொழியியல், ஆயுர்வேதம், சோதிடம் ஆகிய பாடங்களையும் கற்பிக்கின்றனர். அடுத்தது பல்கலைக்கழக மட்டத்திலான பிரிவேனாக் கல்வி முறை காணப்படுகின்றது.
கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் பிரிவெனா கல்வி பிரிவை ஆரம்பிப்பதற்கு எடுத்த முயற்சியானது, அந்த பகுதியை பௌத்த மதத்தை காட்டி ஆக்கிரமிப்பதற்கு எடுத்த முயற்சியாகும். பிரிவெனா கல்வி பிரிவை ஆரம்பிப்பதற்கு நான்கு ஆசிரிய பயிற்சி கலாசலைகள் தெரிவு செய்யப்பட்டது. அவற்றில் மூன்று சிங்கள மொழி கலாசாலைகளாகவும் மற்றையது தமிழ்மொழி மூலமான கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையாகும். குறித்த பயிற்சி கலாசாலையானது, பல்வேறு தடைகளை தாண்டி தற்போது நிரந்தர கட்டிடத்தில் சேவைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக தமிழ் பேசும் ஆசிரியர் மாணவர்களின் பயிற்சிகளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையானது முதலில் பண்டாரவளையில் 1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தலவாக்கலைக்கு மாற்றப்பட்டு பின்பு 1994 ஆம் ஆண்டு கொட்டகலை யதன்சைட் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இயங்கி பின்பு பல போராட்டங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 2002 ஆம் ஆண்டு கொட்டகலையில் இயங்க ஆரம்பித்தது.புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமையால் இங்கு பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் 2023/2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஆசிரியர் மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் (28/2016) ஆம் சுற்றறிக்கையின் படி 2023 ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டதுடன் தற்போது விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் எதிர்காலத்திலும் இங்கு ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2023.01.20 தொடக்கம் 2023.08.06 ஆம் திகதி வரை கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் செலவுகளுக்காக 2,348,850 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக மற்றும் விடுப்பு, பயணச்செலவு, எழுதுபொருட்கள் மற்றும் அலுவலக செலவு, சீருடைகள் மற்றும் உணவு, இயந்திர பழுதுபார்த்தல், கட்டிட புதுப்பித்தல், தபால் மற்றும் தொடர்பாடல், மின் மற்றும் நீர் கட்டணம், வெளி விரிவுரையாளர்களின் கொடுப்பனவு உள்ளிட்ட செலவுகளுக்கே இத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையானது பல்வேறு தடைகளை தாண்டி பல ஆசிரியர்களை சிறந்த தேர்ச்சியுடையவர்களாக உருவாக்கியுள்ளது. எதிர்காலத்திலும் அதன் சேவைகள் எமது பிரதேசத்துக்கு மிகவும் முக்கியத்துவமுடையதாக இருக்கின்றன. மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழகத்தை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதனை இங்கிருந்தே ஆரம்பிக்கலாம் என்பதே பெரும்பாலானோரின் ஆலோசனை. அதேவேளை ஆசிரியர் பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கி குறித்த வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். கடந்த சில வருடங்களாக ஆசிரியர் நியமனம் வழங்கும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் ஆசிரியர் பயிலுனர்களின் உள்ளீர்ப்பு குறைந்துள்ளது. அதனை சாதகமாக்கிக் கொண்டே ஆக்கிரமிப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் எமது வளங்களை எமது தேவைகளுக்காக பயன்படுத்தும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒன்றித்து இருப்பதே தற்போதைய தேவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக