கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

2 ஜூன், 2023

இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் நியமனம்; தவறாக வழிநடத்தப்பட்ட விண்ணப்பதாரர்கள்


கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டு கைவிடப்பட்ட இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் நியமனங்கள் மீண்டும் வழங்கப்படுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் முன்னைய அரசாங்கத்தின் திட்டங்களை இரத்துச் செய்வதும் இடைநிறுத்துவதும் இலங்கையில் வழமையானது. அவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்ட இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டமையினால் அவற்றை எதிர்பார்த்து காத்திருந்த பல இளைஞர், யுவதிகள் ஏமாற்றத்துக்குள்ளானதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்தனர்.

முன்னாள் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராகவிருந்த மனோ கணேசனினால் வழங்கப்பட்ட 1300 பேருக்கான இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் பயிற்சிக்கான செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போதுவரை மீண்டும் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய போது அவசர அவசரமாக தெரிவுக்கடிதங்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதை நம்பியவர்களின் நிலை பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது. தெரிவுக் கடிதங்கள் வழங்கப்பட்டு 3 வருடங்கள் கடக்கின்ற நிலையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை. 

குறித்த கற்கைநெறிக்கு விண்ணப்பித்த இளைஞர், யுவதிகள் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதை எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படுமென போலி விளம்பரம் செய்யப்பட்டிருந்தாலும் நிரந்தர நியமனம் வழங்கப்படமாட்டாதென தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது. இதனால் தேர்தலை இலக்கு வைத்து கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை தொழில் நியமனம் வழங்குவதாக கூறி ஏமாற்றப்பட்டுள்ளமையினை எம்மால் அறியமுடிகின்றது. தற்போது மீண்டும் இவ்விடயம் பேசுபொருளாகியிருக்கின்றது.

இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் தெரிவு

இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர் பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரும்போது இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டமையினால் பலரும் நம்பி அதற்கு விண்ணப்பித்து ஒருமாத பயிற்சி வழங்கப்பட்டு நிர்கதிக்குள்ளாக்கப்பட்டார்கள். குறித்த பயிற்சியை நிறைவு செய்த பின்னர் கல்வி அமைச்சின் அனுமதியுடனேயே ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். பயிற்சிகளுக்கு உள்வாங்கப்பட்டவர்களினால் இருமுறை அரசகரும மொழிகள் திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் மொழியை (தமிழ்/சிங்களம்) கற்பிக்க ஆர்வம் காட்டும் மற்றும் அதற்குரிய தகைமைகளைப் பெற்றிருக்கும் விண்ணப்பதாரிகளிடமிருந்து மேற்படி கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 

இக் கற்கை நெறி முழுநேர அல்லது பகுதிநேர (வார இறுதி நாட்கள்) 600 கற்கை மணித்தியாலங்களைக் கொண்டதாக அமைந்திருந்ததுடன் இக் கற்கை நெறிக்கான முழுச் செலவினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்வதோடு கற்கைநெறியின் முடிவில் குறித்த கால எல்லைக்குள் பாடசாலையில் சேவையாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடல் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்கள் அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்படும் மொழி கற்கைநெறிகளில் வளவாளராக கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைப்பதோடு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இரண்டாம் மொழி ஆசிரியராக சேவையாற்றவும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்துக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் குறித்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன. 

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் சொல்வது என்ன?

இவ்விடயம் தொடர்பாக அரச கரும மொழிகள் திணைக்களம், பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் ஆகியவற்றுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அரசகரும மொழிகள் திணைக்களத்திடம் இவ்விடயம் தொடர்பிலான தகவல்கள் கோரப்பட்டிருந்த நிலையில், அப்போது இருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட பணியொன்றாக இருப்பதனால், அது குறித்த தகவல்கள் அரசகரும மொழிகள் திணைக்களத்திடம் இல்லையென்றும் தற்போது அந்த அமைச்சு அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சாக பெயர் மாற்றப்பட்டுள்ளதுடன், தகவல் கோரிக்கைளை அவ்வமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் 2019.12.19 ஆம் திகதி கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அத்துடன் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டிருந்த தகவல் கோரிக்கை தொடர்பாக அமைச்சு பின்வருமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. குறிப்பிடப்பட்ட இரண்டாம்மொழி பயிற்றுவிப்பாளர்கள் ஆட்சேர்ப்பு, நியமனம் வழங்குதல் தொடர்பான தகவல்கள் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் தொடர்புடையதால் அந்நிறுவனத்தின் தகவல் உத்தியோகத்தருக்கு இது தொடர்பில் தகவல் கோரிக்கையினை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு 04.01.2020 ஆம் ஆண்டு தகவல் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் எவ்விதமான பதிலும் வழங்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் 03.03.2020 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டுக்கு அமைவாக 02.08.2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேன்முறையீட்டு விசாரணைகளுக்கு அமைவாக 18 மாதங்கள் கடந்து தகவல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக 15,000 பேர் இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பித்திருந்ததை அறிய முடிந்தது.

தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அமைச்சின் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினூடாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் அமைச்சரவை பத்திரத்துக்கு இணங்க, மொழிப் பயிற்சியாளர்கள் 1300 பேருக்கு (சிங்களம் - 400, தமிழ் - 800, ஆங்கிலம் - 100) பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் எமது நிறுவனத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றது. அமைச்சரவைப் பத்திரம் அனுமதி பெறுவதற்கு முன்பதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் அமைச்சின் கட்டளைக்கிணங்க வேலைத்திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எமது நிறுவனத்தினூடாக குறித்த வேலைத்திட்டத்துக்கான பாடநெறிகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் (அது தொடர்பான நிறுவனத்தினூடாக வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.) நிரந்தர நியமனம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படுமென விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினூடாக அடிக்கடி குறிப்பிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் ஊடாக அவ்வாறான நியமனம் முறையான உத்தரவுக்கு அமையவே வழங்கப்பட வேண்டும். அதேபோல பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்களை விடயத்துக்குப் பொறுப்பான கல்வி அமைச்சினூடாகவே வழங்க முடியும்.

இந்தப் பாடநெறி 2019.10.01 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தேர்தல் காரணமாக 2019.11.14 ஆம் திகதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான அமைச்சரவைப் பத்திரமும் தாமதமானதால் வேலைத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் நிதியும் அதுவரை கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. அத்துடன் அந்த பாடநெறி வெளி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருவதால் அந்த நிறுவனத்திலுள்ள வெளி முகவர்களுக்காக 43.5 மில்லியன் ரூபா நிதியையும் செலுத்த முடியாதுள்ளது. அதனால் அந்த நிறுவனத்தாலும் குறித்த பாடநெறியை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது. அரசியல் நோக்கத்துக்காக இளைஞர், யுவதிகள் தவறாக வழிநடத்தப்படுவதால் இந்நிறுவனம் கடுமையான சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் உதவி முகாமையாளர் ரவிந்த கருணாரத்ன வழங்கியுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

  1. இந்த வேலைத்திட்டத்தினூடாக சிங்கள மொழிமூலம் 400 பேர், தமிழ் மொழி மூலமாக 800 பேர் மற்றும் ஆங்கில மொழி மூலமாக 100 விண்ணப்பதாரிகளை பயிற்றுவிக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
  2. இந்த வேலைத்திட்டத்துக்காக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
  3. வேலைத்திட்டத்தின் நிறைவாக பயிற்சிகளை பூர்த்தி செய்த விண்ணப்பதாரிகளுக்கு எமது நிறுவனத்தினூடாக தொடர்பு செய்யப்படுவார்களே ஒழிய நியமனங்கள் வழங்கப்படமாட்டாது.
  4. அரச நிறுவனங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள். பதிவு செய்யப்பட்டவர்களின் சேவை எமது நிறுவனத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் மொழிப் பயிற்சிநெறிக்காக அவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். அதற்காக அவர்களுக்கு ஒரு நாளைக்கு 3 மணித்தியாலங்களுக்கான கட்டணங்கள் வழங்கப்படும்.
  5. இந்த வேலைத்திட்டத்துக்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறாமை காரணமாக அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, நிறுவனத்துக்கு கிடைக்கப் பெறாமையால் வேலைத்திட்டம் மேலும் தாமதமாகியது.
  6. மேற்படி வேலைத்திட்டத்துக்காக 43.5 மில்லியன் ரூபா செலவிடப்பட வேண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது. (2019) அந்த நிதியையும் வெளி நிறுவனங்களுக்கு உடனடியாக செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் ஆரம்பிப்பதற்கான உரிய திகதியை அறிவிக்க முடியாதுள்ளது.
  7. குறித்த நியமனங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை.
  8. எமது நிறுவனம் பதிவு செய்யப்பட்ட அதிகாரம் கொண்ட நிறுவனம் என்பதுடன் நாடளாவிய ரீதியில் 19 பயிற்சி நிலையங்களினூடாக கற்கைநெறி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
  9. பதிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்களாக மாத்திரமே அவர்கள் பதிவு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக் கடிதம் வழங்குதல்

மொழி பயிற்றுவிப்பாளர்களை திசைமுகப்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2019 நிகழ்வு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் (தற்போதைய ஜனாதிபதி) அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றலுடன் அலரிமாளிகையில் நடைபெற்றிருந்தது. அங்கு மொழி பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும் அழைப்புக் கடிதங்களே வழங்கப்பட்டிருந்தன. அக்கடிதத்தில் “அரசகரும மொழிக்கொள்கையை வினைத்திறனுடன் அமுல்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் சிங்களஃதமிழ்ஃஆங்கில மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகளுக்காக தாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அதற்கமைய இரண்டாம் மொழியைக் கற்பதற்கான விசேட பயிற்சிநெறிக்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வளவாளர்களாக பதிவு செய்யப்படுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மொழி பயிற்றுவிப்பாளர்களுக்கான அரச நியமனம் வழங்கப்படுமென்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. 


கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான தீர்வு என்ன?

மொழி பயிற்றுவிப்பாளர் கற்கை நெறிக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போதைய அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக செயற்படும் அ.அரவிந்தகுமாரால் உடனடியாக நியமனங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட 1200 பேருக்கு நியமனங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கையை மேற்கொண்டு விரைவாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நல்லாட்சி காலத்தில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தலுக்கு அமைவாக இரண்டாம் மொழி ஆசிரியர்களை அரச பாடசாலைகளுக்கு இணைத்துகொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு விண்ணப்பித்தவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் பயிற்சிகளுக்கும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு அலரிமாளிகையில் தெரிவு கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன. பின்னர் இடம்பெற்ற ஆடசி மாற்றத்தினால் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (வீரகேசரி – 26.04.2023)

எனினும் குறித்த நடவடிக்கையின் மூலம் நம்பிக்கை எழுந்திருந்தாலும் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் 3 வருடங்கள் கடந்தும் இந்நியமனங்களுக்காக காத்திருக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களில் வேறு அரச நியமனங்களை பெற்றுள்ளவர்கள், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள், அரச நியமனம் பெறுவதற்கான வயதை கடந்தவர்கள் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு பதிலாக ஏற்படும் வெற்றிடங்களுக்கு எவ்வாறு ஆட்சேர்ப்புகள் இடம்பெறும் என்பதும் தெளிவில்லாமல் காணப்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தில் இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னின்று செயற்படுத்துவதற்கு காரணமாக இருந்தவர்கள் தற்போதும் எதிர்கட்சியில் இருக்கும் நிலையில் பாராளுமன்றத்தில் இவை தொடர்பாக குரல் எழுப்பவோ? அல்லது ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ? இதுவரை எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரினால் குறித்த நியமனங்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுமாயின் அது எமது சமூகத்துக்கான பாரிய உதவியாக அமையும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக