வருடத்துக்கு ஒருமுறை மார்ச் - ஏப்ரல் மாதங்களில் வெளிப்படும் மஸ்கெலியா பழைய நகரத்தை காண்பதற்கு அதிகமானோர் படையெடுப்பது விசேடமான நிகழ்வாக அமைந்திருக்கின்றது. தற்போது அமையப்பெற்றுள்ள மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலேயே முன்னதாக மஸ்கெலியா பழைய நகரம் அமையப்பெற்றிருந்தது. நீர்த்தேக்கம் அமையப்பெற்றதன் பின்னர் நகரமானது, நீருக்குள் மூழ்கியதுடன் புதிய நகரமும் அமைக்கப்பட்டது. எனினும் மார்ச் - ஏப்ரல் காலப்பகுதியில் நிலவும் கடும் வெப்பமான காலப்பகுதியில் மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் வற்றும் நிலையில் அங்கு மஸ்கெலியா பழைய நகரத்தின் சுவடுகளை காணமுடியும். அவற்றில் பழைய ஸ்ரீ சண்முகநாதர் சுவாமி ஆலயம், பௌத்த விகாரை, பள்ளிவாசல், பிள்ளையார் கோவில், கற்பாலம் என்பவை முக்கியமாகும். நீர் வற்றி வழிபாட்டுத்தலங்கள் வெளிப்படும் காலங்களில் விசேட பூஜை நிகழ்வுகளும் இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இக்காலப்பகுதியில் வழிபாட்டுத்தலங்கள் பலருக்கு பொழுதுபோக்கு இடங்களாக மாறுவதால் அப்பகுதிகள் அதிகம் சேதமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இப்பகுதியில் அமைந்துள்ள பழைய ஸ்ரீ சண்முகநாதர் சுவாமி ஆலயத்தின் சுவர்களில் அங்கு செல்லும் நபர்கள் தங்களுடைய பெயர்களை பதிக்கும் செயற்பாடு வழமையான ஒன்றாக மாற்றமடைந்துள்ளது. தங்களை காதலர்கள் என்று சொல்லிக்கொண்டு இப்பகுதியில் சுற்றித்திரிபவர்களே அதிகமாக தங்களுடைய பெயர்களை ஜோடியாக இங்கு பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த பகுதியின் வரலாறுகளை அறிந்து கொள்வது அவசியமாகும். அத்துடன் அப்பகுதியினை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு யாருடையது?
நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நகரமானது பிரதான நகரங்களில் ஒன்றாக இருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 1205 மீற்றர் உயரத்தில் இந்நகரம் அமைந்திருப்பதோடு, நுவரெலியாவிலிருந்து தெற்குப் பக்கமாக அமையப்பெற்றுள்ளது. மஸ்கெலியா நகரை கினிகத்தேனையிலிருந்து நோட்டன் பிரிட்ஜ் வழியாகவும், ஹட்டனிலிருந்து நோர்வூட் வழியாகவும் வந்தடையலாம். இவ்வாறு அமையப்பெற்றுள்ள மஸ்கெலியாவுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது மவுசாக்கலை நீர்த்தேக்கம். இலங்கையில் அமைந்துள்ள பெரிய நீர்த் தேக்கங்களில் நான்காவது பெரிய நீர்த்தேக்கமாக 93,000 ஹெக்டேயர் பரப்பளவில் மவுசாக்கலை நீர்த்தேக்கம் அமையப்பெற்றுள்ளது.
1968 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் மவுசாக்கலை நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதால் பழைய மஸ்கெலிய நகரமானது புதியதொரு இடத்துக்கு நகர வேண்டிய தேவை ஏற்பட்டது. நீர்த்தேக்கத்தில் பழைய மஸ்கெலிய நகரம் மூழ்கினாலும் ஒவ்வொரு வருடமும் இங்கு பழைய நகரத்தின் எஞ்சியுள்ள சுப்பிரமணியர் ஆலயம், பள்ளிவாசல், விகாரை, பிள்ளையார் ஆலயம் என்பவற்றைக் காணக்கூடியதாகவிருக்கும். அந்தவகையில் 106 வருடம் பழைமையான ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தின் வரலாறுச் சுவாரஸ்யமானதாகவும் தொண்மை வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது.
14.04.1869 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்குச் சொந்தமாகவிருந்த பிறவுன்லோ காணியை ஜோன் கிரேப் என்ற பிரபு வாங்கி ஆங்கிலேய கம்பனிகளின் நிர்வாகத்துக்கு கொடுத்திருந்த நிலையில் கிரேப் துரை தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்த இத்தோட்டம் நாளடைவில் கிராப்பு தோட்டமாக மாற்றம் பெற்றது. இந்நிலையில் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களின் பாரம்பரியங்களை பாதுகாக்கும் முயற்சியில் அமரர் மணியார் தேவராய செட்டியப்பன் பிள்ளை தலைமையில் பெரிய கங்காணிமார் ஒன்று சேர்ந்து 1912 ஆம் ஆண்டு பழைய மஸ்கெலிய நகரில் கிராப்பு தோட்டம் கடையை அண்மித்த பகுதியில் கோயில் கட்டும் பணியை முன்னெடுக்க வேண்டுமென்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்காக மஸ்கெலியாவை அண்மித்த பகுதியில் வாழ்ந்த மக்களிடமிருந்தும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. கிராப்பு தோட்டத்தில் துரையாக இருந்த ஹீட் என்பவரிடம் நிலத்திற்கான அனுமதி பெறப்பட்டு இரண்டு சதம் வாடகையாகவும் பேசப்பட்டது. ஆனால் கட்டுமானப் பணிகள் மந்தகதியிலேயே நடைபெற்ற வேளை 1913 ஆம் ஆண்டு சுகவீனமுற்ற ஹீட் துரை 1915 ஆம் ஆண்டு காலமாகியிருந்தார். பின்னர் சின்ன கங்குவத்தையில் துரையாகவிருந்த ஈ.ஆர். கேவ் பிறவுன், கிராப்பு தோட்டத்துக்கு துரையாக வந்து ஆலய நிர்மாணப்பணிகள் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு உதவியிருந்தார்.
இந்நிலையில் கோயிலை கட்டியெழுப்புவதற்காக இந்தியாவின் துறையூரில் ஒக்கரை கிராமத்திலிருந்து ஸ்தபதி, சிற்பாச்சாரியர்கள், தச்சன்மார்கள் போன்றோர் வரவழைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆலய கட்டுமானப்பணிகளுக்கு தேவையான கற்கள் கோயிலுக்கு அருகிலிருந்து உடைத்தெடுக்கப்பட்டு பொலியப்பட்டு யானைகளின் மூலமாக இழுத்துவரப்பட்டு ஆலயத்தின் திருப்பணிகள் முடிக்கப்பட்டன. இந்நிலையிலேயே 1917 ஆம் ஆண்டு பிங்கல வருடம் ஐப்பசி மாதம் 26 ஆம் திகதி மகாகும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் சிவனொளிபாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கி செல்லவென ஆலயத்துக்கு அருகாமையில் இரண்டு அம்பலங்களும் பின்பக்கத்தில் அறையும் மண்டபத்துக்கும் ஆலயத்துக்கும் இடையில் கொட்டகையொன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கு மத்தியில் எழுந்தருளிய இவ்வாலயத்தில் நிகழும் திருவிழாக்காலங்களில் எம் பெருமான் பவனி வருவதற்காக தென்னிந்தியாவைச் சேர்ந்த தஞ்சாவூர் சிற்பிகளான பெரியசாமி அவரது தந்தையார் மற்றும் சிற்பாச்சாரியர்கள் வரவழைக்கப்பட்டு சித்திரதேர் உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அதேவேளை ஆலயத்துக்கு வருகைதரும் அடியார்களின் நன்மை கருதியும் தேர் தரித்து நிற்கவும் 1937 ஆம் ஆண்டு ஆலயத்துக்கு முன்புறம் கொங்றீட் தூண்கள் இடப்பட்டு 23 அடி உயரத்தில் கொட்டகையொன்றும் நிர்மாணிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாத நிலையில் 1940 ஆம் ஆண்டு அரசாங்கம் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.
இந்நிலையிலேயே 1968 ஆம் ஆண்டு அரசாங்கம் மவுசாக்கலை நீர்த்தேக்கத்தை அமைப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தியிந்ததுடன், நீரில் மூழ்கவிருந்த ஆலயத்துக்காகவும் நிலத்துக்காகவும் நட்டஈட்டை அரசாங்கம் வழங்கியிருந்தது. இதன்படி புதிய நகரத்தில் ஆலயம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு 18.03.1969 ஆம் ஆண்டு பழைய ஸ்ரீ சண்முகநாதர் சுவாமி ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் புதிய நகருக்கு கொண்டுவரப்பட்டு 20.03.1969 இல் பாலஸ்தானம் செய்து வைக்கப்பட்டது. அதேவேளை மவுசாக்கலை நீர்த்தேக்கத்துக்கும் நீர் நிரப்பப்பட்டது.
புதிய நகரத்தில் அமைக்கப்பட்ட ஆலயமானது 05.05.1977 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்தைக் கண்டது. ஆனாலும் தற்போதும் நீர் வற்றும் போது பழைய ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் மூலவறையில் எழுந்தருளியிருக்கும் முருகனை தரிசிக்கக்கூடியதாகவிருப்பது, சிறப்பம்சமாகும். பழைய கோயிலின் கோபுரமானது இன்றும் கம்பீரமாகவே காட்சியளிக்கின்றது. ஆலயத்தின் பெரும்பாலான பகுதிகள் கருங்கல்லினால் ஆனமையினால் அவை சிதைவடையாது அழகாக காட்சியளிப்பதுடன், கருங்கல்லில் பல சிற்ப வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடியும் அத்துடன் இவ்வாலயத்துக்கு செல்லும் வழியில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டுள்ள கருங்கல்லினால் ஆன அரைவட்ட வடிவ பாலமானது இன்னுமொரு சிறப்பம்சமாகும். எனினும் நீர்வற்றிய காலப்பகுதியில் இங்கு செல்லுவோர் ஆலயத்தின் சுவர்களில் தங்களது பெயர்களையும் முதலெழுத்துக்களையும் எழுதிச் செல்வது கவலையான விடயமாகவிருக்கின்றது.
இந்நீர்த்தேக்கமானது இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமானவையாக காணப்படுகின்றது. எனவே குறித்த நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டுமானங்களும் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமானவையாகவே கருதப்பட வேண்டும். நீர் வற்றும் காலப்பகுதியில் மாத்திரம் அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் அங்கு செல்வதற்கு எவ்விதமான வரையறைகளும் இல்லை. அதேவேளை வழிபாட்டுத்தலங்களை பாதுகாப்பதற்கான எவ்விதமான நடைமுறைகளும் இல்லை. அதற்கான உரிமையையும் எவரும் கோர முடியாது. அவ்வாறான நிலையில் மலையக மக்களின் அடையாளமாகவும் புனித தலமாகவும் காணப்படும் சுவடுகளை சுயநல நோக்கத்துக்காக சிதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னதாக பௌத்த கோயிலில் அமையப்பெற்றிருந்த சுவர்கள் இடிக்கப்பட்டு அங்கிருந்த கருங்கற்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அது தடுக்கப்பட்டது.
மஸ்கெலியா பழைய நகரத்தை அடியொட்டி புதிய மஸ்கெலியா நகரமும் ஆலயமும் உருவாகியதாக கூறப்பட்டாலும் தற்போது நீர்த்தேக்கத்தில் காணப்படும் ஆலயத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள பதிய ஆலய பரிபாலன சபை இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை. மஸ்கெலியா பகுதியில் அமைந்திருக்கும் புராதன சின்னங்களில் ஒன்றாக இவற்றை நாம் கொண்டிருக்கும் போது அவற்றில் சிதைவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இவற்றை பாதுகாப்பதற்கு இலங்கை மின்சார சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை ஆகியவை நடவடிக்கை எடுப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பினை உருவாக்கலாம். நீர்த்தேக்கம் வற்றி அங்கு பார்வையாளர்கள் செல்லும் காலப்பகுதியில் மஸ்கெலியா பிரதேச சபையினால் முகாமைத்துவ நடவடிக்கைகள், கட்டண முறைகள், பாதுகாப்பு என்பன வழங்கப்படும் பட்சத்தில் குறித்த பகுதியினை பாதுகாக்க முடியுமென்பதுடன் மஸ்கெலியா பிரதேச சபையும் வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.
ஆனால் குறித்த பகுதியினை பாதுகாப்பதற்கு இதுவரை எவ்விதமான பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை. கொத்மலை நீர்த்தேக்கம் வற்றும் போதும் இவ்வாறு பழைமையான நகரத்தை அடையாளம் காண முடியும். இலங்கை தற்போது சுற்றுலாத்துறையினை ஊக்குவிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் வருடத்தில் இரு மாதங்கள் இப்பகுதியினை சுற்றுலாத்தலமாக அறிவிக்க முடியும். இப்பகுதியில் அதிகமான உள்ளூர் சுற்றுலா பயணிகள் சென்று வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனை சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கமுடிவதுடன் குறித்த பகுதியினை பாதுகாக்கவும் முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக