200 வருடங்கள் கடந்தும் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியில்லாத அவலம்
மலையக மக்கள் இலங்கையில் 200 வருட வரலாற்றை கொண்ட இனமாக இருக்கின்ற நிலையிலும் நாட்டின் ஏனைய இன மக்களை போன்று சகல உரிமைகளையும் வளங்களையும் பெற்று வாழ்வதற்கு இன்றும் போராடிக்கொண்டே இருக்கின்றனர். மலையக பெருந்தோட்டங்களில் இன்னும் எவரும் தனி முகவரியை கொண்ட நபர்களாக மாறுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் வசிக்கும் தோட்டங்களின் பெயர்களையே இன்னும் முகவரிகளாக கொண்டிருக்கின்றனர். நானும் அவ்வாறே முகவரியினை கொண்டுள்ளேன். இவ்வாறு தோட்டங்களில் உள்ள அனைவரும் ஒரே முகவரியினை கொண்டிருப்பதால் எதிர்நோக்கும் சிக்கல்கள், பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை.
மலையக மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகவும் நியாயமான வளங்களை பெற்றுக்கொள்வதற்கும் போராடிய போதும் தங்களுக்கான முகவரியை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தில் குறைந்தளவான முனைப்பினையே காட்டியுள்ளனர். பலருக்கு சொந்த முகவரிகளின் அத்தியாவசியமே தெரியாத நிலை உள்ளது. இதற்கு அவர்களை குறைகூற முடியாது. அவர்களை வழிநடத்தியவர்களும் அதன் அவசியத்தை வலியுறுத்தவில்லை. இருப்பினும் மலையகத்தில் ஒருசில அரசசார்பற்ற நிறுவனங்களினால் மலையக மக்களுக்கு முகவரியினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. தற்போது தோட்டங்களின் முகவரியே அங்கு வசிக்கும் சகலருக்குமான முகவரியாக காணப்படுகின்றது. இந்நிலையினை மாற்றுவது அவசியமாகும்.
நாட்டிலுள்ள 32 பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் 454 தோட்டங்கள் காணப்படுகின்றன. இங்கு 258,695 பெருந்தோட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வசிக்கின்றனர். தோட்டங்களிலிருந்து நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந்தவர்களில் சொந்த நிலம் மற்றும் வீடுகளை பெற்றுக்கொண்டவர்கள் நிரந்தர முகவரிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் இன்றும் தோட்டங்களில் குடியிருப்புக்களை கொண்டுள்ளவர்களுக்கு நிரந்தர முகவரிகள் வழங்கப்படவில்லை. அவர்கள் தோட்ட முகவரியினையே இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கான முகவரியினை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஒருபோதும் கவனம் செலுத்தியிருக்கவில்லை. ஆனால் மலையக மக்களின் 200 வருட வரலாற்றை நினைவுகூரும் வகையில் முத்திரை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் சொந்த நிலம், வீடு என்பவற்றுடன் சொந்த முகவரிக்காகவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முகவரி வழங்குவதில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்கு
2013 ஆம் ஆண்டு மலையக தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் நிரந்தர முகவரியை வழங்கும் சமூக செயற்பாடொன்றை மாற்று கொள்கைகளுக்கான நிலையம் தனது பிரதேச பங்காளர் அமைப்பான ஊவா சக்தி நிறுவனத்தோடு ஒன்றிணைந்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தப்பட்டது. இக்கருத்திட்டமானது, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன்மூலம் கிட்டத்தட்ட 3000 பேர் நன்மை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பசறை பிரதேசத்தின் பெருந்தோட்ட குடியிருப்புகளுக்கு நிரந்தர முகவரியை பெற்று கொடுப்பதும், அவர்களுக்கான நேரடி தபால் சேவையை சீர் செய்வதும் இதன் பிரதான நோக்கமாக காணப்பட்டது. பசறை பிரதேச சபை, பசறை பிரதேச செயலகம், பசறை தபால் நிலையம், பசறை பொலிஸ் நிலையம் என்பன இதன் பிரதான பங்காளர்களாக செயற்பட்டன. இந்நிகழ்வில் முகவரியற்ற பசறை பிரதேச பெருந்தோட்ட பகுதி மக்களின் லயன் குடியிருப்புகளுக்கு நிரந்தர விலாசம் ஒன்றை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பெருந்தோட்ட பாதைகளுக்கு புதிய வீதி பெயர்களும் சூட்டப்பட்டன. அத்துடன் குறித்த முகவரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தன.
இதேவேளை 2016 மார்ச் 5 ஆம் திகதி மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிரந்தர முகவரி வழங்கும் செயற்பாடு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலையீட்டுடன் மொக்கா தோட்ட பிரஜைகள் சபை ஒன்றியம் மற்றும் மொக்கா தோட்ட முகாமைத்துவம் மற்றும் வேர்ள்ட் விஷன் போன்றவற்றின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. அம்பகமுவ பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச செயலகம், மொக்கா தோட்ட முகாமைத்துவம், மொக்கா கிராம உத்தியோகத்தர் மற்றும் மஸ்கெலிய பொலிஸ் நிலையம் உட்பட பல நிறுவனங்கள் இதற்கு பங்காளர்களாக செயற்பட்டனர். தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான முகவரிகளை உறுதிப்படுத்தல் மேற்படி முகவரிகளுக்கு உரிய சாதாரண தபால் முறையின் கீழ் கடிதங்களை பெறுவதற்கு வகை செய்தல் இலக்காக காணப்பட்டது. எனினும் முகவரிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் உரித்தாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பில் இப்பகுதியில் வசிக்கும் ஆசிரியர் கிருபாநந்தன் கோவிந்தசாமி கருத்து தெரிவிக்கையில், ‘மலையகத்தில் பிறப்பிடமாகக் கொண்டவர்களின் முகவரியானது தோட்டத்தின் பெயரோடு தபாற்கந்தோரையும் இணைத்தே இதுவரை காலமும் வழங்கப்பட்டது. தோட்டத்தின் முகவரியே தமது சொந்த முகவரியாக இருந்து வந்த நிலையில், மஸ்கெலியா பிரதேசத்தில் சேவையினை முன்னெடுத்த வேர்ள்ட் விஷன் நிறுவனம் பிரதேச சபையுடன் இணைந்து தோட்டங்களை கிராமங்களாக மாற்றும் நடவடிக்கையின் போது தோட்டத்துக்கான வரைபடத்தை உருவாக்கி தோட்டங்களிலுள்ள தெருக்களுக்கு பல்வேறு பெயர்களையும் வழங்கி வீடுகளுக்கு இலக்கங்களும் வழங்கிய செயற்பாடு தற்போது முடங்கியுள்ளது. குறிப்பாக மொக்கா பெரிய மஸ்கெலியா தோட்டப்பகுதியில் வள்ளுவர்புரம், கம்பன்புரம், மதுராபுரம், சிவனொளிபுரம் போன்ற பெயர்கள் சூட்டப்பட்டன. எனினும் இந்த பெயர்களை சட்டபூர்வமாக பயன்படுத்துவதில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. தற்போது இந்நடவடிக்கை முடங்கியுள்ளது. இந்நிலையினை மாற்றி வீடுகளுக்கு இலக்கங்களுடன் நிரந்தர முகவரியினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என தெரிவித்தார்.
இதேவேளை 2017 ஆம் ஆண்டு 200 வருடம் சொந்த நிரந்தர முகவரி இல்லாமல் வாழ்ந்த பதுளை ஸ்பிரிங்வெளி மக்களுக்காக அமெரிக்காவின் ஸ்பைஸ் நிறுவனத்தின் வழிகாட்டலிலும் பதுளை ஊவா சக்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் பதுளை மாவட்ட மேலதிக செயலாளர் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி இருவரின் தலைமையில் நிரந்தர முகவரி வழங்கும் நிகழ்வு ஸ்பிரிங்வெளி தமிழ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரி கோரி உயர் நீதிமன்றில் மனு
மலையக மக்களுக்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுகோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவத்தகம மூவாகந்த வத்தையைச் சேர்ந்த ஜீவரட்ணம் சுரேஸ்குமார் என்பவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மூவாங்கந்த தோட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசிப்பதாகவும் இந்த குடும்பங்கள் எவருக்கும் நிரந்தர முகவரி இல்லை எனவும் இதனால் மேற்படி பகுதியில் வசிக்கும் மக்கள் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மற்றும் பொருட்களை தங்களின் வீடுகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவான முகவரியாக காணப்படும் ‘மூவாங்கந்த வத்த, மாவத்தகம’ என்ற முகவரிக்கே அனைத்து கடிதங்களும் பொருட்களும் அனுப்பப்படுவதாக அவர் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்கு என தனிப்பட்ட நிரந்தர முகவரில் இல்லை. இவர்களிற்கு அனுப்பப்படும் கடிதங்கள் மாவத்துகம பிரதான தபால் நிலையத்திற்கே அனுப்பப்படுகின்றன. தபால்காரர்கள் மூவாங்கந்த உப தபால் நிலையத்திற்கே வழங்குகின்றனர். பின்னர் குறிப்பிட்ட தோட்டத்தின் கண்காணிப்பாளருக்கு இந்த கடிதங்கள் வழங்கப்படுகின்றன. அவர் நம்பகதன்மையற்ற தனது முகவர் மூலம் கடிதங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்கின்றார். ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை கிட்டத்தட்ட 277 தோட்டங்களை நிர்வகித்து வருவதாகவும் அந்த தோட்டங்களில் சுமார் 400,000 பேர் வசிப்பதாகவும் அவர்கள் அனைவருக்கும் குடியிருப்பு முகவரி இல்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுதாரர்சார்பில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நிரந்தர முகவரி வழங்குவதற்கு பரிசீலனை
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, மே 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார். இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் கனிஸ்கா டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது மலையக மக்களுக்கான நிரந்தர முகவரியினை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டின் முக்கிய மைல்கல்லாகும். எனவே இவற்றை விரைந்து செயற்படுத்துவதற்கு அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்.
இதேவேளை 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியிலும் அமைச்சின் நிதியுதவியிலும் தனிவீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது மக்களுக்கு சொந்த நிலத்தில் தனி வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் ஒவ்வொரு வீட்டுத்திட்டத்துக்கும் தனியான அடையாளப் பெயர்கள் வைக்கப்பட்டன. இதன்மூலம் அவர்கள் தங்களுக்கென்ற நிரந்தரமான முகவரியினை பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும் வீடுகள் வழங்கப்பட்டாலும் அவர்களுக்கான நில உரித்துக்கள் வழங்கப்படாமையினாலும் அவற்றை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையினாலும் முகவரியினை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.
வாய்ப்புக்களை இழக்கும் பெருந்தோட்ட மக்கள்
210 வருடங்களுக்கும் மேற்பட்ட பழைமையான வரலாற்றைக்கொண்ட இலங்கையின் தபால் சேவைத் துறையானது 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்டும் இயங்கி வருகின்றது. எனினும் பெருந்தோட்டங்களில் வசிக்கும் சகல மக்களுக்குமான கடிதங்கள் தோட்ட அலுவலகத்தில் சேமிக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களிலேயே சகலருக்கும் விநியோகிக்கப்படும். அதனால் காலம் கடந்து கூட கடிதங்கள் கிடைக்கப்பெறும். இதனால் பெருந்தோட்ட மக்கள் வங்கி கொடுப்பனவுகள், நகை அடகு கொடுப்பனவு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. தற்போது பெருந்தோட்டங்களுக்கு தபால்களை விநியோகிப்பதற்கு தபால் ஊழியர்கள் செயற்பட்டாலும் ஒரே பெயரில் பலர் இருப்பதும் அனைவரும் ஒரே முகவரியினை பயன்படுத்துவதும் சிக்கலை ஏற்படுத்துகின்றது.
வீடுகளுக்கென்று தனியான இலக்கங்கள் காணப்படாமையும் குடியிருப்புகள் பிரத்தியேக பெயர் வழங்காமையும் அடிப்படையில் அவர்கள் முகவரிகளை உருவாக்கிக்கொள்வதில் இடர் காணப்படுகின்றது. தோட்ட நிர்வாகமும் அவர்களுக்கு நிரந்தர முகவரிகளை பெற்றுக்காடுப்பதில் ஆர்வம் செலுத்தவில்லை. பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரி வழங்கப்படுமாயின் அவர்கள் உரித்தாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகின்றன. சில பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் தோட்டங்களில் வசிக்கும் மக்கள் தொழிலிருந்து ஓய்வு பெறும்போது குடியிருப்புகளை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுகின்றனர் அல்லது புதிதாக தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு அந்த குடியிருப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. தனியார் தோட்டங்களில் அவர்கள் தொழிலை தவிர வேறு எந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. மரணித்தாலும் அவர்களை புதைப்பதற்கு தோட்ட நிர்வாகத்தின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கான நிரந்தர முகவரிகள் அவர்களின் இருப்புக்களை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமாகின்றது.
அரசாங்கத்தின் பங்கு என்ன?
மலையக மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு ஒவ்வொரு அரசாங்கங்களும் வாக்குறுதி வழங்குகின்ற போதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. அதிலும் மிக நீண்ட கோரிக்கையான நிலம், தனி வீடு என்பன இன்னும் இழுபறியில் இருக்கும் கோரிக்கைகளாகும். காலம் முழுவதும் அவர்களை லயன் அறைகளிலேயே வைத்திருப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்ற கேள்வியும் எழாமலில்லை. 2011 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒவ்வாரு வீடுகளுக்கும் தனித்தனியே இலக்கங்கள் வழங்கப்பட்டன. அந்த இலக்கங்களையே வீடுகளுக்கான நிரந்தர இலக்கங்களாக மாற்றியிருந்தால் இன்று நிரந்தர முகவரி வழங்கும் செயற்பாடு வெற்றிபெற்றிருக்கும்.
பெருந்தோட்ட மக்கள் லயன் அறைகளில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளமையால் அவர்களுக்கான நிலத்தை வரையறுப்பது கடினமான பணியாக இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு சொந்த நிலத்தை வழங்கி அவற்றுக்கு சட்டரீதியான நிரந்தர முகவரியினை வழங்குவதும் சாத்தியமற்றதாக இருக்கின்றது. மலையகத்தில் அமைக்கப்பட்ட தனிவீடுகளுக்கும் இன்னும் உரித்துக்களும் நிரந்தர முகவரிகளும் வழங்கப்படவில்லை. எனவே மலையக மக்களுக்கான நிரந்தர முகவரி வழங்கும் நடவடிக்கையை காலங்கட்டத்தாமல் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும். மேலும் நிரந்தர முகவரி வழங்கும் செயற்பாடுகளில் அரச சார்பற்ற நிறுவனங்களின் அடித்தளம் முக்கியமாக காணப்படுகின்றது. எனவே அரசாங்கம் இவ்வாறான பங்குதாரர்களுடன் இணைந்து முகவரி வழங்கும் செயற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 201 ஆவது வருடத்தில் காலடியெடுத்து வைக்கும் மலையக மக்கள் அனைவரும் நிரந்தர முகவரியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக