2021 ஆம் ஆண்டு சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயம் மத்திய மாகாணத்தில் 15 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயம் மத்திய மாகாணத்தில் 7 ஆவது இடத்தினை தக்கவைத்திருந்ததுடன் தேசிய ரீதியில் 59 ஆவது இடத்தினை பெற்றிருந்தது.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தன. கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தமை பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. எனினும் பின்தங்கிய பாடசாலையைச் சேர்ந்த பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி மலையக கல்வி தரத்தினை மேலும் உயர்த்தியிருந்தனர். இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்தின் பெறுபேற்று அடைவுகள் மிகவும் பின்தங்கிய நிலையினை எட்டியிருப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
2021 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்தில் ஹங்குராங்கெத்த கல்வி வலயம் (72.48) 5 ஆவது இடத்தையும் கொத்மலை (71.81) 7 ஆவது இடத்தையும் நுவரெலியா (71.06) 9 ஆவது இடத்தையும் வலப்பனை (70.71) 11 ஆவது இடத்தையும் ஹட்டன் (68.21) 15 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத்தர பரீட்சையில் ஹட்டன் கல்வி வலயத்தில் 3328 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 2270 மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி பெற்றதுடன் 68.21 வீதத்துடன் மத்திய மாகாணத்தில் ஹட்டன் கல்வி வலயம் 15 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. கடந்த கால பரீட்சை பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இது பாரிய வீழ்ச்சியினையே எடுத்து காட்டுகின்றது. இறுதியாக 2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயம் மத்திய மாகாணத்தில் 7 ஆவது இடத்தினை தக்கவைத்திருந்ததுடன் தேசிய ரீதியில் 59 ஆவது இடத்தினை பெற்றிருந்தது.
இதற்கு மாணவர்களை முதலில் அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாடசாலை மட்டத்தில் இரண்டாம் தவணை பரீட்சைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அவற்றில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளை பாடசாலைகளில் இருந்து கோரியுள்ளோம். அவற்றை பெற்று மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் அவர்களுக்கு விசேட வகுப்புகளின் மூலம் முன்னுரிமையளித்து செயற்படவுள்ளோம். ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பல பாடசாலைகளில் உரிய பாடங்களுக்கு ஏற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் சில பாடசாலைகளில் உரிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. அவற்றை சரி செய்ய வேண்டும்.
இவற்றுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஹட்டன் கல்வி வலய பணிமனையில் இடம்பெற்ற நிர்வாக பிரச்சினைகள் மற்றும் அரசியல் தலையீடுகள் என்பனவும் பேறுபேற்றின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக தமிழ் கல்விப் பணிப்பாளரே ஹட்டன் கல்வி வலயத்துக்கும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன்மூலம் பணிப்பாளருக்கு இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமையால் வலய கல்விப் பணிமனையின் செயற்பாடுகளை தனித்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது.
இதனால் ஹட்டன் கல்வி வலயத்தின் செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. கொவிட் தொற்று காலப்பகுதியில் வலய கல்விப்பணிமனைக்கு உட்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு நிகழ்நிலை கல்வியினை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிக்கப்படாத வகையில் பாடசாலை மட்டங்களிலும் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதோடு அவை முறையாக கண்காணிக்கப்பட்டன. எனினும் முன்னைய கல்விப் பணிப்பாளர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பின்னர் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களினால் முன்னைய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. பரீட்சை பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே அவற்றை இனங்கண்டு நிவர்த்திக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளின் எழுச்சிக்கு ஆசிரியர்களும் அதிகாரிகள் மாத்திரமே பொறுப்புகூற முடியாது. பெற்றோரும் தமது பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் பெறுபேறுகளை உறுதிப்படுத்துவதும் அவற்றை இறுதி பரீட்சை வரை கண்காணிப்பதும் பாடசாலையின் கடமையாவதுடன் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கான மாற்று வழி, ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் வளப் பிரச்சினைகளை தீர்ப்பது வலய கல்வி காரியாலயங்கள் மற்றும் கோட்டக் கல்விக் காரியாலயங்களின் பொறுப்பாகும். அத்துடன் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கல்வித்துறையினை மாற்றியமைக்காது எமது கல்வி உரிமையினை நாமே மீட்டெடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக