கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

24 ஜனவரி, 2023

வெளிநாடுகளில் உயிரை மாய்க்கும் இலங்கையர்கள்


2016 – 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றவர்களில் 3742 பேர் மரணித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளினால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களினால் சமீப காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் சுதாரித்துக்கு கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நபர்களை சுற்றுலா விசாவில் அனுப்பி பணம் உழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஓமானுக்கு பணிப்பெண்களாக சென்ற பல இலங்கைப் பெண்கள் ஏலத்தில் விற்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் வருமானம் இழந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த பலர் நாட்டைவிட்டு தொழிலுக்காக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை அரசாங்கமும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களை ஊக்குவித்து வருகின்றது. இது நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதற்காகும். தற்போது அரச ஊழியர்களாக கடமையாற்றுபவர்களுக்கும் ஊதியமில்லா விடுமுறை வழங்கி வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

எனினும் அரசாங்கம் அந்நிய செலாவணியை இலக்கு வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதை ஊக்குவித்தாலும் மறுபுறும் அதன்மூலம் ஏற்படும் அபாயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கவில்லை. ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தற்போது தங்கியுள்ள 77 இலங்கைப் பணிப்பெண்களில் 12 பேர் மாத்திரமே பணியகத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 90 இலங்கையர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வேலைவாய்ப்பினை பெற்று சென்று முகவர்களால் கைவிடப்பட்ட நிலையில் பாலியல் சேவைகளுக்காக கட்டாயப்படுத்தப்பட்டு ஏலத்தில் விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்துக்கு பல முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததன் மூலம், தூதரகத்தின் ஊழியர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக குறைந்தது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பாரிய ஆபத்தினை இலங்கையர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாது வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச் சென்ற பல இலங்கையர்கள் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புபட்டு வெளிநாட்டு சிறைகளில் வாடுவதுடன் பலர் சித்திரவதை, கொலை, துஷ்பிரயோகம், நோய்த்தொற்று, தற்கொலை என்பவற்றுக்கு ஆளாகி உயிரிழந்து சவப்பெட்டிகளில் நாடு திரும்பும் சம்பவமும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மரணித்த பலரின் உடல்கள் கூட மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்பது வேதனையான விடயம். இதனால் இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் நபர்கள் தொடர்பிலும் அங்கு ஏற்பட்ட மரணங்கள் மற்றும் அவர்களின் உடல்கள் மீண்டும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனவா என்பது தொடர்பிலும் தேட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேiவாய்ப்புக்காக சென்று மரணித்தவர்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சின் தகவல் உத்தியோகத்தர், சட்ட அலுவலர் குமுதினி அபேகோன் வழங்கிய தகவல்களின் படி, 2016 – 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றவர்களில் 3742 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று, உடல் நலக்குறைவு, விபத்து, தற்கொலை, கொலை மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணித்த 3742 பேரில் 1140 பேரின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் 2602 பேரின் உடல்கள் இன்னும் நாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்பதும் வேதனையான விடயமாகும்.

2016 ஆம் ஆண்டு 437 பேர் மரணித்துள்ளதுடன் 152 உடல்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் 173 உடல்கள் நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.  2017 ஆம் ஆண்டு   மரணித்த 458 பேரில் 249 பேரின் உடல்களும்   2018 இல் மரணித்த 448 பேரில் 352 பேரின் உடல்களும் 2019 இல் மரணித்த 472 பேரில் 383 பேரின் உடல்களும் 2020 இல் மரணித்த 741 பேரில் 618 உடல்களும்  2021 இல் மரணித்த 797 பேரில் 675 பேரின் உடல்களும் 2022 இல் மரணித்த 389 பேரில் 173 உடல்களும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


2020 – 2022 ஆம் ஆண்டு வரை நிலவிய கொவிட் தொற்று காலப்பகுதியில் 415 பேர் வெளிநாடுகளில் பணிபுரிந்த நிலையில் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். மேலும் 2016 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உடல்நலக்குறைவால் 2744 பேரும் விபத்துக்களினால் 327 பேரும் தற்கொலையால் 176 பேரும் கொலையால் 33 பேரும் ஏனைய காரணங்களினால் 47 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈட்டினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதன்படி 2010 – 2022 நவம்பர் வரையான காலப்பகுதியில் உயிரிழந்த நபர்களின் 1756 குடும்பங்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.      

இவற்றில் 2010 ஆம் ஆண்டு 201,000,000 ரூபாவும் 2011 இல் 155,000,000 ரூபாவும் 2012 இல் 169 குடும்பங்களுக்கு 171,000,000 ரூபாவும் 2013 இல் 171 குடும்பங்களுக்கு 200,000,000 ரூபாவும் 2014 இல் 187 குடும்பங்களுக்கு 181,796,142.99 ரூபாவும் 2015 இல் 143 குடும்பங்களுக்கு 209,691,863.60 ரூபாவும் 2016 இல் 194 குடும்பங்களுக்கு  346,660,177.09 ரூபாவும் 2017 இல் 209 குடும்பங்களுக்கு 371,179,908.18 ரூபாவும் 2018 இல் 182 குடும்பங்களுக்கு 418,685,868.26 ரூபாவும் 2019 இல் 163 குடும்பங்களுக்கு 394,713,468.46 ரூபாவும் 2020 இல் 107 குடும்பங்களுக்கு 247,035,111.48 ரூபாவும் 2021 இல் 138 குடும்பங்களுக்கு 277,439,174.22 ரூபாவும் 2022 நவம்பர் வரை 90 குடும்பங்களுக்கு 346,864,310.21 ரூபாவும் நட்டஈடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.


2016 டிசம்பர் தொடக்கம் 2019 டிசம்பர் 4 ஆம் திகதி வரையான சுமார் மூன்று வருட காலப்பகுதியில் மத்திய கிழக்கு உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் பணியாற்றிய இலங்கைப் பணியாளர்களில் 1043 பேர் பணியாற்றும் நாடுகளில் பணியாற்றும் காலப்பகுதியிலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களில் 834 பேர் மத்தியகிழக்கு நாடுகளிலும் 177 பேர் தென் கொரியாவிலும் ஏனைய உலக நாடுகளில் 24 பேரும் உயிழந்துள்ளனர்.  மத்திய கிழக்கு நாடுகளில் பலியான 834 பேரில் அதிகமாக சவூதி அரேபியாவில் 362 பேரும், குவைத்தில் 214 பேரும், கட்டாரில் 133 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் 125 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 1043 இலங்கைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் ஏனைய தொழில்துறைகளுடன் ஒப்பீட்டளவில் குறைந்த சம்பளம் பெறுபவர்களாவர். இவ்வாறு இவர்கள் பணியாற்றும் காலத்தில் தொழில் சம்பந்தப்பட்ட இயற்கையான உடல் பாதிப்புக்கள், காயங்கள், வீதி விபத்துகள், தொழிலில் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் நேரக்கூடிய தனிப்பட்ட உடல் மற்றும் மனோரீதியான பாதிப்புகள், காயங்கள், கவலைகள் மற்றும் தாக்கங்கள் ஆகிய காரணங்களாலும் குறித்த பாதிப்புகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாலுமே உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்று பாதிக்கப்பட்ட நிலையில் தூதரகத்தினால் நடத்தப்படும் பாதுகாப்பு இல்லங்களில் 2016 – 2021 ஆம் ஆண்டுகளில் 69,845 பேர் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் விடுக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல் அதிகாரி பி.பி.வீரசேகர வழங்கியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

சுகவீனம், விசா காலம் நிறைவடைந்து மேலதிக காலம் தங்கியிருந்தமை, துன்புறுத்தல்கள் (பாலியல் மற்றும் உடல் ரீதியான), ஊதியம் செலுத்தப்படாமை, ஒப்பந்த மீறல் மற்றும் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டமை ஆகிய காரணங்களினால் பாதுகாப்பு இல்லங்களில் இவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.


இவ்வாறு தூதரகங்களினால் நடத்தப்படும் பாதுகாப்பு இல்லங்களில் தஞ்சமடைந்த 326 பேர் 2017 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளதுடன் இதற்காக 22,956,592.9 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதில் 2017 ஆம் ஆண்டு 63 இலங்கையர்களை அழைத்து வருவதற்காக 2,182,624.83 ரூபாவும் 2018 இல் 22 பேரை அழைத்து வருவதற்கு 888,779.63 ரூபாவும் 2019 இல் 39 பேரை அழைத்து வருவதற்கு 2,168,097.79 ரூபாவும் 2020 இல் 74 பேரை அழைத்து வருவதற்கு 5,884,812.89 ரூபாவும் 2021 இல் 128 பேரை அழைத்து வர 11,832,277.77 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.  

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களில் பலர் தொழிலுக்கேற்ற முறையான பயிற்சிகளை பெற்றுச் செல்வதில்லை என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்படும் விடயமாகும். அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறுதல், போலி முகவர்களின் ஆட்கடத்தலுக்கு உட்படுதல் போன்ற விடயங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் நபர்கள் எதிர்கொள்ளும் பாரிய சவால்களாக இருக்கின்றன. இந்நிலையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை மாத்திரம் வெளிநாட்டு தொழில்களுக்கு அனுப்புவதற்கு தற்போது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவை பாதுகாப்பான விடயமாக இருந்தாலும் மறுபுறம் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி போலி முகவர்களினால் சட்டவிரோதமான முறையில் நட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளும் அதிகரிக்கக்கூடும். இவை தொடர்பில் அரசாங்கமும் வெளிநாடு செல்ல காத்திருப்போரும் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையின் படி, 2015 – 2021 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதை அறிய முடிந்தது. குறித்த முறைப்பாடுகள் உடன்படிக்கை மீறப்பட்டமை, துன்புறுத்தல்கள், ஊதியம் வழங்கப்படாமை, தொடர்பின்மை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவையாகும். 2021 ஆம் ஆண்டு பெறப்பட்ட முறைப்பாடுகளில் குவைத், சவூதி அரேபியா, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றில் வீட்டுப் பணியாளர்களாக கடமையாற்றும் நபர்களுடன் தொடர்புடையவையாகும். இவர்களில் திறமையான, குறைந்த திறமையுடைய பணியாளர்களே அதிக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து இலங்கையரையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பணியகத்தின் சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்  அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள இலங்கைப் பெண்களை நாடு திரும்பும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படாத சுற்றுலா விசாக்களுடன் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற 18 பேர் ஓமானில் சிக்கித் தவிப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் பணிபுரிந்த பணியிடத்தில் இருந்து தப்பிச் சென்றதால் அவர்களது பெயர்களும் தொழில் அமைச்சில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களை அந்தந்த முதலாளிகளின் அனுமதியுடன் இலங்கைக்கு அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ளவர்கள் குழுவாக இருப்பதால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வருவதற்கு விமான டிக்கெட்டுகளை வழங்க வேண்டுமெனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

எனவே சட்டவிரோதமான முறையிலும் பாதுகாப்பற்ற வகையிலும் வெளிநாடுகளுக்கு செல்லும் பலரும் கடும் துன்பங்களை அனுபவிக்க நேருகின்றது. சிலவேளையில் மரணங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. பலர் சிறைச்சாலைகளிலும் இருக்கின்றனர். (இது தொடர்பான விடயங்கள் புதிய கட்டுரையில் இடம்பெறும்) இறுதியில் குடும்பங்களை விட்டே நீண்ட தூரம் செல்ல வேண்டிய அபாயம் காணப்படுகின்றது. எனவே குடும்ப வறுமையினால் வெளிநாடுகளுக்கு தொழில் பெற்று செல்லும் சகலும் மீண்டும் பாதுகாப்பான முறையில் இலங்கைக்கு வந்து சேர்வது அவசியமாகும். எனவே நாம் முதலில் நமது சுய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக