கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

24 ஜனவரி, 2023

ஊழல் ஒழிப்பு குழுவின் உண்மை நிலை என்ன?


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் ஊழல் ஒழிப்பு செயலகத்தின் செயற்பாடுகளுக்கு 33.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் 2020 அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க சாட்சியம் வழங்கியிருந்தார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் பியதாச குடபாலகே மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார். ஊழல் ஒழிப்பு குழு அலுவலகத்தின் 44 அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

ஊழல் ஒழிப்பு குழுவிற்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்கு தாம் ஆட்களை தெரிவு செய்யவில்லை எனவும் அது சட்டமா அதிபரின் கடமை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ஊழல் ஒழிப்பு குழு செயலகத்திற்கு பிரதமர் அலுவலகத்தின் செலவினத் தலைப்பின் கீழ் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுவது முற்றிலும் முரணானது என, அரசியல் ரீதியான பழிவாங்கல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தெரிவித்திருந்தார். 


விசாரணையின் போது,  ஊழல் ஒழிப்பு குழு செயலகம், அமைச்சரவையின் ஒப்புதலைத் தவிர, வேறு எந்த சட்ட அங்கீகாரத்தையும் பெறவில்லை என பிரதமர் செயலகத்தின் தலைமை நிதி அதிகாரி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கடந்த நல்லாட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட ஊழல ஒழிப்பு குழு மற்றும் செயலகம் தொடர்பில் வெளியான சர்ச்சைகள் தொடர்பில் அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு 2020 அக்டோபர் 8 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய 2022.07.21 ஆம் திகதி வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

ஊழல் ஒழிப்பு குழு மற்றும் செயலகத்தின் தோற்றம்

முன்னாள் பிரதமர் (தற்போதைய ஜனாதிபதி) ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 15/0005/602/002 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கான அலகொன்றை நிறுவுதல் எனும் தலைப்பிலான அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் இணைப்பில் பின்வரும் குழு அங்கத்தவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரதம அமைச்சர் ரணில் விக்ரமசிங்க (தலைவர்), அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச, அமைச்சர் ரவுப் ஹக்கீம், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, சட்டத்தரணி ஜே.சீ.வெலிஅமுன, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, மலிக் சமரவிக்ரம மற்றும் குழுவின் செயலாளர் உள்ளடங்களாக 13 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த ஊழல் ஒழிப்பு குழுவினால் நிறைவேற்றப்பட்ட பணிகள் தொடர்பில் ஏற்புடைய தகவல்கள் ஊழல் ஒழிப்பு குழுச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆனந்த விஜேபாலவினால் அப்போதைய பிரதம அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட 2016.10.28 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல ஒழிப்பு குழுச் செயலகமானது 2015 பெப்ரவரி 11 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் கீழ் 20 பெப்ரவரி 2015 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆறு மாத காலத்துக்கு நியமிக்கப்பட்ட நிலையில் 7 ஜூலை 2015 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின்படி 31 டிசம்பர் 2015 ஆம் திகதி வரை ஆறு மாத காலத்துக்கு செயற்பாடுகள் நீடிக்கப்பட்டதுடன் மீண்டும் 21 ஜூன் 2016 ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தின்படி 31 டிசம்பர் 2016 ஆம் திகதி வரை மேலும் ஆறுமாத காலத்துக்கு செயற்பாடுகள் நீடிக்கப்பட்டன.

ஊழல ஒழிப்பு குழுவுக்குச் செயலகமொன்றை நிறுவுதல் மற்றும் பொருத்தமான பணியாட்தொகுதியை ஆட்சேர்ப்புச் செய்தல் எனும் தலைப்பில் பிரதம அமைச்சர் சமர்ப்பித்த 2015.02.06 ஆம் திகதிய விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கடுமையான ஊழல்கள், நிதிக்குற்றங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை அலுவல்களை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் அவற்றை வழிநடத்துவதற்கேயுரிய பணிகளை நிறைவேற்றுவதற்காக இந்த அலுவலகம் நிறுவப்பட்டது.

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்

பாரிய நிதி முறைக்கேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குறித்த குழு உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் 31 ஆகஸ்ட் 2016 வரை பாரிய நிதிக் குற்றங்கள் தொடர்பில் 438 முறைப்பாடுகளும் அரச நிர்வாக மட்டத்திலான ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் 539 முறைப்பாடுகளும் ஏனைய 100 முறைப்பாடுகளுமென 1077 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

பாரிய நிதி முறைக்கேடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற 438 முறைப்பாடுகளில் 315 முறைப்பாடுகள் நிதி குற்ற விசாரணை பிரிவிடமும் 27 முறைப்பாடுகள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடமும் 89 முறைப்பாடுகள் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவிடமும் 7 முறைப்பாடுகள் பொலிஸமா அதிபரிடமும் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன. 

ஓய்வு பெற்ற அரச புலனாய்வு சேவையின் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தின் புலனாய்வு பிரிவின் மூலம் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் 202 புலனாய்வு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. 

நிர்வாக மட்டத்திலான முறைக்கேடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற 539 முறைப்பாடுகள் பாரிய நிதி குற்றங்களாக கருதப்படவில்லையாயினும் பொது நிதி துஸ்பிரயோகம், செயன்முறைகளை மீறியமை மற்றும் ஏனைய குறைபாடுகளின் அடிப்படையில்  நிர்வாக முறைகேடுகள் தொடர்பான 110 முறைப்பாடுகள் சுயாதீன ஆணைக்குழுக்கள் அல்லது அமைச்சு செயலாளர்களின் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அலுவலக வளங்கள் மற்றும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பான 19 முறைப்பாடுகள் அமைச்சு செயலாளர்களின் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. நிதி குற்றங்கள் தவிர பொதுமக்கள் முறைப்பாடுகள் 32, சிறிய அளவான நிதி முறைக்கேடுகள் தொடர்பான முறைப்பாடு 135, நிதி இழப்பு தொடர்பான 5 முறைப்பாடுகள், நிலம் மற்றும் சுற்றாடல் தொடர்பான 42 முறைப்பாடுகள் மற்றும் ஏனைய 118 முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. 78 முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

செயலகத்தின் அடைவுகள்

பொது திறைச்சேரியிலிருந்து தவறாக பயன்படுத்திய அல்லது கொள்ளையிடப்பட்ட பாரியளவான நிதி மற்றும் சொத்துக்களை அரசாங்கத்துக்கு மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை விமான படைக்கு செலுத்த வேண்டிய ஹெலிகொப்டர் பயணங்ககளுக்கான 1,600,000 ரூபாவினை மீள அறவிட்டமை, உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலிருந்து சட்டரீதியற்ற வகையில் நீக்கப்பட்ட பெறுமதியான மின் விளக்குகள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு 7 பான்ஸ் ஒழுங்கையிலுள்ள பெறுமதியான காணியினை கொழும்பு மாநகரசபை மீள பெற்றுக்கொண்டமை, வீரகெட்டிய திட்டத்துக்காக கோட்டபாய ராஜபக்ச 23 மில்லியன் ரூபாவை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி சபைக்கு செலுத்தியமை தொடர்பான விசாரணை, மல்வானையில் அமைந்துள்ள பசில் ராஜபக்சவுக் சொந்தமானதாக கூறப்படும் 16 ஏக்கர் காணி மற்றும் வீடு அடங்கிய 225 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை அரசாங்கம் பொறுப்பேற்றதுடன் பூகொட நீதிமன்றம் ஏலத்தில் விடுவதற்கு உத்தரவிட்டமை, சதொச நிறுவனத்துக்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 5.2 மில்லியன் ரூபா செலுத்தியமை போன்ற விடயங்கள் முக்கியமானவையென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்துக்கான செலவீனங்கள்

ஏற்புடைய குழுவின் அங்கத்தவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவினக் கொடுப்பனவுகள், வெளிநாட்டு விஜயங்கள், ஏனைய சலுகைகளுக்கான கொடுப்பனவுகள் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊழல் ஒழிப்பு குழு செயலகத்துக்கு 44 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர்கள் - 4, உதவி பணிப்பாளர், ஆலோசகர் - 6, விசாரணை ஆலோசகர் - 1, விசாரணை அதிகாரி – 7, அபிவிருத்தி உத்தியோகத்தர் - 2, முகாமைத்துவ உதவியாளர் - 11, சாரதிகள் - 8, அலுவலக உதவியாளர் - 3 ஆகியோர் உள்ளடங்குவர். பிரதமர் அலுவலகத்தினால் இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள், அலுவலக செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் என்பன செலுத்தப்பட்டுள்ளன.

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தின் 44 பணியாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 2015 – 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 22,714,079.27 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 2015 ஆம் ஆண்டு 8,767,789.62 ரூபாவும் 2016 ஆம் ஆண்டு 9,450,309.45 ரூபாவும் 2017 ஆம் ஆண்டு 4,495,980.20 ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தின் பணிகளுக்காக PG – 0651, PG – 1440, KB – 5067, PG – 0608, PG – 0653 ஆகிய ஐந்து வாகனங்கள் 2015 – 2018 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த வாகனங்களின் திருத்தங்களுக்காக 1,927,909.2 ரூபாவும் வாகன சேவைகளுக்காக 1,742,961.04 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 33,359 லீற்றர் எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்துக்கு 2015 பெப்ரவரி முதல் 2017 ஜூலை வரையான காலப்பகுதியில் தொலைபேசி கட்டணங்களுக்காக 444,979.74 ரூபாவும் மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்துக்காக 2,026,584.02 ரூபாவும் மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளுக்காக 1,907,780.73 ரூபாவும் வாகன பராமரிப்புக்காக 2,648,484.63 ரூபாவும் எரிபொருளுக்காக 2,591,193.5 ரூபாவும் எழுது பொருட்களுக்காக 593,144 ரூபாவும் ஏனைய செலவுகளுக்காக 788,561.79 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

20 பெப்ரவரி 2015 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு ஜூலை வரையான காலப்பகுதியில் ஊழல் ஒழிப்பு குழு செயலகம் இயங்கிய நிலையில் செயலகத்தின் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் 2018 ஆம் ஆண்டும் தொடர்ச்சியாக இயங்கியுள்ளதுடன் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு வாகன திருத்தங்களுக்காக 604,787.31 ரூபாவும் சேவைகளுக்காக 463,088.21 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 5773 லீற்றர் எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வாகன பராமரிப்புக்காக 2,648,484.63 ரூபாவும் வாகன திருத்தங்களுக்காக 1,927,909.2 ரூபா என இரு வகையில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதேவேளை ஊழலுக்கு எதிரான குழுவின் மூலம் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றதாக கூறப்பட்ட நிலையில் ஊழலுக்கு எதிரான குழு மற்றும் அதன் செயலக காரியாலயத்தினூடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு தகவல்களைப் பெற்று விசாரணைகளை மேற்கொள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

ஊழல் ஒழிப்பு குழுவினர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக பாரிய நிதி செலவு செய்யப்பட்டுள்ளமையினை முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ள நிலையிலும் அவை தொடர்பான விபரங்கள் பிரதமர் அலுவலகத்தில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுத்தப்படும் இவ்வாறான குழுக்கள் பொதுமக்களின் பணத்தை வீணாக்கும் செயற்பாட்டினையே மேற்கொள்கின்றது என்பது தெளிவாகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக