கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

24 ஜனவரி, 2023

மக்களை சுரண்டும் தாமரை கோபுரம்


சீன அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரம் தற்போது மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் வணிக நடவடிக்கைகளுக்கும் திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதுவரையும் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றும் எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாமல் இலாபமற்ற நிலையில் வெறுமனே காட்சி பொருளாக மாத்திரமே காணப்பட்டது. எனினும் தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகை, அதற்கான வட்டி, மின்சார கட்டணம், நீர் கட்டணம், பராமரிப்பு மற்றும் பணியாளர்களுக்கான கொடுப்பனவு போன்றவற்றுக்கு 46 மில்லியன் ரூபா மக்கள் பணமே தொடர்ச்சியாக செலவளிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற தாமரை கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தாமரை தடாகம் 350 மீற்றர் உயரம் கொண்டதாகும். 2015 ஆம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் நிறைவடையுமென கூறப்பட்டாலும் இன்றும் எவ்வித செயற்பாடுகளும் இல்லாமல் காணப்படுகின்றது. கொழும்பு மத்திய பகுதியில் தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகள் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தற்போது 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அவை வணிக ரீதியான பயன்பாட்டுக்கு வரவில்லை. பொதுமக்களின் பார்வைக்காக மாத்திரமே திறக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் தாமரை கோபுரத்தினால் பொதுமக்களிடம் அறவிடப்படும் கட்டணத்தை தவிர வேறு எவ்வித வருமானத்தையும் அரசாங்கம் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம்  (TRC/RTI/RI/2022/31)  முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கையின் அடிப்படையில், ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் (சட்டம்) சுஜீவ ரொட்ரிகோ வழங்கிய தகவல்களின் அடிப்படையில், தாமரை கோபுர நிர்மான பணிக்காக சீனாவிடமிருந்து 67,259,754 அமெரிக்க டொலர்கள்  கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வட்டித்தொகையாக 13,829,069.02 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை 16 தவணைகளில் கடன் மற்றும் வட்டியினை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரை கடனுக்கான வட்டி செலுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு வருடங்களில் வட்டித் தொகையாக 628,384.22 அமெரிக்க டொலர்கள் (230,808,037.54 ரூபா) செலுத்த வேண்டியுள்ளது.

எனினும் தாமரை கோபுரத்தின் மூலம் நாட்டுக்கு எவ்வித வருமானமும் இதுவரை கிடைக்கப்பெறாவிட்டாலும் தொடர்ச்சியாக செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் விசேட காலங்களில் மாத்திரம் தாமரை கோபுரம் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனத்தினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற தாமரை கோபுரத்துக்கு 2022 மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மின்சார கட்டணமாக 7,267,628.26 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 66,586 ரூபா நீர் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. செப்டெம்பர் 15 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக தாமரை கோபுரம் திறக்கப்பட்டாலும் தாமரை கோபுரத்தின் கடன்களை செலுத்துவதற்கேற்ற வருமானம் இன்னும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.


2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் கட்டுமானப்பணிகளுக்காக மீண்டும் மூடப்பட்டது. எனினும் தற்போது தாமரை கோபுரம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படாத நிலையிலும் பொதுமக்களின் பார்வைக்காக மாத்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

தாமரை கோபுரத்தில் 50 தொலைக்காட்சி நிலையங்கள், 35 வானொலி நிலையங்களுக்கான தொலைதொடர்பு வசதிகள், முதல் மாடியில் வர்த்தக கடைத்தொகுதியொன்றும் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் வைபவங்கள் நடத்துவதற்கான மண்டபங்களும் ஆறாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள உணவகமானது, சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், தொலைத்தொடர்பாடல் அருங்காட்சியகம் என பல வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டாலும் நாட்டுக்கு வருமானம் தரக்கூடிய வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. 

இதேவேளை தாமரை கோபுரத்தின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் செலவுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு 21.09.2022 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக தகவல் உத்தியோகத்தர் மேஜர் ஜெனரல் இ.எஸ்.ஜயசிங்கே வழங்கிய தகவல்களில் 30.09.2022 ஆம் திகதி வரை தாமரை கோபுரத்தின் பராமரிப்பு பணிகளுக்காக 55 நிரந்தர ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்களாக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பணிப்பாளர் சபைக்கான தலைவரும் மூன்று பணிப்பாளர்களும் உள்ளடங்குவர். ஊழியர்களுக்கான ஊதியம் 3/2015 சுற்றறிக்கைக்கு அமைவாக வழங்கப்படுவதுடன் பணிப்பாளர் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக பணிப்பாளர்களுக்கான ஊதியம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. பணிப்பாளர்களுக்கு வருகை கொடுப்பனவுடன் எரிபொருள் மானியம் மற்றும் வாகனங்களுக்கான சாரதிகள் வழங்கப்படுகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் வரவு-செலவுத்திட்ட கொடுப்பனவும் வாகனம் அல்லது போக்குவரத்து கொடுப்பனவும் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படுகின்றன.

செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் தாமரை கோபுரத்துக்கு 78 மில்லியன் ரூபா (7 கோடியே 80 இலட்சம்) வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் நவம்பர் மாதத்துக்கு முன்னரான ஆறுமாத காலப்பகுதிக்குள் தாமரை கோபுரத்தின் பராமரிப்பு பணிகளுக்காக  46 மில்லியன் ரூபா (4 கோடியே 60 இலட்சம்) செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாமரை கோபுரமானது தற்போது பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளமை, நிரந்தர அடிப்படையில் தாமரை கோபுர வளாகத்தை வாடகைக்கு வழங்குதல், நிகழ்வுகளுக்காக வாடகைக்கு வழங்குதல் போன்றவற்றின் மூலம் வருமானம் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தாமரை கோபுர வளாகத்தில் பொழுதுபோக்கு வலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக அடுத்த 3 வருடங்களுக்குள் 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் சிங்கப்பூரின் கிரியேட்டிவ் டிசைன் தனியார் நிறுவனத்திற்கும் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையில் நவம்பர் 18 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. எதிர்வரும் 6 மாதங்களில் தாமரை கோபுர வளாகத்தில் கசினோ மண்டபம் மற்றும் நீர் விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு வலயமொன்று அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட கடனை ஈடுசெய்வதற்கு அடுத்த 5 வருடங்களுக்கு அதன் நாளாந்த வருமானம் 41,000 அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 


இந்த கோபுரத்திற்காக மொத்தம் 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஐந்து வருடங்களில் கடனை அடைப்பதற்கு மேலும் 56 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார். இது கடினமான நிலையெனவும் பாரிய வருமானம் ஈட்டும் நாட்டில் இவ்வாறான கோபுரம் நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எனினும் வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு தொடர்ச்சியாக கொழும்பு தாமரை கோபுரம் தவறி வருகின்றது. இங்கு வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய எந்தவொரு சேவைகளை ஆரம்பிப்பதற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டாலும் அவை இறுதி செய்யப்பட்டு ஆரம்பிக்கப்படவில்லை. தாமரை தடாகத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதுவரை எந்தவொரு நிறுவனமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் தற்போதைக்கு நாட்டுக்கு வருமானம் தரக்கூடிய எந்தவொரு செயற்பாடுகளும் இங்கு நடைபெறவில்லை. இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குச் சொந்தமான தாமரை கோபுரமானது, ஆணைக்குழுவின் திட்ட பிரிவின் ஆலோசகர்களினால் மேற்பார்வை செய்யப்பட்ட நிலையில், பின்பு பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டு திறைச்சேரியின் கீழ் இயங்கும் கொழும்பு தாமரை தடாகம் முகாமைத்துவ தனியார் கம்பனியினால் நிர்வகிப்படுகின்றது. இதன் நிதித் தேவைகளை மக்கள் பணத்திலிருந்து திறைச்சேரியே மேற்கொள்கின்றது.

பத்து ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் நிலத்துக்கு கீழ் நான்கு மாடிகளுடன் ஆரம்பிக்கின்றது. கோபுரத்திற்கு அதிவேக மின்சார லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு நிமிடங்களில் 85 - 90 மாடிகளை இதன் மூலம் அடையலாம். இக்கட்டிடம் முழுமையாக இலங்கையர்களால் பயன்படுத்தப்படுமெனவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்படுமெனவும் கூறப்பட்டாலும் நடைமுறையில் அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.

தாமரை கோபுரத்திற்கான ஆரம்ப வடிவமைப்பு 2008 இல் செய்யப்பட்டது, அதே நேரத்தில் கட்டுமானம் 2012 இல் தொடங்கியது. இன்று தாமரை கோபுர திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நாட்டுக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நோக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இலங்கைக்கு கடன் சுமையை அதிகரித்த திட்டங்களில் தாமரை கோபுரமும் ஒன்றாக காணப்படுகின்றது. தற்போது நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கவும் தனியார்மயப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நிலையில் தாமரை கோபுரம் தொடர்ச்சியாக மக்களின் பணத்தில் பராமரிக்கப்படுவதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக