நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கடன் சுமையினால் பெரும்பாலான அரச நிறுவனங்கள் வருமானத்தை பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. அதேவேளை அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அரசியல் நலன்களுக்காக உருவாக்கும் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான அலுவலகங்களை நடத்திச் செல்வதற்கு வாடகைக்கு பெற்றுக்கொள்ளும் கட்டிடங்களினால் அரசாங்கத்துக்கு பெரும் செலவு ஏற்படுகின்றது. நாட்டில் குறிப்பிட்ட சில அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் காணப்பட்டாலும் பெரும்பாலான அரச நிறுவனங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றமை அரசாங்கத்துக்கு பாரிய சுமையாக அமைந்துள்ளது.
அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை நடாத்திச் செல்வதற்குத் தேவையான கட்டடத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் போன்றே வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கட்டடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கட்டட நிர்மாணம், பராமரிப்பு மற்றும் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கட்டடங்களுக்காக வாடகை செலுத்துதல் என்பவற்றுக்காக அரசாங்கம் பாரிய செலவினை ஏற்கின்றது.
நிறுவனக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அரச கட்டடங்கள் போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்களில் வேறு தரப்பினரிடமிருந்து செயலாற்றல் கணக்காய்வு கட்டடங்களை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்றுக்கொள்ளுதல் இடம்பெறும். அந்த வெளித் தரப்பினர் அரச நிறுவனம் அல்லது தனியார் தரப்பினராக இருக்கக்கூடிய குத்தகை வழங்குனர்களைத் தெரிவு செய்தல் அரச கொள்முதல் வழிகாட்டியை பின்பற்றி மேற்கொள்ளப்படுவதுடன் பொதுவான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு குறித்த குத்தகை அல்லது வாடகைத் தவணை தீர்மானிக்கப்படும்.
வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகள் அல்லது அவர்களது நண்பர்களுடன் தொடர்புடையவை எனவும் இவற்றுக்கு முறையான குத்தகை அல்லது வாடகை மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு மாதாந்தம் செலுத்தப்படும் வாடகை தொகை என்பவை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிதி அமைச்சின் கொம்ப்ரோலர் நாயகத்தின் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய 46 அரச நிறுவனங்கள் வாடகை அடிப்படையிலான கட்டிடங்களில் இயங்குவதுடன் இவற்றுக்கு மாதாந்தம் 14 கோடிக்கும் அதிகமாக வாடகை செலுத்தப்படுவதை அறிய முடிந்தது.
இவற்றில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட 25 இராஜாங்க அமைச்சுக்களும் வாடகை கட்டிடங்களிலேயே இயங்கும் நிலை ஏற்பட்டிருந்தது. அத்துடன் 18 அமைச்சுக்களுக்கான ஒரு சில பிரிவுகளும் வாடகை கட்டிடங்களிலேயே இயங்கி வருகின்றன. கோட்டாபய - மஹிந்த அரசாங்கத்தின் போது 23 அமைச்சர்களும் 39 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இவற்றில் 39 இராஜாங்க அமைச்சர்களுக்கும் தங்கள் அமைச்சுக்களுக்கு வாடகை கட்டிடங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவற்றின் முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை.
தற்போது ரணில் - தினேஸ் குணவர்தன அரசாங்கத்தில் 29 அமைச்சுக்களும் 38 இராஜாங்க அமைச்சுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான இராஜாங்க அமைச்சுக்கள் வாடகை கட்டிடங்களிலேயே இயங்க வேண்டியுள்ள நிலையில் அவை தொடர்பிலான தகவல்கள் வழங்கப்படவில்லை.
இதனடிப்படையில் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் செயற்படும் சில பிரிவுகள் இயங்குவதற்கு வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டிடங்களுக்காக மாதாந்தம் 143,622,473 ரூபா செலவு செய்யப்படுவதாக நிதி அமைச்சின் கொம்ப்ரோலர் நாயகத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இயங்கும் பாதுகாப்பு படைகளின் பிரதானியின் அலுவலகத்துக்கு 4,497,116 ரூபாவும் சுஹ_ருபாயவில் இயங்கிய தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒரு பிரிவுக்கு 3,462,305 ரூபாவும் தனியார் கட்டிடமொன்றில் இயங்கும் தொழில்நுட்ப அமைச்சுக்கு 1,878,000 ரூபாவும் செத்சிறிபாயவில் இயங்கிய தேசிய மரபுரிமை, கற்புலக்கலை மற்றும் கிராமிய கலை இராஜாங்க அமைச்சுக்கு 3,707,696 ரூபாவும் சுஹ_ருபாயவில் இயங்கும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சுக்கு 2,669,851 ரூபாவும் நகர அபிவிருத்தி இராஜங்க அமைச்சுக்கு 5,447,021 ரூபாவும் மாதாந்த வாடகையாக செலுத்தப்படுகின்றது.
செத்சிறிபாயவில் இயங்கிய கிராமிய வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சுக்கு 4,647,618 ரூபாவும் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு இயங்கும் தனியார் கட்டிடத்துக்கு 3,000,000 ரூபாவும் செத்சிறிபாயவில் இயங்கும் சமுர்த்தி, நுண்நிதி, சுயதொழில், வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் அலுவலகத்துக்கு 6,377,410 ரூபாவும் தனியார் கட்டிடத்தில் இயங்கும் நீதி அமைச்சின் ஒரு பிரிவுக்கு 4,930,900 ரூபாவும் தனியார் கட்டிடங்களில் இயங்கும் சிறைச்சாலை முகாமைத்துவம், சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சுக்கு 2,658,960 ரூபாவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இரு பிரிவுகளுக்கு 3,927,032 ரூபாவும் மற்றுமொரு பிரிவுக்கு 64,000 ரூபாவும் கல்வி அமைச்சின் ஒரு பிரிவு இயங்கும் கட்டிடத்துக்கு 568,000 ரூபாவும் மாதாந்த வாடகையாக செலுத்தப்படுகின்றது.
செத்சிறிபாயவில் இயங்கும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி ஆரம்பக்கல்வி, முன்பள்ளிக்கல்வி இராஜாங்க அமைச்சின் அலுவலகத்துக்கு மாந்த வாடகையாக 14,092,940 ரூபாவும் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, புத்தாக்க இராஜங்க அமைச்சின் ஒரு பிரிவுக்கு 4,114,152 ரூபாவும் சுகாதார அமைச்சின் ஒரு பிரிவுக்கும் சுதேச வைத்திய, கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கு 10,291,050 ரூபாவும் தனியார் கட்டிடங்களில் இயங்கும் மருந்து ஒழுங்குறுத்துகை, விநியோக இராஜாங்க அமைச்சுக்கு 2,456,830 ரூபாவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜங்க அமைச்சுக்கு 1,836,000 ரூபாவும் வனவிலங்கு, வன பாதுகாப்பு அமைச்சு இயங்கும் கட்டிடத்துக்கு 1,255,106 ரூபாவும் மாதாந்த வாடகையாக செலுத்தப்படுகின்றது.
செத்சிறிபாயவில் இயங்கும் பெருந்தோட்ட அமைச்சின் அலுவலகத்துக்கு 8,931,783 ரூபாவும் பெருந்தோட்ட மறுசீரமைப்பு, தேயிலை, இறப்பர் பயிர் அறுவடை இராஜாங்க அமைச்சுக்கு 4,387,071 ரூபாவும் தனியார் கட்டித்தில் இயங்கும் தென்னை, கித்துல், பனை உற்பத்தி ஊக்குவிப்பு, ஏற்றுமதி இராஜாங்க அமைச்சின் ஒரு பிரிவுக்கு 1,035,000 ரூபாவும் செத்சிறிபாயவில் இயங்கும் தென்னை, கித்துல், பனை உற்பத்தி ஊக்குவிப்பு, ஏற்றுமதி இராஜாங்க அமைச்சின் ஒரு பிரிவுக்கு 1,36,581 ரூபாவும் சுஹ_றுபாயவில் இயங்கும் சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சுக்கு 3,482,250 ரூபாவும் லக்திய மெதுரவில் இயங்கும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் கிராமிய, பிரதேச குடிநீர் விநியோகத் திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கு 1,250,000 ரூபாவும் தனியார் கட்டிடத்தில் இயங்கும் மின்சக்தி அமைச்சு மற்றும் சூரியசக்தி, காற்று, நீர் சக்தி மின் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கு 5,157,000 ரூபாவும் மாதாந்த வாடகையாக செலுத்தப்படுகின்றது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சொந்த கட்டிடத்தில் இயங்கும் எரிசக்தி அமைச்சின் ஒரு பிரிவுக்கு மாதாந்த வாடகையாக 1,509,840 ரூபாவும் ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் எரிசக்தி அமைச்சின் ஒரு பிரிவுக்கு 240,000 ரூபாவும் துறைமுக அதிகாரசபையின் சொந்த கட்டிடத்தில் இயங்கும் துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சுக்கு 663,724 ரூபாவும் தனியார் கட்டிடத்தில் இயங்கும் நெடுஞ்சாலை அமைச்சின் ஒரு பிரிவுக்கு 160,000 ரூபாவும் செத்சிறிபாயவில் இயங்கும் கிராமிய வீதி, ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சுக்கு 341,820 ரூபாவும் போக்குவரத்து அமைச்சின் ஒரு பிரிவுக்கு 5,216,647 ரூபாவும் வாகன ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்து, ரயில் பெட்டிகள் இராஜங்க அமைச்சுக்கு 1,036,581 ரூபாவும் மாதாந்த வாடகையாக செலுத்தப்படுகின்றது.
உலக வர்த்தக மையத்தில் இயங்கிய கிராமிய, பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் அலுவலகத்துக்கு மாதாந்த வாடகையாக 2,907,606 ரூபாவும் சுற்றுலா அமைச்சின் ஒரு பிரிவுக்கு 1,440,000 ரூபாவும் உலக வர்த்தக மையத்தில் இயங்கிய சுற்றுலா அமைச்சின் ஒரு பிரிவுக்கு 2,169,810 ரூபாவும் விமான போக்குவரத்து முதலீட்டு வலய அபிவிருத்தி இராஜங்க அமைச்சுக்கு 2,787,254 ரூபாவும் தனியார் கட்டிடத்தில் இயங்கும் வர்த்தக அமைச்சுக்கு 6,219,000 ரூபாவும் கூட்டுறவு சேவை,வியாபார அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு 2,018,830 ரூபாவும் உலக வர்த்தக மையத்தில் இயங்கிய பத்திக், உள்ளுர் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சுக்கு 1,764,720 ரூபாவும் கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சுக்கு 7,222,661 ரூபாவும் சுஹ_ருபாயவில் இயங்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்துக்கு 3,462,305 ரூபாவும் மாதாந்த வாடகையாக செலுத்தப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சுக்கள் பல தற்போது நடைமுறையில் இல்லை. அத்துடன் சில இராஜாங்க அமைச்சுக்கள் மூலம் மக்களுக்கான எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவை அரசியல் இலாபங்களுக்காக உருவாக்கப்பட்டவை. இவ்வாறு அரசியல் இருப்பை தக்கவைக்கவும் அதிகார போட்டிக்காகவும் அவ்வப்போது உருவாக்கப்படும் இமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான அலுவலகங்களை நடத்திச் செல்வதற்கான வாடகை கட்டிடங்களுக்கு மாதாந்தம் பாரிய பொதுமக்கள் நிதி செலுத்தப்படுகின்றது. அமைச்சர்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் கட்டிடங்கள் இவற்றுக்கு பயன்படுத்தப்படுவதால் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
இதேவேளை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்படுகின்ற புதிய கட்டிடத் தொகுதிகளுக்கு தனியார் கட்டிடங்களில் இயங்கும் அமைச்சுக்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் கொம்ப்ரோலர் நாயகத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் அவ்வப்போது உருவாக்கப்படும் அமைச்சுக்களுக்கு ஏற்றவகையில் தேவையான இடவசதிகளை அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் பெற்றுக்கொள்வது கடினமாகையால் வாடகை அடிப்படையிலான கட்டிடங்கள் பெற்றுக்கொள்கின்மை குறிப்பிடத்தக்கது.
கட்டிடங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு பெற்றுக் கொள்ளும் போது முழுமையாக கொள்முதல் வழிகாட்டல்களைப் பின்பற்றவும் கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்கும் போது, கொள்வனவு செய்யும்போது அல்லது குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளும் போது கட்டிடத்தினை ஈடுபடுத்தும் கடமைகள், அங்கு சேவையில் ஈடுபடும் பதவி அணியினர், பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தன்மை என்பவற்றுக்கு அமைய கட்டிடத்தின் தேவைப்பாட்டினை சரியான முறையில் அடையாளம் காண்பதற்கான வழிகாட்டலைத் தயாரிக்கவும் கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்ட கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயங்களின் சிலவற்றை அட்டவணையின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இலங்கை அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அவற்றில் அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதும் முக்கிய விடயமாகும். எனினும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செலவுகளை குறைப்பது தொடர்பில் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாத அதேவேளை அரசியல் நலன்களுக்காக உருவாக்கப்படும் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களினால் பாரிய செலவினை மக்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் செலவுகளை குறைப்பதாக அறிவித்தாலும் மறுபக்கம் அவை நடப்பதாக தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக