பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 3363 பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.2122 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொது மக்களால் 309 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
156 ஆவது தேசிய பொலிஸ தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. பொலிஸ் சேவையின் மாண்பினை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு வருடாந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் அண்மைய காலத்தில் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள், கைதுகள் மற்றும் தாக்குதல் சம்பவங்களினால் பொலிஸார் மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர்களின் குற்ற விசாரணைகள் முழுமையாக மேற்கொள்ளப்படாமை மற்றும் அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை பொலிஸ் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கை பொலிஸ் நிறுவனமானது சுயாதீனமான நிறுவனமாக இயங்காமையும் அரசியல்வாதிகள் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு இணங்கி செயற்படுகின்றமையும் இலங்கை பொலிஸின் மாண்பை கேள்விக்குட்படுத்தியுள்ளது. பாரிய குற்றங்களை இழைத்த செல்வாக்கான நபர்கள் மீது பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளபடாமை பக்கச்சார்பான விடயமாக இருந்தாலும் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டிய பொலிஸாரே குற்றங்களில் ஈடுபடுவது இலங்கை பொலிஸ் மீதான நம்பிக்கையினை சீர்குலைத்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் போதைப்பொருளுடன் 21 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 156 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்கள் பதிவாகியுள்ளன, மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் உள்ள 130 உத்தியோகத்தர்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. குறித்த தகவல்களை உரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் வெளிப்படுத்த தவறியுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை பொலிஸ் தொடர்பான தரவுகளை பெற்றுக் கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. தகவல் கோரிக்கையினை நிராகரிப்பதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் 04.10..2021 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி 23.06.2022 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தகவல் கோரிக்கைக்கு உரிய பதிலை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவினால் இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அதிகாரி ளு.ர்.ளு.ஜகத்சிரிக்கு உத்தரவிடப்பட்டது.
நாட்டில் 2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சராசரியாக 55,000 பொலிஸார் சேவையாற்றியுள்ளனர். இலங்கையின் மேல் மாகாணத்திலேயே அதிகமான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊவா மாகாணத்திலேயே குறைந்தளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு மேல் மாகாணத்தில் 14,006 பொலிஸாரும் ஊவா மாகாணத்தில் 3696 பேரும் கடமையாற்றியுள்ளனர்.
தென் மாகாணத்தில் 5628 பொலிஸாரும் சப்ரகமுவ மாகாணத்தில் 3844 பொலிஸாரும் வட மேல் மாகாணத்தில் 6180 பொலிஸாரும் வட மத்திய மாகாணத்தில் 5076 பொலிஸாரும் கிழக்கு மாகாணத்தில் 5358 பொலிஸாரும் வட மாகாணத்தில் 5272 பொலிஸாரும் மத்திய மாகாணத்தில் 6626 பொலிஸாரும் கடமையாற்றுகின்றனர்.
நாட்டில் குற்றங்களை தடுக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் இலங்கை பொலிஸ் கடமைப்பட்டுள்ள நிலையில் 2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 3363 பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 2122 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலஞ்ச குற்றச்சாட்டுக்களுடன் 360 பொலிஸாரும் மதுபாவனை மற்றும் போதைப் பொருள் குற்றங்களுடன் 493 பொலிஸாரும் மோசமான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் 435 பொலிஸாரும் சேவையை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டடில் 652 பொலிஸாரும் குற்ற விசாரணைகளுடன் 401 பொலிஸாரும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 523 பொலிஸாரும் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 499 பேர் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர்.
இதேவேளை 2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 2122 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு 295 பொலிஸாரும் 2016 இல் 234 பொலிஸாரும் 2017 இல் 240 பொலிஸாரும் 2018 இல் 318 பொலிஸாரும் 2019 இல் 366 பொலிஸாரும் 2020 இல் 389 பொலிஸாரும் 2021 இல் 280 பொலிஸாரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் குறைகள் ஆணைப்பிரிவுக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொது மக்களால் 309 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015 இல் 34 முறைப்பாடுகளும் 2016 இல் 48 முறைப்பாடுகளும் 2017 இல் 59 முறைப்பாடுகளும் 2018 இல் 70 முறைப்பாடுகளும் 2019 இல் 67 முறைப்பாடுகளும் 2020 இல் 30 முறைப்பாடுகளும் 2021 இல் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2015 – 2021 ஆம் ஆண்டு வரையான 7 ஆண்டு காலப்பகுதியில் 10,489 பொலிஸார் சேவையிலிருந்து நீங்கியுள்ளனர். இவர்களில் 1525 பொலிஸார் சேவையிலிருந்து இடைவிலகியுள்ளதுடன் 8964 பொலிஸார் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே அதிகமாக 379 பொலிஸார் சேவையிலிருந்து இடைவிலகிச் சென்றுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.ஜகத் அல்விஸ{க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனவரி 01 முதல் நவம்பர் 03, 2021 வரையிலான காலப்பகுதியில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 126 பேர் நேர்முகத் தேர்வில் பங்கேற்காத அதிகாரிகள் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 01 முதல் நவம்பர் 03, 2021 வரையிலான காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணியிடங்களின் எண்ணிக்கை 184 ஆகும். மேலும், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிக்கு பரிந்துரைக்கப்படாத 03 உத்தியோகத்தர்களும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் நிலைய பொறுப்பதிகாரிகளாக பதவியை வகிக்காத 13 அதிகாரிகள் ஏ1 அல்லது ஏ2 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற மேலும் 21 அதிகாரிகள் ஏ3 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பி அல்லது சி தரமுடைய பொலிஸ் நிலையத்தில் பதவி வகித்த 19 அதிகாரிகள் உரிய நடைமுறையின்றி ஏ2 மற்றும் ஏ1 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2015 – 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல்வேறு பதவி நிலைகளுக்கு 19,185 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில் உதவி பொலிஸ் அதிகாரிகளாக 14 பேரும் உதவி பொலிஸ் பரிசோதகர்களாக 766 பேரும் பெண் உப பொலிஸ் பரிசோதகர்களாக 160 பேரும் பொலிஸ் கொஸ்தபால்களாக 13,815 பேரும் பெண் பொலிஸ் கொஸ்தபால்களாக 3423 பேரும் பொலிஸ் கொஸ்தபால் சாரதிகளாக 1007 பேரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் 2015 ஆம் ஆண்டு 1585 பேரும் 2016 இல் 1657 பேரும் 2017 இல் 1476 பேரும் 2018 இல் 2313 பேரும் 2019 இல் 2748 பேரும் 2020 இல் 1530 பேரும் 2021 ஆம் ஆண்டு 7876 பேரும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக