நாட்டின் நிதி அமைச்சரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், திறைச்சேரியில் இருந்து மூலதனச் செலவினங்களைக் குறைப்பதற்கான சீர்திருத்தத்தில் அரச துறைச் செலவினங்களைக் குறைப்பதற்கான பல நடவடிக்கைகளுக்கு மத்தியில், இலங்கை அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65 ஆகவும் அரை அரச நிறுவன ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 62 ஆகவும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. அத்துடன் அரச ஊழியர்கள் மற்றும் அரை அரச ஊழியர்களின் பதவி உயர்வினையும் கட்டுப்படுத்தியுள்ளமையால் அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைப்பதற்கு முன்மொழியப்பட்டது.
அரச மற்றும் அரை அரசத் துறைகளில் தற்போது 60 வயதுக்கு மேல் பணிபுரிபவர்கள் 31.12.2022 க்குள் ஓய்வு பெறுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடு, பெருந்தொகையான அரச ஊழியர்களை கொண்டுள்ளமையால், அதன் வரி வருவாயில் 86 வீதம் அரச ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்காக செலவழிக்கப்படுவதால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 1.49 மில்லியன் அரச துறை ஊழியர்கள் உள்ளனர் மேலும் தற்போது பணிபுரிபவர்களுக்கு மேலதிகமாக அரச துறை ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய செலவை அரசாங்கம் ஏற்க வேண்டும். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது 65 ஆக உயர்த்தப்பட்டது. அத்துடன் புதிதாக அரச ஊழியர் ஆட்சேர்ப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. இது பல பட்டதாரிகளின் வாய்ப்பை தட்டிப்பறித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60ஆக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கட்டாய ஓய்வு பெறும் வரை பணி நீடிப்புடன், ஓய்வு பெறுவதற்கான விருப்ப வயது 55ஆக குறைக்கப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளரால் கையொப்பமிடப்பட்டு, அனைத்து, அரச நிறுவன தலைவர்கள், அரச வங்கிகள் மற்றும் சட்டப்பூர்வ சபைகள் உட்பட வணிக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு, இது தொடர்பான புதிய சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
அதன்படி, எந்தவொரு அதிகாரியும் இந்த வயது வரம்பைத் தாண்டி (55) பணியாற்ற விரும்பினால், அவர், செயல்திறன் மற்றும் செயல்திறன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சேவை நீடிப்புக்கு விண்ணப்பிக்காமல் 60 ஆண்டுகள் கட்டாய ஓய்வு வயது வரை தொடர்ந்து பணியாற்றலாம். எவ்வாறாயினும், 55 - 60 வயதிற்குள், ஒரு அதிகாரி தனது விருப்பப்படி பணியிலிருந்து ஓய்வு பெறலாம். இதேவேளை தற்போது 60 வயதிற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் இந்த ஆண்டு டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் 60 வயதை நிறைவு செய்பவர்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் ஓய்வு பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இத்தீர்மானம் அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதற்கான ஒரு வழியாக பார்க்கப்பட்டாலும் தற்போது ஏற்படும் வெற்றிடங்களுக்கு புதியவர்கள் அல்லது ஏனைய அரச நிறுவனங்களில் மேலதிகமாக கடமையாற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படாவிட்டால் பல அரச சேவைகள் மந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு காணப்படுகின்றது. வருடாந்தம் 27 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவதாகவும் அவற்றில் 5000 பேர் வரை ஆசிரியர்களாக இருப்பதாகவும் ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் அரச நிறுவனங்களில் தற்போது மேலதிகமாக கடமையாற்றும் ஊழியர்களை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதானாலும் அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவது கட்டாயமாகும். அவை அரச சேவையினை மேலும் தாமதப்படுத்தலாம்.
இதேவேளை அரச ஊழியர்களின் சேவை 60 வயதுடன் மட்டுப்படுத்தப்பட்டாலும் அரசியல்வாதிகளின் ஓய்வு வயது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கை பாராளுமன்ற அங்கத்தவர்களில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் பலர் 60 வயதை கடந்தும் அதிகாரத்தில் இருக்கும் நிலையில் அரச ஊழியர்களுக்கு மாத்திரம் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது வேடிக்கையானது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தில் 12.10.2022 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக 31.12.2021 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் 1,168,718 பதவிகளுக்கு ஊழியர்கள் (நீதித்துறை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தவிர்ந்த) அனுமதிக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பி.பத்திரகே தெரிவித்துள்ளார். இவற்றில் 55,428 சிரேஸ்ட ஊழியர் பதவிகளுக்கும் 41,470 மூன்றாம் நிலை உழியர் பதவிகளுக்கும் 682,838 இரண்டாம் நிலை ஊழியர் பதவிகளுக்கும் 388,982 முதலாம் நிலை ஊழியர் பதவிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் 31.12.2021 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் 920,202 பேர் மாத்திரமே (நீதித்துறை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தவிர்ந்த) கடமையாற்றுவதாகவும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் தற்போது அரச நிறுவனங்களில் 248,516 பதவி வெற்றிடங்கள் (நீதித்துறை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தவிர்ந்த) காணப்படுவதை அறியமுடிகின்றது.
இதேவேளை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் 2021.07.12 ஆம் திகதி முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வழங்கப்பட்ட தகவலில் நாட்டில் 2019.12.31 ஆம் திகதி நிலவரத்தின் அடிப்படையில் 224,267 அரச தொழில் வாய்ப்புகள் காணப்படுவதாக (அமைச்சுக்கள், திணைக்களங்கள், முப்படை, மாகாணசபைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சி நிறுவனங்கள் உள்ளடங்களாக) பணிப்பாளர் அமில இந்திகவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் முப்படையினரில் அங்கீகரிக்கப்பட்ட 906,264 வேலைவாய்ப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 740,575 வெற்றிடங்களுக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 165,690 தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் காணப்படுகின்ற ஒன்பது மாகாண சபைகளில் 444,348 அங்கீகரிக்கப்பட்ட அரச தொழில்வாய்ப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 400,897 தொழில்வாய்ப்புகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மாகாண சபைகளில் 43,451 தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டது.
அரசாங்கத்துக்குச் சொந்தமான தொழில்முயற்சி நிறுவனங்களில் 251,419 அங்கீகரிக்கப்பட்ட அரச தொழில் வாய்ப்புகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 236,293 தொழில் வெற்றிடங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 15,126 தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அந்தவகையில் நாட்டில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 127 பொது தொழில்முயற்சி நிறுவனங்கள் காணப்படுவதாக பொது தொழில்முயற்சிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நாட்டில் 2019 ஆம் ஆண்டின் இறுதிவரை 1,602,419 அங்கீகரிக்கப்பட்ட தொழில் வாய்ப்புகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1,377,764 தொழில் வெற்றிடங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு வரை நாட்டில் 224,267 அரச தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதேவேளை அரச நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழில் வெற்றிடங்களில் பூரணப்படுத்தப்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 02ஃ2020 முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கையின்படி, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு தொழில் வெற்றிடங்களை பூரணப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. மேலும் பதவி வெற்றிடங்களை பூரணப்படுத்தியுள்ள அரச நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்வது மிகவும் கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெறுதல், பதவி வெற்றிடங்கள் மற்றும் ஊழியர்கள் மரணித்தல் போன்ற விடயங்களினால் அவை கடினமான பணியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ள பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம.பி.கே.மாயதுன்னே, டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 60 வயதை பூர்த்தி செய்யும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணி ஓய்வு விண்ணப்பங்களை நிறுவன தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் 2022.12.31 ஆம் திகதியுடன் அரச நிறுவனங்களில் இருந்து ஓய்வுபெறவுள்ள நபர்களின் எண்ணிக்கை தொடர்பில் அறிவதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, ஓய்வு பெறவுள்ளவர்களின் எண்ணிக்கையினை உறுதியாகக்கூற முடியாதென அமைச்சின் தகவல் உத்தியோகத்தர், மேலதிக செயலாளர் ஏ.முதுமால தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களில் கடமையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பான கோரிக்கைக்கு, நாடளாவிய இணைந்த சேவை, திணைக்கள ரீதியிலான பதவிகளில் உள்ள ஊழியர்கள் அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களில் பணிபுரிந்து வருவதால் அந்த நிறுவனங்களில் இருந்தே தகவலைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2022.12.31 ஆம் திகதியுடன் ஓய்வு வயதை கடந்தும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் சுகாதார அமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவன ஊழியர்களை தவிர ஏனைய ஊழியர்கள் அனைவரும் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு இடையில் 60 வயதை எட்டிய நிலையில் ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டும் என்றும் ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் அக்டோபர் மாதம் வரையில் 360,994 சிவில் அதிகாரிகளும் 187,530 விதவைகளும் அநாதைகளும் 118,240 ஆயுதப் படையினரும் 3467 தனியார், பிரிவெனா ஆசிரியர்களும் 3160 உள்ளுராட்சி மன்ற ஊழியர்களும் என மொத்தமாக 673,391 அரச ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
எனவே இவ்வருட இறுதியில் 60 வயதை பூர்த்தி செய்த பெருமளவான அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் நிலையில் பல்வேறு சேவைகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டு அவை மக்களுக்கான சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்வதை நோக்காக கொண்டு அரசாங்கம் வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ள நிலையில் மேலும் சேவை இடர்களும் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
அரச ஊழியர்களின் எண்ணிக்கையினை குறைத்து வினைத்திறனான அரச நிர்வாகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாக இருந்தாலும் சில அத்தியாவசிய சேவைகள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்களில் நிலவும் தபால் சேவகர்களுக்கான பற்றாக்குறை காரணமாக எதிர்காலத்தில் கடிதங்களை பரிமாற்றுவதில் தாமதம் ஏற்படுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது 2000 தபால் சேவகர்களுக்கான பதவி வெற்றிடமாகவுள்ளது. 8600 தபால் சேவகர்களுக்கான பதவி நிலைகள் அங்கீகரிக்கப்பட்ட போதும் 6500 பேர் மாத்திரமே தற்போது கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைவாக டிசம்பர் 31 ஆம் திகதியுடன் 100 தபால் சேவகர்கள் ஓய்வு பெறவுள்ளனர். தபால் சேவகர்களுக்கான பணியிடங்கள் வெற்றிடமாகவுள்ளமையினால் தபாலகங்களின் பணிகள் கடும் இடையூறுகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்காரணமாக அந்த அலுவலகங்களில் கடித விநியோகம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 654 தபால் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மாத்திரம் 1000 தபால் சேவகர்கள் கடமையாற்றுகின்றனர். 2016 ஆம் ஆண்டு முதல் தபால் சேவையாளர்கள் எவரும் புதிதாக பணிக்கு அமர்த்தப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புகையிரதத் திணைக்களத்தின் சேவைகளைப் பேணுவதற்கு மொத்தமாக 21,000 பணியாளர்கள் இருக்க வேண்டும் எனவும் தற்போது 13,000 ஊழியர்கள் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு ஏராளமான ஊழியர்கள் ஓய்வு பெற உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேவைக்குத் தேவையான இளநிலை பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் இதுவரை ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை.
அத்துடன், புகையிரத சமிக்ஞையாளர்கள் பற்றாக்குறையால், எதிர்காலத்தில் புகையிரத சேவையில் பாதுகாப்பின்மை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக