கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

24 ஜனவரி, 2023

இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குகின்றதா?


பாவனையாளர்களினால் 3778 கோடி ரூபா மின் கட்டண நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டணம் செலுத்தாமைக்கு காரணம் மின்சார சபையா? பாவனையாளர்களா?

இலங்கை மின்சாரசபை நட்டத்தில் இயங்குகிறது என பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. இதனால் மின்சார சபையை மீள்சீர்திருத்தம் செய்யவேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதேநேரம் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்கப் போவதாகவும் அரசு தீர்மானம் எடுத்துள்ளது. நாமும் அதனை சாதாரணமாக கடந்து செலுத்துகின்றோம். உண்மையில் இந்த நட்டத்துக்கு காரணம் என்ன? இன்று நாம் அனுபவிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மின்சாரசபையின் நட்டம் உண்மையில் யாரால் ஏற்படுத்தப்பட்டது? இதற்கு மின்சார பாவனையாளர்கள் என்ற வகையில் பொதுமக்கள் பொறுப்பு கூறவேண்டுமா? இப்படியாக பல கேள்விகளுக்கு பதில் தேடும் ஒரு விவரணமாக இது எழுதப்படுகின்றது.

இலங்கை மின்சார சபை தொடர்ச்சியாக சந்தித்து வரும் நட்டமானது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கை மின்சார சபையினை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் மேலதிக ஊழியர்கள், ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் என பல்வேறு சலுகைகளுடன் அத்தியாவசியமற்ற செலவுகளை அதிகம் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபை பெற்றுக்கொள்ளும் வருமானம் அதன் செலவுகளை ஈடுசெய்வதற்கே போதுமானதாக இல்லை என்பது பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு இவ்வாண்டு ஜூலை – செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 4,431 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு 2145 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இழப்பை ஈடுகட்ட மின் கட்டணத்தை 70 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மின்சார சபை பல்வேறு தரப்பினருக்கு செலுத்த வேண்டிய தொகை 650 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் 2023 ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமென மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை 82 அரசியல்வாதிகள் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், மின்சார சபைக்கு 5000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க தலைவர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். 

அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, ராஜித சேனாரத்ன, ஆர்.ஏ.டி. சிறிசேன (இறப்பு), ரோஹித போகொல்லாகம உட்பட பலர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை மின்சார சபை பாவனையாளர்களிடமிருந்து அறவிட வேண்டிய நிலுவைத் தொகை பல்லாயிரம் கோடிகளை தாண்டியுள்ளது. மின் பாவனையாளர்களினால் இலங்கை மின்சார சபைக்கு ஜூலை மாதம் வரை 3778.92 கோடி ரூபா மின் கட்டண நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. இவற்றை முழுமையாக பாவனையாளர்களிடம் இருந்து அறவிட்டால் மின்சார சபையின் வருடாந்த இழப்பினை தவிர்த்து கொள்ள முடியும். அவற்றை வசூலிப்பதற்கான வேலைத்திட்டங்களை முறையாக மேற்கொள்ளவில்லை. அத்துடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளினால் ஏற்படும் இழப்புகள் தொடர்பில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கை மின்சார சபையின் நான்கு விநியோக பிரிவுகளில் இருந்தும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.


இலங்கை மின்சார சபையானது, நான்கு விநியோக பிரிவுகளை கொண்டுள்ளது. விநியோக பிரிவு 1 இல் வடமத்திய, வடமேல், வடக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு நகரமும் உள்ளடங்குகின்றது. விநியோக பிரிவு 2 இல் கிழக்கு, மத்திய மாகாணங்கள், மேல் மாகாணத்தின் வடக்கு ஆகியன உள்ளடங்குகின்றன. விநியோக பிரிவு 3 இல் மேல் மாகாணத்தின் தெற்கு 2, சப்ரகமுவ, ஊவா மாகாணங்கள் உள்ளடங்குகின்றன. விநியோக பிரிவு 4 இல் தென் மற்றும் மேல் மாகாணத்தின் தெற்கு 1 ஆகியன உள்ளடங்குகின்றன.

விநியோக பிரிவு 1

இலங்கை மின்சார சபையின் விநியோக பிரிவு 1 இல் காணப்படும் ஐந்து வலயங்களில் இருந்து மே மாதம் இறுதி வரையான காலப்பகுதியில் 11,900,216,009.15 ரூபாவை (1190.02 கோடி) பாவனையாளர்கள் மின் கட்டண நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக விநியோக பிரிவு 1 இன் தகவல் அதிகாரி, பிரதி பொது முகாமையாளர் ஆர்.எஸ்.கஜேந்திர வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றில் கொழும்பு நகரத்தில் 4,017,392,142.86 ரூபாவும் (401.73 கோடி) வட மேல் மாகாணம் 1 இல் 2,238,139,636.83 ரூபாவும் (223.81 கோடி) வடமேல் மாகாணம் 2 இல் 1,257,100,433.08 ரூபாவும் (125.71 கோடி) வட மத்திய மாகாணத்தில் 2,040,640,897.31 ரூபாவும் (204.06 கோடி) வட மாகாணத்தில் 2,346,942,899.07 ரூபாவும் (234.69 கோடி) பாவனையாளர்களால் நிலுவை தொகையாக செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் விநியோக பிரிவு 1 இல் 1,875,677 அங்கீகரிக்கப்பட்ட மின் பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் கொழும்பு நகரத்தில் 191,493 பேரும் வட மேல் மாகாணம் 1 இல் 375,160 பேரும் வடமேல் மாகாணம் 2 இல் 411,733 பேரும் வட மத்திய மாகாணத்தில் 467,844 பேரும் வட மாகாணத்தில் 429,447 பேரும் மின் இணைப்பை பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

விநியோக பிரிவு 2

இலங்கை மின்சார சபையின் விநியோக பிரிவு 2 இல் காணப்படும் நான்கு வலயங்களில் (22 பிரதேசங்கள்) 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 15,838,475,444 ரூபாவை (1583.84 கோடி) பாவனையாளர்கள் மின் கட்டண நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக விநியோக பிரிவு 2 இன் (வாணிப மற்றும் நிறுவனத்துவ) தகவல் அதிகாரி, பிரதி பொது முயாமையாளர், பொறியியலாளர் எச்.எம்.கே.ஜே.வீரசூரிய வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவற்றில் மேல் மாகாணத்தின் வடக்கு வலயத்தில் 7,980,615,527 ரூபாவும் (798.06 கோடி) மத்திய மாகாணம் 1 இல் 2,110,428,830 ரூபாவும் (211.04 கோடி) மத்திய மாகாணம் 2 இல் 2,075,899,882 ரூபாவும் (207.58 கோடி) கிழக்கு மாகாணத்தில் 3,671,531,205 ரூபாவும் (367.15 கோடி) பாவனையாளர்களால் நிலுவை தொகையாக செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் விநியோக பிரிவு 2 இல் 2,324,542 அங்கீகரிக்கப்பட்ட மின் பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் மேல் மாகாணத்தின் வடக்கில் 679,344 பேரும் மத்திய மாகாணம் 1 இல் 472,930 பேரும் மத்திய மாகாணம் 2 இல் 586,521 பேரும் கிழக்கு மாகாணத்தில் 585,747 பேரும் மின் இணைப்பை பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

விநியோக பிரிவு 2 இல் வீட்டு பாவனைக்கான மின் கட்டணமாக வருடாந்தம் 26,016,263,569.35 ரூபா (2601.62 கோடி) அறவிடப்படும் நிலையில் அவற்றில் 4,743,226,784.91 ரூபா (474.32 கோடி) இன்னும் செலுத்தப்படவில்லை. வீட்டுபயோக மற்றும் வர்த்த நடவடிக்கைகளுக்காக பெற்றக்கொள்ளப்பட்ட மின் இணைப்புக்களின் மூலம் வருடாந்தம் 13,464,463,547.80 ரூபா (1346.44 கோடி) அறவிடப்படும் நிலையில் அவற்றில் 2,167,838,573.40 ரூபா (216.78 கோடி) இன்னும் செலுத்தப்படவில்லை.

தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் மூலம் வருடாந்தம் 28,657,914,806.07 ரூபா (2865.79 கோடி) அறவிடப்படும் நிலையில் 5,028,583,586,.54 ரூபா (502.85 கோடி) இன்னும் செலுத்தப்படவில்லை. அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளின் மூலம் வருடாந்தம் 2,707,192,529.15 ரூபா (270.71 கோடி) அறவிடப்படும் நிலையில் 826,039,470.98 ரூபா (82.60 கோடி) செலுத்தப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ளது. அத்துடன் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கான மின் கட்டண நிலுவை தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக பிரிவு 3

இலங்கை மின்சார சபையின் விநியோக பிரிவு 3 இல் காணப்படும் மூன்று வலயங்களில் (13 பிரதேசங்கள்) 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 512.1 கோடி ரூபாவை பாவனையாளர்கள் மின் கட்டண நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக விநியோக பிரிவு 3 இன் தகவல் அதிகாரி, பிரதி பொது முகாமையாளர், பொறியியலாளர் எம்.எம்.அலியர் வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மேல்மாகாண தெற்கு 2 இல் 319.5 கோடி ரூபாவும் சப்ரகமுவ மாகாணத்தில் 101.3 கோடி ரூபாவும் ஊவா மாகாணத்தில் 91.3 கோடி ரூபாவும்  பாவனையாளர்களால் நிலுவை தொகையாக செலுத்த வேண்டியுள்ளது.

வீட்டுபயோக மின் பாவனையாளர்களின் ஜூன் மாதம் வரை செலுத்த வேண்டிய நிலை தொகை 287.7 கோடி ரூபா காணப்பட்டதுடன் ஜூன் மாதத்துக்கான மின் கட்டணம் 121.6 கோடியாக காணப்பட்டது. தொழிற்சாலை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மின் பாவனையாளர்கள் நிலுவைத் தொகையாக 166.8 கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதுடன் ஜூன் மாத கட்டணமாக 225 கோடி ரூபா செலுத்த வேண்டியுள்ளது.

அரசாங்க மற்றும் அரை அரசாங்க நிறுவனங்கள் 57.6 கோடி ரூபாவை நிலுவை தொகையாக செலுத்த வேண்டியுள்ளதுடன் ஜூன் மாத கட்டணமாக 3.8 கோடி ரூபா செலுத்த வேண்டியுள்ளது. இதேகாலப்பகுதியில் மத வணக்கஸ்தலங்கள் 6 மில்லியன் ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளது. இதனடிப்படையில் விநியோக பிரிவு 3 இல் 1,414,539 பாவனையாளர்கள் காணப்படுவதுடன் இவர்களால் ஜூன் மாதத்தில் மாத்திரம் 214,485,926 அலகு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை 3,510,867,222.71 ரூபா (351.08 கோடி) பெறுமதியானதாகும்.

விநியோக பிரிவு 4 

இலங்கை மின்சார சபையின் விநியோக பிரிவு 4 இல் காணப்படும் மூன்று வலயங்களில் (10 பிரதேசங்கள்) 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் 4,929,599,588 ரூபாவை (492.95 கோடி) பாவனையாளர்கள் மின் கட்டண நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக விநியோக பிரிவு 4 இன் தகவல் அதிகாரி, பிரதி பொது முகாமையாளர், பொறியியலாளர் கலாநிதி டபிள்யூ.ஜயரத்னே வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவற்றில் தென் மாகாணத்தின் 1 இல் 1,352,224,185 ரூபாவும் (135.22 கோடி) தென் மாகாணத்தின் 2 இல் 1,268,506,178 ரூபாவும் (126.85 கோடி) மேல் மாகாணத்தின் தெற்கில் 2,308,869,255 ரூபாவும் (230.88 கோடி) பாவனையாளர்களால் நிலுவைத் தொகையாக செலுத்த வேண்டியுள்ளது. குறித்த நிலுவைத் தொகையானது 2013 இல் 174.59 கோடி ரூபாவாகவும் 2014 இல் 149.67 கோடி ரூபாவாகவும் 2015 இல்; 98.42 கோடி ரூபாவாகவும் 2016 இல் 166.6 கோடி ரூபாவாகவும் 2017 இல் 175.18 கோடி ரூபாவாகவும் 2018 இல் 221.93 கோடி ரூபாவாகவும் 2019 இல் 219.28 கோடி ரூபாவாகவும் 2020 இல் 522.57 கோடி ரூபாவாகவும் காணப்பட்டது.

விநியோக பிரிவு 4 இல் வீட்டு பாவனைக்கான பெப்ரவரி மாத நிலுவை கட்டணமான 2,252,429,050 ரூபா (225.24 கோடி ரூபா) இன்னும் செலுத்தப்படவில்லை. இவை 2013 இல் 898.82 கோடி ரூபாவாகவும் 2014 இல் 947.52 கோடியாகவும் 2015 இல் 882.82 கோடியாகவும் 2016 இல் 995.99 கோடியாகவும் 2017 இல் 1030.03 கோடியாகவும் 2018 இல் 1089.67 கோடியாகவும் 2019 இல் 1178.75 கோடியாகவும் 2020 இல் 1346.77 கோடி ரூபாவாகவும் 2021 இல் 1368.69 கோடியாகவும் காணப்பட்டது.

மின்சார சபை இழப்பினை எதிர்கொண்டுள்ளதா?

தரவுகளை விட அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுவதே தற்போதைய மின்சார நெருக்கடிக்கு பிரதான காரணம் என எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தங்களால் 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் மின் கட்டணத்தை திருத்தியமைக்காததால் மின்சார சபையின் நஷ்டம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் மின்சார சபைக்கு ஏற்படும் இழப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை ஈடுசெய்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராயாமல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரித்து மக்களுக்கு சுமையினை ஏற்படுத்துவதற்கே தீர்மானித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு தடையின்றிய மின்சாரத்தை விநியோகிப்பதற்கு மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் இலங்கை மின்சார சபைக்கு 423.5 பில்லியன் இழப்பு ஏற்படுமென மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒரு அலகுக்கு ஒன்றுக்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். தற்போதைய கட்டணத்தின் அடிப்படையில் ஒரு அலகுக்கு சராசரியாக ரூ.29.14 அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.


இதனால் 423.5 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படும். மின் கட்டண பட்டியலின் தரவுகளின் அடிப்படையில், 6,709,574 பேர் இலங்கை மின்சார சபையின் நுகர்வோராக பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 1,460,828 நுகர்வோர் ஒரு மாதத்திற்கு பூஜ்ஜியத்திலிருந்து 30 அலகு வரை பயன்படுத்துகின்றனர் மற்றும் ஒரு அலகுக்கு 8 ரூபா மாத்திரமே செலுத்துகின்றனர்.

மேலும், 1,683,172 நுகர்வோர் ஒரு மாதத்திற்கு 30 முதல் 60 அலகினை பயன்படுத்துகின்றனர். தற்போது அவர்கள் ஒரு அலகுக்கு 10 ரூபா மாத்திரமே செலுத்துகின்றனர். அத்துடன் 1,702,515 நுகர்வோர் ஒரு மாதத்திற்கு 60 முதல் 90 அலகுகள் வரை பயன்படுத்துகின்றனர் மற்றும் அவர்கள் ஒரு அலகு;கு 16 ரூபா மாத்திரமே செலுத்துகின்றனர். சராசரியாக 1,559,131 நுகர்வோர் மாதாந்தம் 90 முதல் 180 அலகுகளை உபயோகிப்பதாகவும் ஒரு அலகுக்கு 50 ரூபா செலுத்துகின்றனர்.

மேலும் சுமார் 303,928 நுகர்வோர் 180 அலகுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதற்காக அவர்கள் ஒரு அலகுக்கு 75 ரூபாவை செலுத்துகின்றனர். எனவே உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மின்சாரத்திற்கு சராசரி விலைக்கு மேல் செலுத்தும் அதே வேளையில், குறைந்த பிரிவினருக்கு அதிக மானியம் வழங்கப்படுவதாகவும் இதனால் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இலங்கை மின்சார சபையானது மின் உற்பத்தியினாலும் மக்களுக்கு மானியம் வழங்குவதாலும் மாத்திரம் அதிக இழப்புகளை எதிர்கொள்வதாக கூறுவது வேடிக்கையானது. அரசாங்கத்தின் தவறான கொள்கை தீர்மானங்களும் இதற்கு முக்கிய காரணமாகும். அரசியல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டு நியமனங்கள், வருமானத்தில் அதிக தொகையினை ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு செலவிடுதல் மற்றும் ஊழியர்களுக்கான இதர செலவுகள், பாவனையாளர்களிடமிருந்து நிலுவை கட்டணத்தை அறவிட நடவடிக்கை எடுக்காமை என்பனவும் இவற்றில் உள்ளடங்கும். (இவற்றில் அரச நிறுவனங்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவர்) எனவே இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் இவற்றை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பது தீர்வாகாது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக