'பொதுமக்கள் முகங்கொடுப்பதற்கு நேரிட்டுள்ள பொருளாதார சிரமங்களைக் குறைப்பதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல்' எனும் தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கான முன்மொழிவுகள் 2022 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. குறித்த முன்மொழிவுகளில் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்குதல் தொடர்பான யோசனை வர்த்தக அமைச்சரின் தலைமையிலான குழு கவனத்தில் கொண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது. அப்பரிந்துரைகளின் பிரகாரம் அடையாளம் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
எனினும் வாழ்க்கைச் செலவை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்கப்படாமல் அவர்களை அவஸ்தைக்குள்ளாகும் வகையில் கோதுமை நிவாரணம் வழங்கப்பட்டதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அத்துடன் தொடர்ச்சியாக நிலவிய அரசியல் நெருக்கடிகளின் காரணமாக குறித்த மானிய திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. தொடர்ந்தும் அவற்றை முன்னெடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய முறையில் கோதுமை மா வழங்கும் திட்டம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிடமிருந்து (தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டுமான இராஜாங்க அமைச்சு - SMECHC1/2/4/4/RTI-2022) பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த கட்டுரை எழுதப்படுகின்றது.
தென் மாகாணத்தில் 21 பெருந்தோட்டங்களைச் சேர்ந்த 2844 குடும்பங்களுக்கு 42,660 கிலோ கோதுமை மாவும் சப்ரகமுவ மாகாணத்தில் 83 பெருந்தோட்டங்களை சேர்ந்த 9101 குடும்பங்களுக்கு 136,515 கிலோ கோதுமை மாவும் மேல் மாகாணத்தில் 28 பெருந்தோட்டங்களை சேர்ந்த 3026 குடும்பங்களுக்கு 45,390 கிலோ கோதுமை மாவும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் (தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டுமான இராஜாங்க அமைச்சு) மாதாந்தம் 28.91 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் 2022 ஜனவரி மாதம் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 2022 ஜனவரி மாதம் விநியோகிக்கப்பட்ட கோதுமை மாவின் சந்தை பெறுமதி 139,143,450 ரூபாவாகும். (அப்போதைய சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் பொதுவான விலை 145 ரூபாவாக காணப்பட்டது. இதனடிப்படையில் விநியோகிக்கப்பட்ட மொத்த கோதுமை மாவின் அளவு 959,610 கிலோ கிராம் ஆகும்.)
இதேவேளை விநியோகிக்கப்பட்ட கோதுமை மாவின் மொத்த நிவாரணப் பெறுமதி 62,374,650 ரூபாவாகும். (ஒரு கிலோ கோதுமை மாவின் பொருட்டு தோட்ட ஊழியர்களின் குடும்பத்துக்கு உரித்தாகும் நிவாரண விலை 65 ரூபாவாகும்.)
கோதுமை மா நிவாரண நிகழ்ச்சித் திட்டம் வர்த்தக அமைச்சின் கீழுள்ள ‘வீட்டு உணவு பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட நிவாரணப்பொதி’ நிவாரண நெலவு தலைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறித்த செலவு தலைப்பின் கீழ் 15 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த திட்டம் 2022 ஜனவரி மாதம் மாத்திரம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தற்போது பெற்றுக்கொள்ளும் வருமானத்துக்கு ஏற்ப குடும்ப செலவுகளை சமாளிப்பதில் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். தற்போது ஒரு கிலோ கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டு 250 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய முறையில் கோதுமை வழங்கப்பட்டிருந்தால் அது அவர்களுக்கு உதவியாக அமைந்திருக்கும். கோதுமை மாவினை மானியமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவது அவர்களை அவமானப்படுத்தும் விடயமாக பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் பெருந்தோட்ட குடும்பங்களின் உணவுத் தேவையில் கோதுமை மாவும் பங்கு வகிக்கின்றதென்பதை மறுக்கமுடியாது.
தற்போதைய நிலைமையில் புதிய நிவாரணத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை. தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களில் அரிசி மாத்திரமே பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பால்மா வழங்கப்படுவதிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இலவச பொருட்களையே முறையாக பகிர்ந்தளிக்காத அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பாரிய சலுகையினை வழங்குமென எதிர்பார்க்க முடியாது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் கோதுமை மா மானியம் ஓரளவுக்கு தொழிலாளர்களுக்கு கைகொடுத்தது என்பதையும் மறுக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக