கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 மார்ச், 2021

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்கு எவ்வாறு நிதி பெறப்படுகின்றது?


பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதால் பெரும் இழப்பை எதிர்நோக்க வேண்டியேற்படுமென தெரிவிக்கின்றன. ஆனால், பல கோடிகளில் வரி செலுத்தி பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தை பராமரிப்பதற்கான காரணம் என்ன? ஒரு நிறுவனத்தின் மூலம் எவ்வித இலாபமும் கம்பனிகளுக்கு இல்லாமல் அதற்கு கோடிகளை செலுத்த வேண்டிய தேவை இல்லையே. எனவே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் பெருந்தோட்ட மக்களை விட பெருந்தோட்ட நிறுவனங்களே அதிக இலாபத்தை பெறுகின்றார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. 26 பெருந்தோட்ட நிறுவனங்களும் கோடிகளில் வரி செலுத்தி நிதியத்தை பாதுகாப்பதற்கான காரணம் என்ன? 2015 - 2020 வரையான காலப்பகுதியில் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களினால் சுமார் 57.5 கோடி ரூபா (576,195,078.05) வரியாக செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 5 வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்படும் அமைச்சரவையில் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வகையில் ஒரு அமைச்சுப்பதவி வெற்றிபெரும் கட்சிகளுக்கு வழங்கப்பவது வழமையாகும். ஆனால் அமைச்சின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்களை கொண்டு மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிகின்றதா என்பது தொடர்பாக நீண்டகாலமாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களை தடையின்றி முன்னெடு;ப்பதற்காக 2018 ஆம் ஆண்டு பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அதிகார சபை உருவாக்கப்பட்டது. ஆனால் அவை இன்னும் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

தொடர்ச்சியாக மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினூடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முகாமைத்துவம் பெரும்பாலும் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் தங்கியிருப்பதால் அவற்றின் மூலம் சுயாதீனமாக மக்களுக்காக செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது. அத்தோடு அமைச்சால் இலகுவாக குறித்த நிதியத்தை தவிர்த்து அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது.

இந்நிலையிலேயே 2018 ஆம் ஆண்டு பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அதிகார சபை தோற்றம் பெற்றது. இது மலைநாட்டு மக்களுக்கு சேவை செய்யும் முதல் அரச நிறுவனமாக அமைந்திருக்கின்றது. அதேவேளை அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமானது, பெருந்தோட்ட கம்பனிகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அரச,தனியார் நிறுவனமாகவே காணப்படுகின்றது.

2020 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 2187/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியினூடாக பெருந்தோட்ட வீடமைப்பு நம்பிக்கை பொறுப்பு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழுள்ள நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ள போதிலும், 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பாக பதிவு செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ள பிணையால் வரையறுக்கப்பட்டுள்ள கம்பனியொன்றாவதுடன், இந்த அகவிதியின் 44 ஆம் பந்திக்கமைய நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்படும் பணிப்பாளர்களிடையே ஐவர் அரச அமைச்சர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது பெருந்தோட்டப் பகுதிகளில் அமைச்சால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் பெரும்பாலும் பெருந்தோட்ட மனிதவள நம்பிக்கை நிதியத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தொடர்ந்தும் அந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகளில் பாரிய குறைபாடுகள் இருப்பதை ஆய்வுகள் சுட்டிகாட்டுகின்றன. பெருந்தோட்ட கம்பனிகளின் ஆதிக்கத்தில் செயற்படும் இந்நிறுவனம் மலையக மக்கள் நன்மையை பெற்றுவிடக்கூடாதென்பதில் தீவிரமாக இருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்ட மனிதவள நம்பிக்கைப் பொறுப்பினூடாக அதிகார தத்துவமற்ற கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பில் 2018 ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்கூடாக அமைச்சின் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நிதியத்தின் செலவுகள் மற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அனைத்தும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் செலுத்துகின்ற வரியின் மூலமே வழங்கப்படுகின்றது. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்கு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் செலுத்துகின்ற வரி தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சிடம் பெற்றுக்கொண்ட தகவலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது 26 பெருந்தோட்ட நிறுவனங்கள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்கு வரி செலுத்துகின்றன. அகலவத்த, அக்கரப்பத்தனை, பலாங்கொட, சிலாபம், எல்பிட்டிய, ஹப்புகஸ்தன்ன, ஹொரண, காஹவத்த, கேகாலை, களனிவெளி, கொட்டகலை, குருநாகல, மடுல்சீமை, மல்வத்த, மஸ்கெலியா, மதுரட்ட, நமுனுகுல, புஸ்ஸலாவ, தலவாக்கலை, உடப்புஸல்லாவ, ஹட்டன், வட்டவளை ஆகிய 23 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்க பெருந்தோட்டங்களான மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், எல்கடுவ பெருந்தோட்டம் உள்ளடங்களாக 26 பெருந்தோட்டங்கள் பெருமளவான நிதியினை வரியாக செலுத்துகின்றன. 

அதன்படி 2015 ஆம் ஆண்டு 19 பெருந்தோட்ட நிறுவனங்களின் மூலம் 84,194,162.05 ரூபாவும் 2016 ஆம் ஆண்டு 19 பெருந்தோட்ட நிறுவனங்களினால் 71,762,689 ரூபாவும் 2017 ஆம் ஆண்டு 22 பெருந்தோட்ட நிறுவனங்களினால் 110,228,946 ரூபாவும் 2018 இல் 23 பெருந்தோட்ட நிறுவனங்களினால் 115,849,843 ரூபாவும் 2019 இல் 23 நிறுவனங்களினால் 107,729,127 ரூபாவும் 2020 ஆம் ஆண்டு 23 பெருந்தோட்ட நிறுவனங்களினால் 86,430,311 ரூபாவும் (30.10.2020 வரையில்) வரியாக செலுத்தப்படுகின்றன. இவ்வாறு பெருந்தோட்ட கம்பனிகளால் செலுத்தப்படுகின்ற வரியின் மூலம் செயற்படுகின்ற பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முகாமைத்துவ கட்டணமாக பெருந்தொகையினை அமைச்சு செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. இதனால் மக்களின் பொது நிதியானது, தனியார் நிறுவனங்களினால் சூறையாடப்படும் நிலை தோன்றியுள்ளது.

இதனாலேயே பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு தனியானதொரு அரச நிறுவனத்தின் தேவை ஏற்பட்டது. அதற்காக 2018 ஆம் ஆண்டு பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அதிகார சபை உருவாக்கப்பட்டும் இன்னும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதேவேளை கோடிகளில் வரி செலுத்தி நிதியத்தின் செலவுகளை கவனித்துக்கொள்ளும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவினை வழங்குவதில் பாரிய நட்டம் ஏற்படுமென்பது கட்டுக்கதை.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களுக்கு இணங்க 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு அமைச்சு சார்பாக கடன் நிதி சேகரிக்கப்பட்டு அமைச்சுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக இருந்த நிலுவை ரூபா 33.2 மில்லியன் பெறுமதியான தொகையாகும். அதற்கு மேலதிகமாக 2018 ஆம் ஆண்டின் போது ரூபா 4.9 மில்லியன் பெறுமதியான தொகை சேகரிக்கப்பட்டு இருந்த போதிலும் மீளாய்வு ஆண்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் அமைச்சுக்கு செலுத்தப்பட்டிருந்த நிதி ரூபா 7.2 மில்லியன் மட்டுமேயாகும். அதற்கு இணங்க நிதியத்தின் மூலம் அறவிடப்பட்டிருந்த போதிலும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு அமைச்சுக்குச் செலுத்தப்படாதுள்ள தொகையின் பெறுமதி ரூபா 31 மில்லியன் ஆகும்.

எனவே பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியமானது, முழுமையாக அரசாங்கத்தின் நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் அல்லது அமைச்சின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அதிகார சபையின் மூலம் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டங்களுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பெருவாரியான மக்கள் பணம் தனிப்பட்ட நிறுவனத்துக்கு செல்லும் நிலையை தடுத்தாலே மலையகத்தில் மேலும் பல அபிவிருத்திகளை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக