கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 மார்ச், 2021

ஹட்டன் கல்வி வலயம்: தமிழ் மொழிமூல பாடசாலை பெறுபேறுகளின் அடைவில் காணப்படுகின்ற சவால்கள்


நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்கள் அதிக தமிழ் மாணவர்களை கொண்ட பிரதேசமாக இருந்து வருகின்றது. குறிப்பாக ஹட்டன் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த.சாதாரணதர பெறுபேறுகள் மற்றும் பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பான விடயங்கள் பேசு பொருளாக இருந்தன. இறுதியாக ஹட்டன் கல்வி வலயயத்தின் க.பொ.த.சாதாரணதர பெறுபேறு 65.55 வீதம் என்றளவில் அமைந்திருந்தது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி ஹட்டன் கல்வி வலயத்தின் தமிழ் மொழி மூல கல்வி நிலைமைகள் தொடர்பில் வலயக்கல்வி காரியாலயத்திலிருந்து சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவற்றில் மாணவர் இடைவிலகள் மற்றும் தமிழ்மொழி மூல க.பொ.த.சாதாரணதர மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளின் அடைவில் காணப்படுகின்ற சவால்கள் மற்றும் போசணை குறைபாடு போன்றன பிரதான விடயங்களாக இருக்கின்றன. இவை பெறுபேறுகளின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன.

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 இல் 36990 மாணவர்களும் 2016 இல் 37656 மாணவர்களும் 2017 இல் 37815 மாணவர்களும் 2018 இல் 38091 மாணவர்களும் 2019 இல் 37860 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். அதேவேளை 2017 இல் 940 அதிபர், ஆசிரியர் வெற்றிடங்களும் 2018 இல் 768 வெற்றிடங்களும் 2019 இல் 632 வெற்றிடங்களும் காணப்படுகின்றன. 

ஹட்டன் கல்வி வலயத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் தரம் 1க்கான பாடசாலை அனுமதியைப் பொறுத்தவரையில் அநேகமாக சகல மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். எனினும் ஒரு சில பெற்றோர்களின் அக்கறையின்மை காரணமாக ஓரிரு மாணவர்கள் சேர்க்கப்படாமல் இருந்துள்ளனர் என்றும் வருடாந்த ஆய்வுகளின் மூலம் இக்குறையும் நிவர்த்தி செய்யப்பட்டு அவ்வாறான மாணவர்கள் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதன்படி 2015 இல் 3336 மாணவர்களும் 2016 இல் 3276 மாணவர்களும் 2017 இல் 3455 மாணவர்களும் 2018 இல் 3373 மாணவர்களும் 2019 இல் 3069 மாணவர்களும் தரம் 1க்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


ஆனால் தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்படுகின்ற சகல மாணவர்களும் க.பொ.த.சாதாரணதரம் வரை கல்வி கற்கின்றார்கள் என்ற எந்த நிச்சயமும் இல்லை. குறிப்பாக வெளி மாவட்ட அல்லது வேறு வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு செல்லுதல் அல்லது பாடசாலையிலிருந்து இடைவிலகுதல் என்பவற்றின் மூலம் அவற்றில் குறைவு ஏற்படுவதற்கு அதிக வாய்புகள் உண்டு. இந்நிலையில் ஹட்டன் கல்வி வலய க.பொ.த.சாதாரணதர பெறுபேறுகள் தொடர்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்விக்கு வித்திடுகின்ற சாதாரணதர அடைவுகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. நுவரெலியா மாவட்டமானது, போசணைக் குறையுள்ள மாவட்டங்களில் பிரதானமாகும். இக்கால கட்டத்திலிருக்கும் மாணவர்களுக்கு 1-5 வயதாயிருக்கும் போது போதுமான போசாக்குணவு வழங்கப்படாமை காரணமாக பிள்ளைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போதைய பெறுபேறுகளில் பெரிதும் ஆளுகை செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குடும்ப வன்முறைகள், சிறுவர் து~;பிரயோகம் போன்ற ஏனைய காரணிகளும் தாக்கத்தை செலுத்தியுள்ளன. இருப்பினும் போதுமான நடவடிக்கைகளின் மூலம் இப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 2019 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்தில் காணப்படும் 15 கல்வி வலயங்களில் ஹட்டன் கல்வி வலயம் 13 ஆவது இடத்தினையே பெற்றிருந்தது. தேசிய மட்டத்தில் காணப்படும் 99 கல்வி வலயங்களில் 82 ஆவது இடத்தில் ஹட்டன் கல்வி வலயம் காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தினை விடவும் மிகவும் பின்தங்கிய, வளப்பற்றாக்குறையுடன் இயங்குகின்ற கல்வி வலயங்கள் வேறு மாவட்டங்களில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றைவிடவும் பின்தங்கிய நிலையில் ஹட்டன் கல்வி வலயம் இருப்பது வேதனைக்குரியது.

2015 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 2095 மாணவர்களில் 1182 பேர் உயர்தரத்திற்கு தகுதி (56 வீதம்) பெற்றுள்ளனர். 2016 இல் 2259 பேரில் 1326 பேர் 58 வீத சித்தியுடனும் 2017 இல் 2259 பேரில் 1640 பேர் 72 வீத சித்தியும் 2018 இல் 2379 பேரில் 1616 பேர் 67 வீத சித்தியுடனும் 2019 இல் 2676 பேரில் 1670 பேர் 62 வீத சித்தியுடனும் உயர்தரத்துக்கு தெரிவு செய்யப்பட்;டிருந்தனர். 

அவ்வாறெனின் உயர்தரத்து தகுதி பெறாத ஏனைய மானவர்களின் நிலை என்ன? 2015 - 2019 வரையான காலப்பகுதியில் உயர்தரத்துக்கு தகுதி பெறாத 4234 பேரில் 20 வீதமானோரே 13 வருட உத்தரவாத கல்வித்திட்டத்தின் கீழ் உயர்தர தொழிற்கல்வி பிரவேசத்திற்கான அனுமதி பெற்று இரண்டு பிரதான பாடசாலைகளான நோர்வூட் த.ம.வி. மற்றும் சென்.ஜோசப் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர். அதிகமாக 2019 இல் 1006 மாணவர்கள் க.பொ.த.சாதாரணதரத்தில் சித்தியடையவில்லை.  ஏனையோரில் சிலர் வுஏவுஊஇ ஏவுயு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களாகிய Nயுஐவுயு போன்ற அமைப்புகளில் கல்வி கற்றாலும் முறைசார் மற்றும் முறைசாரா கல்வியினை பெற்றுக்கொள்ளாதவர்களின் நிலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை.

2014 ஆம் ஆண்டுக்கு முன் ஹட்டன் கல்வி வலய தமிழ்மொழி மூல பாடசாலைகளில் கட்டாய கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டிய 5 - 16 வயதிற்குட்பட்ட மாணவர்களில் பல்வேறு காரணங்களினால் பெருந்தொகை மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். அதன்படி 2015 இல் 686 பேரும் 2016 இல் 543 பேரும் 2017 இல் 471 பேரும் 2018 இல் 428 பேரும் 2019 இல் 278 பேரும் பாடசாலை கல்வியைவிட்டு இடைவிலகியுள்ளனர். 

ஹட்டன் கல்வி வலய பெருந்தோட்டப் பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல்களுக்கு பெற்றோரின் வருமை நிலை மற்றும் வெளிநாடு சென்ற பெற்றோர், மாணவர்களின் போசணை குறைபாடும் மெல்ல கற்போரும் சுகயீனமுற்ற மாணவர்கள், வீட்டுச்சூழலும் சமூகச்சூழலும் பெற்றோர், பாதுகாவலரின் கவனயீனம், பாடசாலைகள் பல கவர்ச்சிகரமான சூழலை கொண்டிராமை போன்றன பிரதான காரணங்களாக இருக்கின்றன. மேற்படி காரணங்களினால் ஆரம்ப பிரிவு வகுப்புகளில் இடைவிலகல் மிகவும் குறைவாகவும் தரம் 6 - 11 வகுப்புக்களில் இடைவிலகல்கள் அதிகமாகவும் காணப்படுகின்றன. 

தரம் 5 வரை ஆரம்ப பாடசாலைகளில் கல்வி கற்று தரம் 6க்கு புதிய பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் சந்திக்கின்ற சவால்கள் சில மாணவர்களின் இடைவிலகளுக்கு காரணமாகின்றன. பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் போதுமானதாக இல்லாமை தங்கள் பிள்ளைகளை சுகாதார ரீதியாக, கல்வி ரீதியாக முறையாக பராமரிக்க முடியாமை முக்கிய காரணியாகும். சில பாடசாலைகளில் காணப்படும் பொருத்தமற்ற கற்றல் சூழல், போதுமான வளங்கள் இல்லாமை குறிப்பாக விளையாட்டு மைதானம் போன்ற பிரதான வளங்கள் மாணவர்களின் இணைபாடவிதான செயற்பாடுகளை தொடர்ந்து செயற்படுத்த தடையாகவிருக்கிறது. 

மேலும் பாடசாலை அபிவிருத்தி வளங்கள் நிதி ரீதியாக வளமாயில்லாமை காரணமாக அதிபர்கள் பாடசாலை கற்றல் சூழலை மாணவர்களுக்கு கவர்ச்சிகரமாக்க சந்தர்ப்பமில்லாமல் போயுள்ளதாகவும் எவ்வாறாயினும் மாணவர்களின் தொடர்ச்சியான வரவை அதிகரிக்க பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் கட்டாயக் கல்விக்குழு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளமை, ஆரம்பகல்வி மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்கப்படுகின்றமை, மாணவர் விடுமுறை அட்டை அறிமுகம், அதிபர்ஈ ஆசிரியர்களின் வகைக்கூறலை செயலாற்றுகை மதிப்பீட்டில் சரியாக கணிப்பிட்டு ஆலோசனை வழிகாட்டல் வழங்கப்படுகின்றமை, வலய மட்டத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பாசறைகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்விப் பணிமனை குறிப்பிட்டுள்ளது. 

மேற்படி விடயங்களின் மூலம் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளில் நிலவும் வளப்பற்றாக்குறைகள், பெற்றோரின் கவனயீனம், வெளிநாடு செல்லும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை இடைவிலகல்களை குறைப்பதற்கான முறையான திட்டங்கள் வகுக்கப்படாமை போன்றன முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் ஹட்டன் கல்வி வலயத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இன்றுவரையும் பூர்த்தி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றை ஆரம்பிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை தமிழ் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் சகோதர மொழிமூல பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கு காரணம் பாடசாலை அதிபர்களா அல்லது கல்வி வலய அதிகாரிகளா என்பது தொடர்பில் இன்னும் போதிய விளக்கமில்லை. ஆனால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட வளங்கள் முறையாக பயன்படுத்தப்படாமல் தாரைவார்க்கப்பட்டுள்ளமை என்பது முக்கியமானதாகும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக