தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுக்கு கீழாக செயற்படுகின்ற பிரஜாசக்தி திட்டத்துக்கு பணிப்பாளர் நாயகமாக பரத் அருள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் தோட்டப்புற பகுதிகளில் உருவாக்கப்பட்ட 46 பிரஜாசக்தி நிலையங்களின் கட்டுமான செலவு, உட்கட்டமைப்பு செலவுகள், மாதாந்தம் அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி விபரங்கள் மற்றும் ஊழியர்களின் உள்ளடக்கம் போன்ற தகவல்களை முன்னைய மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில் கோரிய போது எவ்வித தகவல்களும் இல்லையென பதில் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் முரண்பாடுகள் காரணமாக அமைச்சுக்கள் மாற்றம் பெறும் போது ஆவணங்களை இல்லாமலாக்குவது தற்போது இயல்பான விடயமாக மாறிப்போய்விட்டது.
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவும் (RTI/Appeal/1554/19) குறித்த தகவல்களை வழங்குவதற்கு பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தகவல்கள் அமைச்சில் இல்லையென்றே தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகின்றது. அவ்வாறாயின் பிரஜாசக்தி திட்டம் தொடர்பான ஆவணங்கள் எங்கே சென்றன? பிரஜாசக்தி நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைச்சுக்களின் பெயர்களில் காலத்துக்கேற்ற வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் அமைச்சுக்களின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. புதிதாக பெருந்தோட்ட வலயங்களுக்கான அதிகார சபை உள்ளடக்கப்பட்டது. நிலைமை இவ்வாறு இருக்க பிராஜாசக்தி நிலையம் தொடர்பில் எவ்விதமான தகவல்களுமே இல்லையென்று கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஒரு பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளமை கட்சி நியமனமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
பிரஜாசக்தி நிலையமானது மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்பட்டது. ஆனால் அமைச்சுக்கள் மாற்றம் பெறும்போது (முன்னர் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு) குறித்த விடயங்கள் தொடர்பான ஆவணங்கள் மாயமாகிப் போகின்றன. அவ்வாறு ஆவணங்களை மறைக்கும் நிலை ஏற்படுவதாயின் அவற்றில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே ஊழலை மறைக்கவே ஆவணங்களும் மறைக்கப்படுகின்றன. அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்கள் குறைந்தது 10 வருடங்களுக்கு உட்பட்ட ஆவணங்களை பராமரிப்பது கட்டாயமாகும். தற்போது ஆவணங்கள் கணினிமயப்படுத்தப்படுவதால் பல வருடங்களுக்கான ஆவணங்களை சேமிப்பதில் பாரிய சிக்கல்கள் இருக்கப் போவதில்லை.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரதான கட்சிகளுக்கு கடந்த ஆட்சிக்காலம் முதல் இன்றுவரை அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு பதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அமைச்சுக்களானது நாடு முழுவதையும் பிரதிநித்துவப்படுத்தக்கூடிய நிறுவனங்களை உள்ளடக்கியிருந்தது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மலையக மக்களுடன் தொடர்புடைய நிறுவனங்களை மாத்திரம் கொண்டு தனி அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. 2015 - 2020 வரையான காலப்பகுதியில் மூன்று அமைச்சு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றின் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்த நிறுவனங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.
பாராளுமன்ற சட்டம் 19ஃ2005 இன் கீழ் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் கீழ் இயங்கிய ஹட்டன் தொழில் பயிற்சி நிலையம், இறம்பொடை கலாசார நிலையம், நோர்வூட் விளையாட்டுத் தொகுதி மற்றும் 44 பிரஜாசக்தி நிலையங்கள் அனைத்தும் 2016.07.02 ஆம் திகதிய அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சின் 2018 ஆம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே அமைச்சின் மூலமே பிரஜாசக்தி நிலையங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லையென கூறப்பட்டிருந்தது. பிரஜாசக்தி நிலையமானது, 2005 இல் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழும், 2006 - 2009 வரை இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அமைச்சின் கீழும், 2010 - 2014 வரை கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழும், 2015 இல் பொருளாதார அபிவிருத்தி, நலன்புரி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழும், 2015 - 2019 வரை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் கீழும் அதன் பின்னர் 2019 இல் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழும், 2020 முதல் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுக்கு கீழும் செயற்பட்டு வருகின்றது.
2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் 46 பிரஜாசக்தி நிலையங்கள் காணப்படுவதாகவும் மேலும் 35 புதிய பிரஜாசக்தி நிலையங்கள் 2014 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படுமென 2013 ஆம் ஆண்டு காலநடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 46 பிரஜாசக்தி நிலையங்கள் செயற்படுத்தப்பட்டன. தற்போது 44 நிலையங்களே இயங்கி வருகின்றன. 2006 - 2013 வரையான காலப்பகுதியில் 36,140 மாணவர்கள் குறித்த நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு பயிற்சி பெற்றுள்ளனர். 2013 ஜனவரி - டிசம்பர் வரையில் 3584 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறெனின் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பிரஜாசக்தி நிலையங்களில் இரண்டுக்கும் புதிதாக உருவாக்கப்படவிருந்த 35 பிரஜாசக்தி நிலையங்களுக்கும் என்ன நடந்தது?
அத்துடன் 2011 - 2021 வரையான பத்து வருட காலப்பகுதியில் 450 பிரஜாசக்தி நிலையங்களை நிறுவுவதற்கும் 2011 இல் 35 புதிய நிலையங்களை உருவாக்குவதற்கும் 2011.05.04 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இத்திட்டத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான ஆவணங்கள் இல்லையென கூறப்படுகின்றது. தற்போதைய பிரஜாசக்தி திட்டத்துக்கான புதிய பணிப்பாளர் நாயகம் இதற்கு பதில் வழங்குவாரா?
பிரஜாசக்தி கருத்திட்டமானது மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் முக்கியமானதாகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலின் விரிவான பயன்பாட்டின் ஊடாக பின்தங்கிய கிராமிய சமூகத்தின் பரந்துபட்டதும், முழுமையானதும், ஒட்டுமொத்தமானதுமான சமூகப் பொருளாதார அபிவிருத்தியை அடைவதை பிரஜாசக்தி கருத்திட்டம் நோக்கமாக கொண்டிருந்தது. முதலாவது பிரஜாசக்தி நிலையமானது, 2006 ஆம் ஆண்டு வனராஜா தோட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் 2006 ஆம் ஆண்டு 27 பிரஜாசக்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டதுடன், 2007 இல் 37 ஆக அதிகரிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு 45 ஆகவும் 2011 இல் 45 ஆகவும் பின்னர் 46 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அவற்றில் ஹட்டன் பிராந்தியத்தில் எட்டு நிலையங்களும் நுவரெலியா பிராந்தியத்தில் ஒன்பது நிலையங்களும் பதுளை பிராந்தியத்தில் 10 நிலையங்களும் கண்டி பிராந்தியத்தில் ஏழு நிலையங்களும் கேகாலை பிராந்தியத்தில் 4 நிலையங்களும் இரத்தினபுரி பிராந்தியத்தில் 5 நிலையங்களும் காலி பிராந்தியத்தில் 4 நிலையங்களுமாக மொத்தம் 46 நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்துக்காக 180 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றில் இரண்டு நிலையங்கள் தற்போது செயற்பாட்டில் இல்லை. ஒவ்வொரு நிலையங்களும் 1 ஹெக்டெயர் நிலப்பரப்பில் (2.25 ஏக்கர்) உருவாக்கப்பட்டன. தற்போது பிரஜாசக்தி நிலையங்களைத் தவிர்த்து ஏனைய நிலப்பகுதிகள் தரிசு நிலங்களாக பயனற்றவகையில் கிடக்கின்றன.
2011 ஆம் ஆண்டு மேலதிகமாக 35 புதிய பிரஜாசக்தி நிலையங்களை அமைப்பதற்கு 170 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அத்திட்டம் 2014 ஆம் ஆண்டு நிறைவுக்கு வருமென கூறப்பட்டது. ஆனால் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. 170 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்ததென்பது தெரியாது. அதற்கான ஆவணங்களும் சம்பந்தப்பட்ட அமைச்சில் இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு யார் பதில் வழங்குவது? 170 மில்லியன் ரூபா மக்கள் பணத்துக்கு என்ன நடந்தது?
அத்தோடு 2010 - 2015 வரையில் முன்னெடுக்கப்பட்ட நவசக்தி திட்டம், மாடி லயன் அபிவிருத்தி திட்டம், பெருந்தோட்ட சிறுவர்களுக்காக உலக வங்கியின் மூலம் முன்னெடுக்கப்பட்ட முன்பள்ளி அபிவிருத்தி திட்டம் போன்ற பல மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் தொடர்பில் எவ்விதமான ஆவணங்களும் அமைச்சிலும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திலும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திலும் இல்லையென்றால் அவற்றுக்கு என்ன நடந்தது? அவற்றில் முறைகேடுகள் இடம்பெற்றதால் மறைக்கப்பட்டதா? இதேவேளை சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்த முறைபாட்டுக்கு என்ன நடந்தது? குறித்த நிறுவனத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே முறைகேடுகளை மறைக்கவே ஆவணங்களும் மறைக்கப்பட்டுள்ளதாக எம்மால் கருத வேண்டியுள்ளது.
பிரஜாசக்தி கருத்திட்டமானது, பெருந்தோட்ட மற்றும் கிராமிய சமூகத்தின் கல்வி, சமூக, கலாசார மற்றும் சிவில் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கின்ற பணியை மாத்திரம் மேற்கொள்ளவில்லை. மாறாக, ஒரு சமூகத்தை ஒன்றுபட்ட தகவல்களை நன்கறிந்த மற்றும் தன்னிறைவுள்ள சமூகமாக நிலைமாற்றுவதற்கு தொழில்நுட்பவியல் பயன்பாட்டை ஊக்கியொன்றாகப் பிரயோகிப்பதை இலகுபடுத்தவும் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் பல பிரஜாசக்தி நிலையங்கள் வளப்பற்றாக்குறையுடனும் எவ்வித அபிவிருத்திகள் இன்றிய நிலையிலுமே இருப்பதை தற்போதும் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் புதிய பிரஜாசக்தி நிலையங்களை உருவாக்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணங்களும் எங்கே சென்றது தொடர்பாகவும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக