கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

19 பிப்ரவரி, 2021

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை?


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் திறைசேரி செயலாளரின் அழுத்தத்தின் பேரில் இராஜினாமா செய்து கடந்த 5 ஆம் திகதியுடன் ஒருமாத காலம் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. ஆணைக்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஒரு மாத காலத்துக்குள் புதிய உறுப்பினர்களை ஆணைக்குழுவுக்குப் பொறுப்பான அமைச்சின் அமைச்சர் நியமிக்க வேண்டுமென சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் நியமனங்கள் இடம்பெறவில்லை. தற்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது பிரதமரின் அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. எனவே ஆணைக்குழு உறுப்பினர்களை பெயரிட்டு பாராளுமன்ற பேரவையின் அனுமதிக்கு அனுப்ப வேண்டியது பிரதமரின் பொறுப்பாகும்.

இலங்கையின் புதிய ஜனாதியின் தேர்வுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மறுசீரமைப்புகளில் 20 ஆம் திருத்தம் முக்கியமானதாகும். 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தும் ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு உட்பட்டவையாக மாற்றம் பெற்றிருந்தன. அவற்றில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்கும் செயற்பாடுகள் அதிகம் கவனத்தை ஈர்த்திருந்தன. பிரதமரின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் செயலாளரினால் ஆணைக்குழுவை நீக்கும் தீர்மானம் எழுத்து மூலமாக திறைசேரி, தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆணைக்குழு உறுப்பினர்கள் இராஜினாமா செய்திருந்தனர்.

ஆணைக்குழுவின் நீக்கத்துக்கு முக்கிய காரணம் வினைத்திறனற்ற செயற்பாடுகளே என கூறப்பட்டது. மின்சார சபையின் செயற்பாடுகளுக்கு இடையூராக காணப்பட்டமையால் பல திட்டங்களை இலங்கை மின்சார சபையினால் அமுல்படுத்த முடியாமல் போனதாக கூறப்பட்டது. ஆனால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்த பல திட்டங்களை இலங்கை மின்சார சபை புறக்கணித்து செயற்பட்டிருக்கின்றமை இங்கு கவனத்துக்கு உரியதாகும். ஆணைக்குழு அனுமதியளித்த திட்டங்களை நிறைவேற்றாமல் தனியார் மின்சார கொள்வனவிலேயே மின்சார சபை கவனம் செலுத்தியதால் அதிகளவிலான பொதுமக்களின் பணம் விரயமாகும் நிலையே தோன்றியது. 1841 மெகாவாட் அவசர மற்றும் நீண்டகாலம் அல்லாத மின்சார கொள்வனவிற்காக ஒப்புதல் கோரி 16 முன்மொழிவுகள் 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் ஆணைக்குழுவுக்கு கிடைத்தன. அதில் 14 முன்மொழிவுகளுக்கான அனுமதி முற்றாக நிராகரிக்கப்பட்டது. அவ்வாறு நிராகரிக்கப்பட்ட முன்மொழிவுகள் மூலம் அதிகமான மக்கள் பணம் சேமிக்கப்பட்டிருந்தது.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அவசாரகால மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு தேவையான முதன்மை ஒப்புதல் மற்றும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்குதல் ஆகிய இரு சந்தர்ப்பங்களில் ஒப்புதல் வழங்குகின்றது. விலை மனுக்களை கோரி, நீண்டகாலம் அல்லாத மின்சார கொள்வனவு தொடர்பில் முன்வைக்கும் யோசனைகளின் போது விலை மனு கோருவதற்கான அனுமதி மற்றும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அனுமதியை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கும்.

அவசரகால மற்றும் நீண்டகாலம் அல்லாத மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்புதல் கோரி 16 முன்மொழிவுகள் 2016-2020 வரையான காலப்பகுதியில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்ததுடன்,அதில் 14 முன்மொழிவுகளுக்கான அனுமதி முற்றாக நிராகரிக்கப்பட்டது. மேலும் இரு முன்மொழிவுகளுக்கான முதன்மை ஒப்புதல் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்ட போதிலும் அந்த முன்மொழிவுகமைய மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கான ஒப்புதல் குறித்த நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவில்லை.

55 மெகாவாட் அவசர மின்சார கொள்வனவிற்கான முன்மொழிவு முதன்மை ஒப்புதலுக்காக 2016.04.05ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டதுன், அக்காலப்பகுதிவரை அவசர மின்சார கொள்வனவிற்கான தேவை காணப்படாத நிலையில் 2016.04.22ஆம் திகதி அம்முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.

20 மெகாவாட் அவசர மின்சார கொள்வனவிற்காக மின்சார கொள்வனவு ஒப்பந்தத்தை ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கான ஏஸ் மாத்தறை ( ACE Matara ) மின் உற்பத்தி நிலைய முன்மொழிவு 2017.02.13ஆம் திகதி ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டது. அந்த முன்மொழிவு இலங்கை மின்சார சட்டத்தின் 43(2) பிரிவை மீறி முன்வைக்கப்பட்டமையால் 2017.03.10ஆம் திகதி ஆணைக்குழுவினால்; அவ் ஒப்புதல் நிராகரிக்கப்பட்டது.

100 மெகாவாட் அவசர மின்சார கொள்வனவிற்காக மின்சார கொள்வனவு ஒப்பந்தத்தை ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கான ஏஸ் எம்பிலிபிட்டிய ( ACE Embilipitiya    ) மின் உற்பத்தி நிலைய முன்மொழிவு 2017.03.17ஆம் திகதி ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டது. அந்த முன்மொழிவு இலங்கை மின்சார சட்டத்தின் 43(2) பிரிவை மீறி முன்வைக்கப்பட்டமையால் 2017.04.04ஆம் திகதி ஆணைக்குழுவினால்; அவ் ஒப்புதல் நிராகரிக்கப்பட்டது.

மிதவை படகில் பொருத்தப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம்( Barge power plant    )- காலி ஊடாக 100 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால மின்சார கொள்வனவிற்கான முன்மொழிவானது விலை மனு கோரலுக்கான ஒப்புதலை பெறாது இந்த மின்சார கொள்வனவிற்காக 2017.03.16 முதன்மை ஒப்புதல் கோரி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இத்துடன் தொடர்புடைய விலை மனு கோரலை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கும்படி 2017.05.15ஆம் திகதி இலங்கை மின்சார சபையிடம் கோரப்பட்ட போதிலும் அது தொடர்பிலான எவ்வித நடவடிக்கைகளும் இ.மி.சபையினால் முன்னெடுக்கப்படவில்லை.

குறுகிய கால மின்சார கொள்வனவிற்காக 100 மெகாவாட் மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவிற்கான முதன்மை ஒப்புதல் 2017.10.23ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்று அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட போதிலும் இலங்கை மின்சார சபை மின்சார கொள்வனவிற்கான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

100 மெகாவாட் அவசரகால மின்சார கொள்வனவிற்கான மின்சார கொள்வனவு ஒப்பந்தத்தை மூன்று வருடத்துக்குநீடிப்பதற்கான ஏஸ் எம்பிலிபிட்டிய ( ACE Embilipitiya    ) மின் உற்பத்தி நிலைய முன்மொழிவு 2018.05.01ஆம் திகதி ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டது. அந்த முன்மொழிவு இலங்கை மின்சார சட்டத்தின் 43ஆவது பிரிவை மீறி முன்வைக்கப்பட்டமையால் 2018.07.23ஆம் திகதி ஆணைக்குழுவினால்; அவ் ஒப்புதல் நிராகரிக்கப்பட்டது.

20 மெகாவாட் அவசர மின்சார கொள்வனவிற்காக மின்சார கொள்வனவு ஒப்பந்தத்தை இரண்டு வருடத்துக்கு நீடிப்பதற்கான ஏஸ் மாத்தறை ( ACE Matara    ) மின் உற்பத்தி நிலைய முன்மொழிவானது 2019.04.01ஆம் திகதி ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டது. அந்த முன்மொழிவு இலங்கை மின்சார சட்டத்தின் 43ஆவது பிரிவை மீறி முன்வைக்கப்பட்டமையால் 2019.04.10ஆம் திகதி ஆணைக்குழுவினால்; அவ் ஒப்புதல் நிராகரிக்கப்பட்டது.

50 மெகாவாட் அவசர மின்சார கொள்வனவிற்காக மின்சார கொள்வனவு ஒப்பந்தத்தை இரண்டு வருடத்துக்கு நீடிப்பதற்கான ஏசியா பவர் மின் உற்பத்தி நிலைய முன்மொழிவு 2019.04.03ஆம் திகதி ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டது. அந்த முன்மொழிவு இலங்கை மின்சார சட்டத்தின் 43ஆவது பிரிவை மீறி முன்வைக்கப்பட்டமையால் 2019.04.10ஆம் திகதி ஆணைக்குழுவினால்; அவ் ஒப்புதல் நிராகரிக்கப்பட்டது.

100 மெகாவாட் மேலதிக மின்சார கொள்வனவிற்கான முதன்மை ஒப்புதலானது 2017.02.06 மற்றும் 2017.03.25 ஆகிய திகதிகளில் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2017.03.30ஆம் திகதி அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. அதற்கமைய வீ பவர் ( VPower    ) ஊடாக இந்த மேலதிக மின்சார கொள்வனவிற்கான மின்சார கொள்வனவு ஒப்பந்தத்திற்கு 2019.04.03ஆம் திகதி ஆணைக்குழுவின் ஒப்புதல் கோரப்பட்டிருந்த நிலையில், இந்த மேலதிக மின்சார கொளவனவின் நியாயத்தன்மையை உறுதிபடுத்துவதற்கு பதிலாக ஆணைக்குழு, மின்சார சபையிடம் 2019.03.30ஆம் திகதி கோரியிருந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை காரணமாக மின்சார கொள்வனவு ஒப்பந்தத்திற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை  Altaaqa     வினால் இந்த மேலதிக மின்சார கொள்வனவிற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை மின்சார சபை 2019.04.10ஆம் திகதி ஒப்புதல் கோரியுள்ளதுடன், இந்த மேலதிக மின்சார கொள்வனவிற்கான நியாயத்தன்மையை உறுதிபடுத்திக் கொள்வதற்காக ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையிடம் 2019.03.30ஆம் திகதி கோரியிருந்த அறிக்கைகளை முன்வைக்க தவறியமையால் அக்கோரிக்கை ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

அக்ரீகோ ( Agrreko    ) வினால் இந்த மேலதிக மின்சார கொள்வனவிற்கான ஒப்பந்தத்திற்கு 2019.04.19ஆம் திகதி ஆணைக்குழுவிடம் ஒப்புதல் கோரியுள்ளதுடன், இந்த மேலதிக மின்சார கொள்வனவிற்கான நியாயத்தன்மையை உறுதிபடுத்திக் கொள்வதற்காக ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையிடம் 2019.04.29ஆம் திகதி கோரியிருந்த அறிக்கை, திருத்தங்களை முன்வைக்க தவறியமையால் அக்கோரிக்கை ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

மிதவை படகில் பொருத்தப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் ஊடாக 2019 ஜுன் மாதம் முதல் 9 மாதங்களுக்காக 200 மெகாவாட் மின்சாரத்தை அவசரகால மின் கொள்வனவிற்காக இ.மி.ச. 2019.06.25ஆம் திகதி ஆணைக்குழுவிடம் அனுமதி கோரி சமர்ப்பித்திருந்த நிலையில், மின்சார சட்டத்திற்கு அமைய அவசரகால மின்சார கொள்வனவிற்கான தேவையை நியாயப்படுத்துவதற்கு பரிமாற்ற உரிமதாரர் தவறியமை மற்றும் மின்சார சட்டத்தின் 43(5) (எ) (ii) பிரிவிற்கமைய மிகக்குறைந்த செலவில் முன்மொழிந்த திறனை விநியோகிப்பதாக திட்ட முன்மொழிவாளரினால் தகவல் வழங்காத காரணத்தினால் இந்த முன்மொழிவு ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

மிதவை படகில் பொருத்தப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் - கொழும்பு ஊடாக 2020 பெப்ரவரி மாதம் முதல் 30 மாதங்களுக்காக 300 மெகாவாட் அவசரகால மின் கொள்வனவிற்காக இ.மி.ச. 2019.08.19ஆம் திகதி ஆணைக்குழுவிடம் அனுமதி கோரி சமர்ப்பித்திருந்த நிலையில், இலங்கை மின்சார சட்டத்தின்  43ஆவது பிரிவின் குறைந்த செலவு எனும் அடிப்படையை மீறி சமர்ப்பித்திருந்த காரணத்தினால் 2019.10.31 இந்த முன்மொழிவு ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

மிதவை படகில் பொருத்தப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் - அம்பாந்தோட்டை ஊடாக 2020 ஏப்ரல் மாதம் முதல் 30 மாதங்களுக்காக 100 மெகாவாட் மின்சாரத்தை அவசரகால மின்சார கொள்வனவிற்காக மின்சார கொள்வனவு ஒப்பந்ததுக்காக 2019.09.06 ஒப்புதல் கோரப்பட்டது. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மின்சாரம் விநியோகிப்பதற்கான பிற சாத்தியமான முறைகளில், முன்மொழியப்பட்ட கொள்முதலே சிறந்த பொருளாதார தீர்வு என்பதனை நியாயப்படுத்த இ.மி.ச. தவறியிருந்தது. எதிர்பார்த்த காலத்திற்குள் மின் உற்பத்தி நிலையம் அல்லது மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரம் பரிமாற்றம் செய்வது சாத்தியமாகும் என்பதனை உறுதிபடுத்துவதற்கு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை. அதன்படி,2019.11.29 ஆம் திகதி இந்த முன்மொழிவு ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு முதல் 10 வருடங்களுக்கு 24ஒ4 மெகாவாட் டீசல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான முதன்மை ஒப்புதல் 2019.11.11ஆம் திகதி கோரப்பட்டது. இலங்கை மின்சாரச் சட்டத்திற்கு அமைய இந்த முன்மொழிவை மீண்டும் சமர்ப்பிக்க பரிமாற்ற உரிமதாரரிடம் கோரப்பட்ட போதிலும் அது சமர்ப்பிக்கப்படவில்லை.அதனால் 2019.12.30 ஆம் திகதி இந்த முன்மொழிவு ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு முதல் 10 வருடங்களுக்கு 100 மெகாவாட் டீசல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான முதன்மை ஒப்புதல் 2019.11.15ஆம் திகதி கோரப்பட்டது. இலங்கை மின்சாரச் சட்டத்திற்கு அமைய இந்த முன்மொழிவை மீண்டும் சமர்ப்பிக்க பரிமாற்ற உரிமதாரரிடம் கோரப்பட்ட போதிலும் அது சமர்ப்பிக்கப்படவில்லை.அதனால் 2019.12.30 ஆம் திகதி இந்த முன்மொழிவு ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் 06 மாதங்களுக்கு 200 மெகாவாட் டீசல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து அவசரகால மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான முதன்மை ஒப்புதலுக்காக இ.மி.ச. 2019.11.14 ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்திருந்த போதிலும், அது குறித்த மேலதிக விளக்கம் இ.மி.சபையிடம் கோரப்பட்டது. ஆனால் அது சமர்ப்பிக்கப்படவில்லை.

2020 ஆம் ஆண்டு  ஜனவரி முதல் 30 மாதங்களுக்கு 200 மெகாவாட் டீசல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து அவசரகால மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான முதன்மை ஒப்புதலுக்காக இ.மி.ச. 2018.10.18 ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்திருந்த போதிலும், அது குறித்த மேலதிக விளக்கம் இ.மி.சபையிடம் கோரப்பட்டது. ஆனால் சமர்ப்பிக்கப்படவில்லை.

மின்சாரத்துக்கான அவசர தேவை காணப்படாமையினாலும் இலங்கையின் மின்சார சட்டங்கள் மீறப்பட்டமையுமே குறித்த முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டமைக்கான பிரதான காரணங்களாகும். தேவையற்ற முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டமையினால் 2016ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 571 மில்லியன் ரூபாய்களை மக்களுக்கு சேமித்து கொடுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 121 பில்லியன் ரூபாய் ஆணைக்குழுவினால் பொதுமக்களுக்கு சேமித்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நீக்கப்பட்டு இம்முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கப்படுமாயின் பல பில்லியன்களை நாடு இழக்க வேண்டி ஏற்படும்.

2019 ஆண்டில் மாத்திரம் டீசல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 600 மெகாவாட் மின்சாரத்தை அவசரகால மின்சார கொள்வனவாக பெற்றுக்கொள்ள ஒப்புதல் கோரப்பட்ட நிலையில், அது அநாவசியமானது என்ற அடிப்படையில் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது. அவ்வாறு எவ்விதமான அவசர மின் கொள்வனவிற்கான தேவையும் இருக்கவில்லை. அதற்கான ஒப்புதல் வழங்கியிருப்பின் 2019ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 121 பில்லியன் ரூபாய் மக்கள் பணத்தை நாடு இழக்க நேரிட்டிருக்கும். அத்துடன் ஆணைக்குழு மூலம் அந்த ஒப்புதல் வழங்கப்படாமை காரணமாக அப்பணத்தை சேமிக்க முடிந்தது. இந்த சேமிப்பானது 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில் சுகாதார துறைக்கு செலவிடுவதற்கு உத்தேசித்திருந்த செலவில் சுமார் 60 வீதமாகும். அந்த சேமிப்பானது ஒரு மின்சார அலகிற்கு 8 ரூபாய் 60 சதமாக (ரூ.8.60) காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவசரகால மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார கொள்வனவிற்கான ஒப்பந்த காலத்தை நீடிக்காமையினால் 2017 - 2018 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் ஆணைக்குழுவினால் 58.86 பில்லியன்கள் சேமிக்கப்பட்டிருந்தன. அவ்வாறு அனுமதியளிக்கப்பட்டிருப்பின் வருடாந்தம் குறித்த தொகையினை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

அதேவேளை ஆணைக்குழுவினால் ஒப்புதல் வழங்கப்பட்ட 2015-2034 மற்றும் 2018-2037 நீண்டகால மின்சார உற்பத்தி திட்டம் உட்பட 680 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய வகையிலான 10 மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகள் தாமதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு பல பில்லியன் ரூபாக்களுக்கு நட்டம் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபை அழுத்தம் கொடுத்ததன் விளைவாகவே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுமளவுக்கு அரசாங்கம் சென்றிருக்கின்றது. தனியார் மின் கொள்வனவின் மூலம் இலங்கை மின்சார சபை கடந்த காலங்களில் அதிகளவிளான நட்டங்களை சந்தித்துள்ள நிலையிலும் தொடர்ந்தும் தனியார் கொள்வனவுக்கே அதிக கவனம் செலுத்துவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன்னிச்சையான அதிகாரங்களை பயன்படுத்தி நாட்டு மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல் தனியாருக்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் அதிகம் கவனம் செலுத்தியிருப்பதாகவே தெரிகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்குவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்துக்கு எழுத்துமூல அறிவித்தல் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவே வேறு நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சுயாதீன ஆணைக்குழுக்களை முடிவுறுத்துவதால் மக்கள் மீதே தொடர்ந்தும் சுமைகள் சுமத்தப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக