2021 ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த அடிப்படைச் சம்பளம் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பல மாதங்களாக தொடர்ந்தும் இழுபறியிலேயே இருந்து வருகின்றது. இதுவரையும் முதலாளிமார் சம்மேளனத்தினால் மூன்று சம்பளத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவை 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தினை கொண்டிராமையினால் தொழிற்சங்கங்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை 1000 ரூபாவினை பெற்றுக்கொள்வதற்கான எவ்வித பொறிமுறையினையும் தொழிற்சங்கங்கள் கொண்டிருக்கவில்லை. குறைந்தபட்சம் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுகொண்டாவது பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்கங்கள் தயாராகவில்லை. அதனால் முதலாளிமார் முன்வைக்கும் திட்டங்களையே எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதுவரையும் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள சம்பளப் பொறிமுறையில் 1000 ரூபா அடிப்படை நாட் சம்பளம் என்ற கொள்கையிலிருந்து 1000 ரூபா மொத்தச் சம்பளத்துக்கான அடிப்படை காய் நகர்த்தல்களையே முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் அகலவத்தை மற்றும் புஸ்ஸலாவ பெருந்தோட்டக் கம்பனிகள் 1000 ரூபா கொடுப்பனவுக்கான புதிய பொறிமுறையை முன்வைத்துள்ளதுடன் ஜனவரி மாதம் முதல் அதனை அமுல்படுத்தவும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளன. அதனடிப்படையில் அடிப்படைச் சம்பளமாக 725 ரூபாவும் விலை கொடுப்பனவாக 75 ரூபாவும் வருகை கொடுப்பனவாக 100 ரூபாவும் உற்பத்தி கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் மொத்தமாக 1000 ரூபாவினை குறிப்பிட்டுள்ளதுடன் அடிப்படைச்சம்பளமான 725 ரூபாவிலிருந்து ஊ.சே.நி மற்றும் ஊ.ந.நி. அறிவிடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.
ஆனால் தற்போதைய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் 1000 ரூபா என்பதை மாத்திரம் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது. 1000 ரூபா நாட்சம்பளத்துக்கான பேச்சுவார்த்தைகளில் முதலாளிமார் சம்மேளனம் இரு பொறிமுறைகளை முன்வைத்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றன. டிசம்பர் மாதம் இறுதியில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த சம்பளத்துக்கான உத்தேச வரைபில் அடிப்படைச் சம்பளம் 700 ரூபா எனவும் விலைக்கொடுப்பனவு 75 ரூபா எனவும் வருகைக் கொடுப்பனவு 70 ரூபாவாகவும் உற்பத்தி அதிகரிப்புக் கொடுப்பனவு 75 ரூபாவாகவும் ஊழியர் சேமலாப நிதிக்கான தொகை 105 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையிலேயே மொத்த சம்பளமாக 1025 ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனத்தினர் யோசனையை முன்வைத்திருந்தனர்.
இரண்டாவதாக, கலப்பு பொறிமுறை என்றவகையில் மூன்று தினங்களுக்கு அடிப்படை வேதன முறையின் கீழும் மூன்று நாட்களுக்கு வினைத்திறன் அடிப்படையிலான கொடுப்பனவின் கீழும் வேதனம் வழங்குவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்விரண்டு யோசனைகளும் அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவை உறுதிப்படுத்தவில்லை. என்பதுடன் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. (அட்டவணை 01)
இதேவேளை ஜனவரி 29 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அடிப்படைச்சம்பளமாக 725 ரூபாவும் உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 125 ரூபாவும் வரவு கொடுப்பனவாக 100 ரூபாவும் விலை கொடுப்பனவாக 50 ரூபாவாகவும் உள்ளடங்களாக 1008 ரூபாவுக்கான பொறிமுறை முன்வைக்கப்பட்டிருந்தது. இவற்றினை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளதுடன் சம்பள நிர்ணய சபைக்கூடாக தீர்வினை பெறுவதற்கு முனைகின்றனர்.
எனவே அரசாங்கத்தின் தீர்மானமானது, கூட்டு ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தாது என்பதனை விளங்கிக்கொள்ள முடியும். தற்போதைய 1000 ரூபா வாக்குறுதியும் அவ்வாறானதே. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான சுமார் 20 வருடங்களில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 599 ரூபாவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 602 ரூபாவுமே சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச்சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்பு வழங்கப்பட்டு 700 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டது. எனவே 2021 ஆம் ஆண்டு முதல் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கவேண்டுமாயின் கம்பனிகள் அடிப்படைச் சம்பளத்தை 300 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
எதிர்வரும் 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபைக்கூடாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு வலுசேர்க்கும் வகையில் நேற்று 5 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இ.தொ.கா. தோட்டத் தொழிலாளர்களை வலியுறுத்தியிருந்தது. தற்போது முதலாளிமார் சம்மேளனம் நாளொன்றுக்கு 1108 ரூபா வரை அதிகரிப்பதற்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.
அத்துடன் தினசரி ஊதிய மாதிரியானது, வாரத்தில் 3 நாட்களுக்கு பொருந்தும், மீதமுள்ள நாட்களில் உற்பத்தித் திறனுடனும் இணைக்கப்பட்ட இரண்டு வருவாயை அதிகரிக்கும் மாதிரிகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்கள் ஊதியம் பெறுவார்கள். அவற்றில் பறிக்கப்படும் மேலதிக தேயிலை ஒன்றுக்கு 50 ரூபாவும் இரண்டாவது வருவாய் பங்குமாதிரி, இதன்மூலம் ஊழியர்கள் தொழில்முனைவோராக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இரண்டு மாதங்களுக்குள் பல உத்தேச வரைபுகள் முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தொழிற்சங்கங்களினால் எவ்வித முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லை. இறுதியாக சம்பள நிர்ணயசபைக்கூடாக தீர்மானத்தை எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தினை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்வதற்கான அழுத்தத்தினை முதலாளிமார் சம்மேளனம் கொடுத்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின் தொழிலாளர்கள் அதிக சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். எனவே தொழிலாளர்களுக்கான சாதகமானதொரு பொறிமுறையை உருவாக்குவதற்கு தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே தொழிலாளர்கள் வேதனங்களுக்காக பல்வேறு வேலை இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். அவற்றுக்கான கொடுப்பனவுகள் ஒருபோதும் வழங்கப்பட்டது கிடையாது. 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது 18 மாதங்கள் தாமதப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவற்றுக்கான நிலுவைத் nhகை வழங்கப்படாமல் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர். எனவே தற்போதைய சம்பள நிர்ணயித்திலாவது தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக