கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

13 அக்டோபர், 2020

அனுமதியின்றி, குளறுபடிகளுக்கு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட 50 ஜெனரேட்டர்கள்

இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்கிவரும் நிறுவனமாக அண்மைக்காலங்களில் கூறப்படுகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. மின்சார பாவனையாளர்களாகிய ஒவ்வொருவருக்கும் நாம் பாவிக்கும் மின்சாரம் தொடர்பாக கேள்வியெழுப்பும் மற்றும் உரிமை உள்ளது. எனவே, இந்நிலைமைக்கு காரணம் என்ன என்ற அடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.  இலங்கை மின்சாரசபையினால் 2016 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 03 ஆம் திகதி பத்திரிகையில் விலை மனுக்கோரலுக்கான விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விளம்பரத்தின் பின்னணியில் நாட்டில் மின்சார பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 50 டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சாரசபை பரிந்துரை செய்து அமைச்சரவை அனுமதியும் கிடைக்கின்றது. அதன்பின்னர் விலை மனுக்கோரல்கள் திறக்கப்பட்டு, ஒருநிறுவனத்தை  தெரிவு செய்து 50 ஜெனரேட்டர்களை இறக்குமதி செயப்பட்டன. ஆனால் இன்றுவரை இந்த 50 ஜெனரேட்டர்களும் பொருத்தப்படவில்லை. மேலும் இந்த ஜெனரேட்டர்களை குறித்த இடங்களுக்கு கொண்டு சென்று பொருத்த போக்குவரத்தும் தேவை என மீண்டும் ஒரு விலைமனுகோர அமைச்சரவை அனுமதி கோரப்படுகின்றது. முன்னரே திட்டமிடப்படாது மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்களுக்காக செலவிடப்படுவது பொதுமக்களின் பணம். 

மேலும், தேசிய மின்சார கட்மைப்பில் அவரச மின்சாரத்தை சேர்க்கும் நிமித்தம் நாட்டில் பத்து இடங்களில் நிறுவப்படுவதற்கு இருந்த 50 மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்கள்) அலகுகளையும், 25 படிநிலை மின்மாற்றிகளையும் ஆளிப்பலகை அலகுகளையும், 25டீசல் எரிபொருள் டாங்கிகளையும் விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இலங்கை மின்சார சபை  2016 ஆம் ஆண்டில் கேள்விமனுவை அழைத்திருந்தது. தொழில் நுட்பரீதியில் பொருத்தமானதும் வணிக அளவில் நியாயமானதுமான கேள்வி மனுதாரர் தரப்புக்குகேள்வி மனு ஒப்பந்தத்தை வழங்குமாறு தொழில் நுட்ப மதிப்பீட்டு குழு அமைச்சரவை நியமித்த கொள்வனவு பற்றிய நிலையியல் குழுவுக்கு மீண்டும் மீண்டும் சிபாரிசுகளை செய்திருந்தும், தொழில் நுட்பரீதியிலும், வணிக அளவிலும் பொருத்தமற்ற நிராகரிக்கப்பட்டிருந்த ஒரு கேள்வி மனுதாரர் தரப்புக்கு குறித்த கேள்விமனு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.  

இலங்கை மின்சாரசட்டத்தின் 43 ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ளஅங்கீகாரம் பெற்ற மின்னுற்பத்தித் திட்டத்தின் கீழ் ஏதாவது மின்சார கொள்ளவவை சேர்ப்பதாக இருந்தால், நாட்டில் மின்சார கைத்தொழில் தொடர்பாக ஒழுங்குறுத்துவதற்கு அதிகாரமுடைய ஒழுங்குறுத்துகை சபையாகிய இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமிருந்து அங்கீகாரங்கள் பெறப்படுதல் வேண்டும் என்றிருந்தபோதிலும், ஆணைக்குழுவின் அறிவுக்கு எட்டியவகையில், இந்த கேள்விமனு ஒப்பந்தம் வழங்கப்பட்டபோது ஆணைக்குழுவுக்கு ஏதும் அறிவிக்கப்பட்டிருக்கவோ அல்லது கூறப்பட்ட அந்த அங்கீகாரங்கள் பெறப்பட்டிருக்கவோ இல்லை.  

கேள்விமனு தொடர்பான தகவு திறன்களின் பிரகாரம் குறித்த அலகுகளை குறித்த கேள்விமனுதாரர் தரப்பு விநியோகிப்பதற்கு தவறியுள்ள போதிலும் கூட, சர்ச்சைக்குரிய அந்த கேள்விமனுதாரர் தரப்புக்கு மின்வலுசக்தி அமைச்சு 85 வீத கேள்வி மனுவிலையை எவ்வாறு செலுத்தியுள்ளது என்றவிடயம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.    
தான் விதித்த கொள்வனவு நிபந்தனைகள் முற்றாக மீறப்பட்டிருந்த நிலையில்,கொள்வனவு பற்றிய குழுவில் கூறப்பட்ட அந்த கொள்வனவு தொடர்பான வரைவு கேள்விமனு ஆவணத்தையும் மற்றும் சம்பந்தப்பட்டிருந்த ஏனைய ஆவணங்களையும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அங்கீகரித்து, தகுதியற்ற கேள்விமனுவை சமர்ப்பித்திருந்த ஒருகேள்வி மனுதாரர் தரப்புக்கு குறித்த கேள்வி மனு ஒப்பந்தத்தை வழங்குமாறு ஏன் சிபாரிசு செய்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

குறித்த கேள்வி மனுதாரர் தரப்பு தொழில் நுட்பரீதியிலும், வணிகஅளவிலும் பொருந்தாத கேள்வி மனுவை சமர்ப்பித்திருந்த காரணத்தால், தொ.ம.கு. இந்த கேள்வி மனுவை இரண்டுதடவைகளில் நிராகரித்துள்ளது. ஆயினும்,‘தொழில் நுட்பரீதியில் பொருத்தமற்றது’ என்று தொ.நு.ம.கு. மேற்கொண்டிருந்த முக்கியமான அவதானிப்பை கருத்திற்கொள்ளாமல் பாராதீனப்படுத்திவிட்டு, நிராகரிக்கப்பட்டிருந்த அந்த கேள்வி மனுதாரர் தரப்புக்கு, அந்த கேள்வி மனுதாhர் தரப்பினது கேள்வி மனுதான் வணிக அளவில் ஆகக் குறைந்த நியாயமான கேள்விமனு என கூறி, குறித்த கேள்விமனு ஒப்பந்தத்தை வழங்குமாறு சிபாரிசு செய்திருந்தது. 

இந்த செயற்பாடு கேள்வி மனு நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்த கேள்வி மனுதாரர் தரப்புக்கு அந்த கேள்வி மனு ஒப்பந்தத்தை பெறுவதற்கு இருந்த வாய்ப்பை இழக்கச்செய்தது மட்டுமன்றி, நாட்டிற்கு பாரியளவான நட்டம் ஏற்படுவதற்கும் காரணமாகஅமைந்துள்ளது.
இ.மி.ச. கொள்வனவு செய்திருந்த 1MW கொள்ளளவுடைய கூறப்பட்டஅந்த 50 அலகுகளும் கூடுமான விரைவில் நிறுவப்பட்டு மின்சார செலுத்துகை வலையமைப்புக்கு இணைக்கப்படவுள்ளதாக அப்போதைய மின்வலுசக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க 2019 ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிய தனது அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தாலும், குறித்த விநியோகத் தரப்பு இன்று வரையிலும்,குறிப்பீடு செய்யப்பட்டுள்ள அந்த அலகுகளை இலங்கை மின்சாரசபைக்கு விநியோகிக்க தவறியுள்ளது. தற்பொழுது இலங்கை மின்சார சபையோ அல்லது மின்வலுசக்தி அமைச்சோ நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நட்டங்களை விரிவாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்த தற்பொழுது தயராகவில்லை.     

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அப்போதைய செயலாளர் ஜி.எஸ். விதானகே, மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட, இலங்கை மின்சாரசபையின்  அப்போதைய பொது முகாமையாளர் ஏ.கே. சமரசிங்க, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் நாயகம் கே.ஏ. விமலேந்திரராஜா மற்றும் இலங்கை விமானப் படையின் அப்போதைய பணிப்பாளர் (நிதி) ஜி.ஆர்.ஐ. வசந்த ஆகியோர் இந்த அமைச்சரவை நியமித்த கொள்வனவு பற்றிய குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர்.   
எனினும், பின்னர் இக்குழுவின் உறுப்பினராகிய இலங்கை விமானப் படையின் முன்னாள் பணிப்பாளர் (நிதி) அந்தகுழுவின் சார்பாக இராஜினாமா செய்த வேளையில் குழுவின் தலைவர் ஜி.எஸ். விதானகே பதவி விலகியிருந்தார்.

கொள்வனவு நடைமுறையின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நிமித்தம் அமைச்சரவை நியமித்திருந்த இந்த குழு இருக்கின்ற நேரம், இந்த இரண்டுஅதிகாரிகளும் கொள்வனவு குழுவிலிருந்து பதவிவிலகியதற்கான காரணங்கள் ஏதும் தெரியாதிருக்கின்றது. இந்த சர்ச்சைக்குரிய கேள்விமனுவினது தகவு திறன்களின் பிரகாரம், பொருத்தமில்லாத வித்தியாசங்களுடைய கேள்விமனுக்கள் நிராகரிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அந்த கேள்வி மனுக்கள் நியாயமானஅளவில் குறைந்த கேள்விவிலையுடைய கேள்வி மனுக்களாக கருதமுடியாது’என்பதால் மேலும் மதிப்பீட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படுதலும் கூடாது.  

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி கேள்வி மனுக்கள் திறக்கப்பட்ட நேரத்தில்,18 கேள்வி மனுதாரர் தரப்புகள் தமது கேள்வி மனுக்களை சமர்ப்பித்திருந்தன. தொ.நு.ம.கு. கேள்விமனு ஆவணங்களின் பொதுவான மற்றும் விஷேட நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொதுவான பொருத்தத்தை ஆராய்ந்த பின்னர்,கேள்விமனு தொடர்பான நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்காத 11 கேள்விமனுதாரர் தரப்புகளின் கேள்வி மனுக்களை நிராகரித்திருந்தது. தேசிய பெறுகை அதிகார ஆணைக்குழுவினது கொள்வனவு வழிகாட்டல் ஆவணத்தின் 7.8 ஆம் பிரிவின் பிரகாரம்,  ஒருகேள்வி மனுதாரர் தரப்பு 1 ஆம் கட்டத்தின் கீழ் தகுதிபெறாதிருந்தால், அந்த கேள்விமனுதாhர் தரப்பின் கேள்விமனு நிராகரிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் மேலும் கருத்திற்கொள்ளப்படுவதற்காக அந்த கேள்விமனு எடுத்துக்கொள்ளப்படுதலும் கூடாது.      

மதிப்பிடப்பட்டளவில் நியாயமான ஆகக் குறைந்த கேள்விமனுவை சமர்ப்பித்திருக்கின்ற இலக்கம் 3, ஆர்.ஏ. த மெல் மாவத்தை, கொழும்பு 03 எனும் முகவரியில் அமைந்துள்ள செனொக் ட்ரேட் கொம்பைன் (ப்ரைவட்) லிமிற்றட் எனும் நிறுவனத்திற்கு மேற்குறித்த விநியோகம், நிறுவுகை மற்றும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தல் ஆகிய நோக்கங்களுக்கான கேள்விமனு ஒப்பந்தத்தை வழங்குமாறு நியமமதிப்பீட்டு நடைமுறையை பின்பற்றி,எட்டு உறுப்பினர்கள் அடங்கிய ஒரு தொ.நு.ம.கு. 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதிய தனது மதிப்பீட்டு அறிக்கையில் சிபாரிசு செய்திருந்தது.
எனினும், குறித்த நிறுவுகை மற்றும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தல் ஆகிய  நோக்கங்களுக்கான ஆகு செலவுகள் குறித்தனுப்பப்பட்டிருக்காத காரணத்தின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருந்த தென்கொரிய கேள்விமனுதாரர் தரப்பினதும் மற்றும் இந்திய கேள்விமனுதாரர் தரப்பினதும் இரண்டு கேள்விமனுக்களை மீளமதிப்பிடுமாறு கொள்வனவு பற்றிய நிலையியல் குழு 2017 ஆம் ஆண்டு யூன் மாதம் 5 ஆம் திகதி, தொ.நு.ம.கு. ஐ அறிவுறுத்தியிருந்தது. 

எனினும், மீளமதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர், தொ.நு.ம.கு. கூறப்பட்ட அந்த இரண்டு கேள்விமனுக்களையும் தனது  ஆரம்ப அறிக்கைக்கான பின்னிணைப்பின் மூலமாக  மீண்டும் நிராகரித்து, தான் ஆரம்பத்தில் சிபாரிசு செய்திருந்த அதே கேள்விமனுதாரர் தரப்பை சிபாரிசு செய்திருந்தது.

குறித்த பின்னிணைப்புக்கு இணங்க, ஸ்டேர்லின் என்ட் வில்ஸன் எனும் இந்திய கேள்விமனுதாரர் தரப்பு கேள்விமனு ஆவணங்களில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள பிரதான வணிக நிபந்தனைகளையும் மற்றும் தொழில் நுட்ப தகவுதிறன்களையும் பூர்த்தி செய்திருக்கவில்லை என்பதால், NPA கொள்வனவு வழிகாட்டல் ஆவணத்தினது 7.8 ஆம் பிரிவின் பிரகாரம் அதன் கேள்வி மனுவை  நிராகரிக்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளது.  
இந்திய கேள்வி மனுதாரர் தரப்பின் கேள்வி மனுவில் அவதானிக்கப்பட்டிருந்த பிரதான குறைபாடான இலங்கையிலுள்ள ஒட்டோ டீசலில் காணப்படும் கந்தக செறிவு பிரச்சினையையும் தொ.நு.ம.கு. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதிய தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.  இந்திய கேள்வி மனுதாரர் தரப்பு சமர்ப்பித்திருந்த கேள்விமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த என்ஜின்களின் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பெறுமானம், இலங்கையிலுள்ள ஒட்டோ டீசலில் அடங்கியிருக்கும் கந்தகத்தின் செறிவு அளவு மிகவும் அதிகமானது எனவும் இந்த தொ.நு.ம.கு. அறிக்கைக்கு இணங்க குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகையால்,‘இந்திய என்ஜின்களின் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பெறுமானங்களை விடவும் இலங்கையிலுள்ள ஒட்டோ டீசலில் அடங்கியிருக்கும் கந்தகத்தின் செறிவு மிகவும் அதிகம்’என மேலும் தொ.நு.ம.கு. அறிக்கை குறிப்பிடுகின்றது. அனுகூலமான என்ஜின் செயல் திறனுக்கும் அதன் பயனுள்ள பாவனை காலத்திற்கும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ள டீசல் எரிபொருளினது தகவு திறன்களின் பிரகாரம், கந்தகசெறிவு 0.2 வீதத்தை விடவும் குறைவாக இருத்தல் வேண்டும். இந்த என்ஜின்கள், இலங்கையில் 0.3 வீத கந்தக செறிவு வீச்சளவில் இயங்கும். இது என்ஜினின் செயல்திறனும், பயனுள்ள பாவனை காலமும் குறைவதற்கு காரணமாக அமைகின்றது. துருப்பிடித்தலால் மேலதிக என்ஜின் தேய்மானத்திற்கும், எதிர்பாராத இயக்க முறிவுகளுக்கும் வழிவகுக்கும்.  

என்ஜினை உற்பத்தி செய்யும் இந்த கேள்விமனுதாரர் தரப்பு 0.3 வீத கந்தகத்திற்கான செறிவு பொருத்தத்தை வெளிப்படுத்துகின்ற கடிதத்தில் வரையறைகளை குறிப்பீடு செய்திருக்கவில்லை. என்ஜின் மாதிரி தொடர்பாக வழங்கப்பட்டுள்ள பராமரிப்பு பற்றிய கைந்நூலில் சாத்தியமான விளைவுகள் குறிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக தொ.நு.ம.கு. குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்தஉற்பத்தித் தரப்பு சமர்ப்பித்திருந்த பொருத்தத்தை வெளிப்படுத்தும் கடிதத்திற்கு முரணானதாகும். குறித்த உற்பத்தித் தரப்பு வேண்டுமென்று அல்லது வேண்டுமென்று அல்லாது முக்கியமான விபரங்களை சமர்ப்பிக்காததால் அதன் கடிதத்தை ஏற்றுக் கொள்வது சாத்தியமில்லை என்பது தொழில் நுட்ப மதிப்பீட்டு குழுவின் அபிப்பிராயமாகும்.   

உள்நாட்டு எரிபொருள் தகவு திறன்களுக்கு ஏற்ப இந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்காது என்பதும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் அபிப்பிராயமாகும். ஆண்டு வெப்பவீத கழிவை அதிகரிக்கும் குறைந்த விகித இயக்கம், கட்டாய செயலிழப்புகள் மற்றும் எதிர்பாராத இயக்கமுறிவுகள் என்பன நிகழ்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த கேள்விமனுதாரர் தரப்பு, இந்த கேள்விமனுவில் குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள உற்பத்தியுடன் வேறுபடும் தான் வழங்கியிருந்த கொள்கலனுடைய என்ஜின் ஜெனரேட்டர் மாதிரிகளின் மாதிரி இலக்கங்களை கேள்விமனு ஆவணத்தின் 23 (ஏ) வாசகத்தின் பிரகாரம், கடந்த 10 வருடங்களுக்குள் குறிப்பிட்டு வழங்கியில்லை. எனினும், கேள்விமனு ஆவணத்தினது 23(பி) வாசகத்தின் பிரகாரம், கடந்த ஐந்து வருடங்களுக்குள் 50 அலகுகள் விநியோகிக்கப்படுதல் வேண்டும் என்ற தேவைப்பாடு குறிப்பிடப்பட்டிருந்தும் உற்பத்தி நாட்டிற்கு வெளியால் கடந்த ஐந்து வருடங்களாக, அதே கொள்ளளவுடைய இரண்டு என்ஜின் மின்பிறப்பாக்கி அலகுகளை மாத்திரமே குறித்த கேள்விமனுதாரர் தரப்பு விநியோகித்துள்ளது.    

‘அதற்கிணங்க, ஸ்டேர்லிங் என்ட் வில்ஸன் நிறுவனம் கேள்விமனு ஆவணத்தில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள பிரதான வணிக நிபந்தனைகளையும் தொழில் நுட்ப தகவுதிறன்களையும் பூர்த்தி செய்திருக்கவில்லை. ஆகையால், குறித்த கேள்வி மனு நிராகரிக்கப்பட்டது’. இதே நேரம், நிராகரிக்கப்பட்டிருந்த அந்த கேள்வி மனுதாரர் தரப்புக்கு குறித்த கேள்விமனு ஒப்பந்தத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அன்றிருந்த மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய எவ்வாறு அமைச்சரவையை தூண்டினார் என்பது ஆச்சரியத்திற்குரியதாகும். 

இந்திய கேள்வி மனுதாரர் தரப்பு தனது கேள்வி மனுவை தொழில் நுட்பரீதியிலும், வணிகஅளவிலும் பொருத்தமானதாக சமர்ப்பிக்காததால் தொ.நு.ம.கு. அதன் கேள்விமனுவை இரண்டு தடவைகள் நிராகரித்திருந்ததை வெளிப்படுத்தாமல், அதில் உள்நாட்டு ஏற்றியிறக்கல் செலவுகளும், உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தல் செலவுகளும் உள்ளடக்கப்பட்டிருக்காத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டது என முன்னால் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய 2017 ஆம் ஆண்டு அக்டோபர்; மாதம் 16 ஆம் திகதிய தனது அமைச்சரவைபத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். 

உள்நாட்டு ஏற்றியிறக்கல் செலவுகளும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தல் செலவுகளும் உள்ளக்கப்பட்டிருக்காத காரணத்தினால் ஒரு சில கேள்விமனுதாரர் தரப்புகளின் கேள்விமனுக்களை தொ.நு.ம.கு. நிராகரித்துள்ளது எனஅந்த  அமைச்சரவைபத்திரம் குறிப்பிடுகின்றது. நிராகரிக்கப்பட்டிருந்த அந்தகேள்விமனுக்களை கருத்திற்கொண்டு ஆராய்ந்த கொள்வனவு பற்றிய நிலையியல் குழு, மதிப்பீட்டு நடபடி முறைக்காக நிராகரிக்கப்பட்டிருந்த அந்த கேள்விமனுக்களை, பூஜ்ஜியம் என குறித்தனுப்பப்பட்டிருக்காத விலை ஆக்கக்கூறை கருத்திற்கொண்டு ஆராயுமாறு தொழில் நுட்பமதிப்பீட்டு குழுவுக்கு அறிவுறுத்தியது.  

‘பின்னர், தொ.நு.ம.கு. சமர்ப்பித்த அறிக்கையை கருத்திற்கொண்டு, கொள்வனவு பற்றிய நிலையியல் குழு, ஆகக்குறைந்த கேள்விமனுவிலைகளை குறித்தனுப்பியுள்ள கேள்விமனுதாரர்களின் கேள்விமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணங்களை மேலும் ஆராய்ந்தது. 

‘அதற்கிணங்க,வணிக அளவில் ஆகக்குறைந்த நியாயமான கேள்விமனுவிலையை குறிப்பிட்டிருந்த கேள்விமனுதாரர் தரப்புகளிடமிருந்து அந்த கேள்விமனுக்கள் கிடைத்திருந்ததால் அந்த கேள்விமனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்கள் ஏதும் இருக்கவில்லை. ஆகையால், இந்திய ஸ்டேர்லிங் என்ட் வில்ஸன் லிமிட்டட் நிறுவனம், போதிய அளவில் ஆகக்குறைந்த நியாயமான கேள்விமனுவை குறித்தனுப்பிய கேள்விமனு தரப்பாகவுள்ளது என கொள்வனவு பற்றிய நிலையியல் குழு தீர்மானித்தது. ஆகையால், அதற்குகேள்வி மனு ஒப்பந்தத்தை வழங்குமாறு சிபாரிசு செய்யப்பட்டது. இந்திய கம்பனி குறித்தனுப்பிய கேள்விமனு விலையை விடவும் செனொக் நிறுவனத்தின் கேள்விமனு விலை சுமார் 1.3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருந்தது.  
இதே நேரம், ஆரம்ப கேள்வி விலைமனு தகவு திறன்களில் அது ஒருகட்டாய தேவைப்பாட்டு விடயமாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் ஸ்டேர்லிங் என்ட் வில்ஸன் நிறுவனம் விநியோகித்திருந்த 1ஆறு சக்திக் கொள்ளளவுடைய மின்பிறப்பாக்கிகளுக்கு நுகரப்படும் என்ஜின் எரிபொருள் பாய்ச்சலை அளவிடுவதற்கான 50 எரிபொருள் திணிவு அளவீட்டுமாணிகளின் விநியோகம் மற்றும் நிறுவுகை ஆகியவற்றின் நிமித்தம் இ.மி.ச. 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனியான ஒரு கேள்விமனுவை அழைத்துள்ளது என்ற விடயமும் தெரியவந்துள்ளது.   

என்ஜின் இயந்திரம் தொடர்பான கேள்விமனு தகவுதிறனின் 4.1.25ஆம் வாசகத்திற்கு இணங்க, என்ஜினின் எரிபொருள் நுகர்வை அளவிடும் பொருட்டு நிமிடத்திற்கு 1 வீத செவ்வையுடன் இயங்கும் எரிபொருள் திணிவு அளவீட்டு மாணிகள் விநியோகிக்கப்படுதல் வேண்டும்.    
குறித்த அளவீட்டு மாணிகளின் விநியோகமும் நிறுவுகையும் மேற்குறித்த கேள்விமனுவினது விநியோக நோக்கெல்லையின் இன்றியமையாத பாகமாக இருந்தபோதிலும், மேலும் புதிய ஒருகேள்விமனு அழைக்கப்பட்டமை விதிமுறையை மீறும் ஒரு செயலாகும். அதுமட்டுமன்றி அது இலங்கை மின்சாரசபைக்கு  பொது நிதியிலிருந்து மேலதிகசெலவு ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. இதேநேரம்,  10 kP 65dba     என்ற தேவையான ஒலி அளவுகளையுடைய மின்பிறப்பாக்கிகளை விநியோகத் தரப்பு விநியோகிக்க தவறியமையும் தெரியவந்தது. 

விநியோகிக்கப்பட்டுள்ள மின்பிறப்பாக்கிகளின் உண்மையான கேள்விமனு தகவுதிறனில் ஒரு கட்டாய தேவைப்பாடாக குறிப்பிடப்பட்டுள்ள ஒலிமாசடைவை தடுப்பதற்கான கருவிகளில்லை. அவசர மின்சாரத்தின் நிமித்தம் நாட்டில் பல இடங்களில் இலகுவாக ஏற்றியிறக்குவதற்கும் கையாளுவதற்கும் என 20 அடி அளவான கொள்ளளவுடைய மின்பிறப்பாக்கிகளை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் கேள்விமனு அழைக்கப்பட்டது. 20 அடி அளவான கொள்ளளவுடைய மின்பிறப்பாக்கிகளுக்கு மேலதிக ஒலி அட்டென்யூட்டர்களையும் சைலன்சர்களையும் நிறுவியதால், அந்த மின்பிறப்பாக்கிகளின் விரும்பிய அளவான பரிமாணம் தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏதாவது ஒருபாகத்தில் அவரச மின்சாரம் தேவைப்பட்டாலும் மற்றும் தேவைப்படும் போதும் அந்த மின்பிறப்பாக்கிகள் எடுத்துச்செல்லக்கூடிய ஒருநிலையிலில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
50 எண்ணிக்கையான எரிபொருள் இயக்க இயந்திரங்களை விநியோகிப்பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி ஒரு தேசிய செய்திப் பத்திரிகையில் கேள்விமனு தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து,  இலங்கை மின்சார சபை சட்டவிரோதமான, ஒழுக்க நெறியற்ற வணிக செயற்பாடுகளை பின்பற்றியிருப்பதாக கூறி இலங்கை மின்சாரசபைக்கு எதிராக செனொக் ட்ரேட் கொம்பைன் எனும் நிறுவனம் சட்டநடவடிக்கையை எடுக்கப்போவதாக 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதிய தனது கடிதத்தின் மூலமாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளருக்கு அறிவித்துள்ளது. 

உராய்வு நீக்கி எண்ணெய் கலக்கும், உராய்வு நீக்கி எண்ணெய்களை உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் 13 அனுமதிபெற்ற தரப்புகள் எமது நாட்டில் காணப்படுகின்ற போதிலும், இந்தியாவிலிருந்து எமது நாட்டிற்கு இந்த உராய்வு நீக்கி எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இந்த இயந்திரங்களுக்கு பாவிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டிருக்கின்றது.   

இந்த அலகுகளுக்கு தேவையான அந்த உராய்வு நீக்கி எண்ணெய் இதே கம்பனியினால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றும் இந்த என்ஜின்களின் உராய்வு நீக்கி எண்ணெய் நுகர்வு மிகவும் அதிகமாக இருப்பதாகவும், இந்த செயற்பாடும் நாடு அதிகளவில் செலவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும், இலங்கை மின்சார சபை தகவல் மூலங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கிடைக்கக்கூடிய தகவல்களுக்கு இணங்க, கொள்வனவு பற்றிய நிலையியல் குழு, வெளியேறும் புகையை சுத்திகரிப்பதற்கான விலைகள், குறித்த அலகுகளுக்கான ஏற்றியிறக்கல் மற்றும் நிறுவுகை செலவுகள், எரிபொருள் பாய்ச்சல் அளவீட்டு மாணிகளுக்கான செலவுகள் மற்றும் இந்தியாவிலிருந்து உராய்வு நீக்கி எண்ணெய்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்பட்டிருந்த அதிக செலவுகள் முதலியவற்றை கருத்திற்கொண்டிருந்ததாகவும், செனொக் நிறுவனத்தினதும் மற்றும் இந்திய கேள்விமனுதாரர் தரப்பினதும் கேள்விமனுக்களுக்கு இடையில் சுமார் 1.3 பில்லியன் ரூபா வித்தியாசம் இருந்ததாகவும், அதன்படி தொழில் நுட்ப மதிப்பீட்டு குழுவினால் செனொக் நிறுவனம் மதிப்பிடப்பட்டளவில் போதியளவு மிகவும் குறைந்த கேள்விமனுவை சமர்ப்பித்த கேள்விமனுதாரர் தரப்பாக சிபாரிசு செய்யப்பட்டிருந்தாகவும்  அப்போதைய அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டிருந்தார். 

இந்திய கேள்விமனுதாரர் தரப்பு வெளியாகும் புகையை கட்டுப்படுத்துகின்ற அலகுகளுக்கான விலையை குறிப்பிட்டிருந்தாலும், அதன் இறுதி கேள்விமனுவில் அது இன்றியமையாத பாகமாக சுட்டிக்காட்டியிருக்கவில்லை. வெளியாகும் புகையை சுத்திகரிப்பதற்காக கேள்விமனுதாரர் தரப்பு குறித்தனுப்பியிருந்த விலை,ஆகக்குறைந்த நியாயமான கேள்விமனுவாக இருந்தமை கொள்வனவு பற்றிய நிலையியல் குழுவினால் கருத்திற் கொள்ளப்பட்டிருக்கவில்லை. குறித்த அந்த கேள்விமனுதாரர் தரப்பு நிறுவுகை மற்றும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தல் ஆகியவற்றுக்கான ஆகுசெலவுகளை குறிப்பிட்டிருக்கவுமில்லை என்பதுடன் தனது கேள்விமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த எரிபொருள் பாய்ச்சல் அளவீட்டு மாணிகளை விநியோகித்திருக்கவுமில்லை. ஆகையால் அந்த கேள்விமனுதாரர் தரப்பு கட்டாய கேள்விமனு தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கும் தவறியுள்ளது. அமைச்சர் தனது அமைச்சரவை பத்திரத்தில் செனொக் நிறுவனத்தின் ஆகக்குறைவாக இருந்த கேள்வி மனுவிலைகளை குழு கருத்திற்கொண்டிருந்தமை தெளிவாகின்றது.  

இதே நேரம், போதிய அளவில் நியாயமான கேள்விமனுக்களாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த கேள்விமனுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், 11.2(பி)கேள்வி மனு வாசக தகவுதிறனின் பிரகாரம், சக்தியின் ஆகக்குறைந்த அலகு ஆகுசெலவு, கேள்விமனு ஒப்பந்தத்தை வழங்குவதற்கான சுட்டியாக கருத்திற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பதும் கிடைக்கக்கூடிய தகவல் மூலங்களிலிருந்து மேலும் தெரியவந்தது.  

எரிபொருள் ஆகுசெலவு, எரிபொருள் சக்தி ஆகுசெலவை நிர்ணயிப்பதில் பெரும் பங்கை வகிக்கின்றது. கேள்விமனு தகவுதிறன்களுக்கு இணங்க, எரிபொருள் ஆகு செலவுவருடமொன்றுக்கு 1200 இயக்க மணித்தியாலங்கள் வீதம் பத்து வருடங்களுக்கு 12,000 இயக்க மணித்தியாலங்கள் என்ற அடிப்படையில் பத்து வருடகாலப்பகுதிக்கு கணிப்பிடப்படுதல் வேண்டும்.  வெளியிடப்பட்டிருந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது, ஸ்டேர்லிங் என்ட் வில்ஸன் பெர்க்கிங்ஸ் உற்பத்தியின் எரிபொருள் நுகர்வுஏறக்குறைய 255 லீற்றர்கள்/மணித்தியாலம் என்ற அளவில் காணப்படுகின்றது. தொ.நு.ம.கு. சிபாரிசு செய்திருந்த செனொக் நிறுவனத்தின் கம்மின்ஸ் உற்பத்தி 249 லீற்றர்கள்ஃமணித்தியாலம் என்ற அளவில் காணப்படுகின்றது. 10 வருடங்களுக்கு இந்த இரண்டு உற்பத்திகளினதும் எரிபொருள் நுகர்வை கருத்திற் கொள்கின்றபோது, ஸ்டேர்லிங் என்ட் வில்ஸன் நிறுவனத்தின் உற்பத்தி, செனொக் நிறுவனத்தின் உற்பத்தியை விடவும் 342 மில்லியன் ரூபா அதிகமாக இருப்பதாக தெரியவந்தது.   

உலகளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் கொள்ளளவுடைய என்ஜின் மின்பிறப்பாக்கி அலகுகள், குறித்தகேள்விமனு ஆவணத்தினது 23ஆம் வாசகத்தின் பிரகாரம், ஆகக்குறைந்தது 150 எண்ணிக்கையாக இருக்கவேண்டும். இந்த மின்பிறப்பாக்கிகள் உலகம் முழுதிலுமுள்ள தலைமை விநியோகத் தரப்புகளினால் பத்து வருடங்களுக்குள் விற்பனை செய்யப்படுதலும் வேண்டும். விற்பனைகளை உறுதிசெய்யும் நிமித்தம், ஆவண ரீதியான ஆதாரங்களுடன் அத்தகைய விபரங்கள் அடங்கியபட்டியல், வாடிக்கையாளர் தரப்புகளிடமிருந்து கிடைக்கும் ஆதார ஆவணங்களுடன் வழங்கப்படுதல் வேண்டும்.  

செனொக் நிறுவனம் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் அத்தகைய 485 அலகுகள் அடங்கிய ஒருபட்டியலை சமர்ப்பித்திருந்தாலும் மற்றும் கோரப்பட்டிருந்த ஆவணரீதியான சான்றுகளை வழங்கியிருந்தாலும், கொள்வனவு பற்றிய நிலையியல்குழு சிபாரிசு செய்தகேள்வி மனுவை முன்வைத்த கேள்விமனுதாரர் தரப்பாகிய ஸ்டேர்லிங் என்ட் வில்ஸன் நிறுவனம் குறித்த தகவுதிறன்களை அனுசரிப்பதற்கு தவறியுள்ளது.  

இதே நேரம், கேள்விமனு தகவுதிறன்களில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ளவாறு 10 ஸ்தலங்களில் நிறுவுவதற்கு பதிலாக துல்ஹிரிய (1MWx10), கொலன்னாவ மற்றும் மத்துகம (ஒவ்வொன்றும் 1MWx20) ஆகிய மூன்று மின்னிலையங்களில் 50 மின்பிறப்பாக்கி அலகுகளை இலங்கை மின்சார சபை  ஏன் நிறுவியது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர் சியம்பலாபிட்டியவின் அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க, மின்சார உற்பத்தியில் காணப்பட்டிருந்த சிறுவித்தியாசங்களை தவிர்க்கும் பொருட்டு, இலங்கை மின்சார சபை 1MW/1.25 ஆஏயு அடங்கிய 50 கொள்கலன் களஞ்சியங்களையும், கொள்கலனுடைய 25 களஞ்சிய மின்மாற்றிகளையும் மற்றும் 25 கொள்கலன் களஞ்சிய எரிபொருள் டாங்கிகளையும் விலைக்கு வாங்க தீர்மானித்துள்ளது. இ.மி.ச. இவற்றை மதிப்பிடப்பட்டிருந்த 3000 மில்லியன் ரூபா ஆகுசெலவில் நிறுவும் நிமித்தம் கட்டுகொட, பியகம, கிரிபத்கும்புர, குருநாகல், பள்ளேகெல, காலி, உக்குவெல, ஹபரன, அம்பாந்தோட்டை மற்றும் கொலன்னாவ ஆகிய மின்னிலையங்களையும் தேர்ந்தெடுத்திருந்தது.  
எனினும், க்றிட் மின்சார முறைமைக்கு அவசர நிலையில் மின்சாரத்தை விநியோகிப்பதன் நிமித்தம் மின்பிறப்பாக்கிகளை கொள்வனவு செய்து 10 இடங்களில் நிறுவுவதற்கு என கேள்விமனுக்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கை மின்சாரசபையும் மற்றும் மின்வலுசக்தி அமைச்சும் தமது சொந்த கேள்விமனு நிபந்தனைகளை மீறி மூன்று இடங்களில் மாத்திரம் 50x1MW மின்பிறப்பாக்கிகளை நிறுவியிருப்பதையும் தகவல் மூலங்கள் சுட்டிக்காட்டின.   

குறித்த கேள்விமனுதாரர் தரப்புகள் 10 வித்தியாசமான இடங்களுக்குரிய ஏற்றியிறக்கல் செலவுகளையும் மற்றும் நிறுவுகை செலவுகளையும் கருத்திற் கொண்டு தமது கேள்விமனு விலைகளை சமர்ப்பித்துள்ளன.  கொழும்பிலும் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் மூன்று இடங்களில் குறித்த இந்த 50 அலகுகளை நிறுவவேண்டும் என இ.மி.ச. கூறியிருந்தால், கேள்விமனுதாரர் தரப்புகள் ஏற்றியிறக்கலுக்கும் மற்றும் நிறுவுகைக்குமான குறைந்தகேள்விமனு விலைகளை குறித்தனுப்பியிருந்திருக்கும்.

கிடைக்கக்கூடிய தகவல் மூலங்களுக்கு இணங்க, நாட்டில் எப்பொழுதாவது தேவைப்பட்டாலும் மற்றும் தேவைப்படும் போதும் எடுத்துச் செல்வதற்காகவே இந்த 20அடி கொள்ளளவுடைய மின்பிறபாக்கிகளை பெறுவதன் பிரதான நோக்கமாக இருந்தது. இறக்குமதி செய்யப்பட்டு வந்திருந்து இந்த மின்பிறப்பாக்கிகள் தேவையான ஒலிஅளவுகளை அனுசரிப்பதாகவில்லை. இ.மி.ச.தனதுசொந்தசெலவில் ஒலி அட்டென்யூட்டர்களை நிறுவி இந்த அலகுகளுக்கான திருத்தங்களை மேற்கொள்கின்றது. இது அனுமதிக்கக்கூடிய பரிமாணங்களை விஞ்சியுள்ளது. ஆதலால், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அங்கீகாரத்தை பெறாமல் இவற்றை எடுத்துச் செல்வது சாத்தியமில்லை. ஆகையால், இ.மி.ச. மூன்று நிலையான இடங்களில் தற்பொழுது இவற்றை நிறுவியுள்ளது. இது ஆரம்ப கேள்விமனு தேவைப்பாட்டை மீறிய ஒரு தெளிவான செயலாகும்.

கேள்விமனுதாரர் தரப்புகள் குறித்த கேள்விமனு தகவு திறன்களின் பிரகாரம் 10 இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான செலவு அடங்கலாக தமது கேள்விமனு விலைகளை சமர்ப்பித்திருந்த போதிலும், குறித்த கேள்விமனு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 10 இடங்களை தவிர்த்து மூன்று இடங்களில் மாத்திரம் குறித்த அந்த 50 மின்பிறப்பாக்கி அலகுகளும் நிறுவப்பட்டுள்ள நிலையில் அந்த மின்பிறப்பாக்கிகள் தேவையானவாறு ஏதாவது ஒரு இடத்திற்கு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடமாடும் அலகாக கொள்வனவு செய்யப்பட்டிருந்ததால் நாட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இ.மி.ச. அவற்றை நிறுவமுடியும் எனினும் தற்போது அவை சாத்தியமற்றதாகவே இருக்கின்றது.
இதே நேரத்தில், நிராகரிக்கப்பட்டிருந்த ஒரு கேள்விமனுதாரர் தரப்புக்கு இந்த கேள்விமனு ஒப்பந்தத்தை வழங்க இ.பொ.ப.ஆ. ஏன் அனுமதியை வழங்கியது என கேட்டறிவதற்காக இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டுத்தாபன தொடர்பாடல்கள் பணிப்பாளரும் ஊடகபேச்சாளருமான ஜயனாத் ஹேரத்திடம் வினவியபோது, இந்தவிடயம் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினது அங்கீகாரத்தின் நிமித்தம் ஒருபோதும் குறிப்பீடு செய்யப்படவில்லை என தெரிவித்தார். 

அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு மின்னுற்பத்தித் திட்டத்தின் கீழ் அது ஒரு மேலதிக கொள்ளளவாக இருந்தாலும் அதேபோல் அது ஒரு அவசர மின்சார கொள்வனவாக இருக்கலாம் என்றிருந்தாலும் கூட, இ.மி.ச. இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவேண்டும். இந்ததேவைப்பாடு இலங்கை மின்சார சட்டத்தின் 43 ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு அவசர மின்சார கொள்வனவுகளை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கும் அல்லது கொள்ளளவு சேர்வுகள் ஆகக்குறைந்த ஆகுசெலவு கோட்பாட்டுடன் இணங்கி காணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்துகொள்வதற்கும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை அனுமதிப்பதாகவும், 50ஆறு மேலதிக மின்பிறப்பாக்கிகளின் நிமித்தம் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கோரப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

--

..............................................................................................
K.Prasanna kumar (B.A.)
Journalist

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக