கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

13 அக்டோபர், 2020

அரசியல் நியமனங்களால் அவதியுறும் மக்கள்

ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் முன்னைய அரசாங்கத்தின் திட்டங்களை இரத்துச் செய்வதும் இடைநிறுத்துவதும் இலங்கையில் வழமையானது. அவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் கடந்த ஐ.தே.க. அரசாங்கத்தில் வழங்கப்பட்ட இருவேறு நியமனங்கள் தொடர்பில் இறுதி தீர்மானங்கள் வழங்கப்படாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளது அல்லது இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராகவிருந்த மனோ கணேசனினால் வழங்கப்பட்ட 1300 பேருக்கான இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் பயிற்சிக்கான நியமனங்கள் மற்றும் பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் வழங்கப்பட்ட 6548 பேருக்கான செயற்திட்ட உதவியாளர்களுக்கான நியமனங்கள் என்பன ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போதுவரை மீண்டும் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய போது அவசர அவசரமாக இந்நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதை நம்பியவர்களின் நிலை பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நியமனங்கள் வழங்கப்பட்டு ஒரு வருடம் கடக்கின்ற நிலையில் நியமனம் பெற்றவர்களுக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை. 

பயிலுனர் கருத்திட்ட உதவியாளர் நியமனங்கள்

செயற்திட்ட உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு மாவட்ட செயலகங்களில் கடமைகளை பொறுப்பேற்க சென்றவேளையே இடைநிறுத்த அறிவிப்புக்கள் வழங்கப்பட்டன. அதன்மூலம் தெரிவு செய்யப்பட்ட 6548 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நியமனங்கள் தொடர்பில் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு அமைய அமப/19/3429/204 இலக்க 2020.01.03 தினத்தின் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய பயிற்சி கருத்திட்ட உதவியாளர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் கேட்டுக்கொண்டுள்ள தகவல்களில் வழங்கமுடியாதிருப்பதை அறியத் தருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

07.05.2019 ஆம் திகதி தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு 24.04.2019 ஆம் திகதி அலரிமாளிகையில் முதற்கட்ட நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்பார்த்த தகைமைகளை விண்ணப்பதாரிகள் பூர்த்தி செய்திருக்காமையினால் 25.08.2019 ஆம் திகதி இரண்டாம் கட்டமாகவும் 13.09.2019 ஆம் திகதி மூன்றாம் கட்டமாகவும் நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றிருந்தன. அதன் பின்னர் 16.09.2019 ஆம் திகதி நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்ட நிலையில் 18.09.2019 ஆம் திகதி மாவட்ட செயலகத்தின் தினபதிவேட்டில் கையொப்பமிட்டு கடமைகள் பொறுப்பேற்கப்பட்டன. 18.09.2019 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டமையினால் பயிற்சி கருத்திட்ட உதவியாளர் நியமனத்தை இடைநிறுத்துமாறும் தேர்தலின் பின்னர் வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 23.09.2019 ஆம் திகதி தொலைநகல் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னர் தேர்தல்கள் ஆணையாளரினால் மீண்டும் நியமனங்களை வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்ட நிலையில் 18.09.2019 ஆம் திகதி பயிற்சி கருத்திட்ட உதவியாளர்கள் கடமைகளை பொறுப்பேற்க சென்றிருந்த நிலையில் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியமனங்கள் வழங்கப்பட்டு ஒரு வருடம் கடக்கின்ற நிலையிலும் அவை தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் நியமனங்கள்

இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர் பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரும்போது இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டமையினால் பலரும் நம்பி அதற்கு விண்ணப்பித்து ஒருமாத பயிற்சி வழங்கப்பட்டு நிர்கதிக்குள்ளாக்கப்பட்டார்கள். பயிற்சிகளுக்கு உள்வாங்கப்பட்டவர்களினால் இருமுறை அரசகரும மொழிகள் திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் மொழியை (தமிழ்/சிங்களம்) கற்பிக்க ஆர்வம் காட்டும் மற்றும் அதற்குரிய தகைமைகளைப் பெற்றிருக்கும் விண்ணப்பதாரிகளிடமிருந்து மேற்படி கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 

இக் கற்கை நெறி முழுநேர அல்லது பகுதிநேர (வார இறுதி நாட்கள்) 600 கற்கை மணித்தியாலங்களைக் கொண்டதாக அமைந்திருந்ததுடன் இக் கற்கை நெறிக்கான முழுச் செலவினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்வதோடு கற்கைநெறியின் முடிவில் குறித்த கால எல்லைக்குள் பாடசாலையில் சேவையாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடல் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்கள் அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்படும் மொழி கற்கைநெறிகளில் வளவாளராக கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைப்பதோடு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இரண்டாம் மொழி ஆசிரியராக சேவையாற்றவும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்துக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் குறித்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் ஆகியவற்றுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்து தகவல்களை போரிய போதும் இன்றுவரையும் வழங்கப்படாமல் தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்களில் இருக்கின்ற பாரிய குறைபாடுகளே தகவல்கள் வெளியிடப்படுவதில் ஏற்படும் தாமதத்துக்கு காரணமாகும். அரசகரும மொழிகள் திணைக்களத்திடம் இவ்விடயம் தொடர்பிலான தகவல்கள் கோரப்பட்டிருந்த நிலையில், அப்போது இருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட பணியொன்றாக இருப்பதனால், அது குறித்த தகவல்கள் அரசகரும மொழிகள் திணைக்களத்திடம் இல்லையென்றும் தற்போது அந்த அமைச்சு அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சாக பெயர் மாற்றப்பட்டுள்ளதுடன், தகவல் கோரிக்கைளை அவ்வமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டிருந்த தகவல் கோரிக்கை தொடர்பாக அமைச்சு பின்வருமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. குறிப்பிடப்பட்ட இரண்டாம்மொழி பயிற்றுவிப்பாளர்கள் ஆட்சேர்ப்பு, நியமனம் வழங்குதல் தொடர்பான தகவல்கள் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் தொடர்புடையதால் அந்நிறுவனத்தின் தகவல் உத்தியோகத்தருக்கு இது தொடர்கில் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டும் குறிப்பிட்ட தகவல்களை வழங்குவதற்கு மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மொழி பயிற்றுவிப்பாளர்களை திசைமுகப்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2019 நிகழ்வு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றலுடன் அலரிமாளிகையில் நடைபெற்றிருந்தது. அங்கு மொழி பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனக்கடிதத்தில், “அரசகரும மொழிக்கொள்கையை வினைத்திறனுடன் அமுல்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் சிங்களஃதமிழ்ஃஆங்கில மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகளுக்காக தாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். தெற்கமைய இரண்டாம் மொழியைக் கற்பதற்கான விசேட பயிற்சிநெறிக்கு நிங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறவனத்தின் வளவாளர்களாக பதிவு செய்யப்படுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மொழி பயிற்றுவிப்பாளர்களுக்கான அரச நியமனம் வழங்கப்படுமென்று குறிப்பிடப்படவில்லை. 




நியமனங்களுக்கான தீர்வு என்ன?

எனவே கடந்த ஐ.தே.க. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேற்படி இரு நியமனங்களும் மீண்டும் வழங்குவதை புதிய அரசாங்கம் விரும்பாத ஒரு நிலையே காணப்படுகின்றது. இது தொடர்பாக கேள்வி கேட்பதற்கும் பாராளுமன்றத்தில் குறித்த கட்சியின் பிரதிநிதித்துவமே இல்லை. கட்சியும் அரசியலுடன் தொடர்பில் இல்லை. குறித்த நியமனங்கள் இரண்டும் அமைச்சின் நியமனங்களே தவிர அரசாங்கத்தின் நியமனங்கள் அல்ல. கருத்திட்ட உதவியாளர்கள் நியமனங்கள் தொடர்பாக எவ்விதமான தகவல்களும் அரசாங்க சேவை ஆணைக்குழுவில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது அரசியல் நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்காக நியமனங்கள் வழங்கப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர் நியமனங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக எதிர்க்கட்சியில் இருக்கின்றார். இவர் இவ்விடயம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக