15 மாதங்களுக்காகச் செலுத்தப்பட்ட ரூபா 315 மில்லியன்
சேவைக் கட்டணமாக ஒரு சதுர அடிக்கு ரூபா 60 வீதம் ரூபா 92.7 மில்லியன் மேலதிகப் பணம்
பத்தரமுல்லை ரஜமல்வத்த ஒழுங்கையில் அமைந்துள்ள ‘கொவிஜன மந்திரய’ கட்டிடத்திற்கு மீண்டும் விவசாய அமைச்சையும் அதன் கீழுள்ள ஏனைய நிறுவனங்களையும் இடமாற்றுவதற்கு 2019.12.18 ஆம் திகதி மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பிரேரிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. விவசாய அமைச்சும் அதன் அலுவலகங்களும் இயங்குவதற்கு இக்கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தாலும் வாடகையின் அடிப்படையில் அமைச்சுக்கு வேறு கட்டிடம் பெறப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் வாடகை கட்டிடமானது, குறைந்த வசதிகளைக் கொண்டதாகவும் அங்கு சேவை புரியும் உத்தியோகத்தர்களுக்கும் அதேபோன்று சேவை பெறுநர்களுக்கும் பல்வேறுபட்ட இடையூறுகளை ஏற்படுத்தியதாலும் மீண்டும் கைத்தொழில் அமைச்சை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவ்வாறு அமைச்சை வாடகை கட்டிடத்துக்கு மாற்றியமையினால் பல மில்லியன் ரூபாக்களை வாடகையாக பொது நிதியிலிருந்து செலுத்தவேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அமைச்சுக்கென தனியானதொரு கட்டிடம் இருக்கும் போதே இவ்வாறு வாடகைக் கட்டிடம் பெற்றுக்கொண்டதில் இருந்த உள்நோக்கம் என்ன?
2002 ஆம் ஆண்டு விவசாய அமைச்சானது, 17.199 ஹெக்டயர்கள் பரப்பளவான காணியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அக்கட்டிட வளவில் தேவையான கட்டிட வசதிகளும் அதன்நிலப் பிரதேசத்தில் விவசாய பயிர்ச் செய்கையைப் போல உள்நாட்டு உணவுகளை தயாரிக்கும் உணவுச்சாலையை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்ட கமத்தொழிலுக்குப் பொருத்தமான சுற்றுப்புறத்தைக் கொண்ட சுற்றாடலுடனேயே காணப்பட்டது. அவ்வாறு காணப்பட்டிருந்தும் 2015 செப்டெம்பர் 21 ஆந் திகதி பிரதமரினால்; சமர்ப்பிக்கப்பட்ட 15/130/705/007 ஆம் இலக்க அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் பிரகாரம் 2015 அக்டோபர் 08 ஆந் திகதிய 24 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் இக்கட்டிட வளவை பாராளுமன்ற தெரிவுக்குழு முறைமையை அமுல்படுத்துவதற்கு மற்றும் மேலதிக அலுவலக இடவசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்ததுடன் விவசாய அமைச்சை செத்சிரிபாய கட்டிடத்தில் ஸ்தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்ததாக 20.01.2020 ஆம் திகதி கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, செத்சிரிபாய கட்டிடத்தில் அதற்காக உள்ள பொருத்தமான தன்மையைப் பரீட்சிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், விவசாய அமைச்சினை பேணுவதற்குத் தேவையற்ற மேலதிக வசதிகள் தொடர்பாக கவனம் செலுத்தி நியாயமான அடிப்படை இன்றி செத்சிரிபாய கட்டிடத்தில் தேவையான கட்டிட வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானம் நீக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. அதற்கிணங்க, அமைச்சர் மற்றும் பதவியணியினரால் இராஜகிரிய 288 ஆம் இலக்க இடத்தில் அமைந்துள்ள விவசாய அமைச்சிற்காக தேவையான அளவினை விட மிகையாக இடவசதிகள் உள்ள கட்டிடம் அவதானிக்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்படும் வகையில் உரிய கட்டிடத்தின் உரிமையாளரால் தீர்மானிக்கப்பட்ட நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்ட ஒரு பிரேரணை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அக்கட்டிடத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
விவசாய அமைச்சு பயன்படுத்திய பழைய கட்டிடத் தொகுதி
‘கொவிஜன மன்திரய’ என்ற பெயரில் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விவசாய அமைச்சின் பழைய கட்டிடத் தொகுதியானது, 1996 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 66,500 சதுர அடி பரப்பளவைக் கொண்ட குறித்த கட்டிடத்தின் வளவானது, 03 மாடிகளைக் கொண்ட அலுவலகக் கட்டிடம், கேட்போர் கூடம், பொது மக்களின் தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு தேவையான இடவசதிகளுடனான கட்டிடம், நிரந்தரப் பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுடனான சுற்றாடலுக்குச் சாதகமான சுற்றுப்புறம், உள்நாட்டு உணவுகளை மேம்படுத்தும் குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டுள்ள உணவுச்சாலை, மரபுரீதியான அரசி, விதை வகைகள், நாற்று விற்பனை நிலையங்கள், வாகனங்களை நிறுத்திவைக்கும் வசதிகள், சாரதிகள் தங்குமிட வசதிகளுடனான கட்டிடம் என்பவற்றுடன் 17.199 ஹெக்டயர் அளவான இடவசதிகளுடனான இக்காணியில் மாதிரி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வீட்டுத்தோட்ட சுற்றாடல் காணப்படுகின்றமை இச்சுற்றாடலில் காணப்பட்ட விசேடத்துவமாக காணப்பட்டிருந்தது.
விவசாய அமைச்சுக்கான புதிய வாடகைக் கட்டிடம்
விவசாய அமைச்சுக்கு புதிய கட்டிடத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையில் செத்சிரிபாய நீக்கப்பட்டு இராஜகிரியவில் அமைந்துள்ள DPJ (D.P. Jayasinghe Tours and Transport Co. (Pvt) Ltd நிறுவனத்துக்குச் சொந்தமான D.P. J. Towers ) எனும் பெயருடைய கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக 2016 பெப்ரவரி 17 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்காக 2016 மார்ச் 10 ஆந் திகதி அமப/16/0309/702/010 ஆம் இலக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. 103,000 சதுர அடி அளவான விவசாய அமைச்சின் செயற்பாடுகளுக்காக வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய கட்டிடமானது, விசேடமாக கடைத்தொகுதிகளுக்குப் பயன்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது என்பது அவதானிக்கப்பட்டிருந்தது. மேலும், இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மேல்மாகாண பணிப்பாளரின் 2010 டிசம்பர் 13 ஆந் திகதிய 05/05/010/190/29/2010 ஆம் இலக்க கடிதத்தின் மூலம் காட்டப்பட்ட 03 நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் கீழ் அதனை நிர்மாணிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
அங்கீகரிக்கப்பட்ட மாடிகளின் அளவு 07 ஆக இருப்பதுடன் கட்டிடத்தின் மாடிகளுக்கிடையே உயரம் 30 மீற்றர்களைக் கொண்டிருத்தல் மற்றும் 59 வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடிய வாகன தரிப்பிடத்தை நிர்மாணித்தல் என்பவையே நிபந்தனையாக காணப்பட்ட நிலையில் இக்கட்டிடம் 10 மாடிகளுடன் (தளமாடியுடன் உள்ளடக்கி) மற்றும் அங்கீகரித்த உயரத்தினை விட 33 அடிகள் உயரத்துடன் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. கட்டிடத்தின் நுழைவு வசதிகளும் வாகனங்களை நிறுத்தி வைக்கும் வசதிகளும் போதியதாக இல்லாமை என்பவற்றுடன் அடிப்படைச் சேவைகள் வழங்கப்படாதிருந்தமை. அதாவது வழங்கப்பட்ட மின்சாரத்தின் இயலளவு போதுமானதாக இல்லாமை அல்லது திருத்தம் செய்ய வேண்டியிருந்தமை, அறைகளாகப் பிரிக்கப்படாதிருந்தமை, தளவிரிப்புக்கள் விரிக்கப்படாதிருந்தமை, சுகாதார வசதிகள் நிறுவப்பட வேண்டியிருந்தமை மின்சார படிக்கட்டு வசதிகளை மேம்படுத்த வேண்டியிருந்தமை மற்றும் அலுவலக உபகரணங்கள் வெளிவாரியாக வழங்கப்பட வேண்டியிருந்தமை போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளும் இனங்காணப்பட்டிருந்தன.
புதிய கட்டிடத்துக்கான வாடகை உடன்படிக்கையில் காணப்பட்ட நிபந்தனைகள்
புதிய கட்டிடத்தைப் பரீட்சித்து அக்கட்டிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கும், கட்டிடத்தின் விலை யோசனையை விசேட குழுவின் மூலம் தீர்மானிப்பதற்கும் 2015 டிசம்பர் 01 ஆம் திகதி விவசாய அமைச்சினால் அமைச்சரவை விஞ்ஞாபனம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இருக்கையில் அக்கட்டிடத்தின் உரிமையாளரால் 2016 பெப்ரவரி 10 ஆந் திகதிய கடிதத்தில் ஒரு சதுர அடி ரூபா 167.50 (கழிவை கழிப்பதற்கு முன்னர்) எனவும் குத்தகை காலஎல்லை ஆகக்குறைந்தது 05 ஆண்டுகள் எனவும் காட்டப்பட்டிருந்ததுடன் 03 ஆண்டுகளின் பின்னர் 15மூ வாடகையை அதிகரித்தல் மற்றும் 24 மாத வாடகை முற்பணம் தேவை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசாங்க மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் சதுர அடிக்கான வாடகை ரூபா 150 ஆக இருந்ததுடன் கட்டிட உரிமையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட கழிவுகள் கழிக்கப்பட்டதன் பின்னர் சதுர அடிக்கான வாடகை ரூபா 166.67 ஆக இருந்தது. அதற்கிணங்க, ஒரு சதுர அடிக்காக ரூபா 16.67 பணம் கட்டிட உரிமையாளரின் வேண்டுகோளின் பிரகாரம் மேலதிகமாகச் செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. மேலும், வாடகை கால எல்லையான 2019 மே மாதத்திலிருந்து 2021 ஏப்ரல் மாதம் வரை ஒரு மாதத்திற்கு ரூபா 21 மில்லியன் வீதம் 24 மாங்களுக்கு முற்பணமாக ரூபா 504 மில்லியன் 2016 ஏப்ரல் 08 ஆந் திகதி கட்டிட உரிமையாளருக்குச் செலுத்தப்பட்டிருந்தது.
மேலும், பத்தரமுல்ல பிரதேசத்தில் 1 ஹெக்டயர் அளவான காணி அமைச்சுக்கு சொந்தமாகக் காணப்பட்டிருந்தும் அதில் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாது 2016 ஏப்ரல் 08 ஆந் திகதியிலிருந்து 2021 ஏப்ரல் 08 ஆந் திகதி வரை கட்டிட வாடகையாக ஒரு மாதத்திற்கு 21 மில்லியன் வீதம் 05 ஆண்டுகளுக்கு ரூபா 1,260 மில்லியன் மேல் குறிப்பிட்ட கட்டிடத்திற்கு வாடகையாகச் செலுத்துவதற்கு உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது. மேலும் மேலேயுள்ள 6.5.3 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட முற்பணத்திற்கு மேலதிகமாக உடன்படிக்கை செய்த திகதியான 2016 ஏப்ரல் 08 ஆந் திகதியிலிருந்து 2019 ஏப்ரல் 07 ஆந் திகதி வரை கட்டிடம் விளைவற்றுக் காணப்பட்ட காலத்திற்காக ஒரு மாதத்திற்கு ரூபா 21 மில்லியன் வீதம் 36 மாதங்களுக்கு ரூபா 756 மில்லியன் பணம் செலுத்தப்பட்டிருந்ததுடன் உரிய வாடகை உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு 24 மாதங்களுக்குச் செலுத்தப்பட்ட முற்பணத்தை உடன்படிக்கை காலப்பகுதிக்குரிய இறுதி இரண்டு ஆண்டுகளின் போது எதிரீடு செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப்பிரமாணம் 835(2)(உ) பந்தியின் பிரகாரம் வாடகை கால எல்லை 3 ஆண்டுகளுக்கு அதிகரித்திருக்காதிருக்க வேண்டிய போதிலும், உடன்படிக்கையில் குறிப்பிட்ட வழமைக்கு மாற்றமான நிபந்தனைகள் பின்வருமாறு உள்ளடக்கப்பட்டிருந்தன. 5 ஆண்டுகள் காலத்திற்கு உடன்படிக்கை செய்திருந்தமை மற்றும் 3 ஆண்டுகளின் பின்னர் 15 சதவீதம் வாடகையை அதிகரிப்பதற்கு இணங்கியிருத்தல். 24 மாதங்களுக்காக முற்பணம் வழங்குதல் மற்றும் இறுதி 2 ஆண்டுகளின் போது மாதாந்த வாடகைப் பணத்திற்காக அதனை எதிரீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையின் மூலம் இந்த உடன்படிக்கையின் உடன்படிக்கை காலத்தை 05 ஆண்டுகள் வரை மாற்றமின்றி பேணுவதற்கு இடமளிக்கும் நிபந்தனையும் உள்ளடக்கப்படாதிருந்தமை. அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் மதிப்பீடான மாதாந்த சந்தை வாடகையாகிய ரூபா 13.5 மில்லியனை மிகைத்து ரூபா 6 மில்லியன் சேவைக் கட்டணத்தையும் உள்ளடக்கி ரூபா 21 மில்லியன் வாடகை செலுத்துவதற்கு இணங்கியிருந்தமை.
வாடகைக் கட்டிடத்தின் உட்கட்டமைப்புக்கான மேலதிக செலவுகள்
ஒன்பது மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தை வாடகைக்குப் பெற்றுக்கொள்ளும் போது அறைகளாகப் பிரித்தல் இடம்பெற்றிருக்காததால் அதனை அமைச்சின் தேவைப்பாட்டின் பிரகாரம் ஈடுபடுத்தும் போது அச்செயற்பாட்டிற்காகவும் ஒன்பது மாடிகளைக் கொண்ட தளமாடி (கீழ் மாடியினைத் தவிர்த்து) மாத்திரம் டயில்ஸ் பிடிக்கப்பட்டிருந்ததன் காரணமாக ஏனைய எட்டு மாடிகளுக்காகவும் தள விரிப்புக்களை விதிப்பதனைப் போல வழங்கப்பட்ட மின்சார முறைமையை அலுவலகத்திற்குப் பொருத்தமான முறையில் தயார்ப்படுத்துவதற்கும் புதிய கட்டிடத்திற்கு தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் பணம் செலவு செய்யப்பட்டிருந்தது. அதற்கிணங்க கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் பூர்த்தியாக்கப்பட்டிருக்க வேண்டியிருந்த மேற்கூறிய பிரதான தேவைப்பாடுகளுக்காக செலவு செய்ய வேண்டியிருந்த மேலதிகமான முழுமையான கிரயம் ரூபா 342.7 மில்லியனாகும். பழைய கட்டிடத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த தகவல் தொழி;ல்நுட்ப முறைமைக்குப் பதிலாக புதிய கட்டிடத்திற்காக மீண்டும் தகவல் தொழில்நுட்ப முறைமை உருவாக்குதல் இடம்பெற்றிருந்ததுடன் அச்செயற்பாட்டிற்காக ரூபா 61.03 மில்லியன் செலவு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், கட்டிடத்தின் சந்தை வாடகை ரூபா 13.5 மில்லியனாக அரசாங்க பிரதான மதிப்பீட்டாளரினால் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தும் கட்டிடத்தின் உரிமையாளரால் வேண்டிக் கொள்ளப்பட்ட ரூபா 21 மில்லியன் மாதாந்த வாடகையைச் செலுத்துவதற்கு இணங்கிக் கொண்டமை பாரதூரமான முறைகேடு என பாராளுமன்ற குழுவினால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்ட வகையில், உரிய அமைச்சின் நடவடிக்கைகளை செத்சிரிபாய கட்டிடத்தில் மேற்கொள்வதற்காக அமைச்சரவைத் தீர்மானம் வழங்கப்பட்டிருந்தும் அது போதியதாக இல்லை எனத் தெரிவித்து முன்னாள் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகாரத்தின் அடிப்படையில் பெறுகை வழிகாட்டிக் கோவையிலுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படாது ஒரு தனியார் கட்டிடம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருக்கின்றது. இக்கட்டிடத்தின் அங்கீகரிக்கப்பட்ட உயரத்தையும் மாடிகளின் எண்ணிக்கையையும் மிகைத்த அங்கீகரிக்கப்படாத நிர்மாணம் சம்பந்தமாக உரிய பொறுப்புக்கூறக் கூடிய நிறுவனங்களால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருந்ததுடன் இக்கட்டிடத்தை தெரிவு செய்யும் போதும் அந்நிலைமை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
பழைய கட்டிட வளவில் காணப்பட்ட தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் உயர்ந்த பெறுமதியுடையதாகவும் பயன்படுத்துவதற்கு பொருத்தமான நிலையிலும் காணப்பட்ட போதிலும் அத்தளபாடங்களும் உபகரணங்களும் ஏனைய அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதுடன் அதற்குப் பதிலாக வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட இக் கட்டிடத்திற்காக ரூபா 114.6 மில்லியன் செலவு செய்து தளபாடங்களையும் உபகரணங்களையும் புதிதாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. விவசாய அமைச்சு செயற்பாட்டு வந்த பத்தரமுல்ல ரஜமல்வத்தவில் அமைந்துள்ள கட்டிடம் அதற்குரிய பாரம்பரிய சுற்றாடல் மற்றும் வசதிகளுடனான பிரதேசத்தில் அமைந்திருந்ததுடன், அதிக வாகன நெரிசலுள்ள பிரதேசத்தில் நுழைவு வசதிகள் போதியளவு இல்லாத ஒரு தனியார் கட்டிடத்தை தெரிவு செய்தமையானது, அதன் தனித்துவத்தை முற்றாக புறக்கணித்திருந்தது.
அவ்வாறே பொது வசதிகள் போதியளவில் இல்லாத ஒரு கட்டிடத்தை வாடகைக்குப் பெற்றுக்கொள்ளல் மற்றும் இக் கட்டிடத்தை வாடகைக்குப் பெற்றுக்கொள்வதற்காக உடன்படிக்கை செய்யப்பட்ட கடப்பாட்டினை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தின் போது அக்கட்டிடம் பூரணமாகப் பூர்த்தி செய்யப்படாத ஒரு கட்டிடமாக இருந்தது. இவ்வாறு அரசாங்கத்துக்கும் பொது பணத்துக்கும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டத்துக்கு முன்னாள் பிரதமர் உட்பட்டதும் அதற்கு அப்போதைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதும் எதற்காக? விவசாய அமைச்சுக்கு தேவையான மற்றும் அங்கு பணியாற்றிய 300 பணியாளர்களுக்குப் போதுமான இடவசதிகளை ‘கொவிஜன மந்திரய’ கொண்டிருந்த போதிலும் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த வாடகைக் கட்டிடத்தின் மூலம் எதற்காக அமைச்சை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டது? இத்திட்டத்துக்காக அரசாங்க நிதியிலிருந்து 1524.44 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதி பயன்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது அவசியம். அத்துடன் விவசாய அமைச்சை அதன் பழைய கட்டிடத்துக்கே மாற்றி வாடகை கட்டிடத்தை இரத்துச் செய்தலும் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக