கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூலை, 2020

பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?


  •  உயர்ந்த சலுகையை பெறும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
  • சொத்துவிபரங்களை வெளியிடாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்
  •  ஓய்வூதியத்துக்கு தகுதியான 14 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்



இலங்கையின் சட்டவாக்கசபையான பாராளுமன்றத்தின் தேர்தல் நெருங்குகின்ற வேளையில் 9 ஆவது பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கான மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள், சபையை அலங்கரிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பாராளுமன்றத்தின் ஆயுட்காலமான ஐந்து வருடங்களுக்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை அவர்களின் அபிவிருத்தி செயற்பாடுகள், பாராளுமன்ற உரைகள், மக்கள் சேவைகள் என்பவற்றை வைத்து அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களும் தெரிவு செய்யப்படவுள்ளவர்களும் எவ்வாறான சலுகைகளை மக்களின் வரிப்பணத்தில் அனுபவித்தார்கள் அல்லது அனுபவிக்க போகின்றார்கள் மற்றும் தமது ஆயுட்காலம் முழுவதும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் தொடர்பிலும் அறிவதும் அவசியமாகும். இவற்றையெல்லாம் கணக்கிட்டபின்பு அந்த இடத்துக்கு செல்வதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்ய வேண்டும். மாறாக தம்மை வளர்த்துக்கொள்வதற்காக பாராளுமன்றம் செல்பவர்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
2020 ஆம் ஆண்டில் எட்டாவது பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில்  60 புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் இரத்தாகும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவதற்கான ஐந்து வருடங்கள் பூர்த்தியடையாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் 60 பேருக்கு இந்த கொடுப்பனவு கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போகின்றது. 2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதியன்றே தற்போதைய பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆரம்பமாகியிருந்தது. இவர்களுக்கான 5 வருடங்கள் 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதியன்றே நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் மட்டுமல்லாது பல்வேறு சலுகைகளையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர். ஆனால் அவர்களை தெரிவு செய்த மக்களோ இன்னும் அபிவிருத்தி காணாத நிலையிலேயே இருக்கின்றனர்.

இந்நிலையில் 1988 - 2015 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட சலுகைகள் மற்றும் தற்போது ஓய்வூதியம் பெற்றுக்கொள்பவர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை பாராளுமன்றத்திடமிருந்து (P/I/19/0068) பெற்றுக்கொள்ள முடிந்தது. இலங்கைப் பாராளுமன்றத்தில் 1989 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் 24 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இப்பட்டியலில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு ஒவ்வொரு காலப்பகுதியிலும் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் மலையக மக்களின் அபிவிருத்தியில் அவர்கள் எந்தளவுக்கு பங்களிப்பை வழங்கியிருந்தார்கள் என்பது தொடர்பாக தெளிவாக சிந்தித்தல் அவசியமாகும்.

இம்முறை தேர்தல்களில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் அல்லது புதியவர்களும் தேர்தல்களில் போட்டியிடக்கூடும். ஆனால் அவர்கள் வெறும் ஓய்வூதியங்களுக்காக ஐந்துவருட பாராளுமன்ற அமர்வை கழிக்காமல் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களாக தெரிவு செய்ய வேண்டும். மலையகத்தில் தற்போது 1988 - 2015 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களில் 14 பேர் பாராளுமன்ற ஓய்வூதியக் கொடுப்பனவை பெற்றுக்கொள்கின்றார்கள். அவ்விபரங்களை அட்டவணை 01 இல் காணலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உரித்தாகும் அவரின் அடிப்படைச் சம்பளத்தில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அவர் உறுப்பினராக இருந்த காலத்துக்கேற்ப ஆகக்குறைந்தது 05 வருட காலம் மற்றும் ஆகக்கூடியது 15 வருடகாலம் என்ற அடிப்படையில் இந்த உறுப்பினரது சம்பளத்தில் 1/3 முதல் 2/3 வரையான அளவுக்கு விகிதாசார அடிப்படையில் ஓய்வூதிய சம்பளம் கிடைக்கும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரித்தாகும் அவர்களின் ஓய்வூதிய சம்பளம் தீர்மானிக்கப்படுவது, அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிச்சென்ற பின்னர் முழுமையான சேவைக்காலம் கணிப்பிடப்பட்டதன் பின்னராகும்.

பாராளுமன்ற ஒய்வூதிய சட்டத்தின்படி 1931 ஜூலைக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்த ஒருவர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள தகுதியுடையவராகின்றார். அத்துடன் அவரது துணை மற்றும் அவரது பிள்ளைகளும் குறித்த ஓய்வூதியத் தொகையை பெறுவதற்கு உரித்துடையவர்களாகின்றனர். 1977 இன் பாராளுமன்ற ஓய்வூதிய சட்டம் 1982 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவருடைய துணைவியார் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவராகின்றார். உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினரின் துணை மறுமனம் செய்துகொள்ளாத வரை அவர் ஓய்வூதியத் தொகையை பெற்றுக்கொள்ள தகுதியடையவர். இந்த சட்டம் 1900 இல் மீண்டுமொருமுறை மீள்திருத்தம் செய்யப்பட்டதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவருடைய பிள்ளைகளும் குறித்த ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள தகுதியுடையவராகின்றனர். 

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கான சட்டம் இருமுறை திருத்தப்பட்டடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் வரையும் நன்மை பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்த எம்மக்களின் நிலையோ இன்னும் மாற்றம் காணாமல் இருப்பது வேதனைக்குரியது.

 மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் சலுகைகள் அனைத்தும் மலையக மக்களின் வாக்கினால் பெற்றவை என்பதை பல பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்றவுடன் மறந்து விடுகின்றார்கள். அங்கு அவர்களுக்கு இயல்பாகவே அதிகார தோரணை முளைத்துவிடுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வருமானம்

பாராளுமன்ற உறுப்பினரொருவரின் மாதச் சம்பளம் 54,285 ரூபாவாகும். அதைவிடவும் கேளிக்கை படியாக 1000 ருபாவும் ஓட்டுநர்களின் படியாக 3500 ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒவ்வொரு அமர்வுக்காகவும் 2500 ரூபா அமர்வுப் படியாகவும் அமர்வு இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டத்துக்கு சமூகமளிப்பதற்காக 2500 ரூபாவும் வழங்கப்படும். நிலையான இணைப்பு மற்றும் கையடக்கத் தொலைபேசிக்காக மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவும் தனிப்பட்ட பணியாட் தொகுதியினரின் போக்குவரத்து செலவுக்காக 10 ஆயிரம் ரூபாவும் இலவச தபால் கட்டணமாக 350,000 ரூபா பெறுமதியான முத்திரைகள் என்பனவும் வழங்கப்படுவதுடன், வாகனங்களுக்கான எரிபொருள் செலவானது ஒவ்வொரு மாதத்தினதும் முதல்நாளில் ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட சந்தை விலை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்குள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டு செலுத்தப்படுகின்றது. அதன்படி நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 01.03.209 முதல் 51203.36 ரூபாவும் பதுளை மாவட்டத்துக்கு 58,582.28 ரூபாவும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 43,235.28 ரூபாவும் எரிபொருள் கொடுப்பனவுகள் பாராளுமன்றத்தினால் வழங்கப்படுகின்றன.

பிரதி அமைச்சர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளமாக 63,500 ரூபாவும் அமைச்சரவை அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சருக்கு 65,000 ரூபாவும் செலுத்தப்படுவதுடன் இக்கொடுப்பனவு ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படுகின்றது. 2018 மார்ச் மாதத்தில் அமைச்சர்கள் பயணிப்பதற்காக வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் 361 - 494 மில்லியன் ரூபாக்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. 2018 அக்டோபர் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் படி, அவ்வருடத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களின் எண்ணிக்கை 7000 ஆகும். இவை ஒவ்வொன்றுக்குமான சராசரி செலவு 3.6 மில்லியன் ரூபாவாகும். மேலும் பல்வேறு பிரிவுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற இராஜதந்திரிகள், ஓய்வு பெற்ற அமைச்சின் செயலாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகளுக்காகவும் வாகனங்கள் பிரத்தியோகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை முழுமையான வரி விலக்கு அனுமதிப்பத்திரங்கள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 23 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் பதவிவகித்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு 78 வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 280 கோடி ரூபா செலவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பாரிய சலுகைகளை அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்போர் மக்களுக்காக எவ்வாறான சேவைகளை ஆற்றியிருக்கின்றார்கள் என்பதை அறிந்திருப்பதுடன் அதனடிப்படையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அதைவிடுத்து போலி வாக்குறுதிகளுக்காகவும் தேர்தல் கால சலுகைகளுக்காகவும் மக்கள் துணைபோகக் கூடாது. மலையகத்தில் கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்திகள் தொடங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டிருந்தாலும் ஒதுக்கப்பட்ட நிதியில் சில வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இன்னும் பல வேலைத்திட்டங்கள் தொடங்கப்படாமலேயே இருக்கின்றன. அதற்கான காரணம் என்ன? மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான சேவையில் எவ்வாறு கரிசணை கொண்டிருக்கின்றார்கள் என்பது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் என்பதன் அடிப்படையில் அவர்களுடைய சொத்துக்களை வெளிப்படுத்தும் கடமை அவர்களுக்கு இருப்பதாக கருதப்படுகின்றது. இதுவரையும் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொத்து விபரங்களை தாமாகவே முன்வந்து வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்நிலையில் மலையக பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துவிபரங்களை கோரி பாராளுமன்றத்திடமும் அமைச்சர்களின் சொத்துவிபரங்களை கோரி ஜனாதிபதி செயலகத்திடமும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக தகவல்கோரிய போதும் இவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரஜைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்களைப் பெற்றுக்கொள்ள தேவையானபோது, 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவின் பிரகாரம் முறையான கோரிக்கை ஒன்று சபாநாயகருக்கு முன்வைக்கப்பட வேண்டுமென பாராளுமன்றத்தினால் (P/I/19/0019) அறிவிக்கப்பட்டிருந்தது.

 அதன் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கான மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்களின் சொத்துவிபரங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திடம் கோரியபோதும் (PS/RTI/01/2019/250) தகவல் மறுக்கப்பட்டது. இவை தொடர்பாக தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிடம் முறையீட்டினை மேற்கொண்டுள்ள போதும், இவ்விடயம் தொடர்பான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வெளியாகும் வரையிலும் குறித்த மேன்முறையீடுகள் மீதான தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்களுக்கு சேவையாற்றுபவர்கள், சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து தகவல்களை வெளியிட முடியும். அதற்கு தயாரானவர்கள் எமது தலைமைகளில் இருக்கின்றார்களா என்பதை அவரவர் சுயபரிசோதனை செய்தே தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்களுடைய வாக்குகளை கோருபவர்கள் மக்களுடைய தயவில் பதவிகளுக்கு வருபவர்கள் மக்கள் முன் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வது அவசியமாகும். அதேவேளை மக்களும் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை, கடந்தகால செயற்பாடுகள் போன்றவற்றை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பான விபரங்களை இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது. 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற இறுதிநாள் வரையான காலப்பகுதியில் 252 நாட்கள் பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றிருக்கும் நிலையில் நாம் தேர்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்துக்காக எவ்வாறு பாராளுமன்றத்தில் செயற்பட்டிருக்கின்றார்கள் மற்றும் பாராளுமன்றத்துக்குச் சென்ற நாட்கள் தொடர்பான தகவல்கள் அந்த ஆய்வில் உள்ளடங்கியுள்ளன. அவ்விபரங்களை அட்டவணை 02 இல் காண முடியும்.



அட்டவணை இரண்டின்படி மிக்குறைந்த பாராளுமன்ற வருகையை தற்போதைய காபந்து அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான பதிவு செய்துள்ளதுடன் அதிகமான வருகை நாட்களை முன்னாள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தமக்கு சேவையாற்றக் கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. மக்களிடமிருந்து அதிகாரத்தினை பெற்றுக்கொண்டு அதனை து‘;பிரயோகப்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களை தெரிவு செய்வதிலிருந்து விலகிக்கொண்டு, சமூக அக்கறையுடன் செயற்படுபவர்களை தெரிவு செய்வதே காலத்தின் தேவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக