கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

2 மார்ச், 2020

புனரமைப்பு செய்யப்பட்ட வட்டகொடை வாசிகசாலை

வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பது முதுமொழி. ஆனால் தற்போதைய சூழலில் இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கம் குறைவடைந்து வருவதாகவே பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். நூலகங்கள் அல்லது வாசிகசாலைக்கு செல்வதையோ மற்றும் புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றை வாசிப்பதையோ பார்ப்பது அரிதாகவே இருக்கின்றது. பெருந்தோட்டங்களில் இந்நிலைமை இன்னும் மாறாமலே காணப்படுகின்றது. குடிநீர், பாதையமைப்பு, வீட்டுவசதி, கோயில் கட்டுமானம், விளையாட்டு மைதான அபிவிருத்தி, சிறுவர் பூங்கா போன்றவற்றுக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் ஒரு வாசிகசாலை உருவாக்கத்துக்கு கொடுக்கப்படுவதில்லை. அதேவேளை வாசிகசாலையொன்றினை முழுமையான பயன்பாட்டுக்கு உட்படுத்துவதற்கு பெருந்தோட்ட மக்களுக்கும் தெரியவில்லை. பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படுகின்ற பெரும்பாலான வாசிகசாலைகள் நகரசபைகள் மற்றும் பிரதேசசபைகளுக்கு சொந்தமானவையாக காணப்படுவதுடன் அவை நகர்பகுதிகளில் மாத்திரம் காணப்படுகின்றன.


அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பெருந்தோட்டப் பகுதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதிகாரம் ஆரம்பக்காலங்களில் வழங்கப்படாத நிலையில், 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு பெருந்தோட்டப் பகுதிகளிலும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்கு முன்னரான காலப்பகுதியில் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியிலேயே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பெருந்தோட்டங்களுக்கு வாசிகசாலை அமைக்கும் பணிகளில் யாரும் அதிகளவில் கவனம் செலுத்தவில்லை. தற்போதும் அவ்வாறான அபிவிருத்திகளில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. வர்த்தமானி அறிவித்தலொன்றை பார்வையிடவேண்டுமாயின் நகர்புற வளங்களை தேடியே அலைய வேண்டியுள்ளது.

ஒருவேளை எங்கேயோ ஒரு பெருந்தோட்டத்தில் ஏதோவொரு முயற்சியால் வாசிகசாலை அமைக்கப்பட்டிருக்குமாயின் அங்கும் வளங்கள் இல்லாத நிலையில் ஒன்றுகூடல் இடமாக பயன்படுத்தும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் வட்டகொடை பகுதியில் கடந்த வருடம் நிர்மாணிக்கப்பட்ட வாசிகசாலையானது, மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாமல் இருந்தமை தொடர்பாக கொட்டகலை பிரதேச சபையிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வினவிய போது, சில தகவல்களை ((CPC/KGPS/E3/RT/2019)) பெற்றுக்கொள்ள முடிந்தது. அந்தவகையில் கொட்டகலை பிரதேச சபையிடம் பின்வரும் விடயங்கள் தொடர்பில் தகவல்கள் கோரப்பட்டிருந்தன.


  1. கொட்டகலை பிரதேச சபையினால் வட்டகொடை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வாசிகசாலை இன்னும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாமைக்கான காரணம் என்ன?
  2. வாசிகசாலை கட்டிட நிர்மாணத்துக்கு செலவான தொகை விபரம்
  3. வாசிகசாலையின் கண்ணாடி, கதவு உடைக்கப்பட்டது தொடர்பாக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?, அவற்றுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
  4. உடைந்த பகுதிகள் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளனவா?
  5. வாசிகசாலை எப்போது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும்?
  6. வாசிகசாலையின் தளபாடங்கள் மற்றும் நூல்கள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்கு செலவான தொகை எவ்வளவு? 


இதனடிப்படையில் கொட்டகலை பிரதேச சபையினால் வழங்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு காணப்பட்டன.


  1. வட்டகொடை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வாசிகசாலை கடந்த ஆண்டு மே மாதத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அக்கட்டிடத்தில் காணப்பட்ட குறைபாடுகளை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.
  2. இக்கட்டிடம் மத்திய மாகாண விவசாய மற்றும் நீர்பாசன அமைச்சின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்ட கட்டிடமாகும். எனவே நிர்மாணப்பணிகள் முழுமையாக மேற்படி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அது தொடர்பான சகல விபரங்களையும் மேற்படி அமைச்சின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
  3. வாசிகசாலையின் கண்ணாடி, கதவு உடைக்கப்பட்டது தொடர்பாக அச்சந்தர்ப்பத்தில் நிர்மாண வேலைகளை மேற்கொண்ட ஒப்பந்தக்காரரினால் இருமுறை தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் ஆயினும் அது தொடர்பாக எவ்வித முன்னேற்றங்களும் காணப்படவில்லை என்பதை அறியக்கூடியதாகவுள்ளது.
  4.  உடைந்த பகுதிகள் தற்போது கொட்டகலை பிரதேச சபையினால் புனரமைக்கப்படுகிறது.
  5. புனரமைப்பு வேலைகள் நிறைவடைந்தவுடன் அடுத்தமாத முதற் பகுதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. (2020.01.20)
  6. வாசிகசாலை தளபாடங்கள் பெற்றுக்கொள்வதற்காக மத்திய மாகாண விடே மானியத்தின் கீழ் ரூபா 300,000 தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்தொகையின் கீழ் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ரூபா 50,000 தொகை பெறுமதியான நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

ஆனால் தகவல் வழங்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் தற்போது வாசிகசாலை மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் வட்டகொடை பகுதியிலுள்ள குறித்த வாசிகசாலையானது, பூரணப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் இனந்தெரியாதோரால் வாசிகசாலையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் இருமுறை குறித்த வாசிகசாலையின் ஒப்பந்ததாரரால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் இதுவரையும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் கடந்த சில வருடங்களாகவே அரசியலில் ஒரு போட்டித்தன்மை நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அரசியல் போட்டிகளுக்காக மக்களுடைய அபிவிருத்திகளில் பாதகம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. கட்சி அரசியலை முதன்மைப்படுத்தாது அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். குறித்த வாசிகசாலை அரசியல் போட்டிக்காக உடைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அபிவிருத்தியை விரும்பாதவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். யார் இந்த செயலை மேற்கொண்டிருந்தாலும் அது கண்டிக்கத்தக்க விடயமாகும். அதுவும் எதிர்கால சந்ததிகளுக்கு மிகவும் பயனுள்ள அறிவார்ந்த விடயங்களை கொடுக்கப்போகும் வாசிகசாலையினை சேதப்படுத்துவது குற்றமாகும். அதுபோலவே அண்மையில் மலையகத்தில் அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டமொன்று இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையகப் பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்திகளில் பின்தங்கியிருக்கின்றார்கள் என காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக மக்களுக்கு தேவையான சில அபிவிருத்திகள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த அபிவிருத்திகளையும் பாதுகாக்காமல் உடைத்தெறியும் கலாசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றை தடுக்க பிரதேச மக்களே முன்வர வேண்டும். ஒரு பிரதேசத்துக்கு முன்னெடுக்கப்படும் பொது வேலைத்திட்டமானது, அப்பிரதேச மக்களின் சொத்தாகப் பார்க்கப்பட வேண்டும். அதனை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அதனை நாம் அனைவரும் கவனதில் கொள்ளுதல் வேண்டும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக