- இலங்கையில் 2020 ஜனவரி 16 ஆம் திகதி வரையிலும் 1,175,077 முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலைநகரத்தில் அதிகரித்துள்ள வாகனங்களின் பாவனையினால் தற்போது கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. அதனால் தலைநகரத்துக்கு வரும் வெளிபிரதேச வாகனங்களுக்கு கட்டணம் அறவிடும் முறை தொடர்பில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய வாகனங்களின் அதிகரிப்பில் முச்சக்கர வண்டிகளின் பெருக்கம் தொடர்பிலேயே இக்கட்டுரை எழுதப்படுகின்றது. நாடு முழுவதும் முச்சக்கர வண்டிகளின் பெருக்கமானது, பல இளைஞர்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளது. அத்தோடு வாகன விபத்துக்களையும் அதிகரித்துள்ளது. இலங்கையில் ஐந்தில் ஒருவர் முச்சக்கரவண்டி விபத்தால் பாதிக்கப்படுவதாக அடையாளங்காணப்பட்டுள்ளது. கடந்த வருடம் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களில் ஐந்தில் ஒருவர் முச்சக்கரவண்டிச் சாரதியாக காணப்பட்டதாக வைத்தியசாலைத் தரவுகள் தெரிவித்துள்ளன. இலங்கையில் முச்சக்கரவண்டிகளின் அதிகரிப்புக்கு பல காரணங்கள் இருக்கின்றன. நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றின் பாவனைக்கு உகந்த வாகனம், தினந்தோறும் வருமானம் பெற்றுக்கொள்ளக்கூடிய வாகனம், செலுத்துவதும் இலகுவானது போன்ற பல காரணங்கள் மக்கள் மனதில் பதிந்துள்ளன.
ஆனால் முச்சக்கரவண்டிகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கோ, வேகமாக மிக நீண்டதூரம் பயணம் செய்வதற்காகவோ வடிவமைக்கப்பட்டவையல்ல. அதனால் இவற்றை போக்குவரத்து நட்பு வாகனமாக கருதமுடியாதென மொரட்டுவ பல்கலைக்கழக போக்குவரத்து திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார். அதிக வேகம் மற்றும் பயணம் செய்வோருடன் அதிக எடையை சேர்த்தல் என்பன விபத்துக்களுக்கான பிரதான காரணமாக காணப்படுவதாக அகில இலங்கை முச்சரவண்டிகள் சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளதுடன், தொழில்துறை சாரதிகள் ஒருசில குறைபாடுகளை கொண்டிருந்தாலும் பெரும்பாலான விபத்துக்கள் தனிப்பட்ட முச்சக்கரவண்டிச் சொந்தக்காரர்களாலேயே ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கை, விநியோகிக்கப்பட்டுள்ள முச்சக்கரவண்டி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் புதிதாக வழங்கப்பட்டுள்ள வாகனச்சாரதிகள் அனுமதிப்பத்திரம் தொடர்பிலான விபரங்களை போக்குவரத்து அமைச்சு (பதிவு இல.200) மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT/H/DE/Com/01-Volume-iv) என்பவற்றிடம் கோரியிருந்த நிலையில் பின்வரும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்நிலையில் இலங்கையில் 2015 - 2019 ஆம் ஆண்டு ஜூன் வரையான காலப்பகுதியில் 234,937 முச்சக்கரவண்டிகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மிக அதிகமாக 2015 ஆம் ஆண்டு 129,098 முச்சக்கரவண்டிகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 2016 இல் 56,522, 2017 இல் 22,405, 2018 இல் 18,836 மற்றும் 2019 ஜூன் வரையான காலப்பகுதியில் 8076 முச்சக்கரவண்டிகளும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மிக அதிகமாக கொழும்பு மாவட்டத்தில் 2015 இல் 14794, 2016 இல் 6901, 2017 இல் 2107, 2018 இல் 1914, 2019 இல் (ஜூன் வரை) 1076 புதிய முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை இன்னும் அதிகரித்திருக்கலாம். ஆனாலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து முச்சக்கரவண்டிகளும் வாடகை வாகனங்களாக செயற்படவில்லையென்பது முக்கியமானதாகும். தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2013/2014 பொருளாதார புள்ளிவிபரங்களின் படி, 47 வீதமான பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகள் மாத்திரமே டெக்ஸியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணளவாக அரை மில்லியன் முச்சக்கரவண்டிச் சாரதிகள் டெக்ஸி சேவையினை வழங்குகின்றனர். தேசிய தொழிற்படையில் 6 வீதமான பங்கினை முச்சக்கரவண்டி டெக்ஸி சாரதிகள் வழங்குகின்றனர். இருப்பினும் இலங்கையில் முச்சக்கரவண்டிகள் இயக்குவதானது, முதல் பத்து இரண்டாம் நிலைத் தொழில்களில் ஒன்றாக காணப்படுகின்றது. தொழிற்படைத்தரவுகளின் படி, 12 வீதமான முச்சக்கரவண்டிச் சாரதிகள் இதனை இரண்டாம் நிலைத் தொழிலாகவே கருதுகின்றனர்.
2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவிருந்த நிமல் சிறிபால டி சில்வாவினால் முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கான வயதெல்லை 35 ஆக மட்டுபடுத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது மீளப்பெறப்பட்டது. ஆனாலும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு முச்சக்கரவண்டிச்சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமென அமைச்சு தெரிவித்திருக்கின்றது. தலைநகரங்கள் போன்ற பகுதிகளில் பொதுபோக்குவரத்துக்களில் காணப்படும் அதிக நெரிசல் மற்றும் வாகன நெரிசல், நேரவிரயம் போன்ற காரணங்களினால் பெரும்பாலானோர் டெக்ஸிகளின் தேவையை நாடிச்செல்லுகின்றனர். அத்துடன் ஊபர் மற்றும் பிக்மீ போன்ற நிறுவனங்கள் வாடகை வாகனச் சேவைகளை வழங்கவதால் பயணிகள் இலகுவில் தங்களது பயணத்தை அமைத்துகொள்ள முடிகின்றது. இதனால் பொதுமக்கள் பொது போக்குவரத்தினைவிடவும் வாடகை வாகனங்களை அதிகம் நாடுகின்றனர். இதேவேளை மேற்படி நிறுவனங்களில் முச்சக்கரவண்டிகளின் பாவனை மிக அதிகமாக இருப்பதுவும் குறுகிய நேரத்துக்குள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதால் முச்சக்கரவண்டிகளின் பாவனை அதிகரித்து காணப்படுகின்றது. இத்திட்டம் பயணிகளுக்கு இலகுவானதாக அமைந்திருந்தாலும் மறுபுறம் முச்சக்கரவண்டிச் சாரதிகளின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்துவதுடன், முச்சக்கரவண்டிச் சனத்தொகையையும் அதிகரிக்கின்றது.
புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாட்டில் 1.059 மில்லியனுக்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இலங்கையின் 7.8 மில்லியன் தொழிலாளர் சனத்தொகையில் 1.2 மில்லியன் பேர் முச்சக்கரவண்டிச் சாரதிகளாக இருக்கும் நிலை காணப்படுகின்றது. இது தொழிற்படையில் 15.4 சதவீதமாகும். முச்சக்கரவண்டிச் சாரதிகளாக இருப்பவர்கள் எதிர்காலம் அற்றவர்களாக இருப்பதுடன் அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி கொள்வதற்கேற்ற வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியாமற் போகின்றது. அத்துடன் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் குறைந்தளவான விழிப்புணர்வினையே கொண்டுள்ளனர். அதேவேளை மிக அதிகமான நேரத்தை வீதிகளில் தனது வாடிக்கையாளர்களுக்காக செலவளிக்கும் நிலையும் காணப்படுவதாக இலங்கை கொள்கை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் முச்சக்கரவண்டிச் சாரதிகளின் வயது 38 க்கும் குறைவாகவே காணப்பட்டுள்ளது. இதில் 28 வயதுக்கும் குறைவானவர்கள் 28 வீதமாகவும் 38 வயதுக்கும் குறைவானவர்கள் 67 வீதமாகவும் இருப்பதுடன் சில அரச உத்தியோகத்தர்களும் முச்சக்கரவண்டிச் சேவையுடன் தொடர்புபட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2020 ஜனவரி 16 ஆம் திகதி வரையிலும் 1,175,077 முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலையை விட்டு விலகிய இளம்வயதினர் முச்சக்கரவண்டிகளின் மீது அதிகம் கவனம் செலுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. பயிற்சி மற்றும் கல்வித்தகுதிகளில்லாமல் மிக விரைவாக இலாபத்தை பெற்றுக்கொள்ள முடிதல், ஏனைய தொழில்களைவிட பொறுப்புக்கூறுதல் இங்கு குறைவு, குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவளிக்க முடியும். அத்தோடு வேலைத்தள முகாமையாளர்கள், மேசன் மற்றும் பாரவூர்தி சாரதிகளை விடவும் மாதம் அதிகமான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் தொழிலாக முச்சக்கரவண்டிச் சாரதி தொழில் காணப்படுகின்றது. பகுதி நேரத்தொழிலாக முச்சக்கரவண்டியை செலுத்துவதை கொண்டிருப்பவர்கள் அவர்களுடைய நிரந்தரத் தொழிலைவிடவும் அதிக வருமானத்தை இங்கு பெற்றுக்கொள்கின்றார்கள். தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் உதவியாளர்களாக கடமைபுரிந்தவர்கள் கூட குறைந்த வருமானம், அதிக உடலுழைப்பு மற்றும் திட்டமிடப்படாத வேலை நேரம் என்பவற்றின் காரணமாக அத்தொழிலிலிருந்து விலகி முச்சக்கரவண்டிகளின் சாரதிகளாக பணியாற்றுகின்றனர்.
குறைந்த கல்வித்தகுதிகளைக் கொண்டவர்களை அதிகம் கவரும் தொழிலாக இது இருக்கின்றது. 35 வயதுக்கும் குறைவான, குறைந்த திறமைகளை கொண்ட ஆண்கள் முச்சக்கரவண்டிகளை செலுத்துவதையே மிக உயர் தொழிலாக கருதுகின்றனர். அதிகமான முச்சக்கரவண்டிச் சாரதிகள் (75.5%) சாதாரணத்தரம் சித்தியடையாதவர்கள் என்பதுடன் தொழில் மற்றும் கைத்தொழில் பெற்றிராதவர்களாக காணப்படுகின்றனர். தோட்டப்புறங்களில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளில் பெரும்பாலானோரின் தெரிவு முச்சக்கரவண்டி செலுத்துவதாகவே இருக்கின்றது. தமது பெற்றோர் தொழிலிருந்து ஓய்வு பெறும்போது கிடைக்கும் சேவைக்கால கொடுப்பனவில் முதலில் முச்சக்கரவண்டிகளை பெற்றுக்கொள்வதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். தூர இடங்களுக்குச் சென்று தொழிலில் ஈடுபட விரும்பாமை, பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகியமை, உடனடி வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாமை போன்றன இத்தெரிவுக்கு காரணமாகும். சிலர் வீட்டுத்தேவைக்காகவும், சிலர் கௌரவத்துக்காகவும் முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்வதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முச்சக்கரவண்டிச்சாரதிகளின் பெருக்கத்தை அவர்களுக்கு இலங்கை மோட்டார் வாகனத் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தின் எண்ணிக்கையிலிருந்து கண்டு கொள்ள முடியும். திணைக்களத்தால் 2015 ஆம் ஆண்டு 240,802 முச்சக்கரவண்டிச் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் 2016 இல் 288,105 அனுமதிப்பத்திரங்களும் 2017 இல் 278,859 அனுமதிப்பத்திரங்களும் 2018 இல் 239,766 அனுமதிப்பத்திரங்களும் 2019 இல் 154,152 அனுமதிப்பத்திரங்களும் உள்ளடங்களாக மொத்தமாக 1,201,684 முச்சக்கரவண்டிச் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அட்டவணை 01 இல் மோட்டார் வாகனத்திணைக்களத்தினால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், மிக அதிகமாக முச்சக்கரவண்டிச் சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாவட்டங்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளதுடன் ஏனையவையவில் (ஏனைய மாவட்டங்களின்) மொத்த முச்சக்கரவண்டிச் சாரதி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிகள் மற்றும் முச்சக்கரவண்டிச் சாரதிகளாக பணியாற்றுவோரின் தொகை அதிகரிப்புக்கு தொழில்வாய்ப்பின்மை மற்றும் வருமானமின்மை, சுயதொழில் ஊக்குவிப்பின்மை, தனித்து வாழும் குடும்பங்கள் போன்றனவும் காரணமாக இருக்கின்றன. பாடசாலைக்கல்வியை இடை நிறுத்தியவர்கள் அல்லது வறுமை காரணமாக பாடசாலைக்கல்வியை தொடர முடியாதவர்கள் உரிய பெறுபேறுகள் மற்றும் தகுதிகள் கொண்டிராமையால் அவர்களால் சிறந்ததொரு தொழிலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கு முச்சக்கரவண்டிகளை வாடகைக்கு செலுத்துவது இலகுவான விடயமாக இருக்கின்றது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் முச்சக்கரவண்டிகளை புதிதாக கொள்வனவு செய்து அதற்கு சாரதிகளை பணிக்கு அமர்த்தி வாடகையினை பெற்றுக்கொள்கின்றனர். மேலும் ஏனைய வாகனங்களை விடவும் இலகுவாகவும் குறைந்த விலையிலும் முச்சக்கரவண்டிகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன் புதிய கடன் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இங்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருப்பது மாத்திரமே தகுதியாக இருக்கின்றது.
எனவே முச்சக்கரவண்டிகளின் பெருக்கத்தின் காரணமாக இளைஞர்களுடைய பங்களிப்பை தேசிய தொழிற்படையில் இழக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. முச்சக்கரவண்டிகளை செலுத்துவதால் மாத்திரம் எதிர்காலத்தை சிறப்பாக கொண்டு நடாத்த முடியாது என்பதுடன் அது நிலையானதொரு தொழிலாகவும் இருப்பதில்லை. தற்போது அரசாங்கத்தின் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் செயற் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள குறை வருமானம் பெறுகின்ற குடும்பத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சிகளுடன் கூடிய தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியத்தின் நோக்கு உங்களுக்கு நாடு - நாட்டுக்கு நாளை வேலைத்திட்டத்தின் கீழ் முற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்படும் இளைஞர், யுவதிகளுக்கு ஆறு மாதகால பயிற்சி காலத்திற்கு மாதமொன்றுக்கு 22500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. இருபது தொழிற்துறைகளுக்குள் இவர்களை உள்வாங்கி பயிற்சிகளை வழங்கி பணியில் அமர்த்துவதே நோக்கமாக இருக்கின்றது. இத்துறையில் சாரதி பதவியும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே நிரந்தரமானதும் மற்றும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளக்கூடியதுமான மேற்படி தொழில்களுக்கு விண்ணப்பித்து எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துக்கொள்வது அனைவரினதும் கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக